கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் கட்டுப்படுத்த என்ன வழி ?
க.பிரசன்னா
இலங்கையானது 2016 ஆம் ஆண்டு சுகாதாரத் துறையில் பாரிய வெற்றியினை உறுதிசெய்திருந்தது. இதற்கு ஆசிய நாடுகளுக்கிடையிலான 69 ஆவது பிராந்திய மாநாட்டில் இலங்கையானது மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1999 ஆம் ஆண்டு இலங்கையில் 264,549 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்நிலை பூச்சியத்தை அடைந்திருந்தது. ஆனால், 2016 ஆம் வருடம் இலங்கை டெங்கு நோயினால் பாரிய பிரச்சினைகளை சந்தித்திருப்பதுடன் 2017 ஆம் ஆண்டும் அந்நிலையே தொடர்கின்றது. இலங்கையில் டெங்கு நோய்க்கு எதிரான போராட்டங்களை இவ்வருடம் துரிதமாக மேற்கொள்ள வேண்டிதேவை எழுந்துள்ளது. இலங்கை மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற கட்டுப்பாடுகளற்ற செயற்பாடுகளால் இந்நிலை மேலும் மோசமாக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையில் 50,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தோரின் தொகை 83 ஆகவும் இருக்கின்றது. 2016 இல் டெங்கு தொற்றானது 66 வீதம் அதிகரித்திருப்பதுடன் உயிரிழந்தோர் வீதம் 44 ஆல் அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார். அண்ணளவாக 49.58 வீதமானவை மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. அதேபோல் அதிகமான டெங்கு நோய் அறிகுறிகள் (15421) கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியிருக்கின்றன.
இப் புள்ளி விபரங்கள் இலங்கையானது டெங்கு நோய் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவையையே பிரதிபலிக்கின்றன. 2016 ஆம் ஆண்டு மாத்திரம் 100,000 பேருக்கு டெங்கு நோய் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச் சூழலை டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்கான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை அதிகமிருக்கிறது. கொழும்பு போன்ற மாநகரங்களில் சனநெறிசலுக்கேற்ப கட்டிடங்களின் நெரிசலும் அதிகமிருக்கின்றன. மனிதர்களால் நுழைய முடியாதளவிலும் கண்காணிப்பின்றியும் பராமரிப்பின்றியும் அதிகமான இடங்கள் இந்நகரங்களில் காணப்படுகின்றன. அவ்வாறான பகுதிகள் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு துணை புரிகின்றன.
பெரும்பாலான வீட்டுரிமையாளர்கள் வீட்டுச் சூழலை சுத்தம் செய்தல் என்ற பெயரில் தமது வீட்டு முற்றத்தை மாத்திரம் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துகின்றனர். மாறாக வீட்டுப் பின்புறங்களில் மலசலகூடங்கள், குளியலறைகள், கழிவுநீர் குழாய்கள் என்பன அமையப்பெற்றுள்ள பகுதிகள் கவனிப்பாரற்ற நிலையிலேயே இருக்கின்றன. அத்தோடு இரு கட்டிடங்களுக்கு இடையில் மனிதரால் புகமுடியாதளவில் இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுத்தம் செய்ய முடியாதவையாகவும் டெங்கு பரிசோதகர்களால் அடையாளம் காணமுடியாதவையாகவும் இருக்கின்றன. இலங்கை அரசாங்கமானது டெங்கு நோய் பரவும் சூழலை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நீதிமன்ற வழக்கின் மூலம் அதிக தண்டத்தை அறவிடுவதாக மாத்திரமே இருக்கின்றது. அதேபோல் நகர்ப்புறங்களில் நகர சபைகளினால் டெங்கு நோய்க்கு எதிரான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், தோட்டப் புறங்களில் இவ்வாறான திட்டங்கள் எவையும் நிர்வாகங்களால் முன்னெடுக்கப்படுவதில்லை. பாரபட்சமான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் மூலம் ஒருபோதும் இலங்கையை ‘ டெங்கு அற்ற’ நாடாக பிரகடனப்படுத்தி விடமுடியாது. அதுபோல அதிக தண்டப்பண அறவீடுகளாலும் அவற்றை சரிசெய்து விடமுடியாது. மனப்பூர்வமாக டெங்கு நோய் தொடர்பிலும் பரவும் வழிமுறைகள் தொடர்பிலும் உணரும் சமூகத்தாலேயே தாமாகவே முன்வந்து சூழலை பராமரிக்கும் நிலைப்பாட்டை கடைபிடிக்கும் சமூகம் தோற்றம் பெற்றாலே டெங்கு நோயை முற்றாக ஒழிப்பது சாத்தியமான விடயமாக இருக்கும்.
இலங்கையில் 10 மாவட்டங்கள் அதிக டெங்கு பரவும் ஆபத்துள்ள மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளன. போதுமானளவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், கட்டுப்பாடு தொடர்பிலான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் , டெங்குக்கு எதிரான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், அவற்றை கட்டுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ ஏற்ற சந்தர்ப்பம் இன்னும் உருவாகவில்லை என்பதையே தற்போது பதிவாகியிருக்கின்ற டெங்கு நோய் தொடர்பான சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உலகிலுள்ள பல நாடுகள் டெங்கைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொண்ட மருந்துகள் மூலம் அதை முற்றாக ஒழிக்கக் கூடியதாக இருந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
உலகிலுள்ள கிட்டத்தட்ட நூறு நாடுகள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக சனத்தொகையில் 40 வீதமானோர் டெங்கு நோயினால் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் மூலம் உலகிலுள்ள 390 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 2016 ஆம் ஆண்டே அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். உலகிலுள்ள பல நாடுகள் தடுப்பூசிகள் மூலம் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால், இலங்கையின் சுகாதார அமைச்சு சற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நடைமுறையின் மூலம் டெங்கை கட்டுப்படுத்த அல்லது முற்றாக ஒழிக்க முடியுமென கருதுகின்றது.
250 மில்லியன் சனத்தொகை கொண்ட இந்தோனேஷியா, தாய்லாந்து (60 மில்லியன்), சிங்கப்பூர், மெக்சிக்கோ, பிரேசில், கொஸ்டாரிக்கா போன்ற நாடுகள் தடுப்பூசிகள் மூலம் டெங்கு நோயினால் ஏற்படும் மக்கள் இழப்புகளை குறைத்துள்ளன. ஆனால், 22 மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கையில் இவ்வாறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாததேன் ? இவை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள டெங்கு நிகழ்ச்சிப் பிரிவின் பொது மக்கள் சுகாதார நிபுணர் டாக்டர் பிரசிலா சமரவீர, நீடித்து நிலைக்கக் கூடிய தடுப்பூசிகள் தொடர்பில் நிபுணர்கள் ஆராய்வதாகவும் பொருத்தமான டெங்கு தடுப்பூசிகள் இனங்காணப்பட்டதும் அதனை நிபுணர்கள் கொள்வனவு செய்யப் பரிந்துரைப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.
1996 - 2009 வரையான காலப் பகுதியில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு ஒரு வீதமாகவே காணப்பட்டது. ஆனால், இன்று 16 வீத அதிகரிப்பை காட்டும் சூழ்நிலையில் நிபுணர்கள் உடனடியாக தடுப்பூசி தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார அமைச்சு இந் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். டெங்கு நோயினால் கொழும்பு மாவட்டம், கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் கல்முனை ஆகிய பகுதிகள் அதிக சவால்களை எதிர்நோக்கியுள்ளன. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ‘ நுளம்பு வளர்ப்பாளர்’களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையினை விடுத்திருப்பதோடு தண்டப்பணத்தையும் 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளார். வீட்டுரிமையாளர்களை மாத்திரம் சூழலை சுத்தப்படுத்தக் கூறுவது பொருத்தமானதல்ல.
உள்ளூராட்சி சபைகளின் கீழ்வருகின்ற இடங்களிலுள்ள புறக்கணிக்கப்பட்ட உடைந்த வடிகால்கள், தேங்கி நிற்கும் வடிகால்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். சேறும் சகதியுமான குப்பைகளை சேகரிப்பதும் அவற்றை அகற்றுவதும் தொடர்பில் புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அத்தோடு கடந்த சில வருடங்களாக பகுதியளவு முடிக்கப்பட்ட கட்டுமானங்கள், ஓரளவு முடிக்கப்பட்ட கட்டிடங்கள்,பயன்பாடற்ற கொங்கிரீட் மாளிகைகள் என்பன அதிகமாக நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன. எனவே, அவ்வாறான இடங்கள் உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும். இவை ட்ரில்லியன் கணக்கான நுண்புழுக்களை உற்பத்தி செய்யும் இடங்களாக மாற்றமடைகின்றன.
எனவே, அவ்வாறு அடையாளம் காணப்படுகின்ற இடங்களை இனங்கண்டு அவை தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு ஒழுங்குபடுத்துவது அவசியத் தேவையாகும். சூழலில் பிளாஸ்ரிக் பொருட்களை வீசுவதை தடுத்தல் மற்றும் அப்புறப்படுத்தல் குப்பைகளை சேகரித்தல், அகற்றுதல் தொடர்பான நியாயமான அணுகுமுறை , நுளம்பு பெருகாவகையிலான தண்ணீர் தாங்கிகளின் உபயோகம், வடிகால்களை மூடுதல், அடைப்புக்கு உட்பட்டுள்ள வடிகால்களை சுத்தம் செய்தல், நுளம்பு வலைகளை பயன்படுத்தல், நுளம்புகள் கடிக்காத வகையில் நீண்ட ஆடைகள் மற்றும் பூச்சுகளை பாவித்தல் போன்றன டெங்கு அபாயங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தக் கூடிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கின்றன.
இவற்றை விடவும் இலங்கையில் டெங்கு நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் 9 - 45 வயதுடையவர்களுக்கு உபயோகிக்கக் கூடியவகையிலேயே பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஆனால், 2016 ஆம் ஆண்டில் 5 வயதுடையவர்கள் அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள் அதிகம் டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, சகல வயதினருக்கும் ஏற்ற வகையிலான தடுப்பூசிகளின் பரிசோதனை தொடர்பிலான சாத்தியங்களை ஆராய வேண்டும். கடந்த வருடம் ஒவ்வொரு 24 மணித்தியாலத்துக்கும் 136 இலங்கையர்கள் டெங்குக்கு ஆட்பட்டதுடன் ஒவ்வொரு மணி நேரமும் ஐவர் பாதிக்கப்பட்டனர். தற்போது ஜனாதிபதி செயலணியும் டெங்குக்கு எதிரான விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அதிக பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அதன் படி கொழும்பில் 15, 421 சம்பவங்களும் கம்பஹாவில் 6,263 சம்பவங்களும் களுத்துறையில் 3303 சம்பவங்களும் கண்டியில் 3,901 சம்பவங்களும் கிளிநொச்சியில் 2,227 சம்பவங்களும் குருநாகலில் 2,415 சம்பவங்களும் மொனராகலையில் 2,969 சம்பவங்களும் டெங்கு நோய் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. எனவே, உடனடி தடுப்பு நடவடிக்கைகளையும் போதிய விழிப்புணர்வுகளையும் பாடசாலை, வணக்கஸ்தலம், வைத்தியசாலைகள், அரச, தனியார் அலுவலகங்கள் போன்றவற்றில் முன்னெடுப்பதுடன் சுகாதார உத்தியோகத்தர்கள் மூலம் டெங்கு நோய் தொடர்பான எச்சரிக்கை பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும். இவை முறையாக பின்பற்றப்படுகின்ற போதே இலங்கையை ‘டெங்கு அற்ற’ நாடாக இனங்காண முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக