வெளிநாட்டு மோகத்தால் உருவான சோகம்
சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்காகச் சென்ற கலேவெலயைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவர் ஒருவருடங்களின் பின்னர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் திகதி அதிகாலை தனது வீட்டுக்கு வந்து சேர்ந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடுங்காயங்களுடனும் கடுமையான தாக்குதலுடனும் பாதிக்கப்பட்ட குறித்த பெண் வீட்டுக்கு வந்தவுடனேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவ்வாறு தனது உயிரை காப்பாற்றிக் கொண்டு நம்நாட்டுக்கு வந்திருப்பது கலேவெல, பம்பரகஸ்வெவயை வசிப்பிடமாகக் கொண்ட W.D. காஞ்சனாகுமாரி (33 வயது) என்ற ஒரு பிள்ளையின் தாயாராவார். நான்கு வயது நிரம்பிய தனது குழந்தையை வீட்டில் விட்டு விட்டு இப் பெண் 2016 செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி சவூதிக்கு பணிப்பெண் வேலைக்காக குருணாகல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலையீட்டின் மூலம் போலியான ஆவணங்களைத் தயாரித்து தனது சுயவிருப்பின் பேரிலேயே வெளிநாடு சென்றதாக காஞ்சனா தெரிவித்துள்ளார். என்னை சவூதி தமாம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு பணிப் பெண் வேலைக்காக அனுப்பினார்கள் என்றும் மூன்று மாதத்துக்கான சம்பளத்தை தந்தார்கள் எனவும் தெரிவித்தார். பிறகு தொடர்ந்து உணவு, உடுதுணி, சம்பளம் ஆகியவற்றை இடை நிறுத்தியதாகவும் தனக்கு தொல்லைதர ஆரம்பித்ததாகவும் அழுதவாறே தெரிவித்தார்.
அந்நேரத்தில் அவரின் உடல் முழுவதும் கை, கால்களிலும் சூட்டுக்காயங்களும் வெட்டுக்காயங்களும் காணப்பட்டன. கண்களிலும் கடுமையான காயம் தென்பட்டது. அதேபோன்று முதுகு மற்றும் காலின் கீழ் பகுதியிலும் பலத்த காயங்கள் காணப்பட்டன. அவரின் பற்கள் கூட உடைந்துள்ளதை காணக்கூடியதாகவிருந்தது. சீராக நடக்கக்கூட முடியாத நிலையிலேயே அவர் காணப்பட்டார். தனது கணவன் மற்றும் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே தனக்கு அவ்வீட்டிலிருந்து வெளிவர முடிந்ததாகவும் சம்பளமோ வேறு எந்த உதவியையோ தனக்கு தரவில்லையெனவும் கறுப்பு நிறத்திலான ஒரு ஆடையை மட்டுமே தனக்கு தந்ததாகவும் அந்நிலையிலேயே தன்னை விமான நிலையத்துக்கு கூட்டி வந்துவிட்டுச் சென்றதாகவும் விமான நிலையத்திலுள்ள இலங்கை விமான பணிப்பெண்களே தனக்கு உடுத்திக்கொள்ள ஆடைகளை கொள்வனவு செய்து தந்ததாகவும் அதை உடுத்துக்கொண்டே இலங்கைக்கு தான் வந்ததாகவும் தெரிவித்தார். நடந்த கொடூர சம்பவங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என்றே இவரின் கணவரான சமன்குமார பண்டா தெரிவித்தார். அதேபோலவே இவரின் மாமியாரான முதுமெனிக்க, அழகாக சென்ற எனது மருமகளை இப்படி அலங்கோலமாக அனுப்பியுள்ளார்களே என புலம்பினார்.
இவ்வாறு கடும்காயங்களுக்குள்ளான அவர் அங்கிருந்து வந்த அன்றே (NOVEMBER 18) மாலை வேளையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்தேறிய துன்பகரமான சம்பவங்கள் பற்றி அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனது மகள் பாடசாலைக்கு செல்வதற்கு முன்னர் வீட்டைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே 2 வருடங்களுக்கு வெளிநாடு சென்றேன். அம்மாவும் கணவரும் போகவேண்டாம் என்றே சொன்னார்கள். இருப்பினும் எங்களது கஷ்ட நிலையாலும் மகளின் கல்விச் செலவுக்காகவுமே நான் சவூதிக்குச் சென்றேன். அதற்கேற்ப ஊரிலுள்ள தெரிந்த ஒருவர் மூலமாக குருணாகலில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலமே வெளிநாடு செல்ல தீர்மானித்தேன். எனது மகளுக்கு 4 வயது என்பதால் என்னிடம் 25,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்களைத் தயாரித்து எல்லாவற்றையும் ஆயத்தம் செய்தார்கள். அங்கு சென்று 2 மாதம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. 2 மாதம் கழித்து சம்பளம் கேட்கும் போதுதான் என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். அவ்வீட்டு எஜமானி சரியான கொடுமைக்காரி கிடைத்ததிலெல்லாம் அடிப்பார். கத்தியை எடுத்து என் உடம்பில் எல்லா இடங்களையும் வெட்டுவார். எனது விரல் கூட நசுக்கப்பட்டே காணப்படுகிறது. இரும்பு கம்பியால் தலையில் அடித்து எல்லா இடமும் காயமாகவே இருக்கிறது. ஒருநாள் எனது ஒரு விழிபிதுங்கி வரும் வரைக்கும் அடித்தார்கள். மருந்து போடக்கூட செல்லவில்லை. சாப்பாடு தரமாட்டார்கள். குப்பைவாளியில் இருப்பதையே சாப்பிடுவேன்.
எனக்கு சாப்பாடு தண்ணீரும் தராது ஒரு அறையினுள் பூட்டி வைத்திருப்பார்கள். வலியால் கத்தும் போது கீழே போட்டு வயிற்றில் மிதிப்பார்கள். நான் வருவதற்கு முன்னர் இன்னுமொரு இலங்கைப் பெண் இங்கு இருந்தார். அவரை எங்கு கொண்டு சேர்த்தார்களோ தெரியவில்லை. கொன்று விடுவதாகவே சொல்லிக்கொண்டிருப்பர். வீட்டாருடன் பேசவேண்டும் என்று கேட்டால் கத்தியொன்றை அருகில் வைத்துக்கொண்டு “நன்றாக இருப்பதாக கூறு எனச் சொல்வார்கள். கத்தியை வைத்திருப்பதால் என்னால் வீட்டாருக்கு எந்த தகவலையும் சொல்லமுடியாமல் போகிறது. அம்மாவுக்கு இந்த நாட்டுமொழி தெரியும் என்பதால் வீட்டு எஜமானியிடம் நன்றாக கதைப்பார். இருப்பினும் எனக்கு கதைக்க தரமாட்டார். அதனால் அம்மாவுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கக்கூடும். அதன்பிறகு அங்குள்ள வெளிநாட்டுத் தூதரகம் மூலமாக தொடர்பை ஏற்படுத்தி ஒருவாறு என்னை இலங்கைக்கு அழைத்து வந்துவிட்டனர். எனது சம்பளத்திலிருந்தே டிக்கட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு சதத்தையேனும் தரவில்லை. செருப்புகூட இல்லாமல் ஹபாயா உடையொன்றை அணிவித்து விமான நிலையத்துக்கு என்னை கொண்டுவந்து விட்டார்கள்.
இவ்வாறு போலி முகவர்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அதிகமாகவே இருக்கிறார்கள். போலி முகவர்களை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் கூறினாலும் இவ்வாறானவர்கள் எங்கிருந்து முளைக்கிறார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக