கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

ஊடக சுதந்திரம் உயிர் பெறுமா?
க. பிரசன்னா
உலகில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள், வன்முறைகள், படுகொலைகள் என்பன முற்றுப்பெறாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எவ்விதமான தீர்வுகளும் கிடைக்கப்பெறாத நிலையே காணப்படுகின்றது. அண்மையில் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த கௌரி லங்கேஷ் (55 வயது) பெங்களூரில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். சமீபகாலமாக இந்தியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் கௌரி லங்கேஷ் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். இவ்வாறான சம்பவங்கள் ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்ற பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பில் எமக்கு சுட்டிக்காட்டுகின்றன.
உலகளவில் 2017 ஆம் ஆண்டில் இதுவரையும் 25 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், கொல்லப்பட்டமைக்கான காரணமும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு 2017 இல் கொல்லப்பட்ட 9 ஊடகவியலாளர்களின் கொலைக்கான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை. அதே போல 8 ஊடகப் பணியாளர்களும் 2017 இல் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 19 பேருடைய கொலைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏனைய 6 பேருடைய கொலைக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கான விசாரணைகளிலும் இதுவரை திருப்தியற்ற நிலைமையே நீடித்து வருகின்றது.
உலகளவில் 2015 இல் ஊடகவியலாளர்களுக்கு தணிக்கை செய்யப்பட்ட நாடுகளாக 10 நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எரித்திரியா, வடகொரியா, சவுதிஅரேபியா, எதியோப்பியா, அசார்பைஜான், வியட்நாம், ஈரான், சீனா, மியன்மார், கியூபா என்பன இவற்றுள் உள்ளடங்குவதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக்கான செயற்குழுவினர் தெரிவித்துள்ளனர். எரித்திரியா மற்றும் வடகொரியா என்பனவே அதிபயங்கரமான நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எரித்திரியாவில் சுதந்திரமான ஊடகத்துறையை மோதுவதில் அந்நாட்டின் ஜனாதிபதி வெற்றிபெற்றுள்ளார். இங்கு ஊடக அடக்கு முறையானது, கைது செய்யப்படுவோம் என்ற நிலையான பயத்தை ஏற்படுத்துகிறது. எரித்திரியா, ஆபிரிக்காவில் ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான சிறைக்காவலனாக காணப்படுகின்றது.
அரபு வசந்தத்தின் பின் எரித்திரியாவில் நாட்டுமக்களுக்கான மொபைல் இணையசேவை பறிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையசேவை வழங்கப்பட்டாலும் அவை மிகவும் வேகம் குறைந்தவையாக இருப்பதுடன், மொத்த சனத்தொகையில் ஒரு வீதமானோரே இணையத்தை நாடுகின்றனர். உலகில் எரித்திரியாவிலேயே மிகக் குறைந்தளவிலான செல்போன் பாவனையாளர்கள் இருக்கின்றனர். இது எரித்திரியாவின் மொத்த சனத்தொகையில் 5.6 வீதமென ஐ.நா. வின் சர்வதேச தொலைத் தொடர்பாடல் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் சனத்தொகையில் 9.7 வீதமானோரே செல்போன்களை பாவிக்கின்றனர். இவை சீன உற்பத்திகளாகவே காணப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு மாத்திரமே உலக இணையம் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் ஏனைய கல்வியகங்களில் இணையத்துக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எரித்திரியா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. அதிகாரம், பிராந்தியத்தில் ஊடக சக்தி, கைது, வேவு பார்த்தல் ஊடகவியலாளர்களுக்கான சிறை மற்றும் ஊடகவியலாளருக்கான கட்டுப்பாடு என்பன இரு நாடுகளிலும் ஒரே பிரதிபலிப்பினையே கொண்டுள்ளன.
உலகில் அதி பயங்கர நாடான எரித்திரியா மற்றும் எதியோப்பியா, அசார்பைஜான், வியட்நாம், ஈரான், சீனா மற்றும் மியன்மார் என்பன உலகில் ஊடகவியலாளர்களுக்கு மோசமான சிறைக்காவலர்களாக இருக்கின்றன. உலகில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் அரசுக்கு எதிராக செயற்பட்டமைக்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 1990 இற்குப் பிறகு சீனாவில் 40 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளதுடன். இதில் 29 சம்பவங்கள் அரசுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையதாகவும் உலகம் முழுவதும் 2016 ஆம் ஆண்டு 48 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1992 ஆம் ஆண்டு முதல் 1252 ஊடகவியலாளர்கள் இதுவரை கொல்லப்படுள்ளனர். இதில் 491 பேர் கொல்லப்பட்டுள்ளமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய சம்பவங்கள் தொடர்பில் போதுமான காரணங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன.
2016 ஆம் ஆண்டு அதிபயங்கரமான நாடுகளாக சிரியா(16),யேமன்(6),ஈராக்(6), ஆப்கானிஸ்தான்(4), சோமாலியா(3), லிபியா(3), துருக்கி(2), பாகிஸ்தான்(2), மெக்சிக்கோ(2), என்பன அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், 2017 இல் மெக்சிக்கோ(4), ரஷ்யா(2), இந்தியா(1), பிலிப்பைன்ஸ்(1), என்பன அடையாளம் காணப்பட்டன. இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு முதல் 40 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக், சிரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. அத்தோடு 1992 முதல் 104 ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தளவில் 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகொலைகளுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டு படுகொலைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் மட்டுமல்லாது உலகளவிலும் ஊடகத்துறையானது மிகவும் சக்தி வாய்ந்த துறையாகவே இருக்கின்றது. மிகவும் கடினமான சூழ்நிலையிலும் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளனர். பெரும்பாலான ஊடகங்களே உலக அரசியலை தீர்மானிக்கின்றன. இவ்வாறான நிலைமையில் ஊடக நிறுவனங்கள், பணியாற்றும் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் என்போருக்கான பாதுகாப்பு என்பது மெச்சும்படியாக இல்லை.
இலங்கையில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றன. குற்றத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்படுவதுமே வாடிக்கையாக இருக்கின்றது. எனவே முன்னைய காலங்களை விட தற்போது ஊடகவியலாளர்கள் ஓரளவு சுதந்திரமாக பணியாற்றக் கூடிய சூழல் காணப்பட்டாலும், அவை முழுமையான சுதந்திரமாக எண்ணிவிட முடியாது.
இலங்கையில் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட குடும்பங்கள் அவை தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதற்கு அஞ்சுகின்ற நிலைமையே காணப்படுகின்றது. இலங்கையில் முன்னைய காலங்களை விட தற்போது நேரடியான அச்சுறுத்தல்கள் அதிகம் காணப்படுகின்றன. எனவே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியான முறையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணங்கள், நட்ட ஈடுகள் முறையான நீதிப்பொறிமுறையினூடாகவே வழங்கப்படவேண்டும். அவற்றை தனிநபரொருவரோ, அரசாங்கமோ தீர்மானிக்க முடியாது. பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களை நேரடியாக சுட்டிப்பேசுதல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் மீது கடற்படைத்தளபதியின் தாக்குதல் என்பனவற்றை குறிப்பிடலாம்.
.................................................................................
1993 ஆம் ஆண்டு முதல் உலகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பணியாற்றிய துறை தொடர்பான விபரம்.
துறை கொல்லப்பட்டோர்
அரசியல் 582
யுத்தம் 521
மனித உரிமைகள் 265
ஊழல் 255
குற்றம் 197
கலாசாரம் 147
வர்த்தகம் 54
விளையாட்டு 30
..................................................................................................
முழுமையான சுதந்திரம் இல்லை
இலங்கையில் ஊடகசுதந்திரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை முழுமையானதென சொல்ல முடியாது. முன்னைய அரசாங்கத்தில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல் அதிகமிருந்தது. அவை தற்போதும் பெரிதாக குறையவில்லை. அதனை அரசியல் தலைவர்களின் பேச்சுக்களில் இருந்து அறிய முடிகிறது. குறிப்பாக வடக்கில் படையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை குறிப்பிடலாம்.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் வழக்குகளில் எதிர் பார்த்த வேகம் இல்லை. நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் லசந்த விடயத்தில் கூட தீர்வில்லை. இலங்கை உழைக்கும் பத்திரிகை சங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தும் அவை சாத்தியமில்லை. பல ஊடகவியலாளர்கள் வெளி நாடுகளில் வசித்தாலும் அவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு அச்ச உணர்வையே கொண்டுள்ளனர். இதற்கு அரசாங்கமும் ஊடக அமைச்சும் சரியான தீர்வு வழங்க வேண்டும்.
என்.எம்.அமீன்- தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம்.
..............................................................
முன்னேற்றமில்லை
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தை விட இப்போது சுதந்திரம் இருக்கின்றது. யுத்தகாலப் பிரச்சினைகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் போன்றவற்றை விசாரணை செய்ய பொலிஸ் ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றை கோரியிருந்தோம். அவை உருவாக்கப்படவில்லை. ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் அதிகம் அக்கறை காட்டுகின்ற அரசாங்கம் ஊடகங்கள் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள், நியூ மீடியா என்பவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் சுயாதீனப் பேரவை ஒன்றை உருவாக்குவதற்கான திட்ட வரைபை முன்வைத்துள்ளது. ஆனால் இத்திட்டத்தை உருவாக்க யுத்தத்தில் பணியாற்றிய ஊடகங்களிடமோ, மூத்த ஊடகவியலாளர்களிடமோ ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை. அரசாங்கம் இன்னும் ஊடகவியலாளர்கள் விடயத்தில் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றது.
அ.நிக்ஸன்
தலைவர்
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.
.................................................................
நீதிப்பொறிமுறை அவசியம்
இலங்கையில் ஊடகசுதந்திரம் மகிந்த காலத்தை விட தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. ஊடக அச்சுறுத்தல் படுகொலை மற்றும் காணமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கான நியாயங்களை பெற்றுக் கொள்வது தொடர்பான உறுதிகள் வழங்கப்படும் நல்லாட்சி அரசாங்கம் அவற்றை நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்கும்படி கடந்த இரண்டு வருடங்களாக எமது ஒன்றியத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டும் நிறைவேறவில்லை. சந்திப்புக்கும் அழைப்பு விடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் பிரதமர் கூட ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்துவருகின்றார். இதுவும் ஒரு அச்சுறுத்தலே, மஹிந்த காலத்தில் மறைமுகமாக காணப்பட்ட விடயம் இன்று நேரடியாகவே நடைபெறுகிறது.
ஊடகசுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றே உறுதிமொழியிலேயே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. நீதிமன்றங்களில் பல வழக்குகள் இடம்பெற்றாலும் நீதி தருவதாக இல்லை. காணாமல் போன, கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், அவர்களது குடும்பங்களுக்கு மக்கள் பணத்தை (நட்டஈடு) கொடுத்து திருப்திப்படுத்தும் பொறிமுறையானது தவறாகும். அதற்கு அவசியம் கிடையாது. உண்மையான குற்றவாளி யார் என்பதை தெரிவிக்கவேண்டும் அதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அவசியமாகும். வட, கிழக்கில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒரு சில வழக்குகளே நீதிமன்றத்திலுள்ளன. இதற்கு பலவகையான அழுத்தங்கள் கொடுத்தும் தீர்வில்லை. லசந்த எக்னெலிகொட ஆகிய குறிப்பிட்டோரின் வழக்குகளே நடைபெற்று வருகின்றன.
இவ்வழக்குகளில் அதிகம் அரசபடையினரே தொடர்புபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கும் செயற்பாடு நடந்து வருகிறது. எனவே இவற்றுக்கு நீதி கிடைப்பது சந்தேகமே. ப்ரெஸ் கௌன்ஸில் சட்டத்தில் மாற்றம் புதிய நிர்வாகக் குழு நியமனம் என்பவற்றை கோரியும் பயனில்லை. மஹிந்த காலத்தில் வெளிப்படைத் தன்மை பேணப்பட்டது. ஆனால் தற்போது மறைமுகமாக அமைச்சரவையில் விதிமுறைகள் வகுக்கப்படுவதாக அறிகிறோம். அண்மையில் கூட கடற்படைத்தளபதி ஊடகவியலாளரை தாக்கிய சம்பவம் கூட பதிவாகியது. அதற்கு அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்ற கோரிக்கையினை நாங்கள் முன்வைத்திருந்தோம்.
ஏ.ஜெயசூரியன்
உபசெயலாளர்
உழைக்கும் ஊடகவியலாளர் ஒன்றியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக