கொழும்பு வீதிகளில் பெருகிவரும் குப்பைகளும் புழுக்களும்
க.பிரசன்னா
இலங்கை தற்போது மிகப்பெரிய சுகாதார பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதை நாம் அறிவோம். இதற்கு மானிட நடவடிக்கைகளும் அரசியல் செயற்பாடுகளுமே உறுதுணையாக இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. மலேரியா மற்றும் யானைக்கால் நோயற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்கின்ற இலங்கையானது, தற்போது நுளம்புகளால் வேகமாக பரவிவரும் டெங்கு நோய்க்கு எதிராக போராட வேண்டிய மிக ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கின்றது. காவிநோய்களுள் இலங்கையில் டெங்கு நோய் முக்கிய இடத்தினை வகிப்பதுடன் 1996 ஆம் ஆண்டு முதல் டெங்கு நோயானது கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டிய நோய்ப் பட்டியலின் கீழ் உள்ளடக்கப்பட்டது. இன்று டெங்கு நோய் நாட்டில் பாரிய சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை அச்ச நிலைமைக்குள் கொண்டு சென்றுள்ளது.
எனவே டெங்கு நோய்க்கு எதிராக போராட வேண்டிய தேவை சகலருக்கும் எழுந்துள்ளது. டெங்கு ஆபத்தான உயிர்க்கொல்லி நோயென சகலரும் அறிந்திருந்தும் கவனயீனமாகவும் மிகவும் அலட்சியமான போக்குடனும் நடந்து கொள்வதே நாட்டில் டெங்கு நோயாளர்களின் பெருக்கம் அதிகரித்துச் செல்ல காரணமாயிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இவ்வருடத்தில் கடந்த ஆறுமாத காலப்பகுதிக்குள் நாடு முழுவதிலும் 71,298 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக நோய் தொற்றியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவற்றில் 42.76 வீதமான டெங்கு சம்பவங்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு மிக அதிகமான டெங்கு நோய்த்தாக்க சம்பவங்கள் கடந்த 20 வாரங்களில் பதிவாகியுள்ளன. இந்த நிலைமையானது சுற்றாடலில் நுளம்பு பெருக்கம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ள பகுதிகளை தொடர்ச்சியாக சுத்தப்படுத்த வேண்டுமென்ற எச்சரிக்கையை சகலருக்கும் விடுத்துள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழம் மூடல்
மொரட்டுவ பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் மத்தியில் டெங்கு மற்றும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் கடந்த சனிக்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பல்கலைக்கழக வளாகமானது டெங்கு நோய் பெருக்கத்துக்கான சாதகமான சூழ்நிலையினையும் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய்த்தாக்கத்தால் 87 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சகல கல்வி நிறுவனங்களும் உடனடியாக டெங்கு காவிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த துரிதமாக செயலாற்ற வேண்டிய தேவை எழுத்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு
டெங்கு நோய்த் தாக்கமானது மேல் மாகாணத்திலேயே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக நோய்த் தொற்றியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் மாத்திரம் 30,492 சம்பவங்கள் (30 ஜூன் வரை) பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 15,763 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 10,672 நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 4057 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 3,014 நோயாளர்களும் கொழும்பின் ஏனைய பகுதிகளில் 12,749 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
சமீபகாலமாக மேல் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, கழிவகற்றல் பிரச்சினை என்பன டெங்கு நோய்க் காவிகள் அதிகம் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மேல் மாகாணத்தில் டெங்கு நோய்த் தாக்கமானது 43 வீதத்தால் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 587 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 86,639 வசிப்பிடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 8316 வசிப்பிடங்கள் நுளம்பு பெருக்கத்துக்கு ஏற்றவகையிலான சூழலை கொண்டிருந்ததுடன் 897 வசிப்பிடங்களில் நுளம்புப் பெருக்கம் அடையாளம் காணப்பட்டதாகவும் கொழும்பு சிரேஷ்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதுமான தாக்கம்
நாடு தழுவிய ரீதியில் கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 24,082 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்தாண்டு இத்தொகை 71,298 ஆக அதிகரித்துள்ளதாகவும் நோய்த்தாக்கமானது 66 சதவீத அதிகரிப்பை கொண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அதேபோல டெங்கு நோய்த் தாக்கத்தினால் கடந்தாண்டு 97 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்தாண்டு இதுவரையில் 250 மரணங்கள் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு ஏற்பட்டுள்ள மரணங்களால் 25 வீதமானவை சிறுவர்களாக காணப்படுவதுடன் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 52 வீதமானோர் 18 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். இதன்மூலம் நாடளாவிய ரீதியில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களாக இருப்பதுடன் பாடசாலை மாணவர்களாகவும் இருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் ஒவ்வொரு வருடமும் உலகளவில் 50 -100 மில்லியன் பேருக்கு டெங்கு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட புதிய ஆராய்ச்சியில் ஒவ்வொரு வருடமும் 390 மில்லியன் பேருக்கு டெங்கு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாக அறிவித்துள்ளது. இவ்வாறு டெங்கு நோயின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் கடந்த 6 மாதங்களில் ஜனவரி மாதம் 10,468 டெங்கு நோயாளர்களும் பெப்ரவரி மாதத்தில் 8500 நோயாளர்களும் மார்ச் மாதம் -13,446, ஏப்ரல் மாதம் - 12,408, மே மாதம் - 15,134, ஜூன் மாதம் - 11,342 நோயாளர்களும் நாடுமுழுவதிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த காலங்களைப் போலல்லாது, இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. 2002 ஆம் ஆண்டு இலங்கையில் 8931 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர். 2003 ஆம் ஆண்டு - 4672, 2004 - 15,463, 2005 - 5,994, 2006 - 11,980, 2007 - 7,332, 2008 - 6,607, 2009 - 35,095, 2010 - 34,105, 2011 - 28,140, 2012 - 44,456, 2013 - 32,063, 2014 - 47,502, 2015 - 29,777, 2016 - 55,150 என்ற ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் இவ்வாண்டு இவற்றில் ஆபத்தான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நிரம்பி வழியும் குப்பைகள்
கொழும்பு நகர்ப்புறப் பகுதிகளில் தற்போது நிரம்பியுள்ள குப்பை மலைகளால் நாற்றமெடுப்பதுடன் நோய்க்காவிகளையும் உருவாக்கி வருகின்றன. அரசாங்கத்திடம் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாமையே இதற்கான பிரதான காரணம். ஆரம்பத்தில் மக்கள் குப்பைகளை வீசுவதற்கு ஒவ்வொரு பகுதியிலும் முறையான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால் அங்கு மட்டுமே அதிகமான குப்பைகளை காணமுடிந்தது. தற்போது அவ்விடங்களில் குப்பைகளை வீச தடைவிதிக்கப்பட்டிருப்பதாலும் குப்பைகளை அகற்ற நகர சுத்திகரிப்பாளர்கள் செல்லாததாலும் பாதைகள் முழுவதும் மக்கள் குப்பைகளை வீசிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை குப்பைகள் கொழும்பு வீதிகளில் போடப்படுவதால் புழுக்கள் பெருகிவருவதையும் துர்நாற்றம் வீசுவதையும் காணமுடிகிறது.
இவ்வாறு பலநாட்களாக குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் நுளம்புகளின் பெருக்கமானது கடுமையாக அதிகரித்திருக்கிறது. அரசியல் ரீதியாக குப்பைகளை அகற்றுவதற்கு கொடுக்கப்படும் நெருக்குதல்கள் காரணமாக கழிவகற்றல் பூதாகர பிரச்சினையாக இருக்கிறது. இதனால் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளின் மூலம் கொம்போஸ்ட் தயாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கொழும்பு ஒரு நாளைக்கு 36,000 மெட்ரிக் தொன் கழிவுகளை வெளியேற்றினாலும் 600 மெட்ரிக்தொன்கள் மாத்திரம் கொம்போஸ்ட் செய்யப்படுகிறது. தற்போது குப்பை போடுபவர்களை கைது செய்கிறார்கள். ஆனால் அவர்கள் வீசிய குப்பைகள் வீதியிலேயே கிடக்கின்றன. இலங்கையில் தற்போது பெருகிவரும் டெங்கு நோய்க்கு குப்பைகளே பிரதான காரணமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை பரிசோதனைச் செய்வதற்கான பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பணியிடங்களில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் இவ்வாறு 1900 சுகாதார பரிசோதகர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாக அதன் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொது விதிகளின் படி 9000 பேருக்கு ஒரு சுகாதார பரிசோதகர் என்றளவில் நியமனம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் தற்போது 20,000 பேருக்கு ஒரு சுகாதார பரிசோதகரே காணப்படுவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
20 சுகாதார பரிசோதகர்கள் தற்போதும் நியமனத்துக்காக காத்திருப்பதாக ஒன்றியத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். களுத்துறை, காலி, கடுகண்ணாவ, குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பயிற்சி நிலையங்கள் அமையப்பெற்றுள்ளன. ஒவ்வொரு வருடமும் 275 பட்டதாரிகள் உருவாகின்றனர். இந்த ஒன்றரை வருட நிகழ்ச்சித் திட்டத்தில் 30-40 மாணவர்கள் இடைவிலகிவிடுகின்றனர். மிகவும் குறைந்தளவிலானோரே பொதுச் சுகாதார பரிசோதகர் பாடநெறிக்கு விண்ணப்பிக்கின்றனர். இதில் அதிகமான மாணவர்களை களுத்துறை பயிற்சி நிலையம் (100) உள்வாங்குவதுடன் ஏனைய நிலையங்கள் 50 க்கும் குறைவான மாணவர்களையே உள்வாங்குகின்றன. காலி பயிற்சி நிலையத்தில் பட்டம் பெற்ற 22 மாணவர்கள் இன்னமும் நியமனத்துக்காக காத்திருக்கிறார்கள். தற்போது நாட்டில் நிலவும் அவசரமான சூழலில் அதிகமான பரிசோதகர்கள் உள்வாங்கப்பட்டாலே டெங்கு பரவல் இடங்களை மேற்பார்வை செய்யமுடியுமென்பதால் அரசாங்கம் உடனடியாக இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய வைரஸ்
அவுஸ்திரேலியாவில் டெங்கு நுளம்புகளை வெற்றிகரமாக அழித்த பக்றீரியாவை இலங்கைக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஆகூஐ பக்றீரியாக்கள் கியூபாவில் சிறப்பாக செயற்படவில்லையென்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது 140 வகையான நுளம்பு இனங்கள் காணப்படுவதுடன் ஈடிஸ் ஈஜிப்டை மற்றும் ஈடிஸ் எல்பொபிக்ட்ஸ் ஆகிய நுளம்பு வகைகள் மாத்திரம் டெங்கு நோய் வைரஸை பரப்புவதில் பங்களிப்புச் செய்கிறது. இவ்விரண்டு நுளம்பு வகைகளையும் அவற்றின் உடலில் காணப்படும் அடையாளம் மூலம் இனங்காணமுடியும்.
இதேவேளை டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற நுளம்புகளை அழிப்பதற்கு புதிய இரண்டுவகை நுளம்புகளை உருவாக்கியுள்ளதாக இலங்கை அரச மருத்துவ பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய இருவகை நுளம்புகளை பொதுவாக நுளம்புகள் பரவுகின்ற இடங்களில் பரப்பி விடுவதன் மூலம் டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற நுளம்புகளை அழிக்க முடியுமென வைத்திய நிபுணர் சாகரிகா சமரசிங்க தெரிவித்துள்ளார். மீரிகம, கண்டலம, குண்டசாலை, பேராதனை ஆகிய பகுதிகளில் இந்நுளம்புகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் இந் நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனவே எதிர்வரும் காலங்களில் டெங்கு நோயாளர்களை அதிகம் கொண்டுள்ள பகுதிகளில் இந்நுளம்புகளை விடுவதன் மூலம் டெங்கு நோய்த்தாக்கத்தை குறைப்பதற்கான வழிமுறை கிடைக்குமென நம்பலாம்.
இலவச சிகிச்சை
நோய்த் தொற்றுக்குள்ளானோர் டெங்கு நோய் மற்றும் பொருத்தமான மருத்துவ சிகிச்சையினை இலவசமாக எந்தவொரு அரச வைத்தியசாலைகளிலும் பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. டெங்கினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்காக இவ்வாறு டெங்கு நோயாளர்களாக இனங்காணப்படுபவர்கள் உடனடி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், இவை தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹசித திசேரவை (0779169108) தொடர்பு கொள்ள முடியுமென அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நோய்க்கான அறிகுறிகள் தென்படுமிடத்து உடனடியாக மருத்துவ சிகிச்சையினை நாடவேண்டியது அவசியமாகும். டெங்கு ஆட்கொல்லி நோயாக உருவெடுத்திருப்பதால் இதனை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள்
டெங்கு நோயினை பரப்பக்கூடிய இருவகையான நுளம்புகள் சுற்றுச்சூழலில் காணப்படும் அசுத்தமான இடங்களில் அதிகம் உற்பத்தியாகின்றன. அகற்றப்படும் இலகுவில் உக்காத பொருட்கள், உக்கும் பொருட்கள், தடைப்பட்டுள்ள கூரைப் பீலிகள், கொங்கிரீட் கூரைகள், மறைக்கப்படாத நீரைச் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் நீர்த்தொட்டிகள், நீர் ஒன்று சேரக்கூடிய அலங்கரிப்புப் பொருட்கள், குளிர்சாதனம் மற்றும் குளிரூட்டி தட்டுகள், மிருகங்கள் பருகுவதற்கு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள், செடிகள், செடிகளின் பகுதிகள், மரப்பொந்துகள் என்பன நோய்க் காவியான நுளம்புகளை தோற்றுவிக்கக்கூடிய சாதகமான சூழலை கொண்டுள்ளன.
எனவே அவ்வாறான இடங்களை அடையாளங் கண்டு உடனடியாக அகற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும். நுளம்பு முட்டையானது 100 நாட்களுக்கு உலர்ந்த நிலையில் காணப்பட்டாலும் மீண்டும் நீர் தேங்கினால் நுளம்புகளை உற்பத்தி செய்யும் இயல்புடையவையாக இருக்கின்றன. எனவே நீர் தேங்குமிடங்களை அகற்றி, நுளம்பு இனப்பெருக்கம் அடையாமல் தடுப்பது முக்கியமான தேவையாகும்.
இவ்வாறு பல்வேறு காரணிகள் டெங்கு நோயில் தாக்கம் செலுத்துபவையாக அமைந்திருக்கின்றன. டெங்கு நோய் பரவலுக்கு மானிட நடவடிக்கைகளே பாரிய பங்களிப்பு செலுத்துகின்றன. சுற்றாடலை முறையாக பராமரிக்காமை, வைத்திய உதவிகளை நாடாமை, அதிகமான கழிவுகளை தேக்கி வைக்கின்றமை என்பவற்றோடு அரசியல் நடவடிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. குப்பைகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம், வைத்தியசாலைகளில் போதிய இடமின்மை, வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போன்ற காரணிகள் நோய்த் தாக்கத்தை அதிகரிக்க காரணமாகவிருப்பதால், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இலங்கையை டெங்கு அற்ற நாடாக பிரகடனப்படுத்திக் கொள்வதில் சகலரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிக முக்கியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக