கூட்டு ஒப்பந்தம் மூலம் மறுக்கப்படும் தொழிலாளர் உரிமைகள்
சனா
இலங்கையில் அரசியல் கட்சி சாராமலும் தொழிற்சங்கங்களை சாராமலும் பலர் சுதந்திரமாக தொழிலாற்றி வருகின்ற நிலையில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் நியாயம் கிடைப்பதற்கு ஏதேனும் ஒரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றே இருக்க வேண்டுமென்ற நிலை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே இருக்கிறது. ஆனால் தற்போது தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் முக்கிய பிரச்சினையாக சம்பள விவகாரம் இருக்கிறது. தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான இப்பிணக்கு சமீபகாலமாக உச்சநிலையை அடைந்துள்ளதால், நிர்வாகங்கள் தொழிலாளர்களின் விடயங்களில் அசமந்தப்போக்கைக் கையாண்டு வருகின்றன. குறிப்பாக கூட்டொப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளும் சலுகைகளும் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருகின்றன.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நிறைவுக்கு வந்த தொழிலாளர்களின் கூட்டொப்பந்தம் மீண்டும் கைச்சாத்திடப்படாமல் பல்வேறு இழுபறிகள் நீடித்து வந்தன. இறுதியில் தொழிலாளர்கள் சுயமாகவே வீதிக்கு இறங்கி போராடியதால் 18 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அமுலுக்கு வந்தது. ஆனால் தாமதிக்கப்பட்ட 18 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினையும் கம்பனிகளுடன் சேர்ந்து தொழிற்சங்கங்களும் ஏப்பம் விட்டுவிட்டதால் முதல் படியிலேயே தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர். அதன் பின்பு இன்றுவரையும் கூட்டொப்பந்தத்தினால் எவ்வித நன்மைகளையும் அடைய முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
2013 ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட 10 ஆவது இலக்க கூட்டொப்பந்தமே 2015 ஆம் ஆண்டு காலாவதியாகியிருந்தது. மீண்டும் அது 2015 ஏப்ரல் மாதம் புதுப்பிக்கப்பட்டிருந்தால் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் 12 ஆவது இலக்க கூட்டொப்பந்தம் கைச்சாத்திட்டிருக்கப்பட வேண்டும். ஆனால் 18 மாதங்கள் காலம் தாழ்த்தி 11 ஆவது இலக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதால் இவ்வருடம் ஏப்ரல் மாதம் நியாயமாக கைச்சாத்திடப்பட வேண்டிய 12 ஆவது இலக்க கூட்டுஒப்பந்தம் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. ஆனாலும் 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டொப்பந்தத்தின்படி தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளே முழுமையாக வழங்கப்படாத நிலையில் மீண்டுமொரு முறை ஏற்படுத்தப்படப்போகும் ஒப்பந்தம் நியாயமான தீர்வுகளை வழங்கிவிடுமா?
கடந்த வருடம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது தீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டே 730 ரூபா சம்பளத்துக்கு இணக்கம் தெரிவித்தோம்; மேலும் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வேலை செய்யக் கூடிய வகையிலான சரத்தை கூட்டொப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளோம் எனவும் 1000 ரூபா சம்பள உயர்வையும் நிலுவைத் தொகையையும் பெறுவதற்குத் தொடர்ந்து போராடுவோமெனவும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் வாக்குறுதியளித்த விடயம் தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. கம்பனிகளும் இவற்றைக் கவனத்தில் எடுக்கவில்லை.
தற்போது கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் அவை தொடர்பான விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன. உற்பத்தித்திறன் கொடுப்பனவு தொடர்பாக தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே முரண்பாட்டு நிலை தோன்றுவதால், கடந்த 5 மாதங்களாக தொழிலாளர்கள் கூட்டொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி முழுமையான சம்பள தொகையினைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நாளொன்றுக்கு 18 கிலோ தேயிலை பறித்தாலே அக்கொடுப்பனவுகள் வழங்கப்படுமென்று தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு நாளைக்கு 18 கிலோ தேயிலை பறிக்க வேண்டுமென கூட்டொப்பந்தத்தில் கூறப்படவில்லையென தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எனவே கூட்டொப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா. கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் 18 மாதகாலமாக இழுபறியிலிருந்த கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தொழிற்சங்கங்களுடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க , தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, தொழில் ஆணையாளர் எனப் பல பேர் இணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். போதாத குறைக்கு 1000 ரூபா சம்பளவுயர்வு தொடர்பில் பிரதமரிடம் எடுத்துரைத்திருப்பதாக த.மு. கூட்டணியும் தெரிவித்திருந்தது. ஆனால் நடந்தது என்ன?
முதலில் 1000 ரூபா சம்பளவுயர்வையே வலியுறுத்திய இ.தொ.கா. பின்பு 730 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்தது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் இதனையே பரிந்துரைத்தார். தற்போது மீண்டும் பரிசீலனை செய்யுமாறு கூறுவது நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க உதவுமா? தொழில் அமைச்சுடன் பேச்சுவார்த்தைக்கு எதிர்பார்த்துள்ள இ.தொ.கா., அதில் நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடப்போவதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கூட்டொப்பந்தம் தொடர்பிலான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே இ.தொ.கா. வின் திடீர் எழுச்சி வெற்றியைத் தருமா? ஏனைய கூட்டொப்பந்த பங்காளி தொழிற்சங்கங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்துமா?
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட 10 ஆம் இலக்க கூட்டொப்பந்தத்தில், அடிப்படைச் சம்பளமாக 490 ரூபாவும் நாளொன்றுக்குப் பறிக்க வேண்டிய தேயிலைக் கொழுந்தின் எடை 12 கிலோவாகவும் மேலதிகமாகப் பறிக்கப்படும் கொழுந்துக்கு மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டிருந்த 11 ஆம் இலக்க கூட்டொப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவும் உற்பத்திக் கொடுப்பனவு 140 ரூபாவும் நிலையான விலைக் கொடுப்பனவு 30 ரூபாவும் வருகைக் கொடுப்பனவு 60 ரூபாவும் என மொத்தமாக 730 ரூபாவும் மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கொழுந்துக்கும் 25 ரூபாவும் வழங்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தோட்ட தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளத்துடன் 300 வேலை நாட்களை வலியுறுத்தும் வகையிலேயே இலங்கையிலுள்ள 21 பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பான முதலாளிமார் சம்மேளனத்துக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், இணைந்த தோட்டக் தொழிலாளர் தொழிற்சங்கம், இலங்கை தொழிலாளர் சம்மேளனம் என்பவற்றுக்கிடையில் கூட்டொப்பந்தம் வெற்றிகரமாக கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆனால் அவை வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்திருந்தனவா என்பதே தற்போதுள்ள கேள்வி. தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடமொன்றுக்கு 300 வேலை நாட்கள் வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு வாரமொன்றுக்கு 3 -4 நாட்களே வேலை வழங்கப்படுகின்றது.
நியாயமாக அவர்களுக்கு வாரமொன்றுக்கு 5 -6 நாட்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படுவதில்லை. கூட்டொப்பந்தத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 730 ரூபா சம்பளத்தை இன்னும் தொழிலாளர்கள் முழுமையாகப் பெறவேயில்லை. நாளொன்றுக்கு 18 கிலோ கொழுந்தை பறித்தாலே உற்பத்தித்திறன் கொடுப்பனவாக 140 ரூபா தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமென தோட்ட நிர்வாகங்கள் கூறிவந்தாலும் ஒப்பந்தத்தில் நாளொன்றுக்கு 18 கிலோ கொழுந்தைப் பறிக்க வேண்டுமென்ற அம்சம் உள்ளடக்கப்படவில்லையென தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. பணிபுரியும் இடங்களை சுத்தமாக பேணுவதற்கு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கடமையுண்டென ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தாலும், முறையாகப் பராமரிக்கப்படாத தேயிலைச் செடிகளினால் விளைச்சல் குறைவதுடன், தேயிலை மலைகள் காடுமண்டி கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில தோட்டங்களில் காணிகள் வெளியாருக்கு விற்கப்படுவதாலும் ஓய்வூதியம் பெற்றவர்கள் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்கு அமர்த்தப்படுவதாலும் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தையிழப்பதோடு தோட்டங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை மீறி செயற்படுவதற்கான துணிவை தோட்ட நிர்வாகிகளுக்கு வழங்கியது யார்? 1000 ரூபா சம்பளவுயர்வு கோரிக்கையை முன்வைத்த தொழிற்சங்கங்கள் எங்கே? , கூட்டொப்பந்தப் பேச்சுவர்த்தையின்போது அரச பிரதிநிதிகளாக கலந்து கொண்ட தொழில் ஆணையாளர், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஆகியோர் இப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்குவார்கள்? ஏற்கனவே கூட்டொப்பந்த இழுபறிக்கு தொழிற்சங்கங்களால் அரசுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் கவனத்தில் கொள்ளப்படாமையினாலேயே, தொழிலாளர்கள் வீதிக்கிறங்கிப் போராடித் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தற்போது கூட்டொப்பந்தம் மீறப்படுகின்ற விடயத்திலும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் கம்பனிகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. ஆதலால் மீண்டும் தொழிலாளர்கள் வீதிக்கிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படாததும், மீறப்படுகின்றதுமான ஒப்பந்தங்கள் அவசியம்தானா? தொழிற்சங்கங்களின் பலத்தை நிரூபிக்க தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பணயமாக வைத்து செயற்பட அனுமதிக்க முடியாது. எனவே அரசாங்கத்தால் விடுக்கப்படுகின்ற கட்டளைகளுக்கு ஏற்பவும், வருடாந்தம் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளவுயர்வு தொடர்பான தீர்மானங்கள் வெளியிடப்படுவது போன்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவற்றில் உள்வாங்கப்பட வேண்டும். அல்லது அரசாங்கமும் கூட்டொப்பந்தத்தின் பங்காளியாக செயற்பட வேண்டும். அல்லது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தொகை தொடர்ச்சியாக எவ்வித தலையீடுகளுமின்றி அதிகரித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கத்தின் அனுசரணையுடன் தொழிற்சங்கங்கள், பெருந்தோட்டக் கம்பனிகளிடம் முன்வைக்க வேண்டும். இவ்வாறு - தீர்வைத் தராத கூட்டொப்பந்தத்தை விடுத்து தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வை வழங்கக் கூடிய வழிகள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் சகலரும் ஆராய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக