K.PRASANNAKUMAR·FRIDAY, JANUARY 26, 2018
க.பிரசன்னா
“வரும் ஆனா வராது’ என்பது நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை. அதேபோலவே டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல் பல பீதிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் சுனாமி வருமா? வராதா? என்பது .
க.பிரசன்னா
“வரும் ஆனா வராது’ என்பது நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை. அதேபோலவே டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல் பல பீதிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் சுனாமி வருமா? வராதா? என்பது .
2004 ஆம் ஆண்டுக்குப் பிறகே இலங்கை மக்கள் சுனாமி என்ற வார்த்தைக்கும் அழிவுகளுக்கும் பழக்கப்பட்டார்கள். அந்த வடுக்கள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அகலவில்லை. ஆதலால் டிசம்பர் மாதம் வந்தாலே அவர்களின் மனம் பதைபதைப்புக்கு உள்ளாகிவிடும். இதில் இம்மாதங்களில் வெளிவருகின்ற மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகின்ற தகவல்கள் இன்னும் அவர்ளை பீதியில் ஆழ்த்தி விடுகின்றது. எனவே டிசம்பர் என்பது சுனாமி மாதம் என்றே இன்று பெரும்பாலானோர் நினைவில் வைத்திருக்கின்றார்கள். இது பல போலிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதமளவிலேயே சுனாமி தொடர்பான எச்சரிக்கை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இலங்கையிலும் புவியியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவொரு எச்சரிக்கை மாத்திரமேயெனவும் சுனாமி ஏற்படுமென அறிவிக்கப்படவில்லையென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதன்பின்னர் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் மக்களிடையே பதற்றம் நிலவியிருந்தது. பின்னர் சுனாமி முன்னெச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டிருந்தது. தற்போது உலகளவில் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் கூட இயற்கை அனர்த்தங்களுக்கான எச்சரிக்கைகள் மக்களிடம் சென்றடைவதில் தாமத நிலையே காணப்படுகிறது. அதுவும் தகவல்களை நம்பகரமானதா என்பதை அறிந்து கொள்வதிலும் மக்களிடையே சிக்கல் நிலவுகிறது. சுனாமி தொடர்பான வதந்திகள் மற்றும் கருத்துகள் நிலவி வந்தாலும் கூட அதை விடவும் மாற்று வழியிலான அனர்த்தங்கள் உலகளவில் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன. சூறாவளி, வரட்சி, காட்டுத் தீ, மண்சரிவு, வெள்ளம் போன்றவற்றை இவ்வாறு குறிப்பிடலாம். எனவே மக்கள் இயற்கை அனர்த்தங்களிலிருந்து விடுபடுவது தொடர்பிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மாறாக சுனாமி என்ற வார்த்தைக்குள் அடைப்பட்டிருக்கக்கூடாது. அண்மையில் இலங்கையில் ஒரே நாளில் ஏற்பட்ட “ஒகி’ புயலால் பரவலான சேதங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவ்வாறு சேதங்கள் ஏற்பட்டமைக்கு எச்சரிக்கைகளை இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அலட்சியம் செய்தமையே காரணமென குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவ்வாறு அனர்த்தங்கள் அதிகளவு மக்களை பாதிப்பதற்கு எச்சரிக்கைகள் முறையாக அவர்களிடம் சென்றடையாமையே பிரதான காரணமாகும்.
ஆனால் மக்கள் அதிகம் பதற்றமடைவதற்கு போலித் தகவல்கள் மக்களிடம் விரைவாக சென்றடைவதே பிரதான காரணமாகும். இதேபோலவே டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் இந்திய பெருங்கடலில் மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகி தமிழகம் மற்றும் கேரளாவில் அழிவை ஏற்படுத்தவுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த பாபுகலயில் எச்சரிக்கை விடுத்திருப்பதுடன், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியிருக்கின்றார். இவர் தனக்குரிய பிரத்தியேக சக்தியின் மூலம் உலகில் நடக்கும் இயற்கை பேரிடர்கள், மாற்றங்களை முன்கூட்டியே அறிவதாக கூறுகிறார். 2004 இல் தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அலைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும் இதற்கு முன் சுனாமி பற்றிய போதிய அறிவு மக்களிடம் இல்லாமையால் அவை முறையாக யாரிடமும் சென்றடைந்திருக்கவில்லை. இந்நிலையிலேயே இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் கடலில் ஏற்படப்போகும் நில நடுக்கத்தால் இந்தியா மட்டுமன்றி சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளிலும் பாரிய தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இத்தகவல்கள் எந்தளவுக்கு உண்மையானவை என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லையென்பதோடு பகுப்பாய்வும் செய்யப்படவில்லை.
உலகத்தை சுனாமி ஆட்கொண்டு இம்மாதம் 26 ஆம் திகதியுடன் 13 வருடங்கள் கடந்து விட்டன. அத்தனை வருடங்கள் கடந்தும் சுனாமி என்றாலே பீதியடையும் மக்கள் ஏராளம். அப்பீதியால் அவர்கள் நடுநடுங்கிப் போகின்றார்கள். இந்த மாதத்திற்குள் அவ்வாறான ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடிய சூழல் இருப்பதாக ஒரு குழு கூறிக்கொண்டு திரிகிறது. இவ்வாறான பொய் வதந்திகளை பரப்புவோர் சுனாமியை நேரில் கண்டதாகக் கூறும் கூற்றை கூட நம்புபவர்கள் ஏராளம். எமது நாட்டில் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் பற்றிய சரியான, தெளிவான தகவல்களை எதிர்வு கூறக்கூடிய ஒரே நிறுவனம் வானிலை அவதான நிலையம் மட்டுமே. வரக்கூடிய சுனாமி பற்றி அதன் தாக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்தது. இவ்வனர்த்தம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களத்தின் அத்தியட்சகர் ஜெனரல் சரத் பிரேமலாலிடம் கேட்ட போது, எந்நாளும் பூகம்பம் ஏற்பட இடமுண்டு. அவ்வாறே எந்நேரமும் பூகம்பம் இடம்பெற இடமுண்டு. பூகம்பம் போன்று ஏனைய இயற்கை அனர்த்தங்களும் எந்நேரத்திலும் ஏற்படலாமென்பதை எம்மால் சரியாகக் கணிப்பிட முடியாது. ஆதலால் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன் மறுபடியும் சுனாமியொன்று வரும் என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியாது. எங்களால் அவ்வாறான அனர்த்தம் தொடர்பான சரியான எதிர்வுகூறலை கூற முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் சொல்வது போன்று சாதாரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு சுனாமி பற்றிய பரிபூரண விடயங்கள் கூறுவதானால்; அவ்வாறான அனர்த்தம் ஏற்படுமாயின் முதலில் பூகம்பம் ஒன்று எமது நாட்டை தாக்கக்கூடும். அப்படியானால் இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்ட பகுதியிலோ அல்லது பாகிஸ்தானில் உள்ள மெக்ரம் வலயத்தில் ஏற்பட்ட ரிச்டர் அளவு 7 க்கும் அதிகமானளவில் ஏற்பட்ட பூகம்பம் அங்கு 100 கி.மீ. க்கு குறைவான அளவில் ஆழமாக ஏற்பட்டால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சுனாமி எச்சரிக்கையை விடுக்கும் நிறுவனங்களின் கவனத்திற்கு செல்லும். இதுவரையிலும் இவ்வாறான பூகம்பம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் முழுத் தகவல்களையும் வெளியிடும் நிறுவனங்களாக இந்தியாவிலுள்ள சுனாமி எச்சரிக்கை தகவல் மையம், இந்தோனேஷியாவிலுள்ள தகவல் எச்சரிக்கை மையம் மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள தகவல் எச்சரிக்கை மையம் என்பனவே இருந்துள்ளன. சுனாமி ஏற்படக்கூடிய வலயங்களுக்கு ஏதாவது ஒரு நாட்டில் பூகம்பம் ஏற்படுமிடத்து மேற்கூறப்பட்ட சுனாமி எச்சரிக்கை அவதான நிலையங்களால் அவ்வலயங்களுக்கு தகவல் வழங்கப்படும். இம்மூன்று பிரதான அனர்த்த அவதான நிலையங்களினால் ஏனைய நாடுகளிலுள்ள உப நிலையங்களுக்கு இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்படும். குறிப்பிட்ட ஒரு சிலரால் சொல்லப்பட்ட சுனாமி ஏற்படக்கூடும் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பிலுள்ள நாவலடிப் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஏராளமான பாம்புகளின் மூலம் இத்தகவல் உண்மையென ஊகிக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
மனிதர்களையும் தொழில்நுட்பங்களையும் விட அனர்த்தங்கள் தொடர்பாக அறியும் ஆற்றல் மிருகங்களுக்கு உண்டு என்பது உண்மையாகும். கடந்த சுனாமி ஏற்பட்ட போது காலை 6.45 மணியளவில் யாலயில் அமைந்துள்ள சரணாலயத்துக்கருகில் வித்தியாசமான மாற்றம் ஏற்பட்டதை உணர முடிந்ததாக சொல்கின்றார்கள். இந்த அபூர்வமான மாற்றத்தை தனது கமரா மூலம் பதிவு செய்திருப்பது பெல்ஜியத்திலிருந்து வருகை தந்த வியாபாரி ஒருவராவார். முதன்முதலாக யால பட்டனங்கல அருகில் இருந்த யானைக் கூட்டமொன்று இருந்த இடத்திலிருந்து ஓடத் தொடங்கியது. கபரகொய்யாக்கள் (பல்லி வகை) அதிகளவில் வாழ்வது அழுக்குகளிலேயே. ஆனாலும் அன்று அவைகள் அவசர அவசரமாக அழுக்குகளிலிருந்து மேலே வரும் காட்சி பெல்ஜியம் நாட்டுக்காரரரின் கமராவில் பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக கடல் ஒரேயடியாக கொந்தளிக்கத் தொடங்கியது. அக்கொந்தளிப்பிலிருந்து தப்பிக் கொள்வதற்காக நண்டு ஒன்று கரையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வாறே யால சரணாலயத்தை நோக்கி ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு கடலலை வந்தது. அந்த அலையில் சிக்கி எந்தவொரு மிருகமும் இறக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இருந்தாலும் சுனாமி அனர்த்தம் மீண்டும் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் மட்டக்களப்பு கடலிலிருந்து ஒரேயடியாக பாம்புகள் பல வலைகளில் சிக்கியமை இங்கு மக்கள் மனங்களில் பீதியை ஏற்படுத்தியது சாதாரண விடயமே. இருப்பினும் இது சம்பந்தமாக பரிசோதனைகளை மேற்கொண்ட நாரா நிறுவனம் இதனால் எந்தவித சுனாமி பயத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமென தெரிவித்துள்ளது. எங்களது ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று இப்போதைக்கு இப்பாம்புகளில் சிலவற்றை எடுத்து பரிசோதனைகளை செய்து கொண்டிருக்கிறது. தற்போது இருக்கும் தகவல்களின் அடிப்படையில் அது பாம்பினமல்ல. ஒருவகை மீனினமென கண்டறியப்பட்டுள்ளது என நாரா நிறுவனத்தின் அத்தியட்சகர் ஜெனரல் பி.சி.டபிள்யூ. இத்தமல்கொட தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்த மீனினம் தமது இனத்தைப் பெருக்குவதற்காக ஆழ்கடலிலிருந்து கரையை அண்டிய பகுதிகளுக்கு வருவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மீனவர்களின் வலைகளில் சிக்கியிருக்கக்கூடுமென அவர் தெரிவித்தார். இருப்பினும் இவ்வாறான மோசமான காலங்களில் கடலில் ஏற்படக்கூடிய வெவ்வேறான மாற்றங்கள் காரணமாக இவ்வாறு கடலில் உள்ள உயிரினங்கள் கரையை நோக்கி வருவதுமுண்டு. அலைகளின் வித்தியாசம், கடல் நீரில் ஏற்படக்கூடிய வித்தியாசம் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கள் இருப்பிடத்துக்கு அனர்த்தம் ஏற்படும் போது அவை வேறு இடங்களை நோக்கி நகர ஆரம்பிக்கின்றன.
இப்போதும் அவ்வாறான மோசமான காலம் என்பதால் இவ்வாறான காலங்களில் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது பற்றி மேலும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோமென இத்தமல்கொட என்ற அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; இந்த பாம்புகள் கூட்டம் வலைகளில் சிக்கிக் கொண்டதற்கும் சுனாமி வருவதற்கு முன்னான அறிகுறிக்குமிடையில் எந்தவித விஞ்ஞானபூர்வ தகவல்களுமில்லையென்றார். ஆதலால் இது சம்பந்தமாக அநாவசியமான குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறே வளிமண்டலவியல் திணைக்களமும் பின்வருமாறு கூறுகிறது. அதாவது எந்தச் சந்தர்ப்பத்தில் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன் பூகம்பம் ஏற்படுமாயின், சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு தேவையான நேரம் எமக்கு அதிகளவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பூகம்பம் ஒன்று ஏற்பட்டு சுனாமி வருவதற்கிடையில் 2 1/2 மணித்தியால இடைவெளியுண்டு. அக்காலத்துக்குள் கரையோரப் பிரதேச மக்களை பாதுகாப்பான இடங்கள் நோக்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளை எமது மத்திய நிலையம் மேற்கொண்டு வருவதாக சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.
அனர்த்த மத்திய நிலையம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும்? எங்கு செல்ல வேண்டுமென்ற தகவலை மக்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது. இன்னும் வழங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பமொன்று ஏற்படுமிடத்து மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பும் மேற்படி அதிகாரிகளைப் போலவே இராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆதலால் அநாவசியமான பயங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. தேவைப்படுவதெல்லாம் வளிமண்டலவியல் திணைக்களத்தினதும் வானிலை அவதான நிலையத்தினதும் தகவல்களுக்கு அமைவாக செயற்படுவதாகும்.
2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு எப்போதெல்லாம் பூகம்பங்கள் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் சுனாமி பீதியும் அதிகரிக்கத் தொடங்கியது. 01.01.2015 அன்று அந்தமான் மற்றும் சுமத்ரா தீவுகளுக்கருகே நில நடுக்கம் பதிவானது. 02.03.2005 இல் இந்தோஷேனியாவின் பாண்தா கடல் பகுதியில் 7.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதன்பின்னர் 2005, 2006 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையும் ஊடகங்கள் சுனாமி பீதியை எழுப்பி வருகின்றன. ஆனால் அதன் பின்னர் சுனாமி வரவேயில்லை. எனவே அவதானமாக இருக்க வேண்டிய அதே சூழலில் புரளிகளுக்கு அஞ்சி பீதியடையத் தேவையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக