கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

வாட்டும் வரட்சி வற்றும் தண்ணீர்
க.பிரசன்னா
காலநிலை மாற்றம் தொடர்பான வலியுறுத்தல்கள் ஏட்டளவில் காணப்படுகின்ற நிலையில் அதனால் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இலங்கையில் சமீபகாலமாக நிலவிவருகின்ற வறட்சி நிலை காரணமாக நீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இலங்கையானது வருடா வருடம் இவ்வாறு மோசமாக பாதிக்கப்பட்டு வருவது வழமையாகவிருப்பினும் எவ்வித முன்னேற்பாடுகளும் அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தற்போது நகரப்புறங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டு நீரை சேமிக்கும் உபாயம் அரசால் கையாளப்பட்டு வருகிறது. இது மக்களுக்கு பொருந்தாததொரு தீர்வாகவே இருக்கின்றது.
இலங்கையில் பாவனைக்கு ஏற்ற வகையிலான நீர்வளம் காணப்படுகின்றது. இருப்பினும் அவை முறையாக பராமரிக்கப்படாமையும் பயன்படுத்தப்படாமையுமே இவ்வாறான இழப்புகளுக்கு பிரதான காரணமாக இருக்கின்றன. இவை இலங்கையில் மட்டுமல்ல பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் காணப்படுகின்ற பிரச்சினையாகவே இருக்கின்றது. உலகளவில் காணப்படுகின்ற நீர்ப்பிரச்சினையானது பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துமென உலக வங்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் பாரிய பொருளாதார இழப்புகள் ஏற்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவற்றில் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்கா என்பன இந்நூற்றாண்டின் மத்தியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கத்தை எதிர்நோக்குமெனவும் 2050 ஆம் ஆண்டில் பெரும்பாலான நகரங்கள் மற்றும் விவசாயத்துக்கு நீரை விநியோகிப்பதில் பாரிய சிக்கல் நிலை நீடிக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசமான பற்றாக்குறையானது ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வன்முறையை ஊக்குவிப்பதோடு புகலிடக்கோரிக்கையாளர்களையும் அதிகரிக்கச் செய்கின்றது. நீர் பற்றாக்குறையானது மத்திய கிழக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 வீதத்தை இழக்கச் செய்யும்.
அண்மையில் சாஹேல் வலய நாடுகளில் இவ்விழப்பு 12 வீதமாக காணப்படுவதாக வங்கித் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் மத்திய ஆசியா 11 வீதத்தினை நெருங்கியுள்ளதோடு கிழக்காசியா 7 வீத வர்த்தக இழப்பினை நீர் முகாமைத்துவ கொள்கைகளால் கொண்டுள்ளன. சகல பிராந்தியங்களும் இந்நீர் பற்றாக்குறையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதத்துக்கும் மேற்பட்ட இழப்பை எதிர்நோக்கியிருக்கின்றன. இதனால் அரசாங்கங்கள் நீர் விநியோகம் தொடர்பிலும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் அதிகம் முக்கியத்துவத்துடன் செயற்பட வேண்டுமென உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவற்றில் கடுமையான பொருளாதார இழப்பை மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா, தெற்காசியாவின் சில பகுதிகள் என்பன எதிர்நோக்கக்கூடும்.
உலகமானது காலநிலை மாற்றத்தால் அதிகவெப்பமான மற்றும் வறட்சியான எதிர்காலத்துக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். இதனால் தெற்காசிய நாடுகளின் விவசாயம் புயலால் பாதிக்கப்படும் நிலையுமிருக்கிறது. எனவே காலநிலை மாற்றத்தை சீர்படுத்துவதும் நீர்வளத்தை பாதுகாப்பதும் அவசியத் தேவையாக தற்போது மெலெழத் தொடங்கியுள்ளன. தற்போது இலங்கையில் நிலவுகின்ற வறட்சி நிலைமையால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 453,880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பொலனறுவை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த 46,624 குடும்பங்கள் நீர்ப்பற்றாக்குறையால் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றன.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் 16 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக 18.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 1000 லீற்றர் கொள்ளளவுடைய நீர்த்தாங்கிகள் பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், புத்தளம், மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் மாநகர, நகர சபைகளால் நீர் நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இவ்வாறான நிவாரண நடவடிக்கைகள் வறட்சி காலங்களோடு மாத்திரம் நின்று விடுகின்றன. மக்கள் நிரந்தரமாக குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய நிரந்தரமான திட்டங்கள் மேற்கொள்ளப்படாமையே இப்பாதிப்புக்கு காரணமாகும்.
தற்போது இலங்கையில் நிலவுகின்ற வறட்சி காலநிலையால் அதிகம் பொலனறுவை மாவட்டமே பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 118,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டம் அதிகம் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது. வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் காணப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்தேங்கும் அளவு குறைந்துள்ளதாக மஹாவலி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி பாவனைக்குகந்த நீர்க்கொள்ளளவு கொத்மலை நீர்த்தேக்கத்தில் 33.9 வீதமாகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் 6.3 வீதமாகவும் ரந்தனிகல நீர்த்தேக்கத்தில் 9.5 வீதமாகவும் ரந்தெம்பே நீர்த்தேக்கத்தில் 7.3 வீதமாகவும் ஹுருலுவேவ நீர்த்தேக்கத்தில் 0.6 வீதமாகவுமே காணப்படுகின்றன.
எனவே தொடர்ச்சியாக வறட்சி காலங்கள் நீடித்துச் செல்லுமாயின் நீருக்கான தட்டுப்பாடு அதிகரிக்கலாம். இதனால் நாட்டிலுள்ள சகலரும் நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆனால் இக்கட்டான நிலைமைக்கு இன்னும் தள்ளப்படவில்லையென மஹாவலி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் பணிப்பாளர் எஸ்.ஆர்.கே. அருப்பொல தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் மழைகாலத்தினை எதிர்நோக்க உள்ளதால் நீர்மட்டம் அதிகரிக்கும். இருப்பினும் மோசமான நிலைமையை எதிர்கொள்ளத் தேவையான நீர் கையிறுப்பிலுள்ளது. தற்போது மின் உற்பத்திக்கு நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களே நீர் திறந்து விடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இருப்பினும் பாதிப்புகள் அதிகமில்லையென கூறப்பட்டாலும் வறட்சி நிலைமையால் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதோடு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, மாத்தறை, பலாங்கொட, காலி ஆகிய பகுதிகளில் வறட்சியினால் தேயிலை விளைச்சல் குறைவடைந்துள்ளது. தேங்காய் உற்பத்தி அதிகம் நிகழும் மாவட்டங்களான புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகியன வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படலாம். அதேபோலவே தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திலும் கொழும்பு மனிங் சந்தையிலும் மரக்கறிகளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழமையாக ஒவ்வொரு நாளும் 50 மூடை கத்தரிக்காய்கள் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் தற்போது 50 மூடையை பெற்றுக் கொள்வதே சிரமமென கொழும்பு மனிங் சந்தையின் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் காமினி ஹன்துங்கே தெரிவித்துள்ளார். புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் படி கடந்த வருடத்துடன் மரக்கறி விலைகளை ஒப்பிடும் போது லீக்ஸ் 44.4 வீதத்தாலும் பயற்றங்காய் 42 வீதத்தாலும் கரட் 41.2 வீதத்தாலும் பீட்ரூட் 25.9 வீதத்தாலும் கத்தரிக்காய் 34 வீதத்தாலும் புடலங்காய் 25 வீதத்தாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கமானது தகுதியற்ற நீர்முகாமைத்துவத்தினை கொண்டிருப்பதாகவும் இலங்கை முழுதும் காணப்படுகின்ற 14,000 ஆறுகள், ஓடைகள், மற்றும் நீர்த்தேக்கங்களை முகாமை செய்வதில் தவறிழைக்கப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பின் பிரதம ஒருங்கிணைப்பாளர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். அக்டோபர் 15 ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மொன்சூன் மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும் ஆனால் தொடர்ச்சியாக கிடைப்பதற்கு வாய்ப்பில்லையென வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு வறட்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் உரித்தானது. எனவே சகலருக்குமாகவே நீர்வளத்தை பாதுகாக்க வேண்டிய தேவை அதிகம் எமக்கிருக்கிறது.
இலங்கை மக்கள் பயனடையக்கூடியவகையிலான நீர்வளங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாமையும் மக்களிடையே கொண்டு செல்லப்படாமையுமே வறட்சி நிலைமைகளின் போது மக்கள் அதிகம் சிரமங்களை எதிர்நோக்க காரணமாகின்றன. நீரின்றிய நிலையில் எந்தவொரு உயிரினத்தாலும் நீண்டகாலம் வாழ முடியாது. பெரும்பாலான நகரப்புற குடியிருப்பாளர்கள் பிரதான ஆறுகளில் இருந்தே சுத்திகரிக்கப்பட்ட நீரை பெற்றுக் கொள்கின்றனர். வேறு எந்த சந்தர்ப்பத்தாலும் அவர்களுடைய நீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
எனவே குறிப்பிட்ட 14 மாவட்டங்களில் மாத்திரமே வறட்சி என்றாலும் அவ்விடயம் முழு நாட்டையுமே பாதிக்கும் நிலை காணப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு, பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் என நாட்டு மக்கள் அனைவரும் அதன் பிரதிபலிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விடும். காடழிப்பு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றமை, மீள்காடாக்கம் கைவிடப்படுகின்றமை என்பனவும் வறட்சியை தூண்டும் காரணிகளாக இருக்கின்றன. ஆறுகளில் காணப்படும் 60 வீதமான நீர் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷில் வசிக்கும் 750 மில்லியன் மக்களுக்கு குடிநீர் பாவனைக்கும் நீர்ப்பாசனத்திற்கும் உகந்தவையல்லவென நேச்சர் ஜியோசைன்ஸ் பத்திரிகை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆற்றின் 200 மீற்றல் ஆழத்தில் 23 வீதமான நீரில் உப்பு கலந்துள்ளது. அத்தோடு 37 வீதமானவை நச்சு செறிவு அதிகம் கொண்டவையாக இருக்கின்றன. எனவே உலகில் இயற்கையாக உருவாகின்ற நீர்வளம் மனிதனால் மிகப்பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. காடுகளில் விலங்குகளுக்கு நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக குழிகளில் நீர்த்தேக்கி வைக்கும் நடவடிக்கை வனஜீவராசிகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குழிகளுக்கு அருகில் மறைந்திருந்து சிலர் விலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யால, உடவளவை போன்ற வனவிலங்கு சரணாலயங்களில் அதிக நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
எனவே மக்கள் ஆபத்துக்காலங்களில் மட்டுமல்லாது வருடம் முழுவதும் சீரான நீரை பெற்றுக் கொள்ளவும் வறட்சி காலங்களில் தம்மை சுயமாக தற்காத்துக் கொள்வதற்கான வழிவகையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு திட்டம், நீர்வளங்களின் பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு, மரநடுகை போன்றவற்றில் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். நீர்ப்பற்றாக்குறை தொடர்பிலான முறையீடுகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 24 மணிநேர சேவையான 117 என்ற இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக