தேசிய வனவியல் பூங்காவின் தேவைகள் கவனத்திலெடுக்கப்படுமா?
க. பிரசன்னா
2018 ஆம் ஆண்டுக்கான நீலப்பசுமை பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சூழல் மற்றும் வனவிலங்குகள் தொடர்பில் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் தற்போதுள்ள தேசிய வனவள பூங்காக்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைகளுக்கு தீர்வு தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ள இவ்வாறான இடங்களில் ஏற்பட்டுள்ள அதிக சனநெரிசல் அங்குள்ள வனவிலங்குகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக சூழலியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.யால தேசிய வனவியல் பூங்காவில் இந்நிலைமை மிக அதிகமாகவே காணப்படுகிறது.
இங்கு வருகை தருகின்ற பார்வையாளர்களின் தொகை 1000 வீதமாக அதிகரித்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டு 43,368 பார்வையாளர்களும் 2016 இல் 658,277 பார்வையாளர்களும் வருகை தந்திருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கிராக்கி அதிகரித்திருக்கின்ற நிலையில், வியாபார ரீதியிலான சவாரி ஜீப் வண்டிகளின் ஈடுபடுத்தல்களும் அதிகரித்திருக்கின்றன. 378 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட யால தேசிய பூங்காவுக்கு 2016 இல் 658,277 பார்வையாளர்கள் பதிவு செய்யப்பட்ட 700 ஜீப் வண்டிகளில் வருகைத்தந்திருக்கின்றனர். ஆனால் தென்னாபிரிக்காவிலுள்ள 7523 சதுரமைல் பரப்பளவைக் கொண்ட க்ருகெர் தேசிய பூங்காவுக்கு வருடாந்தம் 950,000 பார்வையாளர்களே வருகை தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சவாரி ஜீப் வண்டிகளின் எண்ணிக்கை ரொக்கட் வேகத்தில் அதிகரித்து வருவதாகவும் யால தேசியப் பூங்காவுக்கு மாத்திரம் 1200 க்கும் மேற்பட்ட சவாரி ஜீப் வண்டிகள் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுதந்திர சவாரி ஜீப் வண்டிகளின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அதிகம் பார்வையாளர்கள் வருகை தருகின்ற யால தேசிய பூங்காவில் முறையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லையென முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு ஒரு இளைப்பாறு அறையும் இரண்டு மலசல கூடங்களுமே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பூங்காவுக்கான பார்வையாளர் வருகை அதிகரித்திருப்பதினால் 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. 2011 இல் 168 மில்லியன் ரூபாவே வருமானம் பெறப்பட்டிருக்கிறது. இப்பகுதிகளிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் அதனை சார்ந்திருப்பவர்கள் வருடமொன்றுக்கு 8 பில்லியன் ரூபா வருமானம் பெறுவதாக இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிறிலால் மிட்டபால தெரிவித்துள்ளார். இதைவிடவும் ஜீப் வண்டி சாரதிகள் வருடமொன்றுக்கு 527 மில்லியன் ரூபா வருமானம் பெறுவதாகவும் இது பூங்கா பெற்றுக்கொள்கின்ற வருமானத்தில் 86 வீதமாகும். எனவே அதிகம் வருமானம் பெறுகின்ற ஒரு தேசிய பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் முழுமையான தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருப்பது கட்டாயமாகும்.
அதேவேளை மிக அதிகமான பார்வையாளர்கள் வருகை தருகின்ற இவ்விடத்தில் 75 பேரே வழிகாட்டிகளாக கடமை புரிகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஜீப் வண்டிகளுக்கும் வழிகாட்டிகளாக செயற்படுவதென்பது இயலாத காரியமாகும். அண்மையில் பிரதமரால் நியமிக்கப்பட்ட உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஊழியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் யால மற்றும் சீகிரிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருதை அதிக சன நெருக்கடியினை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு அதிகமான வாகனங்கள் பூங்காவுக்குள் நுழைவதாலும் மிக வேகமாக வாகனத்தை செலுத்துவதாலும் மிக அதிகமான விலங்குகள் உயிரிழப்பதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் ஜீப் வண்டிகள் வேகமாக செல்வதால் வீதிகளில் விலங்குகள் அடிப்பட்டு இறக்கின்றன. இவற்றை ஒரு சில ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அதிகமானவை யாருக்கும் தெரியாமலேயே போய்விடுகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கெதிரான வன்முறைச் சட்டங்களில் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்வதோடு, கடுமையாக நடைமுறைப்படுத்துவதும் துரிதப்படுத்தவேண்டும். ஜீப் வண்டி சாரதிகளும் பார்வையாளர்களும் சட்டத்தை முறையாக கடை பிடிக்காமையே இவ்வாறான நிலைமைகளுக்கு காரணமென சூழலியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதில் சாதாரண ஜீப் வண்டிச் சாரதிகளை மாத்திரம் குறைபட்டுக்கொள்ள முடியாது. அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளும் பூங்காவுக்குள் நுழையும் போது தமது சொந்த சொத்தாக கருதி தம் இஷ்டம் போல் செயற்படுகின்றனர். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றும் வெறி சகலருக்கும் இருப்பதால் வழிகளை மறைத்து வாகனங்களை நிறுத்தி புகைப்படமெடுக்கின்றனர். இதனாலேயே வாகன நெரிசல் ஏற்படுவதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். ஆனால் வனஜீ வராசிகள் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின்படி ஒரு நாளைக்கு மூன்று பருவகாலத்திலும் பலடுபான நுழைவாயில் வழியாக 100 வாகனங்களையும் கடகமுவ நுழைவாயில் வழியாக 50 வாகனங்களையும் அனுமதிப்பதால் ஒவ்வொரு நாளும் 450 ஜீப்வண்டிகளை பூங்காவுக்குள் அனுமதிக்கமுடியுமென குறிப்பிடப்பட்டுள்ள போதும் இத்திட்டத்தை ஜீப் வண்டிச் சாரதிகள் புறக்கணித்துள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 600 ஜீப் வண்டிகள் நுழைவாயிலில் பதிவு செய்யப்படுகின்றன. 3,4 மற்றும் 5 ஆம் இலக்க நுழைவாயில் பாதைகளை அபிவிருத்தி செய்வதால் 1 ஆம், 2 ஆம் நுழைவாயில் பாதைகளில் ஏற்படுகின்ற வாகன நெரிசல்களை தடுக்க முடியுமெனவும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஜீப் வண்டிச் சாரதிகளும் முண்டியடித்துக் கொண்டு அனுமதிச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வாகனத்தை வேகமாக செலுத்திச் செல்கின்றனர். யால தேசிய பூங்காவில் காலை 6 மணிக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்க ஆரம்பித்து 8 மணியுடன் நிறைவு பெற்றுவிடும். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தாமதமாகியே செல்கின்றனர். இதனால் வெறுங்கையோடு திரும்புவதை அவர்கள் விரும்புவதில்லை. இதனால் ஜீப் வண்டிச் சாரதிகள் அதிகாலை 5 மணிக்கு சுற்றுலா பயணிகளை கூட்டிச்சென்று ஒரு மணித்தியாலம் அல்லது அதற்குக் குறைவான நேரத்துக்கு வரிசையில் காத்திருக்கச் செய்கிறார்கள். சிலவேளை 4 மணிக்கெல்லாம் முதல் 150 வண்டிகள் பூங்காவுக்குள் சென்றுவிடுகின்றன. ஆனால் 4 மணிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தராமை பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் வருமானத்தை இலக்காகக் கொண்டு வாகனத்தை வேகமாக செலுத்த வேண்டி ஏற்படுகின்றது. இதனால் மணிக்கு 30 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் வாகனத்தை செலுத்த முடியாது. இது போட்டித் தன்மையை ஈடுசெய்ய போதாதென சுதந்திர ஜீப் வண்டிச் சாரதிகள் சங்கத் தலைவர் பி.டி. கீர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் விலங்குகளின் சுதந்திரமான நடமாட்டத்துக்கும் பாதுகாப்புக்கும் வாகனங்கள் செல்லாத பாதைகளை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக விலங்குகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் வாகனச் சாரதிகள் நடந்துகொள்வார்களாயின், அது தேசிய பூங்காவினை அழிவின் பாதைக்கே கொண்டுசெல்லும் என்பதை மறுக்க முடியாது. பிரதமரால் அமைக்கப்பட்டுள்ள உபகுழுவின் பரிந்துரைகளில் யால தேசிய பூங்காவின் 3,4,5 ஆம் இலக்க நுழைவாயிலில் வாகனங்களை பிரவேசிக்கும் தொகையினை கட்டுப்படுத்தவும் லுனுகம் வெஹர தேசிய பூங்காவை வன ஜீவராசிகள் சுற்றுலாவுக்காக அபிவிருத்தி செய்யவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை அறிமுகப்படுத்த இரண்டு வருடங்கள் செல்லும். 2020 ஆம் ஆண்டிலிருந்து உப குழு பரிந்துரை செய்த முதலாம் இலக்க நுழைவாயிலில் வாகனங்களை அனுமதிப்பதற்கான கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீப் வண்டிச் சாரதிகள் பூங்காவின் விதிமுறைகளை மீறி செயற்படுவதை தடுக்கவும் பூங்கா மூடப்படும் வேளையில் வாகனங்களை வேகமாக செலுத்துவதை தவிர்க்கவும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேகத் தடுப்புகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 31 குறுகிய கால திட்டமும் 7 மத்திய கால திட்டமும் 2 நீண்டகால திட்டமும் உபகுழுவினால் பரிந்துரைற செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பூங்கா பகுதிகளில் சவாரி ஜீப் வண்டிச் சாரதிகளும் பயணிகளும் ஒழுங்கீனமற்று நடந்து கொள்ளுதல், அதிக வேகம் மற்றும் மோசமாக வாகனத்தை செலுத்திச் செல்லும் சாரதிகள், வன விலங்குகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தல், அதிகமான பார்வையாளர்களின் வருகை, மோசமான சேவைகளை வனவிலங்குத் திணைக்களம் வழங்கி வருகின்றமை, ஊழியர்கள் மற்றும் சலுகைகள் குறைவாக இருக்கின்றமை, அரசியல் தலையீடுகள் அதிகம் காணப்படுகின்றமை என்பன யால தேசிய பூங்காவின் முதலாம் இலக்க நுழைவாயிலில் அடையாளங்காணப்பட்ட குறைபாடுகளாக இருக்கின்றன. முதலாம் இலக்க நுழைவாயிலில் ஒரு நாளைக்கு சாதாரணமாக 250 வாகனங்கள் உட்பிரவேசிக்கின்றன. விடுமுறைக் காலங்களில் ஒரு நாளைக்கு 700 வாகனங்கள் வரை பயணிக்கின்றன. காலை 6 -10 மணிவரையும் பிற்பகல் 2 -6 மணிவரையும் வாகனங்களின் நெருக்கடி மிக அதிகமாக காணப்படுகின்றது. அதேவேளை தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் ஜீப் வண்டிச் சாரதிகள் வழிநடத்தப்படுவதால் சாரதிகள் வேகமாக வாகனத்தை செலுத்த முற்படுகின்றனர். சில மோசமான வாகன செலுத்துகையானது பாதையை ஊடறுத்துச் செல்கின்ற வனவிலங்குகளுக்கு ஆபத்தானவையாக இருக்கின்றன. இதனால் சில வருடங்களிலேயே அதிகமான வனவிலங்குகள் கொல்லப்பட்டுவிட்டன.
சில சாரதிகள் அனுமதிச் சீட்டுகளை கொள்வனவு செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளுக்கு அதிக விலைக்கு கொடுத்து பணம் சம்பாதித்து வருவதால் ஒன்லைன் மூலம் அனுமதிச் சீட்டுகளை விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு உண்மையான அனுமதிச் சீட்டு விலையினை ஆங்கிலத்தில் அறிவுறுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தியிருந்தாலும் ஜீப் வண்டிச் சாரதிகள் அதற்கு மாறாக பதாதைகளை நீக்கி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கும் சுற்றுலாப் பயணிகளின் கவனயீனத்தை அகற்றுவதற்கும் உடனடி திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 26 தேசிய வனவிலங்கு பூங்காக்கள் உள்ளன. இதில் அதிக சனநெரிசலை கொண்ட அதிகமானோர் செல்லும் பூங்காக்கள் நான்கு காணப்படுகின்றன. யால தேசிய பூங்காவில் அண்ணளவாக ஒரு நாளைக்கு 350 பேரை ஜீப் இயக்குனர்கள் ஏற்றிச் செல்கின்றார்கள். ஒரு ஜீப் சவாரிக்கு 5000 ரூபா வரை பெறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு 531 மில்லியன் ரூபாவினை ஜீப் வண்டி ஒட்டுனர்கள் பெற்றுக்கொண்டனர். அதேவேளை 2016 இல் 2,050, 832 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வனவிலங்கு தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்திருக்கின்றனர். இதில் 38 வீதமானோர் வெளிநாட்டவர்களாவர்.
அதேவேளை மின்னேரியா தேசிய பூங்காவுக்கு 114,000 வெளிநாட்டவர்களும் ஹோர்டன் தேசிய பூங்காவுக்கு 132,000 வெளிநாட்டவர்களும் உடவளவ தேசிய பூங்காவுக்கு 128,000 வெளிநாட்டவர்களும் யால தேசிய பூங்காவுக்கு 273,000 வெளிநாட்டவர்களும் பார்வையாளர்களாக வருகை தந்திருக்கின்றனர். எனவே எதிர்வரும் காலங்களில் பார்வையாளர்களின் பெருக்கமும் ஜீப் வண்டிகளின் தொகையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளமையினால் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அவற்றை பாதுகாப்பதற்கான திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் வனவிலங்குகளுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலைமை ஏற்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக