சனா
“அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்” என்பது முதுமொழி. ஆனால் எவ்வளவுதான் தமக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் தலைமைகளின் வார்த்தையே வேதவாக்கு என வாழ்ந்துவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை நினைத்து அதிகம் கவலை கொள்ள வேண்டியிருக்கிறது. மீண்டும் பெரும்பாலான மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் இவற்றில் உள்ளடங்குகின்றன. ஆங்கிலேயரின் லயன்களிலும் பாதுகாப்பற்ற பகுதிகளிலும் வாழ்ந்துவரும் மக்களின் நலன்கருதி தனி வீட்டுத்திட்டம் அமைக்கப்படுவதாக வாய்வார்த்தையாகக் கூறுவதோடு, அடிக்கல் மாத்திரம் நாட்டப்பட்டு மாதங்கள் பல கடந்துள்ள போதும் முறையாக வீடுகள் எவருக்கும் கையளிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
லயன்களில் வாழ்கின்ற சகலருக்கும் 7 பேர்ச் காணியுடன் தனிவீடு என்பதே தற்போதைய அரசாங்க சார்பு அங்கத்தவர்களின் தேர்தல் கால பரப்புரையாகவிருந்தது. தேர்தல் நிறைவு பெற்று இரண்டாண்டுகள் நெருங்குகின்ற வேளையில், எத்தனை மலையகத்தவருக்கு இதுவரையும் தனிவீடு சாத்தியமாகியிருக்கிறது? கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக மீரியபெத்தயில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இரண்டாண்டுகள் கழிந்த நிலையில் கடந்த தீபாவளியன்றே வீடுகள் கையளிக்கப்பட்டன. ஆனால் அவையும் இன்னும் முழுமை பெறவில்லை.
ஆரம்பத்தில் சகல மலையகத் தலைமைகளும் குரல்கொடுத்த அவ்வீட்டுத் திட்டத்துக்கு இறுதியில் அமைச்சு மாற்றமெனக் கூறி சகலரும் விலகிக் கொண்டார்கள். ஆனால் வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் சகலரும் முண்டியத்துக்கொண்டு திரை நீக்கம் செய்ய பாடுபட்டதை அவதானிக்க முடிகிறது. அதுபோலவே கடந்த காலங்களில் அதிகமான லயன் குடியிருப்புகள் தீக்கிரையான சம்பவங்கள் நடந்தேறின. இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படுமென வாக்குறுதியளித்து அடிக்கல் நாட்டப்பட்ட போதும் இன்னும் வீடுகள் முழுமைபெறாத நிலையிலேயே இருக்கின்றன. எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்குவரும் போது தேசிய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதேபோல பிராந்திய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் நீண்ட இழுபறிக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மீண்டுமொரு புதிய அரசின் பதவியேற்பின் பின்பு அவை திரைநீக்கம் செய்யப்பட்டால் அவற்றை கடந்த ஆட்சியில் நாங்கள் செய்தோம், இவர்கள் திரைநீக்கம் மாத்திரமே செய்கிறார்களென அறிக்கை மட்டும் விடுவார்கள். அதுவே வழமையாக விருக்கிறது. அவ்வாறான நிலைமையை தற்போதைய மலையக அபிவிருத்திகளில் காணமுடிகிறது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 4,000 தனிவீடுகளுக்கான உதவிகள் எங்கே சென்றன என்பது கூட தெரியவில்லை. நிலைமை இவ்வாறு சென்றால் 5 வருடங்களில் இவர்களால் 500 வீடுகளைக் கூட முழுமையாக கட்டிக் கொடுக்க முடியாது.
எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயற்படுத்தாமல் வழங்கப்படுகின்ற உதவிகளையெல்லாம் அடிக்கல் நாட்டுவதற்கு மாத்திரம் பாவித்தால் எவ்வாறு முழு திட்டத்தின் பயனை மக்கள் அனுபவிக்க முடியும்? அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் வசித்து வருபவர்களுக்கு அதுவே நிரந்தர வசிப்பிடமாக மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது. குடிநீர், மலசலகூடம், பிள்ளைகளுக்கான பாதுகாப்புச் சூழல் என எந்தவொரு வசதிகளுமில்லாமல் வெறுமனே தகரத்தால் மறைக்கப்பட்ட கொட்டில்களில் எவ்வளவு காலம் வசிக்க முடியும்? தனிவீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு அத்திட்டத்தை பூர்த்திசெய்வதில் மலையகத் தலைமைகள் காட்டும் அசமந்தத்துக்கான காரணம் என்ன?
இவற்றில் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இரத்தினபுரி, கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களின் நிலைமையினை விட மோசமாக அமைந்திருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை காலமும் கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லையென்ற காரணம் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் வழங்கியபோதும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அபிவிருத்தி என்ன?
தற்போது இந்தப் பட்டியலில் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களும் இணைந்துள்ளன. ஆக மலையக மக்கள் அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தமிழ் பிரதிநிதித்துவம் அவசியமென மலையக சார்பு கட்சிகள் கருதுகின்றனவா? அவ்வாறாயின் பல வருடங்களாக தமிழ் பிரதிநிதிகளை அதிகம் உற்பத்தி செய்யும் நுவரெலியா, பதுளை மாவட்டங்கள் கண்ட அபிவிருத்திகள்தான் என்ன? குறைந்தது இங்கு வசிப்பவர்களுக்கு நிரந்தரமான தனிவீடுகளையாவது பெற்றுக்கொடுத்தார்களா? எதுவுமேயில்லை. தலைமைகளுடைய வாக்குவங்கி எங்கே முழுமையாக நிரப்பப்படுகிறதோ அங்கேயே ஒரு சில அபிவிருத்தி திட்டங்களை இனங்காண முடிகிறது.
எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்ற மலையகப் பகுதி அதிகளவில் அபிவிருத்தியில் புறக்கணிப்பை எதிர்நோக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்ற சூழ்நிலையில், உள்ளூராட்சி அலகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் படியான பேச்சுக்கள் மேலெழுந்துள்ளன. உள்ளூராட்சி அலகுகளை அதிகரிப்பதென்பதானது அவ்வலகுகளில் தமது கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துவோரின் தொகையினை அதிகரித்து அதன்மூலம் மலையகத் தலைமை என்ற ஸ்தீரணமான அந்தஸ்தை மலையக கட்சிகள் பெறுவதற்கு முனைகின்றனவே தவிர மக்களுக்கான அபிவிருத்திகளை இலக்காக கொள்ளவில்லை.
மலையகத்தின் உச்சகட்ட அபிவிருத்தியாக பாதை புனரமைப்பு மாத்திரமே இருக்கிறது. பாதைகளை புனரமைப்பது மாத்திரம் எவ்வாறு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் சமூக எழுச்சியையும் உருவாக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. தொழிலாளர்களுக்கு இறுதியாக கைச்சாத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நியாயமாக கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதியளித்த எவரும் இன்று பேசாமடந்தைகளாக இருப்பதையே அவதானிக்க முடிகிறது. ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது ஏமாற்றத்தை வலியுறுத்திய அவர்கள், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? 730 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டாலும் தோட்ட நிர்வாகங்களால் தமக்கு வேலை நாட்கள் மற்றும் நினுவையில் அநீதி இழைக்கப்படுவதாக மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது. எனவே இங்கு கூட் டுஒப்பந்தத்தின் சரத்துக்கள் முழுமையாக மீறப்பட்டிருக்கிறது. அதற்காக மலையகத் தலைமைகள் செய்தது என்ன? இவ்வாறு கேள்விகள் மட்டுமே தொழிலாளர்களின் வாழ்வில் தொக்கிநிற்க, பதில்கள் மட்டும் ஒளிந்து கொண்டேயிருக்கின்றன.
11/09/2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக