க. பிரசன்னா
மரணமென்பது எந்த நேரத்தில், எந்த இடத்தில் நிகழுமென்பதை யாராலும் இலகுவில் கணித்துவிட முடியாத விடயமாக இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தளவில் பல்வேறு வழிகளில் மனிதர்களுக்கு மரணங்கள் சம்பவிக்கின்றன. இவற்றில் சில இயற்கையானதாகவும் பெரும்பாலானவை மனிதத் தவறுகளாலும் ஏற்படுகின்றன. இவற்றில் நீரில் மூழ்கி இறத்தலையும் குறிப்பிடலாம். அண்மையில் யாழ்ப்பாணம் மண்டடைதீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தானது இவ்வாறு நீரில் மூழ்கியதன் விளைவாக ஏற்பட்டவையாக இருக்கின்றன. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஏழு மாணவர்கள், பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக மண்டைதீவு - சிறுதீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இதன்போதே அவர்கள் படகு பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வேளையில் படகில் பயணித்த ஏழு பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் உயிர் தப்பியுள்ளார். உயிரிழந்த மாணவர்கள் யாழ். கொக்குவில், நல்லூர், உரும்பிராய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். ஜெயசாந்தன் தினேஷ் (17 வயது), நத்தன் ரஜீவன் (18 வயது), நாகசிலோஜன் சின்னத்தம்பி (17 வயது) ஆகிய யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் தனுசன் (18 வயது), தனூரதன் ( 20 வயது) ஆகிய யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் பிரவின் (வயது 20) கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவனுமே நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களாவர்.
இதற்கமைய மாணவர்கள் நீரிழ் மூழ்கியமையாலேயே உயிரிழந்திருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் படகு செலுத்தும் முறை தொடர்பில் அறிந்திருக்கவில்லை. மாணவர்களின் கவனயீனமே விபத்துக்கு காரணமெனவும் மாணவர்கள் மதுபோதையில் இருந்திருக்கலாமென சந்தேகிப்பதாகவும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் க்ளஸ்டன் ஸ்டனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். மதுசார அளவினை அறிந்துகொள்வதற்காக இறந்த மாணவர்களின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வடதீவுப் பகுதிகளில் இவ்வாறு படகு விபத்துகள் ஏற்படுவது முதன்முறையல்ல. கடந்த மாதத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் படகு விபத்தில் உயிரிழந்திருந்தார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டு மாணவர்கள் சிறுதீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்துக் கொண்டு கடலுக்குள் செல்ல முற்பட்டதாகவும் அதன்பிறகு மற்றவர்கள் அதில் ஏறியதாகவும் பின்னர் கடலுக்குள் சென்றதும் படகு கவிழ்ந்தே மாணவர்கள் நீருக்குள் வீழ்ந்ததாகவும் அவர்களுக்கு நீச்சல் தெரியாதெனவும் சம்பவ இடத்திலிருந்த ஏனைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் மாத்திரம் எட்டுப் பேர் உயிரிழந்திருந்தனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் மதுபாவனையினாலும் நீர் தொடர்பான ஆரம்பகட்ட திறமைகளை கொண்டிராததாலுமே தொடர்ச்சியாக தமதுயிரை பறிகொடுக்கின்றனர். உலகில் ஒவ்வொரு வருடமும் 500,000 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். 1.3 மில்லியன் மக்கள் காயமடைகின்றனர். நீச்சல் மற்றும் குளிக்கும் போதும் மதுவுக்கு அடிமையாகியிருப்பதே நீரில் மூழ்குவதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. 25 -50 வீதமான இளம் பருவத்தினர் மற்றும் பெரியோரின் மரணம் நீர் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், நீரில் மூழ்குதல் என்பவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. 2012 - 2014 ஆம் ஆண்டு வரையிலான 3 வருட காலப்பகுதியில் இலங்கையில் 100, 000 க்கு 4.2 மரணங்கள் நீரில் மூழ்குதலுடன் தொடர்புடையவையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சப்ரகமுவ மாகாணத்தில் 74 பேர் நீரிழ் மூழ்குவதால் மரணமடைகின்றனர். இலங்கையில் 14 இடங்கள் நீரிழ் மூழ்கும் விபத்துகள் அதிகம் இடம்பெறும் பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன. மாத்தறை, மிரிஸ்ஸ, காலி, ஹிக்கடுவை, பேருவளை, களுத்துறை, பாணந்துறை, தெஹிவளை, மவுண்ட்லவனியா, வெள்ளவத்தை, கோல் பேஸ், நீர்கொழும்பு மற்றும் நிலாவெளி என்பன இவற்றில் உள்ளடங்கும். மேல் மாகாணத்தில் 300 பேர் வருடாந்தம் நீரில் மூழ்கி இறப்பதுடன், வடமாகாணத்தில் இத்தொகை 52 ஆக இருக்கின்றது. பெண்களை விட ஆண்களே இவ்வாறு உயிரிழப்பவர்களில் அதிகமாவர்.
நாட்டில் பெரும்பாலானோரின் கனவாக நிரந்தர தொழில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுதல் என்பனவே இருக்கின்றன. சிலர் கடன்களை அடைப்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றனர். ஆனால் நீச்சல் தொடர்பான பாடங்கள் பலருக்கு பெரிதாக தெரிவதில்லை. மில்லியன் கணக்கான சிறுவர்கள் பாடசாலைகளில் மலசலகூடம் மற்றும் நீர் இல்லாமல் இருக்கின்றனர். குடிநீர், ஆசிரியர்கள், மேசை, கதிரை என்பவற்றை விட பாடசாலைகளில் நீச்சல் தடாகங்கள் மிகவும் குறைவு. அரசாங்கம் மற்றும் கல்வியமைச்சினால் நாடு முழுவதும் 40 நீச்சல் தடாகங்களே நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 15 கொழும்பில் இருக்கின்றன.
2010 ஆம் ஆண்டைய தகவல்களின்படி, மாத்தறை மாவட்டத்தில் 35 பாடசாலைகளிலுள்ள 18,391 மாணவர்கள் மற்றும் 1206 ஆசிரியர்கள் அங்குள்ள மொத்த மலசலகூடங்களில் அரைவாசியானவற்றை பாவிக்காமல் இருக்கின்றனர். இது பாரிய பின்னடைவாக இருக்கின்றது. இலங்கையில் இவ்வருடம் முதல் ஆறுமாத காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் இருவர் உயிரிழக்கின்றனர். எனவே பாடசாலைக் காலம் முதல் நீச்சல் தொடர்பான அறிவினை வளர்த்தல் அவசியம். தேவையற்ற அபிவிருத்திகளை பாடசாலைகளில் ஏற்படுத்துவதை தவிர்த்து இவ்வாறான தற்காப்பு நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
கடந்த 21 நாட்களில் நீரில் மூழ்கியதால் பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ். சம்பவத்தில் 6 பேர் மரணமானதுடன், தெதுறு ஓயாவில் 13 மற்றும் 16 வயதுகளையுடைய சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். 14 வயதுடைய மாணவன் பயகல கடற்கரையில் குளிக்கும் போது இறந்ததுடன் இறத்தோட்டையைச் சேர்ந்த 20, 21, 24, 26 வயதுகளையுடோயோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஏற்பட்ட மரணங்களில் அதிகமானது ஆண்களே மரணித்துள்ளர். இவர்கள் 8 -25 வயதுக்குட்பட்டவர்களாவர். பொலிஸ் தரவுகளின்படி கடந்த வருடம் 877 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது 2014 இல் 859 ஆகவும் 2015 இல் 688 ஆகவும் காணப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் முதல் ஆறுமாத காலப்பகுதியில் நீரில் மூழ்கி 873 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 299 ஆண்கள் உள்ளடங்குவர். இதில் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் 1340 கி.மீற்றர் நீளமான கடற்பரப்பில் குறிப்பிட்டளவான அழகான மற்றும் பாதுகாப்பான கடற்கரைகள் குளித்தல், நீச்சல் மற்றும் ஏனைய நீர் விளையாட்டுக்களுக்காக காணப்படுகின்றன. இதனால் பாதுகாப்பான இடங்களை அடையாளப்படுத்த வேண்டிய தேவையுள்ளதுடன், நீச்சல் தொடர்பிலான அடிப்படை அறிவினை பெற்றுக் கொள்வதும் அவசியமாகும். இவ்வாறானதொரு சூழலில் இலங்கை வாழ்க்கை பாதுகாப்பு சங்கம் (Life Saving Association Of Sri lanka) அபாயகரமான நீர் விபத்துகளில் உதவுவதற்கான பாதுகாவலர்களை பயிற்றுவித்து வருகின்றது.
இச் சங்கம் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பவற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும். தற்போது இங்கு 1500 உயிர் பாதுகாவலர்கள் கடமை புரிந்து வருகின்றனர். 1000 க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். வருடாந்தம் பல்வேறு இடங்களில் நீரிழ் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் 400 பேர் இவர்களால் காப்பாற்றப்படுகின்றனர். எனவே பாடசாலை தொடக்கம் நீச்சல் தடாகங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவதுடன், சமூக சேவை செய்ய விரும்புபவர்களும் இவை தொடர்பான பயிற்சி நெறிகளில் கலந்துகொள்ள வேண்டும். கடற்கரைகளுக்கோ அல்லது ஆறுகள், ஏரிகள் என்பவற்றில் படகு செலுத்துபவர்கள் தங்கள் படகுகளின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இறங்குதுறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதோடு, மாணவர்களுக்கு மதுபாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் போதுமான விளக்கமளிக்கப்பட வேண்டும்.
.............................................................................................................
தடுக்கக்கூடிய வழிமுறைகள்
- நீச்சல், நீர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக மீளும் திறன் என்பவற்றை அறிந்திருத்தல்.
- மீட்பு தொடர்பில் பயிற்றுவித்தல்.
- நீரிழ் மூழ்குதல் தொடர்பான சமூக விழிப்புணர்வை முன்னெடுத்தல்.
- உயிர் பாதுகாப்பு சேவை திட்டத்தை அபிவிருத்தி செய்தல்.
- தேசிய நீர் பாதுகாப்புத் திட்டத்தை அபிவிருத்தி செய்தல்.
- நீச்சல் தடாக செயற்பாடுகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை வரையறுத்தல்.
..................................................................
நீரில் மூழ்கும் ஒருவருக்கு சுவாசப்பையில் நீர் நிரம்புவதே மிகப்பெரிய ஆபத்தை கொடுக்கின்றது. இதனால் மூச்செடுப்பதில் தடைகள் ஏற்படுகின்றன. நீரிழ் மூழ்கிய ஒருவருக்கு சுவாசம் தடைப்பட்டு 10 நிமிடங்களில் மரணம் சம்பவிக்கலாம். ஒருவேளை நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் காப்பாற்றப்படுவாராயின் அவருக்கு முதுகுபுறமாக அமிழ்த்தி நீரை வெளியேற்றுவதற்கான ஆரம்கட்ட முதலுதவி சிகிச்சையளிப்பதுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
டாக்டர் ச.முருகானந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக