க. பிரசன்னா
மலையக பெருந்தோட்டப்பகுதிகள் இன்னும் முழுமையான அபிவிருத்தியினை பெற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் வழங்குகின்ற வாக்குறுதிகளில் ஒரு சிலவே நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்காக தேசிய அரசாங்கத்தால் மலைநாட்டுப் புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக 7 பேர்ச் காணியில் சொந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ’பசும்பொன்’ வீடமைப்புத்திட்டமும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அவற்றில் இடம்பெறுகின்ற முறைகேடுகள், கட்சி அரசியல் என்பன பயனாளிகளுக்கு உரிய முறையில் வீடமைப்புத் திட்டம் கொண்டு சேர்க்கப்படுகின்றதா? என்பது அதிக சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்திலுள்ள ஆறாம் இலக்க லயன் அறையானது (16 காம்பிராக்கள் ) முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. இந்த 16 லயன் வீடுகளில் மொத்தமாக 21 குடும்பங்கள் வசித்து வந்திருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அண்மையிலுள்ள புளும்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் 16 தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இவ்வாறு தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் கமூக அபிவிருத்தி அமைச்சினால் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதாக வாக்களித்து வீடுகள் கட்டுவதற்கான இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சீட்டுக் குலுக்கல் முறையிலேயே இவர்களுக்கான வீட்டு இலக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன. கிராம சேவகர், நலன்புரி உத்தியோகத்தர், ட்ரஸ்ட் நிர்வாகிகளின் முன்னிலையிலேயே சீட்டுக் குலுக்கல் இடம்பெற்றிருந்தது. இந்தக் குலுக்கலில் முதலாவது இலக்கம் யாருக்கு வந்தாலும் அதனைத் தோட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவருக்கே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான அநீதிகளுக்குப் பிறகு வீட்டுத் திட்டம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. தீவிபத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர்களுக்கே வீடுகள் கையளிப்பதாக கூறப்பட்டிருந்தாலும் பயனாளர் பட்டியலில் 13 ஆம் இலக்க வீட்டுரிமையாளரான நடராஜ் பழவிந்தன் (ஈ.பீ.எப்.4495) மற்றும் 25 ஆம் இலக்க வீட்டுரிமையாளரான துரைசாமி குமரேஸ்வரன் ஆகிய இருவருக்கும் வீடுகள் கையளிக்கப்படவில்லை.
இதற்கான காரணம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் வினவுகையில்: வீடுகள் வழங்க மறுக்கப்பட்ட இருவரும் செங்கொடி சங்க உறுப்பினர்கள் என்பதுடன் கடந்த பெப்ரவரி மாதம் கண்டி ஹுன்னஸ்கிரிய எயாபார்க் தோட்ட மக்கள், தோட்டக் காணிகள் தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையாலுமே இவர்களுக்கான வீடுகள் மறுக்கப்பட்டதாக அமைச்சு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளுக்கான திறப்புகளை பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொண்டிருந்த போதும் அவை கைகூடவில்லை.
எனவே இப்பிரச்சினையை சட்டரீதியாக அணுகும் வகையில் அமைச்சுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதன் முதலாக நீதிமன்றத்துக்கு எடுக்கப்பட்டதுடன், அமைச்சு சார்பில் வழக்கறிஞர் சமூகமளிக்காத காரணத்தினால் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்கு பிற்போடப்பட்டது. செங்கொடிச் சங்கமும் சங்கத்தின் அங்கத்தவர்களும் இணைந்து இவ்வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். இதற்கமைய 2017 செப்டெம்பர் 7 ஆம் திகதி மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை பிராந்திய இயக்குனர் செங்கொடி சங்கத்துடன் தொடர்பு கொண்டு பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவர விரும்பியதன் பயனாக செப்டெம்பர் 8 ஆம் திகதி பாதிக்கப்பட்ட இருவருக்குமான வீட்டுத்திறப்புகள் கையளிக்கப்பட்டன. இதனால் இம்மாதம் 12 ஆம் திகதி இவ்விடயம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு பயனாளிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வீடுகளை தனிப்பட்ட குரோதங்களை காரணம்காட்டி இடைநிறுத்துவது நியாயமான விடயமல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை இடை நிறுத்த எந்த அமைச்சுக்கும் அதிகாரம் கிடையாது. தோட்டத் தொழிலாளர்களை கட்சி அரசியலில் இலகுவாக கட்டிப் போடலாம். அவர்களைப் பயமுறுத்தி ஆளலாம் என்று கனவு கண்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்ததும் சமரசத்துக்கு முயற்சித்தமையால் இவர்களுடைய தவறுகளை இலகுவாக அடையாளம் காண முடிந்திருக்கிறது. ஏமாற்று பேர் வழிகள், சீதனம் கேட்கிறார்கள், கட்சி மாறவேண்டும் என தொழிலாளர்களை ஏளனமாக பார்க்கும் தன்மையை இவர்களிடம் அவதனிக்க முடிகின்றது.
இவ்வாறு பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் இவ்வீட்டுத்திட்டத்தில் உள்ளடங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. வீடடுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவின் போது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் தலா 1000 ரூபா அறவிடப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுதல் முதல் திறப்புவிழா வரை பணம் வசூலிப்பும் பயனாளிகளின் உடலுழைப்பும் சுரண்டப்பட்டுள்ளன. இவ்வீட்டு நிர்மாணத்தின் போது தளம் வெட்டுவதற்காக 8000 ரூபாவும் மலசலகுழி வெட்டுவதற்காக 7000 ரூபாவும் அடிக்கல் நாட்டுவிழாவுக்காக 1000 ரூபாவும் வீடுகளுக்கு கல் நாட்டுவதற்காக 2200 ரூபாவும் நிலை நாட்டுவதற்கு 2000 ரூபாவையும் பாதிக்கப்பட்ட பயனாளிகள் செலவு செய்துள்ளனர்.
அத்துடன், வீடுகளின் இறுதிக்கட்டத்தினை பூர்த்தி செய்வதற்கு தோட்ட நிர்வாகத்தால் 10,000ரூபா கடனாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறெனில் சுவர் எழுப்புவது மாத்திரமா? வீடு நிர்மாணிப்பவர்களின் வேலை. ஏனைய சகல வேலைகளையும் பயனாளிகள் தோட்ட நிர்வாகத்திடமிருந்து விடுமுறை பெற்றே நிறைவேற்றக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் முன்பை விடவும் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான பெறுமதியில் மாத்திரம் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தோட்டத்தொழிலாளர்களின் பங்கு மிக அதிகமாகும். அதனாலேயே தற்போது பலர் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் அங்கத்துவம் பெற முடிந்துள்ளது.
இவ்வாறு மக்களுடைய வாக்குகளில் ஆட்சியை கைப்பற்றியவர்கள் அவர்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவது அவசியமல்லவா? இலவசமாக வீட்டுத்திட்டடம் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் மறைமுகமாக அவர்கள் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு பணத்தையும் உடலுழைப்பையும் அர்ப்பணித்து செயற்பட்டாலும் இறுதியில் கட்சி அரசியலால் பாதிக்கப்பட்டு பயன்பெற முடியாத சூழல் இருக்கிறது. மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் இவ்வாறான முறைகேடுகளை அவதானிக்க முடிந்தது. அதே போல் மலையகம் முழுவதும் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டங்களில் எவ்வாறான இன்னல்களை மக்கள் அனுபவிக்கிறார்களோ தெரியவில்லை.
பிரவுன்ஸ்விக்கில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் வீடமைப்புத்திட்டத்தில், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டித் தலைவருக்கும், உறுப்பினருக்கும் இரு வீடுகளும், மேலதிகமாக அனர்த்தத்தில் பாதிக்கப்படாத இருவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த மே மாதம் வீட்டுத்திட்ட திறப்பு விழா இடம்பெற்ற போது செங்கொடிச் சங்கத்தின் தோட்டக் கமிட்டித்தலைவர் மற்றும் உறுப்பினருக்கு வீடுகள் மறுக்கப்பட்டமையால் சர்ச்சைகள் மேலெழுந்திருந்தன. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தால் ஊ டகவியலாளர் சந்திப்பொன்றும் ஹட்டனில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இ.தொ.கா.உறுப்பினர்களுக்கு 6 வீடுகளும் மலையக மக்கள் முன்னணிக்கு 1 வீடும், செங்கொடிச் சங்கத்துக்கு 2 வீடுகளும் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு 12 வீடுகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பயனாளிகள் இருவருக்கான வீடுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் இவை தொடர்பில், அமைச்சரிடம் வினவியபோது ’எயாபார்க் போராட்டத்தில் நீங்கள் பங்குபற்றினீர்கள். இனி இவ்வாறான போராட்டத்தில் பங்குபற்றாமல் இருந்தால் திறப்பை வழங்குவதாக’ தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்தே தற்போது நீதிமன்றம் மூலமாக பயனாளிகள் தீர்வைப் பெற்றிருக்கிறார்கள். இவ்வீடமைப்பு திட்டமானது மக்களுக்காக அரசினால் வழங்கப்படும் திட்டமாகும். எனவே, இவற்றில் பாராபட்சமில்லாமல் பயனாளிகள் நன்மை பெறவேண்டும். அவற்றை முறையாக செயற்படுத்துவது அமைச்சினரினதும் தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளையினதும் பொறுப்பாகும். தற்போது மலையக மக்களுக்காக தேசிய அரசாங்கத்தின் மூலம் 25,000 வீடமைப்புத் திட்டமும், இந்திய அரசால் முதல் கட்டமாக 4000 வீடமைப்புத்திட்டமும் இரண்டாம் கட்டமாக 10,000 வீடமைப்புத்திட்டமும் வழங்கப்படவுள்ளன. எனவே இவற்றில் கட்சி ரீதியான வேறுபாடுகளை மறந்து உண்மையான பயனாளிகள் பயன்பெற வேண்டுமென்பதே சகலரின் எதிர்பார்ப்பாகும்.
..............................................................................................
அமைச்சானது தானாக முன்வந்து திறப்பை வழங்கவில்லை. வழங்க வேண்டிய தேவை வந்தது. வழக்குத் தாக்கல் செய்யும் முன்பு பலமுறை சம்பந்தப்பட்டவர்களுடன் நாம் தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் இல்லை. வழக்கறிஞர் மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டும் அதற்கும் பதிலில்லை. எங்களிடம் சகல ஆதாரங்களும் இருக்கின்றன. ட்ரஸ்ட் வழங்கிய பெயர்ப் பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இருக்கிறது. இதனால் எம்மோடு அவர்கள் வாதாட முடியாது. அவர்களாகவே திறப்பை தராவிட்டாலும் நாங்கள் நீதிமன்ற உதவியால் அதை வாங்கியிருப்போம். 12 ஆம் திகதி வழக்கு இடம்பெறவிருந்த வேளையில் 7 ஆம் திகதி எம்மைத் தொடர்பு கொண்டு திறப்பை வழங்குவதாக தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பிரச்சினை எழக்கூடாது என்பதற்காகவே இவ்விடயத்தை நீதிமன்றத்தின் ஊடாக முடிவுக்கு கொண்டுவந்திருந்தோம். சகல ஆதாரங்களுடைய பிரதிகளும் நீதிமன்றத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எங்களிடம் சாட்சிகள் இருக்கின்றது. இதனால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே திறப்புக்கள் வழங்க காரணமாகும். ஆனால் இவை தொடர்பாக குறிப்பிடப்படும்படியான இலத்திரனியல் ஊடகம் மாத்திரமே தகவலை வெளியிட்டிருந்தது. ஏனைய ஊடகங்கள் அக்கறை கொள்ளவில்லை. இவ்வாறான பாதிப்புகள் ஏனைய வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை. ஆனால் இனி வாய்ப்பிருக்கிறது. இவ்விடயத்தை அறிந்த பலரும், பலதோட்டங்களிலிருந்து என்னை தொடர்பு கொண்டு எங்களுக்கு பிரச்சினையிருக்கிறது. முறையிடலாமா எனத் தெரிவித்திருந்தனர். நான் கட்சி ரீதியில்லாமல் சகலருக்கும் உதவத் தயாராகவிருக்கின்றேன்.
மேனகா கந்தசாமி
தலைவி
இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கம்.
................................................................................................
பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கான வீடுகள் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மையான நிலைமை. ஒரு குடும்பத்துக்கு இரு வீடுகள் வழங்க முடியாதென தோட்ட நிர்வாகம் எங்களுக்கு அறிவித்திருந்தது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் திறப்புகள் வழங்கப்படவில்லை. வழக்கில் வெற்றிபெறுவதொன்றும் அமைச்சருக்கு பெரிய விடயமல்ல. வீணாக இப்பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டாம் என்பதாலேயே திறப்பை வழங்கினோம். நம் தோட்டத் தொழிலாளர்கள் எம்மால் எந்த பாதிப்பினையும் எதிர் நோக்கக்கூடாது என்று அமைச்சர் அறிவுறுத்தியமையினாலேயே அவர்களுக்கான திறப்புகள் வழங்கப்பட்டன.
வீ.புத்திரசிகாமணி
தலைவர்
தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை.
...............................................................................
எங்களுடைய கைகளுக்கு வீடு கிடைத்தமையானது சந்தோஷமான தருணமாகும். அதற்காக என்னுடைய சங்கத்துக்கும் உதவிய அனைவருக்கும் நன்றி. பல்வேறு போராட்டத்தின் மத்தியிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளோம். இன்று (14/09/2017) வீட்டில் நாம் குடிபுகுந்துள்ளோம். எங்களுக்கு வீடுகள் மறுக்கப்பட்ட பின்பு நாம் ட்ரஸ்ட் நிறுவனத்துடன் கதைத்தோம். ஆனால் இவ்விடயத்தை அமைச்சுடனே பேசவேண்டுமென கூறிவிட்டார்கள். இதில் ஏதோ அரசியல் ரீதியான தலையீடு இருப்பதாகவே ட்ரஸ்ட் நிர்வாகியொருவர் தெரிவித்தார். இன்னும் இவ்வீடமைப்புத்திட்டத்தில் எவருக்கும் மின்சாரமும் குடிநீர் இணைப்பும் வழங்கப்படவில்லை. இந்த சம்பவத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதற்கான காரணம் இவ்வாறானதொரு நிலை மலையகத்தின் வேறெந்த தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே.
இன்று நாங்கள் வாக்களித்தவர்களே பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் இருக்கின்றனர். எனவே அவர்கள் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். இனியாவது மக்களோடு மக்களாகவிருந்து மக்கள் சேவையாற்ற வேண்டும்.
நடராஜ் பழவிந்தன்
தோட்டக் கமிட்டித் தலைவர்
இலங்கை தொழிலாளர் செங்கொடிச்சங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக