க. பிரசன்னா
இலங்கையில் சனத்தொகை ஏற்றத்தைப் போல வாகனங்களின் தொகையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது. இவற்றில் முச்சக்கர வண்டிகளின் வருகை அதிகமாகும். சமீபகாலமாக இலங்கையில் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளில் முச்சக்கர வண்டிகளே அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. முச்சக்கர வண்டிகளின் விபத்துகளில் குறைந்தது 2 -3 பேர் வரை உயிரிழக்கும் அபாயமும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இலங்கையில் முச்சக்கர வண்டிகளின் பெருக்கத்தை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட வற் வரி சீர்திருத்தத்துக்கு முன்பாகவே தேவைக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் பாவனைக்கு வந்துவிட்டன. இதனால் வீதிகள் முழுவதும் முச்சக்கர வண்டிகளின் ஆதிக்கம் தான்.
இவ்வாறு கட்டுப்பாடற்ற வகையில் முச்சக்கர வண்டிகள் வீதிகளில் பயணிக்கும் நிலை தோன்றியுள்ளதால் முச்சக்கர வண்டி சாரதிகள் கடுமையான போராட்டத்தின் மத்தியிலேயே தமது உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் கட்டுப்பாட்டை மீறி செயற்பட வேண்டிய நிலை ஏற்படும் போது விபத்துகளை தடுக்க முடியாதுள்ளது. முச்சக்கர வண்டியில் 3 பயணிகளை மாத்திரமே ஏற்ற வேண்டுமென்ற கட்டாய நடைமுறை இருக்கும் நிலையில், அவை கடைபிடிக்கப்படுவதுமில்லை. பொலிஸாரினால் கண்டு கொள்ளப்படுவதுமில்லை.
அத்தோடு முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான ஆசனப்பட்டிகள் தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தாலும் கூட, அவை அமுலுக்கு வருவதில் இன்னும் தாமத நிலை தோன்றியுள்ளது. பஸ் போக்குவரத்தை விடவும் முச்சக்கர வண்டிகள் மூலம் பயணிகள் செல்ல வேண்டிய- இடத்தை இலகுவாகவும் வேகமாகவும் சென்றடைய முடிவதாலேயே பொதுமக்களும் அதிகமாக முச்சக்கர வண்டிகளை பயன்படுத்துகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க சமீபகாலங்களாக முச்சக்கர வண்டிப் போக்குவரத்து அபாயகரமானதாக மாறியிருப்பதாலும் அதிகமான விபத்துகளால் உயிர் பலியினை ஏற்படுத்துவதாலும் அவை தொடர்பாக நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
மேலும் முச்சக்கர வண்டிகளின் பெருக்கத்தால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வண்டி சாரதி தொழிலை பெரும்பாலும் இளைஞர்கள் தெரிவு செய்வதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமென இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 இளைஞர்கள் முச்சக்கர வண்டி செலுத்தும் தொழிலில் புதிதாக இணைந்து கொள்கின்றனர். இவ்வாறு நாட்டின் குறிப்பிடத்தக்களவு ஊழியவளம் முச்சக்கர வண்டி சாரதி தொழில் துறையில் முடங்குவதனால் கைத்தொழில் பேட்டை மற்றும் உற்பத்தி சாலைகளில் ஊழிய வளப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இது நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துறையை அதிகம் பாதிக்கும் காரணியாக இருக்கின்றது. எனவே நாட்டில் முச்சக்கர வண்டிகளின் பெருக்கமானது போக்குவரத்து வளர்ச்சிக்கு சாதகமான பங்காளியாக இருக்க முடியாது என்பது தெளிவாகின்றது.
2015 மத்திய வங்கியின் அறிக்கையின்படி இலங்கையில் 1.5 மில்லியனை முச்சக்கர வண்டிகளின் தொகை நெருங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 450,000 வண்டிகள் கொழும்பிலும் 900,000 வண்டிகள் இலங்கை முழுவதும் வாடகைக்கு செலுத்தப்படுவதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். எனவே முச்சக்கர வண்டிகளின் பெருக்கமும் கட்டுப்பாடில்லா வேகமுமே அதிகளவான விபத்துகளை தோற்றுவிப்பதாக சமீபத்திய சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.
இலங்கையில் அதிகமான முச்சக்கர வண்டி விபத்துகள் இளவயது சாரதிகளாலேயே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் 6,879 முச்சக்கர வண்டி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், இவற்றால் 207 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 10 வீதமான விபத்துகள் அதிக ஆபத்துமிக்கவையாகும். இவ்விபத்துகளில் கொல்லப்பட்டவர்களில் 5 வயதுக்குட்பட்ட 23 சிறுவர்களும் உள்ளடங்குவர். இத்தரவுகளின் அடிப்படையில் 21 -30 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதிகளே அதிக விபத்துடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர். இவற்றுக்கடுத்ததாக 31 -40 வயதுடைய சாரதிகள் விபத்துகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டி விபத்துடன் தொடர்புடைய 66 வீதமான சாரதிகள் 21 -40 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
எனவே அதிக துடிப்புமிக்கவர்களாக அறியப்படும் இளவயது சாரதிகளே வேகக்கட்டுப்பாட்டையும் மீறி வாகனத்தை செலுத்துவதால் விபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதற்காக இளவயது முச்சக்கர வண்டி சாரதிகளின் வாகனங்களில் ஏறக்கூடாது என்பதில்லை. பொதுவாக சகல முச்சக்கர வண்டி சாரதிகளும் அவ்வாறு முறைகேடாக செயற்படுவதில்லை. பொறுப்பாக வீதி சமிக்ஞைகளையும் விதிகளையும் கடைபிடிக்கும் இளம் வயது சாரதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இனிவரும் காலப்பகுதிகளில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சகலரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பாக வாகனத்தை செலுத்துவதற்கு தகுதியானதாக கொள்ளப்படும் கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மஹிபால தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் 2 நாட்கள் விசேட பயிற்சி நெறிகளுக்கு அழைக்கப்படுவதுடன் சாரதி அனுமதி அட்டை பெறுவதற்கு எழுத்துமூல பரீட்சையும் நடைபெறுமென மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகமான முச்சக்கர வண்டிச் சாரதிகள் வாகனத்தின் ஹென்டல் லொக்கை (ஏச்ணஞீடூஞு ஃணிஞிடு) தமது வசதிகளுக்கேற்ப திருத்தியமைக்கின்றனர். முச்சக்கர வண்டியின் முன் சக்கரமானது 576 சென்ரி மீற்றர் திரும்பும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இவற்றை அகற்றிவிட்டு சக்கரத்தின் சுழற்சியை அதிகரிக்கச் செய்கின்றனர். இதனால் வளைவுகளில் வேகமாக திரும்பும் ÷õபது முச்சக்கர வண்டிகள் கவிழும் நிலை தோன்றும் இவ்வாறு ஹென்டல் லொக்கை அகற்றியிருக்கும் முச்சக்கர வண்டிகளை அடையாளம் கண்டால் சட்ட நடவடிக்கையை போக்குவரத்துப் பொலிஸாரால் எடுக்க முடியும். பொதுவாக முச்சக்கர வண்டிச் சாரதிகள் சமிக்ஞைகளை இடாது வாகனத்தைத் திருப்புவது பிரச்சினையாக இருக்கிறது. இவ்வாறான மீறல்களுக்கு உடனடி தண்டமாக 1,000 ரூபாவும் நீதிமன்ற தண்டமாக 2,000- 6,000 ரூபா வரை விதிக்கப்படும்.
அத்தோடு கவனமற்ற அல்லது மோசமான வாகன செலுத்துகைக்காக 3,500 -5,000 ரூபா வரை நீதிமன்ற தண்டம் விதிக்கப்படும். ஆனால் தண்டப்பணம் அறிவிடுதல் மற்றும் பாதை விதி முறை மீறல் என்பன சடுதியாக அதிகரிப்பதாக மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ( தொழில்நுட்பம்) ஜே.எஸ். ஜெயவீர தெரிவித்துள்ளார். தினந்தோறும் 300 பேர் சிகிச்சைக்காக வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருவதாகவும் விபத்துகளில் பலியானோர் மற்றும் 70 வீதமான விபத்துகள் முச்சக்கர வண்டி அல்லது மோட்டார் சைக்கிளுடன் தொடர்புடையவையெனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவையின் பணிப்பாளர் கபில வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வருகை தருபவர்களில் பின்புறம், முகம் மற்றும் பல்லுடைவு, எழும்பு முறிவு, மூட்டு மற்றும் தலை பகுதிக்காயம் என்பவற்றுக்காக அதிகமாக விபத்தைச் சந்திப்பவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறான விபத்துகளைத் தவிர்க்க இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் எவையும் பயனற்றதாகவே இருக்கின்றன. வாகன சாரதிகளும் இவை தொடர்பில் அவதானமாக செயற்படா நிலையே காணப்படுகிறது. முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பாதுகாப்புப் பட்டிகள் வழங்குவதற்கான சட்டம் அமுல்படுத்த நடவடிக்கையெடுத்திருப்பதாக போக்குவரத்து மற்றும் உள்ளூர் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு இதுவரையும் 11,737 வாகன விபத்துகளில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு மரணமடைந்தவர்கள் 20 -28 வயதுக்குட்பட்டவர்களாவரென பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகமான விபத்துகள் பிற்பகல் 2 -6 மணிக்கிடையிலும் பிற்பகல் 1 -2 மணிக்கிடையிலும் மாலை 5 -6 மணிக்கிடையிலும் நள்ளிரவு 11 -12 மணிக்கிடைப்பட்ட நேரத்திலுமே ஏற்படுகின்றன. இவற்றில் பாடசாலை முடிவு நேரமும் அலுவலக நிறைவு நேரமும் உள்ளடங்குவதால் அதிகமானோர் வீதிகளிலும் வாகனங்களிலும் பயணிக்கும் நிலையுள்ளது. ஆதலால் விபத்துகள் அதிகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே இவ்வாறான தவறுகள் இடம்பெறாமலிருக்க தகுதியானவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். முச்சக்கர வண்டி சாரதிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை அவர்களுக்கு விளக்கிக் கூறுவதற்கான செயலமர்வுகள் நடத்தப்பட வேண்டும். அத்தோடு விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதற்கு அவர்களது சாரதி அனுமதிப்பத்திரங்களைக்கூட இரத்துச் செய்யலாம். அதிக விபத்துகள் இடம்பெறுகின்ற இடங்களாக சந்தேகிக்கும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் சி.சி.ரி.வி. கமராக்களின் மூலம் கண்காணிப்புகளை மேற்கொண்டு தவறிழைப்பவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தல் மற்றும் வாகனக் கட்டுப்பாடு என்பவற்றுடன் பாதசாரிகளும் வீதி ஒழுங்குகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறான விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதோ அல்லது கட்டாயச் சட்டமாக உள்வாங்கப்பட வேண்டியதோ அவசியமாகும். இவை உடனடியாக மேற்கொள்ளப்படாவிடின் விபத்துகளையும் உயிர் பலிகளையும் தடுக்க முடியாமல் போகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக