கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

தற்கொலைக்கு காரணம் நீலதிமிங்கிலமா? காதலா?







க.பிரசன்னா
உலகில் அதிகம் தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் இருக்கின்றது. ஒரு சில நிமிடங்களில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் தற்கொலைக்குள் வீழ்வது வழமையாகிவிட்டது. அவ்வாறானதொரு சம்பவமே இது. லலிதா சுவர்ணகுமாரி திருமணம் முடித்து 30 வருடங்களாகிவிட்டது. இவரின் கணவர் ஒரு தமிழர். திருமணத்துக்குப்பிறகு இத்தம்பதிகள் நிட்டம்புவ கத்தோட்ட பிரதேசத்தில் வசித்து வந்தனர். குடும்பத்தில் பொருளாதாரப்பிரச்சினைகள் இருந்தாலும் எந்தவொரு தொந்தரவுமின்றி நிம்மதியான வாழ்வை அனுபவித்து வந்தனர். திருமணம் முடித்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த குடும்பத்துக்கு இன்னொரு அங்கத்தவர் வந்து சேர்ந்தார். அதுதான் இவர்களின் அழகான ஆண்பிள்ளையான மகன். அந்த குழந்தைக்கு தசுன் நிசாந்த டி சில்வா என்று பெயரிட்டனர். குழந்தைப் பருவத்திலிருந்தே தசுனுக்கு பிறர் மனதை கொள்ளையிடும் வசீகரத் தோற்றம் இருந்தது. அதனால் தெரிந்தவர், தெரியாதோர் எல்லாமே இவன் மீது அதிக விருப்பம் கொண்டிருந்தனர். இக்குழந்தை இளம் வயதடையும் போது இலங்கையின் மிகவும் பிரபலமான ஒரு நபராக அடையாளம் காணப்படுவாரென அவரது ஜாதகத்தை வைத்து ஜோதிடர் ஒருவர் கணிப்பிட்டிருந்தார். தசுன் வளர வளர கணவன்-மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறைந்தன. இருந்தாலும் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தசுனுக்காக எல்லாவற்றையும் இவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்.
இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் காலம் மிக வேகமாக உருண்டோடியது. தசுன் பாடசாலை செல்லும் காலமும் வந்தது. தாயாரான லலிதா, தசுனை கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்விக்காக சேர்த்தார். ஆரம்பம் முதலே தசுனுக்கு கல்வியில் அதிக நாட்டமிருந்தது. இதன் காரணமாக பாடசாலை சமூகத்தில் நல்ல பெயர் கிடைத்தது.
இந்தக் காலகட்டத்தில் லலிதா மறுபடியும் கருவுற்றிருந்தாள். அந்நேரத்தில் தசுன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அவனுடைய குடும்பத்துக்கு இன்னொரு சிறிய தம்பி வருவதையிட்டு தசுன் மகிழ்ச்சியடைந்தான். பிறந்த பிள்ளைக்கு ஒன்றரை வயதாகும் போது லலிதாவின் கணவர் தொழிலுக்காக கனடா சென்றுவிட்டார். அதிலிருந்து இரு பிள்ளைகளும் லலிதாவின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. இவ்வாறு சில வருடங்கள் கழிந்த பின்னர் லலிதாவிற்கும் அவரின் கணவருக்குமிடையிலான உறவு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. என்னதான் பிரச்சினைகளிருந்தாலும் பிள்ளைகள் இருவருக்கும் எந்தவொரு கஷ்டத்தையும் லலிதா கொடுக்கவில்லை. தன் முழு வாழ்க்கையையுமே பிள்ளைகளுக்காக அர்ப்பணித்தாள். தசுன் கல்வியோடு நாடகத்திலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தான். அதனால் நாட்டியக் குழுவில் பிரதான அங்கத்தவராகும் வாய்ப்பேற்பட்டது.
அதே நேரத்தில் பாடசாலைக் காலத்திலேயே தசுன் காதல் வயப்பட்டிருந்தான். அவளின் பெயர் சந்தீபனி ரணதுங்க. தசுனுக்கும் சந்தீபனிக்கும் இருந்த காதல் தொடர்பை பாடசாலையில் பலரும் அறிந்திருந்தனர். இதனால் இருவீட்டாருக்கும் அதிக நாட்கள் மறைக்க முடியவில்லை. சந்தீபனியின் பெற்றோர் இந்தக் காதல் தொடர்பை துண்டிக்கும் படி அடிக்கடி கூறிவந்தனர். ஆனாலும் மனப்பூர்வமாக தசுனை காதலித்ததால் பெற்றோரின் பேச்சை சந்தீபனி கேட்கவில்லை. சந்தீபனியின் பெற்றோர் அப்பிரதேசத்தில் சகல வசதிகளுடனும் வாழ்ந்ததால் பொருளாதார ரீதியில் எந்தவொரு பிரச்சினையும் சந்தீபனிக்கு இருக்கவில்லை. அதிகமான சந்தர்ப்பங்களில் தசுனின் தனிப்பட்ட விடயங்களுக்கும் அதிகமாக இவள் செலவு செய்தாள். உயர்தரப் பரீட்சையை எழுதிய பின்பு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் துறையில் பட்டத்தை தசுன் பெற்றிருந்தான். இவ்வாறு பட்டம் பெற்றிருந்தாலும் ஒரு நடிகனாக வரவேண்டுமென்பதே அவனின் விருப்பமாகவிருந்தது. இதனால் தொழில் புரிந்து கொண்டே பகுதி நேரமாக மொடலிங் துறையிலும் செயல்பட்டு வந்தான். அவனுடைய பேச்சு, தோற்றம் என்பன பிறறை பிறரைக் கவரும் படியாக இருந்தமையால் இத்தொழிலில் வேகமாக முன்னேறி சென்றிருந்தான். அதே நேரத்தில் சந்தீபனியும் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு தேசிய பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றி வந்தாள்.
அவளுக்கு தன் காதலன் மொடலிங் துறையில் இருப்பது அவ்வளவாக பிடிக்கவில்லை. சமகாலத்தில் இத்தொழிலிலுள்ளவர்கள் தொடர்பில் இவளுக்கு நன்கு தெரிந்திருந்தமையாலே அத்தொழில் பிடிக்கவில்லை. இக்காலத்தில் இருவீட்டாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியிருந்தனர். இவ்வாறான சூழலில் தசுனின் தாயாருடன் சந்தீபனி அதிக பாசத்துடன் உறவைப் பேணி வந்தாள். அரைகுறையாக கட்டப்பட்டிருந்த தசுனின் வீட்டை இவளே செலவு செய்து பூர்த்தி செய்ததுடன் குடும்பத்தின் ஏனைய செலவுகளையும் இவளே பார்த்துக் கொண்டாள். 2015 ஆம் ஆண்டோடு இவர்களின் காதலுக்கு 13 வருடங்களாகிவிட்டது. இதனால் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதேவேளை மிகக் குறுகிய காலத்திலேயே தசுன் அத்துறையில் பெரிய இடத்துக்கு முன்னேறியிருந்தான். இச்சந்தர்ப்பத்தில் இவருக்கு சிங்கள இசை ஆல்பங்களில் தோன்றுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்ததுடன், அந்நேரத்திலிருந்தே அத்துறையிலிருந்து விலகியிருந்தான். அதுவரைக்குமான தேவையை கொழும்பிலுள்ள தனது மனைவியின் வீட்டிலிருந்தே மேற்கொண்டிருந்தான். குறுகிய காலத்திலேயே இத்துறையில் முன்னேற்றம் கண்டதினால் அதிகமான தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிலிருந்து அவன் முக்கிய நபராக மாறிவிட்டான். இவற்றையெல்லாம் வசித்த வீட்டிலிருந்து மேற்கொள்ள சிரமமாகவிருந்ததால் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் குடியேறியிருந்தான்.
அந்த வாடகை வீட்டிலேயே தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரியும் பல பெண்களும் வசித்து வந்திருந்தனர். இதனால் தசுனின் வாழ்க்கையில் சற்று மாற்றமொன்று ஏற்படத் தொடங்கியது. அத்தோடு இத்துறையில் மென்மேலும் தசுன் வளர்ச்சி பெற்றதுடன் யாருக்கும் தெரியாமல் பல நடிகைகளுடன் கள்ளத்தனமாகப் பழகியிருந்தான். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தன்னைப் பலரிடம் திருமணமாகாதவனென்றே அறிமுகப்படுத்தியிருந்தான். தசுனின் மனைவிக்கு இது எதுவுமே தெரியாது. அந்தளவுக்கு கணவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தாள். கணவர் நடிக்கின்ற தொலைக்காட்சித் தொடர்கள், இசை ஆல்பங்கள் என்பவற்றை பார்த்து அதிக சந்தோஷப்படுவதுடன் இச்சந்தோஷத்தை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வாள். பன்னிப்பிட்டியவுக்குச் சென்ற பின்பு தசுனின் வாழ்க்கையில் அதிக சுதந்திரம் காணப்பட்டது. விதம்விதமான நண்பர்களுடனும் பேசிப் பழக அதிக சந்தர்ப்பம் கிடைத்ததால் தன் இஷ்டப்படி வாழ முனைந்தான். அதே சந்தர்ப்பத்தில் தன் மனைவியுடனான உறவை கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டித்தும் வந்தான். அதேநேரத்தில் ’முத்துமலி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அதில் கதாநாயகியாக பிரபலமான நடிகை ஷலனி தாருக்கா நடித்திருந்தார். சில நாட்களிலேயே தொலைக்காட்சித் தொடரையும் தாண்டி இவர்களுக்கிடையிலான நட்பு வளர்ச்சியடைந்தது. இவ்வாறான நட்பு இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுமளவுக்கு வளர்ந்திருந்தது.
இறுதியில் ஷலனி இல்லாத வாழ்க்கையை வாழ முடியாத நிலைக்கு தசுன் தள்ளப்பட்டான். தசுன் தன் நண்பர்களுடன் மது அருந்தும் போது ஷலனியை காதலிப்பதாகவும் எப்போதாவது தனது துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்வேன் எனவும் கூறியிருந்தான். இருந்தாலும் அவன் நண்பர்கள் யாருமே இதற்கு மறுப்பு தெரிவித்து அறிவுரை கூறியிருக்கவில்லை. இதன் பின்னர் தினந்தோறும் ஷலனியின் சுகதுக்கங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ள தொடங்கினான். இப்படிச் செல்லும் போது தன் மனைவியின் சுக நலன்களை விட ஷலனி தொடர்பிலேயே அதிக அக்கறை கொண்டிருந்தான். இதனால் ஷலனிக்கு தசுன் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் இருவருமே தங்களையறியாமல் காதல் வயப்பட்டிருந்தனர். தசுன் ஷலனியை பைத்தியக்காரத்தனமாகக் காதலித்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியை நினைத்தலே அருவெருப்பு ஏற்பட்டது. இதனால் மனைவியை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தான். இடையிடையே ஷலனியும் தசுனும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். வெளிநாடுகளுக்கு கூட சென்று வந்தனர். தசுன் எந்நேரமும் ஷலனியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தான். இதனால் தேவையான சகல விடயங்களையும் கவனித்து வந்தான். தசுன் திருமணமானவன் என்பது இவர்கள் இருவரும் காதலித்து பல மாதங்களுக்குப் பின்பே தெரியவந்தது. தசுன் திருமணமானவனென தெரிந்தாலும் அவனை விட்டுவிலக ஷலனி விரும்பவில்லை.
ஆனால் இருவரிடம் சேர்ந்து ஒரே நேரத்தில் வாழ முடியாது என தசுனுக்கு ஷலனி கூறியிருந்தாலும் கூடிய சீக்கிரமே தன் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று விடுவதாக சத்தியம் செய்திருந்தான். இச்சந்தர்ப்பத்தில் நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்த தசுன் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்திருந்தான். இச்சந்தர்ப்பத்தில் இவ்விடயம் தொடர்பாக மனைவியிடம் கூறுவது தொடர்பில் சிந்தித்து வந்ததுடன் மது, போதைப் பொருளுக்கும் அடிமையாகி பைத்தியக் காரனைப் போல் இருந்தான். இச்சந்தர்ப்பத்தில் ஷலனியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கும் வந்திருந்தான். முதன் முதலாக இவ்விடயத்தைத் தன் தாயிடமே கூறியிருந்தான். ஆனால் தாய் இதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணங்கியிருக்கவில்லை. எந்தக் காரணத்தைக் கூறியும் தன் தாயின் சம்மதத்தை இவனால் பெற முடியவில்லை. தசுனின் மாற்றம் தொடர்பில் மனைவியான சந்தீபனி உணரத் தொடங்கினாள். இருந்தாலும், தசுன் மீது சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் தொலைக்காட்சி நடிகையுடன் தனக்கு தொடர்பிருப்பதாகவும் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இனிமேல் இணைந்து வாழ முடியாதெனவும் தன் மனைவியிடம் தெரிவித்திருந்தான். இதனை ஒரு பொதும் சந்தீபனி எதிர்பார்த்திருக்கவில்லை. கிட்டத்தட்ட 15 வருடங்களாக காதலித்த கணவன் இப்படி சொல்வானென்று கனவில் கூட இவள் நினைத்திருக்கவில்லை. ஆனால் அதுதான் உண்மையென்று இறுதியாக அவள் தெரிந்து கொண்டாள்.
ஆனால் தசுனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்ள சந்தீபனி விரும்பவில்லை. மீண்டும் தன் கணவருடன் இணைந்து வாழவே விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால் தசுன் தொடர்ச்சியாக விவாகரத்துக்கு வற்புறுத்தினான். இதற்கிடையில் ஷலனி தொலைபேசியில் சந்தீபனியைத் தொடர்பு கொண்டு இருவரும் பழகும் விதம் தொடர்பாகக் கூறியிருந்தாள். தசுனின் தாயிற்கு இது மிகப் பெரும் சிக்கலாக அமைந்தது. ஆனால் தன்னால் முடிந்தளவுக்கு இவ்விடயத்துக்கு விரைவாக தீர்வு காண்போமென தன் மருமகளை தேற்றி வந்தாள். இதனால் வெளியில் யாருக்கும் சொல்லாமல் தனக்குள்ளேயே இவ்விடயத்தை மறைத்துக் கொண்டாள். என்றைக்குமே தசுன் தன் மனைவியை விட்டு பிரிய முடியாதென்ற விடயத்தை தெரிந்து கொண்ட
நடிகை, கொஞ்சம் கொஞ்சமாக தசுனை விட்டு விலக ஆரம்பித்தாள். அளவு கடந்த பாசம் வைத்திருந்த தசுனுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் இறுதியாகத் தன் மனைவியிடம் பலவந்தமாக விவாகரத்து கேட்டிந்தும் அதற்கு சந்தீபனி விருப்பம் கொண்டிருக்கவில்லை. மனைவியிடமிருந்து விவாகரத்து கிடைக்காதென்பதையும், ஷலனி தன்னிடமிருந்து விலகிச் செல்வதையும் இவன் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டான். இரவு பகலாக இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். தன்னை விட்டுப் போக வேண்டாமென ஷலனியிடமும் கெஞ்சினான். இருந்தாலும் மனதார காதலிக்காத அவள் தசுனுடனான தொடர்பை இடைநிறுத்திக் கொண்டாள். இதனால் தசுன் தனிமரமாகிவிட்டான். இந்த உலகமே அவனுக்கு வெறுத்துப் போயிருந்தது.
இதனால் ஆழ்ந்த கவலையிலிருந்தான். ஏதோவொரு தவறு செய்ததாலேயே தனக்கு இவ்வளவு கஷ்டமாக இருப்பதாக தசுன் உணர்ந்தான். ஆனால் இவற்றை விளங்க வைப்பதற்கு அவன் அருகில் நண்பர்கள் கூட இருக்க வில்லை. இதனால் தன் கவலையை மறக்க கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்ததுடன், இதற்கு விதம்விதமான மதுபானங்களை பயன்படுத்தினான். இதனால் பிற்காலத்தில் நிர்க்கதியான நிலைமைக்கு தள்ளப்பட்டதுடன், தான் என்ன செய்கின்றேன் என்று அவனுக்கே தெரியாத நிலை தோன்றிவிட்டது.
இதன் பின்பு புளுவேல் எனப்படும் மோசமான கணினி விளையாட்டை தெரிந்து வைத்திருந்து அவை தொடர்பில் தேட ஆரம்பித்தான். இதில் தற்கொலை செய்வது எப்படி என்பது தொடர்பில் தேடிப்பார்த்ததுடன் பலமுறை முயற்சி செய்துமிருந்தான். இச்சம்பவத்துக்குப் பிறகு தசுன் இரவு நேரங்களைக்கூட நிம்மதியற்றே கழித்திருந்தான். மதுபானத்தை விடவும் போதைப் பொருளுக்கும் அடிமையாகியிருந்தான். இவை தவறென்று உணர வைத்து ஆறுதல் படுத்த பக்கத்தில் யாருமே இருக்கவில்லை. ஒரு நாள் தசுன் தன் முகப்புத்தக கணக்கில் நந்தா மாலினி பாடிய பாடலின் சிலவரிகளை தன்புகைப்படத்துடன் பதிவேற்றியிருந்தான். இந்த வரிகள் மூலம் தசுன் எவ்வளவு கஷ்டத்தில் இருந்திருப்பான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
தசுனுக்கு வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது. அவனுடைய மனநிலை பூச்சியமாகியிருந்தது. வாழ்வது பெரிய துன்பமென அவனுக்குத் தோன்றியது. இதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டான். கடந்த மாதம் 24 ஆம் திகதி தசுன் வசித்துவந்த பன்னிப்பிட்டிய வீட்டில் மிகப்பெரும் விருந்துபசார நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தங்கியிருந்த இரு நடிகைமாரும், வெளியிலிருந்து வருகை தந்திருந்த நடிகைமாரும் இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், விதம்விதமான மதுபானங்கள் பரிமாறப்பட்டன. மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த தசுன் அன்று அதிகமாக குடித்திருந்தான். விழா முடிந்து தூங்கும் போது நாளை எப்படியாவது தன் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற திட்டத்துடன் இருந்தான். மறுநாள் வாடகை வீட்டிலிருந்த இரு நடிகைமாரும் வெளியில் சென்றிருந்தனர். இதனால் இவன் தனியாகவிருந்தான். வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தது, இன்று எப்படியாவது தூக்கிட்டுக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்தான். அவனுடைய டயறியில் ஒருபக்கத்தை கிழித்து ஒரு கடிதத்தை எழுதியிருந்தான். அதில்;
தசுன் நிசாந்த டி சில்வா ஆகிய நான், தூக்கிட்டு தற்கொலை செய்வது என்னுடைய தனிப்பட்ட விடயமென்பதால் இதில் எவருக்கும் பொறுப்பு இல்லை. நான் என்னுடைய கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமலேயே இந்த முடிவை எடுத்தேன். என எழுதப்பட்டிருந்ததோடு, அதன் கீழ் முழுப் பெயருடன் கையொப்பமிடப்பட்டிருந்தது.
இவ்வாறு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு எப்படி தூக்கிடுவதென்று யோசித்திருந்தான். அந்நேரம் அவன் சுயநினைவுடன் இருக்கவில்லை. பலவாறாக யோசித்து இறுதியில் தூக்கிட முடிவு செய்திருந்தான். அந்த முடிவெடுத்ததிலிருந்து அவனுடைய மனம் பல கஷ்டங்களுக்கு ஆளாகியிருந்தது. இவ்வாறு யோசித்து, யோசித்து பைத்தியமாகி, வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் அடித்து உடைத்திருந்ததுடன் அங்குமிங்குமாக நடமாடியிருந்தான். இதுவரைக்கும் வாழ்ந்தது போதும், இனி சாவதே மேலென அவன் நினைத்தான். அதனால் அவனுடைய அறைக்குச் சென்று கட்டில் விரிப்பை எடுத்து வந்து வரவேற்பறையிலுள்ள மின்விளக்கில் தூக்கிலிட முடிவு செய்தான். இச்சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்வதற்காக தொலைபேசியை முன்பக்கமாக இயங்கச் செய்திருந்தான். இதன் பின்னர் தூக்கில் தொங்க முயற்சித்த போதும் அது சாத்தியமாகவில்லை. அதன் பின்னர் கொஞ்ச நேரம் யோசித்து கொண்டிருந்த நிலையில் சமையலறையை நோக்கி நடந்து சென்றமை வீடியோவில் பதிவாகியுள்ளது. மறுபடியும் சிலநிமிடங்களுக்குப் பிறகு முன்னறைக்கு வந்து தூக்கிலிட முயற்சி செய்திருந்தான். ஆனால் இந்த தடவை அவனால் எமனிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. கடைசி நிமிடம் அதிலிருந்து விடுபட முயற்சி செய்திருந்த போதும் அது பலனளிக்கவில்லை.
இறுதியாக பெற்றோர், நண்பர்களைவிட்டு அகால மரணமடைந்தான். இவன் தூக்கிட்டு தற்கொலை செய்து பலமணி நேரம் கழித்து, அந்த வாடகை வீட்டில் தசுனுடன் இருந்த இன்னொரு நடிகை வெளியில் சென்று வந்திருந்த போது கதவு மூடியிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். தசுன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு உடனடியாக பொலிஸுக்கு தகவல் வழங்கியிருந்தாள். பின்னர் இடம்பெற்ற மரண விசாரணையில் தசுன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை உறுதி செய்யப்பட்டது.
நம்வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ பல காரணங்கள் இருந்தாலும் தேவையற்ற விடயங்களில் மனதை குழப்பி இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களே. தசுனும் அவ்வாறான ஒருவரே. அழகான வாழ்க்கை இருந்தும் கள்ளத் தொடர்பால் அது சீரழிந்தது. இதன் மூலம் பெற்றோர், மனைவி, சகோதரன், நண்பர்கள், உற்றார் எல்லோருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டு ஒரு தோல்வியான வாழ்க்கையை தசுன் வாழ்ந்து சென்றுவிட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக