மனைவியும் காதலியுமே மகனின் மரணத்துக்கு பொறுப்பு
அண்மையில் தற்கொலை செய்து கொண்ட பிரபல சிங்கள நடிகர் தசுனின் நினைவில் அவரது குடும்பம் இன்னும் கண்ணீர் விட்டுக் கொண்டே இருக்கிறது. அவரது தாயாரான சியாமா ஹேரத்தின் ஆரோக்கியமான உடல் இன்று சோர்விழந்துவிட்டது. உடனிருந்த சிரிப்பும் இல்லாமல் போய்விட்டது. சந்தோஷமான வாழ்க்கையும் துக்கமாகிவிட்டது. இனிமேலும் இவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று சொல்ல முடியாது. நடிகரான தசுன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பின்பே அவரது தாயாரை முழு உலகமும் கண்டு கொண்டது. அத்தாய் மரணமடைந்த தனது மகன் பற்றி கூறிய சில தகவல்கள்;
தசுனின் மரணத்துக்குப் பின் ஏராளமான கட்டுக் கதைகள் உலவியதோடு, மரணத்தைப் பற்றி சில ஊடகங்கள் ஒவ்வொரு விதமாக பதிவிட்டிருந்தன. இரத்தத்தை பாலாக்கி பெரியவனாக்கிய தசுனைப் பற்றி என்னைவிட தெரிந்தவர் யாருமில்லையென அவர் தெரிவித்தார். என் மகன் இப்படி மரணிக்க வேண்டியவன் இல்லை. ஷலனி தாரக்காவும் மகனின் மனைவியான சந்தீபனி ஆகிய இருவராலுமே மகன் கொல்லப்பட்டதாக குறை கூறினார். அவர்கள் இருவரே எனது தங்க மகனின் மரணத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும். இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகனான தசுன் பற்றியும் அவர்களின் குடும்பத்துக்கு ஏற்பட்ட பொய்க் குற்றச்சாட்டு தொடர்பிலும் விளக்கத் தொடங்கினார்.
எனது பெயர் சியாமா ஹேரத். எனது பிறந்த ஊர் கண்டி. நான் இற்றைக்கு 30 வருடத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். எனது கணவர் சிவில் பொறியியலாளர். அதனால் எமக்கு பொருளாதார ரீதியில் எந்தக் கஷ்டமும் இல்லை. திருமணமாகி ஒரு வடத்துக்குப் பிறகு தசுன் பிறந்தான். அதன் பின்னர் நாம் கண்டி அஸ்கிரிய பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தோம். பல வருடங்களாக நானும் எனது கணவரும் மகனும் அஸ்கிரிய பிரதேசத்திலேயே வசித்து வந்தோம். இக்காலத்திலேயே தசுனுக்கு எந்தவொரு குறையுமில்லை. கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தோம். முன்பள்ளி கல்விக்குக்கூட தேசிய பாடசாலைக்கேச் சென்றான். அதன் பிறகு அஸ்கிரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்துக்கு படிக்கச் சென்றான். 9 ஆம் ஆண்டு வரைக்கும் அங்கேயே படித்தான். எனது கணவர் வேவல்தெனிய பகுதியில் வீடொன்றை கட்டிக்கொண்டிருந்தார். அதனால் எங்களுக்கு அஸ்கிரிய வீட்டிலிருந்து செல்லவேண்டியேற்பட்டது. அப்போது நான் இரண்டாவது தடவையாக கருத்தரித்திருந்தேன். வேவல்தெனியவுக்குச் சென்றாலும் தசுன் கண்டி சுமங்கல வித்தியாலயத்துக்கேச் சென்றான். இரண்டு கிழமைபோல் அவன் அவ்வாறு சென்று வந்தான். பின் அவன் கஷ்டப்படுவதை உணர்ந்து மிஹிரிகம கனிஷ்ட வித்தியாலயத்தில் சேர்த்தோம். அதுவொரு கலவன் பாடசாலையாகும். அங்குதான் எனது மகன் சந்தீபனியை காதலிக்கத் தொடங்கினான். முதலில் சந்தீபனி மறுத்தாள். ஆனால் அதன் பின்பு தசுன் எப்படியோ அவளை தன்வழிக்குக் கொண்டுவந்து விட்டான். அதன் பிறகு இதுபற்றி எமக்குத் தெரியவந்தது. முதலில் அதற்கு நாம் உடன்படவில்லை. படித்ததற்குப் பிறகு அதைப்பற்றி பேசுவோம் என்று சொன்னேன். அதை அவன் கேட்டானோ என்னவோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் மகன் படிப்பதில் கெட்டிக்காரன். சாதாரணதரப் பரீட்சையில் மிஹிரிகமவிலுள்ள மூன்று பாடசாலைகளிலும் தசுன் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டான். அதனால் அவனுக்கு கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்துக்குச் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு உயிரியல் விஞ்ஞான பீடத்தில் உயர்தரம் கற்றான். அப்பொழுதும் சந்தீபனியுடன் தொடர்பு வைத்திருந்தான். இதற்கிடையில் இரண்டாவது மகன் கிடைத்து இரண்டு வருடத்துக்குப் பிறகு கணவர் தொழிலுக்காக கனடா சென்றுவிட்டார்.
அங்கு சென்று சிறிது காலத்தில் அவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டார். அந்த நேரம் பெரிய கவலையொன்று என் மனதுக்கு வந்தது. ஆனால் அதனை யாருக்கும் வெளிக்காட்டவில்லை. என் கணவர் அவருக்கு விருப்பமானதையே செய்து கொண்டாரென மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன். இருப்பினும் என் பிள்ளைகளைப் படிக்க வைத்து சமூகத்தில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுவர வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். என் கணவர் என்னை கைவிடுவதற்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினையும் இல்லை. காரொன்றும் என்னிடமிருந்தது. சிலவேளைகளில் தசுனை அதில் பாடசாலைக்கு கொண்டுசென்று விடுவேன். சில காலம் அப்படியே சென்றுவிட்டது. வருமானத்துக்கு வழியில்லாததால் கையிலிருந்த காசு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இருந்தாலும் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கான பணம் என்னிடமிருந்தது. இந்நேரத்தில் தசுனுக்கு விளம்பரத்தில் தோன்றும் வாய்ப்பொன்று கிடைத்தது. அப்போது அவன் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்தான்.
அதன்பிறகு நண்பரொருவரூடாக நாடகத் துறையில் வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு தசுன் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான். உயர்தரத்துக்குப் பின்பு தசுன் தொடர்ந்து நாடகத் துறையிலேயே மூழ்கிப்போனான். அத்தோடு தகவல் தொழில்நுட்ப பிரிவில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றான். இக்காலகட்டத்தின் சந்தீபனியுடனிருந்த காதல் தொடர்பு பற்றி என்னிடம் தெரிவித்தான். முதலில் நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். ஏனென்றால் அவர்களது குடும்பம் எங்களுக்கு ஒத்துவரவில்லை. நான் அந்தக் குடும்பத்தை நிந்திக்கவில்லை. தொடர்ந்து தசுன் இதுபற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தான். இதனால் அவன் ஆசைக்கு இணங்கி இதை நான் ஒத்துக்கொண்டேன். அதன் பிறகே சந்தீபனி குடும்பம் பற்றி தெரிந்து கொண்டேன்.
ஒருநாள் இரவு எட்டுமணியளவில் எனது கார் விபத்துக்குள்ளாகியது. இதனால் ஐந்தாறு மாதம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற நேர்ந்தது. அத்தோடு பொருளாதாரப் பிரச்சினையும் ஏற்பட்டது. இதனால் வேவல் தெனிய வீட்டை விற்றுவிட்டு கூலி வீடொன்றுக்குச் சென்றோம். அதுகாலம் வரை தசுனுக்கு நான் காசு செலவளிக்கவில்லை. அவனுக்குக் கிடைத்த பணத்திலேயே அவன் தன் தேவையை நிவர்த்தித்துக் கொண்டான். அவனுடைய தேவையை நிவர்த்திக்க இலகுவாக அவன் கொழும்பிலேயே தங்கிக் கொண்டான். வேவல்தெனிய வீட்டை விற்று பணத்தில் 10 இலட்சத்தை தசுனுக்கு கொடுத்தேன். அவன் அந்தப் பணத்தை நண்பனான ரெஜிக்கு கொடுத்தான். அவன்தான் தசுன் இத்துறைக்கு வருவதற்கு பெரும் உதவி செய்தான். இப்பணத்தை ஏன் எனக்குத் தருகிறாயென்று ரெஜி கேட்டபோது, வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
2014 ஏப்ரல் மாதம் சந்தீபனியின் வீட்டுக்கு முதல் தடவையாக அவளின் பெற்றோரை சந்திப்பதற்குச் சென்றான். அத்தோடு திருமணம் பற்றியும் கதைத்துக் கொண்டார்கள். இதற்கிடையில் நான் கொடுத்த பணத்தில் காணியொன்றை வாங்க சந்தீபனியுடன் சேர்ந்து காணியொன்றை தேடினான். கடைசியாக நாங்கள் வாடகைக்கு இருந்த இடத்தையே வாங்கினான். இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்தபடியால் சந்தீபனி என்னுடன் மிகவும் அன்பாகப் பழகத் தொடங்கினாள். உண்மையில் என்னுடைய மகள் போலவே நான் அவளைப் பார்த்தேன். அவளது மனம் நோகும்படி ஒருவார்த்தையேனும் சொன்னதில்லை. இச்சந்தர்ப்பத்தில் 2015 ஆம் ஆண்டு அவர்களது திருமணம் நடந்தேறியது. அதன் பிறகு மகன் சந்தீபனியின் வீட்டிலேயே தங்கியிருந்தான். இதன்போதே நாங்கள் வசித்து வந்த வீட்டை தசுன் புனர்நிர்மாணம் செய்யத் தொடங்கினான். முதலில் சின்ன இரு அறைகளுடன் வீட்டின் ஒரு பகுதியை கட்டி முடித்தான். அவ்வாறு தசுன் கட்டிய வீட்டுக்கு 2015, டிசம்பர் 31 ஆம் திகதி நாங்கள் குடிபுகுந்தோம். அங்கு சென்றதிலிருந்து தசுன் சொன்ன வார்த்தை அம்மா சாகும் வரை என்னுடனே இருங்கள் என்பதாகும்.
வெகு சீக்கிரம் இவ்வீட்டை நான் கட்டி முடித்து விடுவேன் என்று தெரிவித்தான். அவ்வாறே இரு வருடங்கள் உருண்டோடின. மகன் இக்காலத்தில் நாடகத்துறையில் முன்னேறிச் சென்றான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் அவனது தம்பி பற்றியும் நலம் விசாரித்துச் செல்வான். நீ வெளிநாடு சென்று கல்வி கற்றுக்கொள் நானும் உதவிசெய்கிறேன் என தம்பிக்கு அறிவுரை கூறுவான். 2017 ஆகஸ்ட் 2 ஆம் திகதி மகன் வீட்டுக்கு வந்தான். இரவு நேர சாப்பாட்டின் போது அவனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. தொலைபேசியில் உரையாடுவது பெண்ணொருவர் என்பதை நான் ஊகித்துக் கொண்டேன். பின்னர் அது பற்றி மகனிடம் வினவினேன். இருப்பினும் அது சம்பந்தமாக அவன் எனக்குத் விரிவாக தெரிவிக்கவில்லை. ஏதோ பிரச்சினை இருப்பது எனக்குத் தெளிவானது. என்னுடைய மகன் அதிகம் பேசக்கூடியவனல்ல. அதனால் அச்சம்பவம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடியாமல் போனது. இப்போதெல்லாம் சந்தீபனியும் என்னோடு அவ்வளவாக பேசுவதில்லை. அதனாலேயே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் சந்தீபனி எங்கோ செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்று எங்கு போகிறாய் எனக் கேட்டேன். அதற்கு , போகிற இடமெல்லாம் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லையென்றாள். பிறகு ஆகஸ்ட் 10 ஆம் திகதி என்னுடைய நண்பரொருவர் என்னிடம் உங்கள் மகள் அவுஸ்திரேலியா சென்றுவிட்டாளல்லவா எனக் கேட்டார்.
என்னிடம் சொல்லிவிட்டுச் செல்லவில்லை என்று கூறினேன். பிறகு இதைப்பற்றி மகனிடம் கேட்டேன். ஆம், சந்தீபனி வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறினான். ஏன் நீ போகவில்லையென மகனிடம் கேட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருப்பதால் நான் செல்லவில்லையெனக் கூறினான். ஆயினும் வேறு நாட்கள் போலல்லாது மகன் தினந்தோறும் வீடுவரத் தொடங்கினான். அப்படி வரும் ஒவ்வொரு நாளுமே சந்தீபனி பேசினாளா எனக் கேட்பேன். மகனும் ஆம் என்பான். அது தவிர வேறெதுவும் அவன் சொன்னதில்லை. எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும் எதையும் சொல்லவில்லை. ஏதோ பெரிய பிரச்சினையில் மகன் சிக்கியிருப்பதாக எனக்குத் தோன்றியது.
மகன் என்ன பிரச்சினையில் சிக்கியிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள சந்தீபனிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். அப்போது அவரைப்பற்றி பேசி இப்போது எந்தப் பிரயோசனமும் இல்லையென அவள் கூறினாள். என்னிடம் எதையும் கேட்கவேண்டாம் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்றாள். மகன் சொல்ல மறுப்பதால் என்ன நடக்கிறது என்று கேட்டேன். அவ்வேளை சந்தீபனி, நான் தற்போது பாடசாலை வேலையாக இருக்கிறேன். பிறகு உங்களுடன் கதைக்கிறேன் என்றாள். மாலைவேளை சந்தீபனி என்னோடு தொடர்பு கொண்டு தெரிவித்ததாவது, தசுன் நடிகையொருவருடன் காதல் கொண்டுள்ளான். இத்தொடர்பு ஜனவரி முதல் இருந்துள்ளதாகவும் தனக்கு ஜூன் மாதமே இவ்விபரம் தெரியவந்ததாகவும் தெரிவித்தாள்.
அதுபற்றி தசுனிடம் கேட்டபோது, தனது தவறை ஒப்புக்கொண்டதாகவும் அவள் தற்போது தன்னை பார்க்க வருவதில்லையென்றும் தெரிவித்ததாகவும் மேலதிக விபரங்களை ஷலனி அக்கா தனக்கு தெரிவித்ததாக சந்தீபனி கூறியிருந்தாள். இதை தவிர இந்த எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் தசுனின் அழகிய முகத்தோற்றமே. அதனால் முகம் சிதைந்து போகவேண்டும். அவனை நன்றாக வாழவிடக் கூடாது . விரைவாக அவன் சாக வேண்டும். இவ்வாறு ஷலனி தெரிவித்த தாகவும் முடிந்தால் இவற்றிலிருந்து அவனை காப்பாற்றிக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றி அவனிடம் தாய் கேட்டதற்கிணங்க, ஷலனிக்கும் தனக்கும் காதல் தொடர்பு இருந்ததை ஏற்றுக் கொண்டான். தனக்கு எதிர்பார்த்த அன்பு கிடைக்காததாலேயே மேற்படி தொடர்பு ஏற்பட்டதாக தசுன் கூறினான். அப்போது கூட சந்தீபனிக்கு கெடுதல் செய்ய வேண்டாமென்றே தாயார் கூறியிருந்தார். இறுதியாக செப்டெம்பர் 24 ஆம் திகதியே தசுனுடன் கதைத்திருந்தார். அது அவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தினத்துக்கு முதல் நாளாகும். அந்த நேரம் வரைக்கும் ‘நான் நன்றாக இருக்கிறேன். தம்பியை நன்றாக படிக்க வையுங்கள், அம்மா சாகும் வரைக்கும் அங்கேயே இருங்கள்’ என தசுன் கூறியிருந்தான்.
அடுத்த நாள் சந்தீபனி தசுனின் தாய்க்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ‘அவன் இறந்துவிட்டான்’ என தெரிவித்தாள். அப்போதே தசுன் இறந்ததை தாய் அறிந்து கொண்டாள். தசுனின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வேளையில் தசுனின் நண்பன் தன்னிடம் தந்திருந்த பணத்தை தசுனின் தம்பியிடம் கொடுத்துள்ளான். அவ்வேளை தம்பியிடமிருந்து பணத்தையும் தசுனின் வங்கி அட்டையையும் பெற்றுக் கொண்டாள் சந்தீபனி. அவ்வேளை அவளுக்கு தசுனின் பணமே பெரிதாகப்பட்டது என தசுனின் தாய் தெரிவித்துள்ளார்.
தசுனின் தாயான சியாமா ஹேரத், சந்தீபனி மற்றும் ஷலனி பற்றி பின்வருமாறு தெரிவிக்கிறார். எனது மகன் சந்தீபனியிடமிருந்து விலகக் காரணம், அவளிடமிருந்து எதிர்பார்த்த அன்பு கிடைக்காமையே ஆகும். ஷலனி பற்றி தெரிந்து கொண்ட சந்தீபனி அவளுடன் நெருங்கிப்பழகி அவளை தன் வலைக்குள் போட்டுக்கொண்டு தசுனுக்கு வெவ்வேறு விதமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தாள். அத்துடன் ஷலனியும் அவ்வப்போது தசுனுக்குத் தெரியாமல், அவர்கள் செல்லும் இடங்கள், கதைக்கும் விடயங்கள் பற்றி இரகசியமாக சந்தீபனிக்கு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சந்தீபனியும் ஷலனியும் இணைந்து செய்த சதி வேலைகளினாலேயே எனது மகன் மனதளவில் பாதிக்கப்பட்டான். இறுதியில் இருவரினதும் தொல்லை தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான் என தாயார் தெரிவித்திருந்தார்.
எனது மகன் நல்லவன் என்று நான் சொல்லவரவில்லை. அவன் மீதும் தவறிருக்கிறது. தேடுகிற அன்பு கிடைக்கவில்லையென்று மனைவியை விட்டுவிட்டு இன்னொருவருடன் ஊர் சுற்றுவது தவறு. சட்டப்படி விவாகரத்தும் கேட்டிருக்கிறான். ஆனால் சந்தீபனி அதற்கு உடன்படவில்லை. இறுதியாக என் மகனுடன் வாழவே இருவரும் விரும்பியிருக்கிறார்கள். என்னுடைய குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் நிறைய உதவிகளை செய்துள்ளதாக சந்தீபனி தெரிவித்தது ஜோடிக்கப்பட்ட பொய்யாகும். அவர்களுக்கு யாருக்கும் உதவிசெய்யக் கூடிய பொருளாதாரம் இருக்கவில்லை. அதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன். பணத்தால் எங்களுக்கு எந்த உதவியையும் சந்தீபனி செய்யவில்லை. தசுன் கட்டித் தந்த வீட்டின் உறுதிப்பத்திரத்தையும் எடுத்துச் சென்றுவிட்டாள். தம்பியின் படிப்பு முடிந்தவுடன் அவர்களை வீட்டைவிட்டு துரத்திவிடுவதாக சந்தீபனி தெரிவித்துள்ளார். எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டாள் என்று பாருங்கள். இது போதாதென்று அவள் தற்போது இருப்பது அவுஸ்திரேலியாவில். சந்தீபனியிடம் ஒன்றை ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, என்னையும் தம்பியையும் இந்த வீட்டிலிருந்து துரத்த வேண்டாம். தசுன் எங்களுக்காக கட்டிய வீடு இது. நான் சாகும் வரை இந்த வீட்டிலேயே வசிக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். ஷலனி தாரகாவுக்கும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது ‘ஏழு நாள் கடந்து செல்ல முன் மாமியும் மருமகளும் இணைந்து சொத்தை பிரிக்க முடியாமல் சண்டையிடுகிறார்கள்’ என கவிதையொன்றை எழுதியிருந்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக