கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

ஆட்டோ ஓட்டுநர்கள் ஆபத்தானவர்களா?
க.பிரசன்னா
இலங்கையின் போக்குவரத்து பயன்பாட்டில் முச்சக்கரவண்டிகள் (ஆட்டோக்கள்) தவிர்க்க முடியாத பங்கினை வகிக்கின்றன. இலகுவில் பயணிக்கக் கூடியதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடையக் கூடியதாகவும் இருப்பதால் பெரும்பாலானோர் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துகின்றனர். அதேபோல கொழும்பு போன்ற தலைநகரப்பகுதிகளில் நிலவுகின்ற வாகன நெரிசல்களை சமாளிக்கவும் இம்முச்சக்கர வண்டிகள் பயன்படுகின்றன. இவ்வாறு இலங்கைப் போக்குவரத்துப் பயன்பாட்டில் முச்சக்கரவண்டிகளுக்கு இருக்கின்ற கிராக்கியே அதன் பெருக்கத்துக்கும் காரணமாக இருக்கின்றது. தெற்காசிய நாடுகளில் முச்சக்கர வண்டிகளின் பாவனை மிக அதிகமாகும். இலங்கையில் 1.3 மில்லியன் முச்சக்கர வண்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் அதிகமானவை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
இவ்வாறு மக்களின் அன்றாட பயன்பாட்டில் முக்கியத்துவம் வகிக்கும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு முச்சக்கரவண்டி பயணத்தின் பாதுகாப்பை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கை முச்சக்கரவண்டிகளின் ஓட்டுனர்களையும் ஆத்திரத்துக்குள்ளாக்கியிருக்கிறது. இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கே, இவற்றிலும் குறிப்பாக பெண் பயணிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க பெண் பயணிகள் மீதான பொருத்தமற்ற தொடுகைகள் கொழும்புப் பகுதிகளில் காணப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்களில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் தொடர்புபட்டுள்ளதாகவும் ஜூன் 26 ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதகரம் விடுத்துள்ள பாதுகாப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர்ப் பகுதிகளிலேயே அதிகமான முச்சக்கர வண்டிகள் பாவனையில் இருக்கின்றன. சிலர் பகுதியாகவும் பெரும்பாலானோர் முழு நேரத் தொழிலாகவும் முச்சக்கர வண்டி செலுத்துவதை கொண்டுள்ளனர். இலங்கையில் 20 பேருக்கு ஒரு முச்சக்கரவண்டி என்ற நிலை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் அமெரிக்கத் தூதரகத்தின் மேற்படி அறிவிப்பு கொழும்பு நகர்ப்பாதைகளில் பயணிக்கின்ற முச்சக்கரவண்டிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்துபவையாக அமைந்திருக்கின்றன.
தூதரகம் வெளியிட்டுள்ள சிலபாதுகாப்பு குறிப்புகளில், அமெரிக்கப் பெண்கள் கொழும்புக்கு பயணம் செய்யும் போது கொழும்பில் முச்சக்கரவண்டிகளை போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் தேவையேற்படின் (குறிப்பாக இரவு வேளைகளில்) முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தியுள்ள கம்பனி வண்டிகளில் பயணிக்கவும். நம்பகரமான குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் பயண அலுவல்களை ஒழுங்கமைத்துக் கொள்ளுமாறும் தூதரகத் தகவல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும் போது முச்சக்கர வண்டிச் சாரதி, வாகன அனுமதிப்பத்திரம் என்பவற்றை படமெடுத்துக் கொள்ளவும். குற்றத்தை மேற்கொள்ளத் தூண்டும் வகையில் பெறுமதியான நகைகள் அல்லது பாரிய தொகை பணம் என்பன வெளித் தெரியாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான அறிவித்தல்கள் நாடு முழுவதுமுள்ள முச்சக்கரவண்டிச் சாரதிகளை குற்றவாளிகளாகப் பார்க்கும் மனோநிலையை சுற்றுலாப் பயணிகளிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைக்கு வருகை தருகின்ற பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்துக்காக அதிகளவு முச்சக்கர வண்டிகளை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் முச்சக்கரவண்டிகளை செலுத்துவதை தொழிலாகக் கொண்டவர்கள் ஓரளவுக்கு வருமானத்தைப் பெறக்கூடியதாகவிருக்கிறது.
கொழும்பு நகர்ப்புறங்களில் அதிகமான தமிழ், முஸ்லிம் மக்கள் முச்சக்கரவண்டிகள் செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான அறிவிப்புகள் இவர்களின் வாழ்வாதாரத்தையும் நம்பகத் தன்மையையும் அதிகம் பாதிப்பதாக அமைந்திருக்கின்றன. மோட்டார் வாகனத் திணைக்களம் சகல வாடகை முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர்கள் பொருத்துவதை கட்டாயமாக்கியிருக்கிறது. இதன்படி 400,000 வாடகை முச்சக்கர வண்டிகள் இலங்கையில் காணப்படுவதாக அத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் மீற்றர் பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளே அதிகம் வாடகை முச்சக்கர வண்டிகளாக இருக்கின்றன. முச்சக்கர வண்டிகளை ஓட்டுகின்ற எவரும் பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலை தலைநகரில் காணப்படுவதால் ஒரு சிலர் செய்யும் குற்றங்கள் சகலரையும் பாதிக்கும் நிலை காணப்படுகின்றது. பிக் மீ போன்ற பதிவு செய்யப்பட்ட கம்பனிகளால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளை பெண்கள் எவ்வேளையிலும் பாதுகாப்பானதாகவே உணர்கின்றார்கள். இவ்வாறான சேவைகளில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன் பயணங்களும் இணையம் மூலம் கண்காணிக்கப்படுவதால் எவ்வேளையிலும் பாதுகாப்பான சேவையாக சகலருக்கும் தோன்றுகின்றது.
இலங்கையின் சுற்றுலாத் துறையில் முச்சக்கர வண்டிகளின் பங்கு முக்கியமானதாகும். நாட்டிலுள்ள சகல பயணிகளுக்கும் பால் மற்றும் குடியுரிமை வேறுபாடின்றி பாதுகாப்பு வழங்க முடியும். அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சுக்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் பொறுப்புக்கூற வேண்டும். இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை தூதகரச் செயலாளரிடம் கோரியுள்ளதாக தேசிய வீதிப்பாதுகாப்புச் சபையின் தலைவர் டாக்டர் சிசிர கொடகொட ஆங்கில நாளிதழொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்கத் தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ள இவ்வாறான அறிவுறுத்தல்களால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் அதற்கு குறிப்பிடத்தக்களவு பங்காற்றுகின்ற முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு முதல் பத்து மாதங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததன் மூலம் 2.75 பில்லியன் டொலர்கள் வருமானமாகப் பெறப்பட்டுள்ளன. இவ்வருடம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதே இலக்கென இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனவே மிகப்பெரிய இலக்கினை நோக்கி இலங்கையின் சுற்றுலாத் துறை நகர்ந்து கொண்டிருக்கும் வேளை, அமெரிக்கத் தூதரகத்தின் இவ்வாறான அறிவிப்புகள் தடைக் கற்களாகவே இருக்கின்றன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்களின்படி, இவ்வருடத்தில் கடந்த ஜூன் மாதம் வரையில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே (172,894) அதிகம் காணப்படுகின்றனர். இதற்கடுத்ததாக சீனா (134,744) , பிரித்தானியா (95,922), ஜெர்மனி (67,631), பிரான்ஸ் (50,961), அவுஸ்திரேலியா (35,094), மாலை தீவு (34,439), ரஷ்யா (33,338), அமெரிக்கா (28,139), கனடா (22,882) என்றளவில் சுற்றுலா பயணிகளின் வருகை காணப்படுகிறது. இத்தரவரிசையில் அமெரிக்கா ஒன்பதாவது இடத்தை வகிக்கின்றது.
கடந்த மாதம் வரை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு 28,139 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தாலும் அவர்கள் அனைவரும் முச்சக்கர வண்டிச் சாரதிகளினால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கவில்லை. ஆனால் அமெரிக்கத் தூதரகத்தின் அறிவிப்பு இலங்கையிலுள்ள 400,000 வாடகை முச்சக்கர வண்டிச் சாரதிகளையும் ஏனைய முச்சக்கர வண்டிச் சாரதிகளையும் கடுமையாக பாதித்திருக்கின்றது. இவ்வாறான தூதரகத்தின் தகவல் தொடர்பில் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிக்கையில், 2016 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கெதிராக நாடு முழுவதிலும் நான்கு முறைப்பாடுகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பாலியல் தாக்குதல் சம்பவம், ஒரு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும், இரு சம்பவங்கள் மீற்றரில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோலவே 2017 ஆம் ஆண்டும் இதுவரையும் மூன்று சம்பவங்கள் மாத்திரமே முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கெதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் இரு சம்பவங்கள் மீற்றரில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோரை கைது செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நிலைமை இருக்க அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் பாதிப்படைவதாகவே சுட்டிக்காட்டுகிறது. இதனால் இது வெளிநாட்டவர்களிடம் இலங்கையை மலினப்படுத்தும் செயலாக மாறியிருக்கிறது. பெரும்பாலான முச்சக்கர வண்டி சாரதிகள் இதனால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். வருமானமிழப்பைச் சந்தித்திருக்கின்றார்கள். இதனால் அவர்களுடைய குடும்பமும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறது. இலங்கையில் தொழில் புரிவோர், கல்வி கற்போர் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்குச் செல்வோர் துரிதமாக பயணிப்பதற்கான போக்குவரத்து வலைப்பின்னல்கள் இலங்கையில் இல்லை.
இருக்கின்ற வீதிகளிலும் குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் போக்குவரத்தை நம்பி அதிக பயணங்களை மேற்கொள்ள முடியாதுள்ளது. இவ்வாறான நிலையில் முச்சக்கர வண்டிகளே பலருக்கு விரைவான வழிகாட்டியாக இருக்கின்றன. இவ்வாறு முச்சக்கர வண்டிகளில் பயணிக்கின்ற பலர் மறந்து விட்டுச் சென்ற பணப்பைகளை உரிய முறையில் பொலிஸாரிடம் கொண்டு சேர்த்த சம்பவங்களும் இலங்கையில் பதிவாகியுள்ளன. இவ்வாறான நிலையில் தூதரகத்தின் அறிவிப்பானது ஓரிரு சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த முச்சக்கரவண்டிச் சாரதிகளையும் எடைபோட பார்த்திருக்கிறது. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 400,000 வாடகை முச்சக்கர வண்டிகளே இருந்தாலும் பதிவு செய்யாமலேயே பல முச்சக்கரவண்டிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டறிந்து துரித நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும். அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தினால் இம்மாதம் முதல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவற்றுக்கு உரிய தீர்வு பெறப்படவில்லை.
தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறான அறிவிப்புகள் தாக்கத்தை செலுத்தா வண்ணம் துரித நடவடிக்கையெடுக்க வேண்டும். அல்லது தூதரகத்தின் அறிவிப்பு வாபஸ் பெறப்பட வேண்டும். இந்நிலைமை மேலும் நீடிக்குமாயின் இலங்கையின் சுற்றுலாத்துறையும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கமும் மிகப்பெரிய அவமானத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
12/07/2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக