சனா
இலங்கையில் வரட்சி நிலவிய காலங்களில் அனைவரும் மழைக்காக ஏங்கியிருந்த சந்தர்ப்பங்களில் பெய்த தென்மேல் பருவ மழையானது மிகமோசமான சேதங்களை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பல இழப்புக்களை மலையகமும் சந்தித்திருக்கிறது. இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களே அதிகமான உயிரிழப்புகளை சந்தித்தவையாக இருக்கின்றன. அதுபோல மண்சரிவு எச்சரிக்கை வலயமாக நுவரெலியா மாவட்டம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மையே பிரதான காரணமாக கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் ஏற்கனவே மீரியபெத்த, அரநாயக்க என பாரிய மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல இன்னும் பல இடங்கள் அனர்த்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வாறு இனங்காணப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மழைகாலங்களில் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்படுவதும் காலநிலை சீரான பின்பு மீண்டும் தமது சொந்த இடங்களுக்கே திரும்புவதும் வழக்கமான விடயங்களாக இருக்கின்றன. நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறு பல பகுதிகள் அனர்த்த வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனவே தவிர தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த காலங்களில் மஸ்கெலியா, காட்மோர் கல்கந்த பிரிவில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் வசிப்பதாக அறிவிக்கப்பட்ட மக்கள் காட்மோர் தமிழ் வித்தியாலய மைதானத்தில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டதுடன், அம்பகமுவ பிரதேச செயலகம் இவர்களுக்கான உணவுகளை வழங்க நடவடிக்கையெடுத்திருந்தது. ஆனால் காலநிலை சீரான பின்பு மக்கள் அதே பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டமும் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதேபோலவே மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பிரிவைச் சேர்ந்த பால்காமம் தோட்டத்தில் 2008 ஆம் ஆண்டு நிலத்தாழிறங்கல் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மகாவலி திட்டத்துக்காக கொத்மலை சுரங்கல பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேறியவர்களாவர். இவ்வாறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இவர்கள் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தற்காலிக முகாம்களில் பல வருடங்களாக தங்கவைக்கப்பட்டிருந்தும் அவர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கப்படாத நிலையில், ஒரு குடும்பத்தை தவிர ஏனைய குடும்பங்களிலுள்ளோர் தமது பிள்ளைகளுடன் சொந்த இடங்களுக்கே திரும்பியுள்ளதுடன், ஒரு குடும்பத்தினருக்கு தற்காலிக முகாமே நிரந்தர வதிவிடமாக மாறிவிட்டது.
இவ்வனர்த்தம் இடம்பெற்று 9 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. இதுவே மலையகத்தில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோரின் நிலை. இச்சந்தர்ப்பத்திலேயே கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இப்பத்தி எழுதும் வரை கேகாலை மாவட்டத்தில் வெள்ளத்தால் 1537 குடும்பங்களைச் சேர்ந்த 5848 பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 4 பேர் உயிரிழந்திருந்தனர். அத்தோடு 7 பேர் காயமடைந்திருந்தனர். இவர்கள் வசித்த 9 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 64 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.
அதேபோல இரத்தினபுரி மாவட்டத்தில் 31921 குடும்பங்களைச் சேர்ந்த 121803 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 79 பேர் உயிரிழந்திருந்ததுடன் 28 பேர் காயமடைந்தும் 26 பேர் காணாமல் போயுமிருந்தனர். இவர்கள் வசித்த 163 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 1658 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருக்கின்றன. இதேபோலவே களுத்துறை மாவட்டத்தில் 39340 குடும்பங்களைச் சேர்ந்த 151022 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு 62 பேர் உயிரிழந்திருந்ததுடன் 20 பேர் காயமடைந்தும் 52 பேர் காணாமல் போயுமிருந்தனர். இவர்களுடைய 331 வீடுகள் முற்றாக சேதமடைந்திருப்பதோடு 1000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருக்கின்றன.
அவ்வாறே கண்டி மாவட்டத்தில் நிலவிய கடும் காற்றினால் 27 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் 84 குடும்பங்களைச் சேர்ந்த 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்சரிவினால் கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். (தகவல்: இடர் முகாமைத்துவ நிலையம் - 30 மே 2017) இவ்வாறு பாரிய அபாயங்களை மலையகப் பகுதிகள் சந்தித்திருப்பதை மேற்கூறிய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால் இவர்களுக்கான நிவாரணப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருந்தன? அவற்றில் எமது அரசியல் தலைமைகளின் பங்கு எவ்வாறிருந்தது? என்பதே தற்போதைய கேள்வி.
களுத்துறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியிருந்த போது அங்குள்ள மக்களுக்காக பா. உறுப்பினர் பாலித தேவரபெரும களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது முக்கிய பேசுபொருளாக இருந்தது. அதேபோலவே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது ஹெலியை மீட்புப் பணிகளுக்காக வழங்கியிருந்தார். ஆனால் மலையகத் தலைவர்கள், தலைமைகள் என்போர் வெள்ளம் வடிந்த பின்பு களுத்துறை பகுதிக்குச் சென்று குசலம் விசாரித்து வந்திருந்தனர். அதையும் தாண்டி இ.தொ.கா. தலைவர் பக்கம் பக்கமாக வர்ணப் பத்திரிகை விளம்பரங்களில் தோன்றி பிறந்தநாள் கொண்டாட்டத்தினை பிரமாதப்படுத்தியிருந்தார். இதுதான் மலையக தலைமைகளின் அதியுச்ச நிவாரணப் பணிகளாக இருந்திருக்கின்றன. தீர்வையற்ற வரிகள் மூலம் பெற்றுக்கொண்ட சொகுசு வாகனங்களை பிறருக்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தவர்கள், மக்களுடைய நிவாரணப் பணிகளுக்கு எவ்வளவு செலவழித்தார்கள். எதுவுமே செய்யாவிட்டாலும் தேர்தல் காலத்துக்கு மாத்திரம் வந்து வாக்குறுதிகளை வழங்கிவிட்டால் போதும், மக்கள் வாக்குகளை அள்ளி தெளித்துவிடுவார்கள்.
இதுதான் தலைமைகள் மக்களிடம் வசம் கண்டுவிட பிரதான காரணம். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறுகின்ற அரசாங்கம் அவர்களுக்கான பாதுகாப்பான இடங்களை வழங்கியிருக்கிறதா? அவ்வாறு வழங்கப்படும் தற்காலிக இடங்களில் எத்தனை நாட்கள் தான் இவர்களால் தங்கியிருக்க முடியும்? இவ்வாறே இ.தொ.கா. வின் மத்திய மாகாண சபை உறுப்பினர் அனர்த்த பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடாவடித்தனம் செய்தாரே தவிர அவர்கள்பட்ட துயரத்துக்கு ஆறுதலாக இருக்கவில்லை. இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளின் அசமந்தப்போக்குகள் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்கு திருப்புமென்பது கேள்வியாகவே இருக்கிறது. எனவே இனிவரும் காலங்களிலாவது மக்களுக்கான ஆற்றுப்படுத்தல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதிப்பை குறைக்க நடவடிக்கையெடுப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக