உள்ளூராட்சி அலகுகள் அதிகரிப்பு சாத்தியமா?
K.PRASANNAKUMAR·THURSDAY, OCTOBER 26, 20171 Read
க.பிரசன்னா
இலங்கையில் தற்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்புகள் தொடர்பான ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன. உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், சபாநாயகர் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கும் சந்தர்ப்பத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு முன்பாக உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார் இவ்வாறான நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படும் பிரதேச சபைகளை விட மேலதிகமாக புதிய பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள் என்பவற்றை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் மிக நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.
க.பிரசன்னா
இலங்கையில் தற்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்புகள் தொடர்பான ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன. உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், சபாநாயகர் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கும் சந்தர்ப்பத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு முன்பாக உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார் இவ்வாறான நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படும் பிரதேச சபைகளை விட மேலதிகமாக புதிய பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள் என்பவற்றை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் மிக நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.
இலங்கையிலுள்ள சகல மாவட்டங்களிலும் குறைந்த சனத்தொகை கொண்ட பகுதிகளுக்கு பிரதேச சபைகள் உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதிக சனத்தொகை கொண்ட பிரதேச சபைகளை கொண்ட நுவரெலியா மாவட்டத்தில் இத் தொகையை அதிகரிப்பதில் பல்வேறு சவால்கள் இதுநாள் வரையும் காணப்பட்டன. கடந்த வாரம் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஏற்பட்ட சர்ச்சைகளின் பலனாக ஜனாதிபதி இதற்கான சம்மதத்தை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தோடு மன்னார், கொழும்பு மாவட்டமும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
பிரதேச சபைகள்
இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 1978 ஆம் ஆண்டு பிரதேச சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டத்தின்படி பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி முதலாவது பிரதேச சபைகளுக்கான தேர்தல் 1991 மே மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற (இரண்டாவது தேர்தல் 1997 மார்ச் 21 இல் நடைபெற்ற) இவ்வாறு நாடு முழுவதும் 271 பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடு முழுவதிலுமுள்ள பிரதேச சபைகளுக்கும் அதன் எல்லைக்குள் காணப்படும் சனத்தொகைக்கும் இடையில் ஒரு சமநிலையற்ற தன்மையே காணப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியமாவட்டத்தில் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, கொத்மலை, நுவரெலியா, வலப்பனை ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் அதிக தமிழர்களைக் கொண்ட நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகள் அதிக சனத்தொகை கொண்டதாக காணப்படுகின்றன. அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையின் படி தற்போது நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை 5 ஆல் அதிகரித்து 10 ஆக உயர்த்த வேண்டுமென்பதே தற்போதைய நிலைவரமாக காணப்படுகின்றது. ஆனால் 10 பிரதேச சபைகளாக உயர்த்த வேண்டுமென்பது இடைக்கால கணக்கே எனவும் இத்தொகையை 20 ஆக அதிகரிக்க வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைவரப்படி, அம்பாறை மாவட்டத்தின் லகுகலவில் 8914 பேருக்கு (2012 சனத்தொகை கணக்கெடுப்பு) ஒரு பிரதேச சபையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளியில் 8530 பேருக்கு ஒரு பிரதேச சபையும் மன்னார் மாவட்டத்தில் மடு-7711 பேர் மற்றும் முசலை-8119 பேர் என்றவகையில் ஒவ்வொரு பிரதேச சபையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு-7117 மற்றும் வெலிஓயாவில்-6904 பேருக்கு ஒரு பிரதேச சபை என்றளவில் காணப்படுகின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் இவ்விடயத்தில் இதுவரை காலமும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 711, 644 பேர் வசிக்கின்றனர். (3.5 வீதம்) இதில் நகர்ப்புறத்தில் 40,151 பேரும் கிராமிய மட்டத்தில் 290,913 பேரும் தோட்டப் புறங்களில் 380,580 பேரும் வசிக்கின்றனர்.
இதில் அம்பகமுவ பிரதேச சபையில் 225,372 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 70 வீதம் தமிழர்கள், 23 வீதம் சிங்களவர்கள் மற்றும் 6 வீதம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஹங்குராங்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 88,528 கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 101,180 பேரும், நுவரெலியா பிரதேச சபை-212,094 பேரும் வலப்பனை-104,119 பேரும் வசித்து வருகின்றனர். தற்போது நுவரெலியா மாவட்டத்தில்-25,000 பேருக்கு ஒரு பிரதேச சபை என்ற கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நுவரெலியா பிரதேசசபை எட்டாகவும் அம்பகமுவ பிரதேச சபையை ஒன்பதாகவும் பிரித்து புதிதாக உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் முதல் கட்டமாக 10 பிரதேச சபைகளை உருவாக்குவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தமானி அறிவித்தல்கள் விடுக்கப்படும் வரை இதற்கான சாத்தியங்கள் தொடர்பில் தீர்க்கமாக கூறமுடியாத நிலையுள்ளது. சில வேளைகளில் நுவரெலியா மாவட்டத்துக்கு மேலதிகமாக பிரதேசசபைகள் வழங்கப்படுமாயின் இலங்கையின் மிகப்பெரிய பிரதேசசபைகளாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு திம்பிரிகஸ்ஸாய (238,057) மற்றும் கம்பஹா மாவட்டத்தில் கட்டான (235,291) பிரதேச சபைகளின் நிலைகளில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
மாநகர சபைகள்
இலங்கையைப் பொறுத்தளவில் நாடுமுழுவதிலும் 23 மாநகரசபைகள் காணப்படுகின்றன. நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தளவில் நுவரெலியா மாநகர சபை மாத்திரமே காணப்படுகின்றது. 12 சதுர கி.மீ பரப்பளவில் 23804 மக்கள் தொகையை (2012 கணிப்பீடு) கொண்டு இம்மாநகர சபை இயங்கி வருகின்றது. தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நகர சபைகளாக காணப்படும் தலவாக்கலை- லிந்துலை மற்றும் ஹட்டன்-டிக்கோயா நகரசபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல.129) படி உள்ளூராட்சி அமைச்சர் எந்தவொரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகர சபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம். மாநகர சபைக்குப் பொறுப்பாக உள்ளூராட்சி அமைச்சர் இருப்பார். இவ்வாறான சூழ்நிலையில் புதிய மாநகர சபைகளின் உருவாக்கம் தொடர்பிலோ, அவற்றை செயற்படுத்துவது தொடர்பிலோ இதுவரை எவ்விதமான அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.
நகர சபைகள்
இலங்கையில் மொத்தம் 41 நகரசபைகள் காணப்படுகின்றன. இதில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன்-டிக்கோயா (14585) பேர் மற்றும் தலவாக்கலை-லித்துலை (4691) பேர் என இரண்டு நகரசபைகள் காணப்படுகின்றன. இதைவிடவும் மஸ்கெலியா, பொகவந்தலாவ, கொட்டகலை, பூண்டுலோயா, அக்கரப்பத்தனை ஆகிய நகரங்களை புதிதாக நகரசபைகளாக மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1939 ஆம் ஆண்டு நகர சபைத் திருத்தச் சட்ட மூலத்தின் (61 ஆம் இலக்க) உள்ளூராட்சி அமைப்புத் தேவைகளை உருவாக்குவதற்கான வழியேற்படுத்தப்பட்டது.
மாநகரசபைக்குள் இருந்து இடம்பெயர்ந்த வளர்ச்சியடைந்து வரும் ஒரு பிரதேசத்தை அல்லது நகரத்தன்மை கொண்ட இடத்தை நிர்வாக எல்லை ஒன்றினை வரையறை செய்து உள்ளூராட்சி அமைச்சர் கட்டளையொன்றின் மூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பார். பெயர், அந்தஸ்து ஆகியவற்றையும் அமைச்சரே நிர்ணயிப்பார்.
இவ்வாறு உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிப்பதால் ஏற்படப் போகின்ற நன்மைகள் எவ்வாறு இருக்கும்? இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறான நன்மைகளை பெறுவார்கள் என்பது தொடர்பில் அறிவதும் அவசியமாகும், தற்போதைய சூழலில் தோட்டத் தொழிலாளர்கள் பிரதேச, மாநகர,நகர சபைகளுக்கு தேர்தலில் வாக்களிப்பதோடு நின்று கொள்கிறார்கள். மேலதிகமாக கிராம சேவகர் சான்றிதழில் பிரதேச செயலாளரின் கையொப்பத்தை பெறவும், விவாக, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும் நாடுகின்றனர். பிரதேச, மாநகர, நகரசபைகள் தமது எல்லைக்குட்பட்ட நகர்ப்புறங்களில் மாத்திரமே தமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. தீ விபத்து மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் நிகழுமாயின் அவர்களுக்கான சில நிவாரணங்களை வழங்குவதே அதன் உச்சபட்ச நடவடிக்கையாக இருக்கின்றது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் 60 வீதம் தொகுதி முறையிலும் 40 வீதம் விகிதாசார முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதுவரையும் உத்தியோக பூர்வமான அறிவிப்புகள் உள்ளூராட்சி மன்ற அதிகரிப்பு தொடர்பிலும் தேர்தல் தொடர்பிலும் வெளியிடப்படாத நிலையில் இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிபுகளை பெறமுடியாதுள்ளது. பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சனத்தொகை மற்றும் புவியியல் நிலைமைகள் ஒத்த நிலையிலேயே காணப்படுகின்ற நிலையில் பதுளை மாவட்டத்தில் 18 உள்ளூராட்சி அமைப்புக்களும் நுவரெலியா மாவட்டத்தில் எட்டுமே காணப்படுகின்றன. குறைந்தது 50-60 கி.மீ தூரத்தை கடந்தே தற்போது உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நுவரெலியா மாவட்ட மக்கள் செல்ல வேண்டியுள்ளது.
பிரதேச சபைகளை தாபிக்கும் போது கிராமங்களை மாத்திரமே உள்ளடக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகளே காணப்படுகின்றன. நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரை கிராமசேவகர் பிரிவுகளிலும் அதிக பாராபட்சம் காட்டப்பட்டிருப்பதை காண முடிகின்றது. குறிப்பாக கொத்மலை பிரதேச சபைக்கு 101,180 மக்களுக்கு 96 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளும் ஹங்குராங்கெத்தயில் 88528 மக்களுக்கு 131 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் வலப்பனையில் 104,119 மக்களுக்கு 125 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நுவரெலியாவில் 212,094 மக்களுக்கு 72 கி.உ.பிரிவுகளும் அம்பகமுவயில் 225,372 மக்களுக்கு 67 கிராம உத்தியோகத்தர் பிரிவு என்ற அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மிகப்பெரிய கிராம சேவகர் பிரிவாக 2396 குடும்பங்களைச் சேர்ந்த 12,898 பேர் வசிக்கும் கேர்கஸ்வோல்ட் பிரிவே காணப்படுகின்றது. இத்தோடு 12 தோட்டப் பிரிவுகளும் காணப்படுகின்றன. அதேபோல் லெதன்டி-6118, என்பீல்ட்-7142, நோர்வூட்-6598, மொக்கா-5175, பிரவுன்ஸ்விக்-5746, கவரவில-5441, வெஞ்சர்-5331, லொய்நோன்-7406, ஓல்டன்-5201, ஸ்ரெஸ்பி-5206, பொகவந்தலாவ தெற்கு-6215 என்ற அடிப்படையிலேயே கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இதன்படி கொத்மலையில் 1054 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பகுதியும் ஹங்குராங்கெத்தயில் 676 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பகுதியும் வலப்பனையில் 833 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பகுதியும் நுவரெலியாவில் 2945 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பகுதியும் அம்பகமுவவில் 3364 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பகுதி என்றளவிலே காணப்படுகின்றது. இது தோட்டத்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் குறைவான சனத்தொகை கொண்ட பிரதேசத்திற்கும் அதிக சனத்தொகை கொண்ட பிரதேசத்திற்கும் ஒரே மாதிரியான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி மாத்திரமே ஒதுக்கப்படுகின்றன. இதனால் மலையகத்தில் பெரும்பாலான பகுதிகள் அபிவிருத்தி காணாமைக்கு இவையும் ஒரு காரணமாக இருக்கின்றன. எனவே உள்ளூராட்சி மன்ற அலகுகளுக்குள் மலையக தோட்டப்புற மக்களையும் உள்வாங்குவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
.......................................................................................
பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் சவால்
தற்போது இருக்கின்ற பிரதேச சபைகள் அதிகரிக்கப்படுவதானது ஜனநாயக ரீதியில் மக்களுக்கு கிடைத்த வெற்றி. இதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால் அவ்வாறு தெரிவுசெய்யப்படப் போகின்ற 25 வீதமான பெண்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆண் பிரதிநிதிகளுக்கு போதியளவு அரசியல் அனுபவமின்மையே சவாலாக இருக்கும். அவர்கள் அரசியலில் போதிய அனுபவமில்லாமல் வளர்வதற்கான சூழலே இதுவரை காணப்பட்டது. இதுவே புதிய பிரதேச சபைகளின் தோற்றத்தில் எமக்கு சவாலான விடயமாக இருக்கும். அவர்களுக்கு அரசியல் அறிவினை சிவில் சமூகங்களும் அரசியல் தலைமைகளும் வழங்க வேண்டும்.
மற்றப்படி மக்களுடைய அடிமட்டத் தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. குறைந்த சனத்தொகை கொண்ட பகுதிகல் பிரதேச சபைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்திற்கு இது மிகப்பெரும் வெற்றியாகும். தற்போது 3 மாதக்காலப்பகுதிக்குள் வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்படலாம். சில வேளைகளில் இந்நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுமாயின் எதிர்வரும் வருடத்தில் புதிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம்.
க.முத்துலிங்கம்
நிர்வாக இயக்குனர்
சமூக அபிவிருத்தி நிறுவனம்.
.....................................................................................
அரசாங்கம் தயாரில்லை
தற்போதைய சூழ்நிலையில் இவ்விடயத்தை செய்யக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. 8000 மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதிக்கு ஒரு பிரதேச சபை காணப்படும் போது 225,000 மக்கள் தொகையை கொண்ட எங்களுக்கு இதில் அதிகரிப்பு வேண்டுமென்பதே மலையகத் தலைவர்களின் கருத்து. உடனடியாக இவ்விடயம் மேற்கொள்ளப்படுமாயின் அது இன வாத பிரச்சினையாக மாற்றமடையும். கிழக்கு மாகாணத்தில் சிங்களத்தரப்பு பலமாக இருப்பதற்கு அங்குள்ள சிங்கள பிரதேச சபைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. தற்போது மலையகத்திற்கும் இதை ஏற்படுத்தி விட்டால் மலையக மக்களும் பலமாகிவிடலாம் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆதலால் இப்போதைக்கு இவ்விடயம் சாத்தியமில்லை.
ஒரு வேளை இந்தியா அழுத்தம் கொடுத்தால் இது நடக்கலாம். ஆனால் இவ்விடயத்தை மலையகத் தலைவர்கள் இந்தியாவிடம் கொண்டு சேர்த்தார்களோ தெரியாது. மோடியின் மலையக விஜயத்துக்குப்பின் மலையக மக்கள் மீதும் அதிக கரிசனை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்திருப்பதால் இந்தியா அதிருப்தி நிலையிலுள்ளது. ஆதலால் இந்தியாவுக்கு தனது செல்வாக்கை இலங்கையில் அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இந்தியாவிற்கு தெரியப்படுத்தினால், அதன் இலங்கை மீதான அழுத்தம் இவ்விடயத்தை சாத்தியமாக்கலாம்.
உள்ளூர் அரசியலை பலப்படுத்துவதில் பிரதேச சபைகளுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. எனவே உள்ளூராட்சி மன்றங்கள் அதிகரிக்கப்படுமாயின் அது மலையக மக்களை பலப்படுத்தும். உள்ளூராட்சி மன்றங்கள் இதுவரை தோட்டப்புறங்களை உள்வாங்கவில்லை. ஆனால் இனி அபிவிருத்தி வாய்ப்புக்கள் ஏற்படும். அரசியல், சமூக ரீதியாக மலையக மக்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இதேபோல் உள்ளூராட்சி மன்றங்களில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமிருக்கின்றது.
யோதிலிங்கம்
அரசியல் ஆய்வாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக