க.பிரசன்னா
இலங்கையானது மிக மோசமான வரட்சிக் காலப்பகுதிக்குள் நுழைந்துள்ளதுடன் இது கடந்த 40 வருடங்களில் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியதாகவும் இருப்பதாக சேவ் த சில்ட்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வரட்சியினால் இலங்கையில் 1.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 600,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்குவதாக இவ்வமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை வருடாந்தம் எதிர்கொள்கின்ற பருவ மழைகள் பொய்த்ததன் காரணமாகவும் பூமியில் ஏற்பட்டிருக்கின்ற காலநிலை மாற்றம் காரணமாகவும் இலங்கையானது வரட்சியின் பிடிக்குள் சிக்கிக் கொள்கின்ற நிலைமையை தோற்றுவித்துள்ளது. இந்தக் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இவ்வருடம் 50 வீதத்தால் அதிகரிக்குமென அவுஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதியும் சுற்றாடல் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு இணங்கியிருக்கின்ற நிலையிலும் செயற்றிட்டங்களை நாட்டின் சகல மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் இன்னும் தோற்றம் பெறவில்லை. இவ்வருடம் பெப்ரவரி மாத தகவல்களின் படி இலங்கையில் மூன்றில் ஒரு குடும்பம் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய குடும்ப வருமானம் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் பாதியளவாக குறைந்திருப்பதாகவும் 60 வீதமான குடும்பங்கள் கடன் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இயற்கைக்கு எதிராக மனித செயற்பாடுகள் அமைந்திருப்பதையே மேற்படி தகவல்கள் எமக்கு சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கையானது கடந்த 40 வருடங்களில் இல்லாதளவுக்கு இப்போது வரட்சியை எதிர்கொள்வதற்கு காலநிலை மாற்றமே பிரதான காரணம் என்பது சகலருக்கும் தெரியும். ஆதலால் இவற்றை தடுப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை நோக்கி அவர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கு ‘இல்லை’ என்ற பதிலே மிஞ்சியிருக்கிறது. கடந்த 5 வருடங்களாக இலங்கையை வாட்டிவரும் வறட்சி காரணமாக 900,000 பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எல்நினோ எனப்படுகின்ற காலநிலை மாற்றத்தின் காரணமாக மழைக் காலங்களில் அதிகமான மழையும் கோடை காலங்களில் அதிகளவு வெப்பமும் நிகழ வாய்ப்பிருப்பதால் அதிக வெள்ளம், வறட்சி, உணவுத் தட்டுப்பாடு என்பவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகுமெனவும் அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வறட்சி நிலைமையால் விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. விவசாயத்தின் மூலம் பலனை எதிர்பார்த்த இவர்களுடைய வாழ்க்கை உணவு பற்றாக்குறையாலும் கடன்களாலும் சூழ்ந்து காணப்படுகின்றது. உலக உணவு திட்டத்தின் கணிப்பின்படி இலங்கையில் ஒரு வருட நுகர்வுக்காக 2.3 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால் 2017 ஆம் ஆண்டு 1.44 மில்லியன் மெட்றிக் தொன் அரிசியையே உற்பத்தி செய்யக் கூடிய நிலைமை இருக்கின்றது. நாட்டில் மழை பொய்த்ததன் காரணமாக விவசாயம் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. வறட்சிக்கடுத்தபடியாக நாடு நீர்ப்பற்றாக்குறையையும் எதிர்நோக்கியிருக்கிறது.
சுத்தமான குடிநீர், விவசாயம் மற்றும் நீர் மின்சாரத்துக்கான தேவையை பூர்த்திசெய்ய முடியாதளவுக்கு நாடு பாதிக்கப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. கடந்த தசாப்தங்களில் முதல் தடவையாக இலங்கையானது வெப்ப அலையால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இது தென்னை மரங்களின் வளர்ச்சியை சடுதியாக குறைத்திருக்கின்றது. இலங்கை சனத்தொகையில் 10 வீதமானோர் தேயிலை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தற்போது இத்துறையும் வெப்பம் தொடர்பான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வருடம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் 1.5 பில்லியன் அ.டொலர்கள் வருமானம் பெற எதிர்பார்க்கப்பட்ட போதும் வெப்பவுயர்வால் தரமான தேயிலையை உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த ஜனவரி முதல் தொடர்ச்சியாக தேயிலை உற்பத்தியானது கடந்த 5 வருடங்களில் இல்லாதளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இலங்கையானது வெள்ளத்தால் ஆபத்துகளை எதிர்நோக்கியிருந்தது. தற்போது வறட்சியால் பாதிப்பினை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு புவி வெப்பமயமாதலே பிரதான காரணமாக கொள்ளப்படுகின்றது. தற்போது நீடிக்கும் காலநிலையால் நாட்டில் நீர்மின் உற்பத்தியானது 8 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் அனல் மின்சாரமானது தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனால் இலங்கை மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 200 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு காலநிலை மாற்றம் மற்றும் புவியின் வெப்பவுயர்வு என்பன மக்களின் அன்றாட தேவைகளில் அதிகம் பாதிப்பினை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் திருகோணமலை, கம்பஹா, மாத்தறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, அநுராதபுரம், இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், களுத்துறை, கண்டி மற்றும் பொலனறுவை ஆகிய 16 மாவட்டங்கள் வரட்சியால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கானோர் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். அரிசி மற்றும் மரக்கறி உற்பத்தி என்பன பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டில் 27 பாகை செல்ஸியஸாக காணப்பட்ட வெப்பநிலை 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28.6 பாகை செல்ஸியஸாக அதிகரித்துள்ளது.
அடுத்துவரும் மாதங்களில் இந்நிலைமை இன்னும் மோசமடையலாம். கடந்த வருடம் ஏற்பட்ட வெப்பவுயர்வால் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் வரட்சியால் 400,000 க்கும் அதிகமானோர் ஒவ்வொரு மாகாணங்களிலும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது முடிந்த வருடம் மிகமோசமானதெனவும் அதிகமான விவசாயிகள் வாழ்கின்ற பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான சேவ் த சில்ட்ரன் அமைப்பின் இயக்குநர் க்ரிஸ் மக்ல்வோர் தெரிவித்துள்ளார். தற்போது உணவு மற்றும் நீர் என்பவற்றில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னும் உச்ச நிலையை அடையுமெனவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் யால பருவத்தின்போது சுமுக நிலையை எட்டக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்த்தொட்டிகள் குறைந்த நீருடன் அல்லது வறண்டு உள்ளன. உலகளாவிய ரீதியில் நால்வருக்கு ஒருவர் என்ற வகையில் சுமார் 600 மில்லியன் பிள்ளைகள் 2040 இல் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவு நீர்வளத்தையே கொண்டிருப்பர் என ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
வறட்சியானது ஏற்கனவே இலங்கையில் ஊட்டச் சத்தின்மையையும் அதிகரித்துள்ளது. இதனால் மூன்றில் ஒரு சிறுவர் மற்றும் கால்வாசிக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடுபூராகவும் உணவை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தடை, உணவு விலையேற்றம் என்பனவற்றால், வறுமையான குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் குறைந்தளவிலான உணவினையே பெற்றுக்கொள்கின்றனர். இவற்றிலும் போஷாக்கான உணவுகளான இறைச்சி மற்றும் மரக்கறி என்பன தடைப்படுகின்றன. இவ்வாறு வறட்சியானது நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு காலநிலை மாற்றமே பிரதான காரணமாக இருக்கின்றது. அச்செயற்பாட்டை உருவாக்கியதில் பிரதான பங்கு மனிதனையே சாரும். மனிதர்களால் வெளியான அசுத்தமான வாயுக்களால் பருவநிலையில் ஏற்பட்ட மாற்றமே புவியில் வெப்பம் அதிகரிக்கவும் எல்நினோவில் பருவநிலை மாற்றமடையவும் காரணமாகும். எனவே எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்காக புவியை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.
அரசாங்கம் வரட்சியினால் ஏற்படுகின்ற இழப்புகளை சமாளிக்க உணவு, நீர், மின்சாரம் , விவசாயம் என்பவற்றுக்கான நிதியொதுக்கீடுகளை அதிகரித்திருக்கிறது. அரிசிப் பற்றாக்குறையை போக்குவதற்காக அரிசி இறக்குமதிக்கான வரிகளை நீக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 103 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 228,906 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நிதி அமைச்சு 50 மில்லியன் ரூபாவினை வழங்கியிருப்பினும் நிவாரணத்தொகை பெறுவதிலிருந்து பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் 50 மில்லியன் ரூபா மானியமாக நிதியமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாய காப்புறுதி திட்டத்தினூடாக வறட்சியின் காரணமாக விவசாயத்தில் பாதிப்பை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வீதம் நான்கு மாதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இவை அரசாங்கத்தினால் வரட்சியை சமாளிக்க மேற்கொள்ளப்படுகின்ற குறுகிய கால திட்டங்களாக இருக்கின்றன. ஆனால் வறட்சி, வெள்ளம், குடிநீர் தட்டுப்பாடு போன்றவை ஏற்படுவதற்கு காரணமாகவிருந்த காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன? குறைந்தது காபனீரொட்சைட் மற்றும் ஏனைய பச்சை வீட்டு வாயுக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றதா?
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் மிக நீண்ட காலத்துக்கு முன்னெடுக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாள் முழுவதும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. எனவே இயற்கை வளங்களை அதிகரித்து செயற்கை மாற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். 2015 ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை மாநாட்டில் 195 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையான கார்பன் நச்சுகளை குறைத்தல், எதிர்காலத்தில் வெப்பநிலையை 2 பாகை செல்சியஸால் குறைத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
நிலக்கீழ் எண்ணெய் படிமங்களின் பாவனையை குறைத்தல். இவற்றின் மூலமே பச்சை வீட்டுவாயுக்களின் அளவு அதிகரிக்கிறது. வீட்டுக்கொரு மரம் வளர்ப்பை கட்டாயமாக்க வேண்டும். காடழிப்பை தடுப்பதோடு மீள்காடாக்கத்தை அதிகரிக்க வேண்டும். மீள்புதுப்பிக்கத்தக்க வகையிலான சக்திகளை பயன்படுத்தல் (காற்று மற்றும் சூரிய சக்தி). எரிபொருள் வாகனங்களை விடுத்து மின்சாரம் மற்றும் ஹைப்ரிட், வாயுக்களால் இயங்கக்கூடிய வாகனங்களை பயன்படுத்தல். இதன்மூலம் வளத்தையும் பணத்தையும் சேமிக்க முடியும். முக்கியமாக நீர் சிக்கனம், நீர்விரயமாதலை தடுத்தல் என்பவற்றின் மூலம், எதிர்கால சந்ததிகளுக்காக புதிய உலகை படைப்பதற்காகவும் காலநிலை புவி வெப்பமயமாதல் என்பவற்றை தடுப்பதற்காகவும் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக