கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு
க.பிரசன்னா
ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றுவதற்கு பல கோடி முதலீடுகளில் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இலங்கையின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் மாற்ற முடியாத இயற்கை நியதிகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திடம் ஏதேனும் விசேட திட்டங்கள் இருக்கின்றனவா? உலக வங்கியின் தகவல்களின் படி இலங்கையில் முதியோர் சனத்தொகையானது 2021 மற்றும் 2041 ஆம் ஆண்டுகளில் 12.5 வீதத்திலிருந்து 16.7 வீதமாக மாறுவதற்கான வாய்ப்பினை கொண்டிருப்பதாகவும் இந்நிலைமை தெற்காசியாவில் முதியோரை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகையானது மூன்று மடங்கு அதிகரிப்பினை கொண்டிருக்கின்றது. 2000 ஆம் ஆண்டு இத்தொகை 600 மில்லியனாகவும் 2006 ஆம் ஆண்டு 700 மில்லியனாகவும் காணப்பட்டதோடு, 2050 ஆம் ஆண்டு இத்தொகை 2.1 பில்லியனாக அதிகரிக்கும் ஒரு நெருக்கடியான சூழல் ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு முதியோர் சனத்தொகை அதிகரிப்பானது இளம் தலைமுறையினர் சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட உயிரியல் தொழில்நுட்ப தகவல்களுக்கான தேசிய நிலையத்தின் 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் ஆசிய நாடுகளில் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதோடு, பிறப்பு வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைமை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகையானது 7-14 வீதம் அதிகரிப்பதற்கு ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டது. ஆனால் ஆசிய நாடுகளில் இம்மாற்றம் 25 வருடங்களிலேயே ஏற்பட்டுள்ளதென அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தனது அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கான நோக்கத்தில் முதியோர் சனத்தொகை அதிகரிப்பினால் எவ்வாறான சவால்களை எதிர்நோக்கவுள்ளது என்பது தொடர்பில் அறிவது அவசியம்.
மக்கள் தொகை மாற்றம்
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை சனத்தொகையின் வயது கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சிறுவர் சனத்தொகை குறைந்தும் முதியோர் சனத்தொகை அதிகரித்தும் காணப்படுகின்றது. உதாரணமாக சிறுவர் சனத்தொகை (15 வயதுக்கும் குறைவாக) 1981 இல் 35.2 வீதமாக காணப்பட்டதோடு 2012 இல் 25.2 வீதமாக குறைந்துள்ளது. முதியோர் சனத்தொகை 1981 இல் 6.6 வீதமாக வளர்ச்சியடைந்ததோடு 2012 இல் 12.4 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த மாற்றமானது சனத்தொகையை திசை திருப்பியிருப்பதோடு தொழில் செய்வோரின் சனத்தொகையை அதிகரித்துள்ளது. இது சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு வாய்ப்பாக இருக்கிறது.
இலங்கையில் 1963 இல் பிறப்பு வீதம் 5.0 வீதமாகவும் 2012 இல் 1.9 வீதமாகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதேபோல 1963 க்குப் பிறகு ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. 1996 - 2001 காலப்பகுதியில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 4.7 வருடங்களாக அதிகரித்துள்ளது. இதன்படி இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 72 மற்றும் 78.6 ஆக காணப்படுவதாக புள்ளிவிபரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கியிருப்போர் மற்றும் ஓய்வூதியம்
2012 இல் 60 தங்கியிருப்போரில் 40 சிறுவர்களும் 20 முதியோரும் உள்ளடங்கியிருந்தனர். 2050 இல் இத்தொகையில் சிறுவர்களை விடவும் முதியோரின் தொகை அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் சனத்தொகையில் 62 வீதமானோரே தொழில் செய்பவர்களாக இருக்கின்றனர். இதில் பெண்களின் பங்களிப்பு 36 வீதமாகும். அதேபோல முதியோர் சனத்தொகை நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கான ஓய்வு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் வேலை செய்வோரில் குறைந்தளவானோரே உள்ளடக்கப்படுகின்றனர். முதியோரில் 5 இல் ஒருவரும் தொழிற்படையில் பங்குபற்றிய 3 இல் ஒருவருமே ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றனர். தனியார் துறையில் பங்குபற்றும் 70 வீதமான தொழிலாளர்களில் 26 வீதமானோரே சமூக பாதுகாப்பை பெறுகின்றார்கள்.
இலங்கையில் தொழில் புரிவோரில் 3.5 மில்லியன் பேர் (50 வீதம்) ஓய்வூதியத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படவில்லை. இவர்களில் 23 வீதமானோர் தனியார் துறையினராகவும் 13 வீதமானோர் சுயதொழில் புரிபவர்களாகவும் 14 வீதமானோர் விவசாயிகள் மற்றும் மீனவர்களாகவும் இருக்கின்றனர். இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோரில் 12 வீதமானோர் அரச ஓய்வூதியத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டவர்கள். 28 வீதமானோர் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்குள் உள்வாங்கப்பட்டவர்கள். 9 வீதமானோர் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், ஒரு வீதமானோர் பதிவு செய்யப்பட்ட சுய தொழிலாளர்களாக இருக்கின்றனர். இதனால் தொழில் செய்து ஓய்வு பெறும் 50 வீதமான முதியோர் ஓய்வூதியம் இல்லாமல் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய தேவையேற்படுகின்றது.
சுகாதாரத் திட்டம்
அபிவிருத்தியடைந்துவரும் நாடான இலங்கையில் சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதேபோல நோய்களின் பெருக்கமும் அதிகமாக காணப்படுகின்றது. இலங்கையில் வயது வந்தோரில் 90 வீதமானோர் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். (இதில் 73 வீதமானோர் 1-2 அபாயகர நிலைமை மற்றும் 18 வீதமானோர் 3-5 அபாயகர நிலைமை) தீராத நோய்களில் உயர் குருதி அமுக்கம் (27.3 வீதம்) அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு (18.8 வீதம்) ஆர்தரைட்டிஸ் மற்றும் ஆஸ்துமா என்பன 8.0 வீதம் மற்றும் 5.9 வீதம் என்றளவில் காணப்படுகின்றன.
முதியோர் சனத்தொகையில் 55 வீதமானோர் ஏதோவொரு தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இல் ஒரு முதியோர் தீராத நோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 55 வீதமாகவும் பெண்கள் 56 வீதமாகவும் இருக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு புள்ளி விபரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட சுகாதார ஆய்விலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் சனத்தொகையில் 86 வீதமானோர் அவர்களுடைய இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்கின்றனர். 75 வீதமானோர் இரத்தத்தில் சீனியின் அளவையும் 58 வீதமானோர் கொலஸ்ரோல் அளவினையும் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
முதியோருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள்
2015 ஆம் ஆண்டு குண்டசாலையில் குகையொன்றில் நாய்களுடன் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு பட்டதாரியான அபிவிருத்தி உத்தியோகத்தரின் 75 வயதுடைய தாய் சுடுநீரில் சுடப்பட்ட நிலையில் பல்லேவெல பொலிஸாரினால் மீட்கப்பட்டார். இவ்வாறு முதியோருக்கு எதிராக பதிவாகின்ற துஷ்பிரயோக சம்பவங்கள் இலங்கையில் மாத்திரம் பதிவாகவில்லை. உலகில் 6 இல் ஒரு முதியவர் ஏதோவொரு வகையில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படுகிறார். இத்தொகையானது சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகில் 16 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் உளவியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் (11.6 வீதம்), நிதி முறைக்கேடு (6.8 வீதம்), புறக்கணிப்பு (4.2 வீதம்), உடலியல் துன்புறுத்தல் (2.6 வீதம்), பாலியல் துஷ்பிரயோகம் (0.9 வீதம்) என்பவற்றால் பாதிப்பினை எதிர்கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபன தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
மதுபாவனை மற்றும் காப்புறுதித் திட்டம்
புகைத்தல் மற்றும் மதுபாவனை முதியோர் மத்தியில் உயர் நிலையில் காணப்படுகின்றது. புகைத்தல் 3 மடங்கு (17 வீதம்) அதிகமாகவும் தொடர்ச்சியான மதுபாவனையானது 4 மடங்கு (16 வீதம்) அதிகமாக காணப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு வீடு மற்றும் சனத்தொகை கணிப்பின் போது மூன்றில் ஒரு முதியவர் செயற்பாட்டு முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இவற்றில் கண்பார்வை, காது கேட்டல், நடத்தல், மறதி, கிரகித்தல், பேசுதல் என்பன உள்ளடங்கும்.
நாட்டில் சுகாதாரப் பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் அவற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. உதாரணமாக மொத்த சனத்தொகையில் (11.3 வீதம்) மிகக் குறைந்தளவிலானோரே (3.2 வீதம்) காப்புறுதித் திட்டத்தை கொண்டுள்ளனர். தேகாரோக்கியமே தரமான வாழ்வுக்கு சக்தியாகும். எனவே முதியோருக்கான காப்புறுதித் திட்டம் மிக அவசியமாகின்றது.
உலகில் அதிக முதியோரைக் கொண்ட நாடாக ஜப்பான் இருக்கின்றது. அவர்களுடைய ஆயுட்காலம் சராசரியாக 83.4 வருடங்களாகும். ஜப்பானில் மிக நீண்டகால தங்கியிருப்போரின் தொகை அதிகமாகக் காணப்படுகிறது. அங்கு முதியோர்களுக்கு விசேட பயிற்சிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. எனவே அவ்வாறானதொரு முயற்சிகளை இலங்கையில் எடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முதியோர் அடையாள அட்டை மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் என்பன வழங்கப்பட்டாலும் அவை போதுமான தேவைகளை நிறைவேற்றுவதில்லை. இன்றும் அதிகமான பிச்சைக்காரர்கள் முதியோராகவும் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களாகவுமே இருக்கின்றனர்.
கடந்த காலங்களில் சமுர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. தபாலகத்தில் முதியோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தற்கால வாழ்க்கையின் செலவுக்கேற்ப அதிகரிக்கப்படவில்லை. எனவே இவ்வாறான தடைகளை களைய வேண்டும். முதியோருக்கு வேலை மற்றும் ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் நீண்டவாழ்வு, சமூகநலன் மற்றும் சமூக சேவைகள் என்பவற்றுக்கு ஏற்ற கொள்கைத் திட்டங்களையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் உருவாக்க வேண்டும். தங்கியிருப்போர் கட்டாயம் தொழில் முறையில் பங்குபற்றியிருக்க வேண்டுமென்ற திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் முதியோர் சனத்தொகை அதிகரிப்பில் 20 வீதமான பெண்களின் தொகையானது தொழிற்படையிலிருந்து விடுவிக்க 15 வருடங்கள் தாமதமேற்படுகின்றது. எனவே முதியோர் தமது தொழிலிலிருந்து ஓய்வு பெறும் வயதெல்லையை கட்டாயமாக்கி அவர்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் தமது முதுமையை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் பேண வழிவகுப்பதோடு, தொழிற்படையின் தொகையினையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் சனத்தொகை அதிகரிப்பால் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக