க.பிரசன்னா
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகமென்பது நீண்டநாள் கனவாகவே இருக்கின்றது. தேர்தல் வாக்குறுதியாக மாத்திரம் வழங்கப்பட்டுவரும் இத்திட்டம், இன்னும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோரில் 150,000 க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகத்துக்கு தேர்வாகின்றனர். ஆனாலும் இவர்களில் நாடு முழுவதிலுமுள்ள 15 பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பிட்டளவானோரே உள்வாங்கப்படுகின்றனர். இதில் மலையக பெருந்தோட்ட மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சிதறுண்டு கல்விகற்று வருகின்றனர். அவர்களின் குடும்ப பொருளாதார நிலைமைகளை மீறிய வகையில் அவர்களின் பல்கலைக்கழக கல்வி அமைந்திருக்கின்றது.
2016 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தேர்வான 62.17 வீதமானோரில் 18.7 வீதமானோரே பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்பட்டனர். இவ்வாறு போட்டிமிகுந்த ஒரு சூழலில் பல்கலைக்கழக வாய்ப்பை பெறும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்தே தமது பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதில் மலையகத்தைச் சேர்ந்த பல்கலை. மாணவர்களின் நிலைமை மோசமானதாக அமைந்திருக்கிறது. தற்போது சைட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தினால் உரிய காலத்தில் பல்கலை. கல்வியை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழலில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலை.யின் நிர்வாக கட்டிடமான செனற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதால் அங்கு கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு கல்வி பயிலும் மலையகத்தைச் சேர்ந்த 217 மாணவர்களின் கல்வி நிலையும் பாதிப்பினை எதிர்நோக்கியிருப்பதாக குறித்த மாணவர்கள் வருத்தம் தெரிவித்திருப்பதையும் அறியமுடிகின்றது. இதன்போது பல்கலை. ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பல்கலை. ஊழியர் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதனால் பல்கலை. கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டு, பல்கலை. காலவரையறையின்றி மூடுவிழா கண்டுள்ளது.
மலையிலும் வெயிலிலும் காடு, மலையேறி அட்டைக்கடிகளுக்கு ஆட்பட்டு தம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சிறந்த கல்வியினை வழங்குவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் மன உளைச்சலுக்குள்ளாவதோடு அவர்களின் தொழில் பெறும் கனவும் இழுபட்டு செல்கின்றது. சி.சி.ரி.வி. கமராவை அகற்ற வேண்டும், விடுதி வசதி வழங்கப்பட வேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்தம்ச கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக நியதிப்படி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படாது. அவர்கள் வெளியில் தங்கியிருந்தே வகுப்புகளுக்கு வருகைதர வேண்டும்.
ஆனால் தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலை.யிலேயே சகல மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தென்கிழக்கு பல்கலை.யில் மாணவர்கள் தமது கல்வியினை உரிய வேளையில் நிறைவு செய்து வெளியேறுவதால் சகலரும் விடுதி வசதியினை பெறமுடிகின்றது. ஆனால் கிழக்கு பல்கலை.யில் இறுதியாக கலைப் பிரிவுக்கு 1,200 மாணவர்கள் வரையில் உள்வாங்கப்பட்டமையினால் ஏற்பட்ட இடநெருக்கடியின் காரணமாக இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு வெளியேறிய இரண்டாம், மூன்றாம் வருட தமிழ் மாணவர்கள் வெளியிலிருந்தே வகுப்புகளுக்கு வருகை தருகின்றனர். கிழக்கு அதிகம் தமிழர்களை உள்ளடக்கிய பகுதியென்பதால் சிங்கள மாணவர்களுக்கு அறைகளை வாடகைக்கு விட பலர் தயக்கம் காட்டி வருவதால் அவர்களுக்கு தங்குமிட வசதியை பெறுவதில் சிக்கல் தோன்றியிருக்கிறது.
இதில் வர்த்தகம் மற்றும் மருத்துவப் பிரிவு மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தீர்க்கப்படாத இவ்விவகாரத்தால் சகலருக்குமான கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை விடவும் பரீட்சை பெறுபேறுகள், மகாபொல புலமைப்பரிசில் என்பன உரிய வேளைகளில் கிடைக்காமை, உரிய வேளையில் மாணவர்கள் கல்வியை நிறைவு செய்யாமை என பல பிரச்சினைகளுக்கும் மாணவர்கள் முகம் கொடுத்துள்ளமையால் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பட்டப்படிப்பு கல்வியாண்டு 3 (எஞுணஞுணூச்டூ) அல்லது 4 (குணீஞுஞிடிச்டூ) வருடங்களுக்குள் முடிவுற வேண்டும். ஆனால் கிழக்கில் 5 -6 வருடங்களை கடக்க வேண்டியுள்ளது.
தற்போது தோட்டப்புறங்களைச் சேர்ந்த 217 மாணவர்கள் கிழக்கு பல்கலை.யில் கல்வி பயின்று வருகின்றனர். இதில் கலைப் பிரிவில் 150 பேரும் விஞ்ஞான பீடத்தில் 12 பேரும் வர்த்தக பீடத்தில் 45 பேரும் விவசாய பீடத்தில் 10 பேரும் உள்ளடங்குவர். இவர்கள் மாத்தறை, இரத்தினபுரி, மாத்தளை, நுவரெலியா, மொனராகலை, பதுளை, கண்டி, களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சுமார் 400 கி.மீ. பஸ் பயணத்தை கடந்து பட்டப்படிப்புக்காகச் செல்லும் இவர்கள் முறையான உணவு, விடுதி வசதியில்லாமலும் தொடர்ந்தும் நீண்டகால விடுமுறையாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த 217 மாணவர்களும் 2014/ 2015 முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் 2016.01.25 ஆம் திகதி முதல் இன்றுவரை பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு குடும்பப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் பல்கலை.க்கு காலடியெடுத்து வைத்த இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. 2017.03.06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது முதலாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை 2017.05.27 ஆம் திகதிவரை சுமார் இரண்டரை மாதங்களாக காலத் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஏனைய பல்கலைக்கழகங்களில் முறையான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று குறித்த காலத்திற்குள் மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். யாழ். மற்றும் தென்கிழக்கு பல்கலை.யில் இரண்டு பிரதான பாடங்களுடன் ஏனைய பாடங்களின் பருவகால அளவு 2-3 மாதங்களைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.
ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு பருவ காலம் 8-9 மாதங்களாகவும் ஒரு பருவ பரீட்சைக் காலம் 3 மாத காலமாகவும் நடைபெறுகின்றது. பருவ பரீட்சை பெறுபேற்றினை 6 மாதங்கள் கடந்த பின்பே வெளியிடுவதோடு ஒரு பருவத்தில் பிரதான பாடங்கள் 3 உட்பட ஏனைய இணைப்பாடங்கள் 6, 7 சேர்க்கப்பட்டுள்ளன. விரிவுரைக் காலங்கள் நீடிப்பு, முறையற்ற மதிப்பீட்டுத் திட்டங்கள், ஒரு வருடத்திற்கான மதிப்பீட்டுப் புள்ளிகள் (எகஅ புள்ளிகள்) தராமை, விரிவுரைகளை நடத்துவதற்கு போதுமான விரிவுரையாளர்கள் இல்லாமையென பல்வேறு அசௌகரியங்களுக்கு மாணவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலும் விடுதி வசதி பிரச்சினைகள், விரிவுரை மண்டபங்களின் குறைபாடு, இனவாத ரீதியான பிரச்சினைகள், மாணவர்களின் கல்வியாண்டில் தாமதம் என்பனவும் நீண்டு செல்கின்றன. பாரிய வசதிகளைக் கொண்ட பல்கலைக்கழகங்களே ஒரு கல்வியாண்டிற்கு ஒரு குறித்த பாடப் பிரிவில் 1,000 மாணவர்களை உள்ளீர்க்காத நிலையில் கிழக்கு பல்கலை.யில் கலைத்துறைக்கு மாத்திரம் 1250 பேரை உள்ளீர்த்தமையே பல்வேறு பிரச்சினைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கின்றது. இவ்வாறான நெருக்குதல்கள் காரணமாக, மிகவும் பின்தங்கிய தோட்டப்புறங்களிலிருந்து கடின முயற்சியின் பலனாக பல்கலைக்கழக அனுமதி பெற்று கல்வி கற்கும் 217 மாணவர்களின் நிலை தொடர்பில் பொறுப்பு வாய்ந்த தலைமைகள் அவதானம் செலுத்த வேண்டிய தேவையிருக்கிறது.
தற்போது 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டமானது, தீர்வு காணப்படாத நிலை காணப்படுவதால் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாக மேலும் ஒருமாத காலம் ஆகலாமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மாணவர்களின் கற்கைக் காலம் நீண்டு செல்லும் நிலை தோன்றியுள்ளது. தற்போது கிழக்கு பல்கலை.யில், மாணவர்களின் பொது கற்கைநெறி காலம் 3 வருடமாக இருந்தாலும் இங்கு 4-5 வருடங்களாகவும் சிறப்பு கற்கைநெறி 4 வருடமாக இருந்தாலும் இங்கு 5 -6 வருடங்களாகவும் நகர்த்திச் செல்லப்படுகிறது. இது மாணவர்களின் தொழில் வாய்ப்பை பறிக்கும் நிகழ்வாகவே கருதப்படுகிறது.
ஆனால் சில மாணவர்களுக்கு நியாயமான காரணங்களுக்காகவே வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் வெளியில் தங்கியிருந்தே வகுப்புகளுக்கு வருகை தரவேண்டுமெனவும் இதற்கான செலவுகளை பல்கலைக்கழகம் பொறுப்பேற்குமெனவும் பல்கலை. நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் ஐந்தம்சக் கோரிக்கை நியாயமானதெனவும் இவற்றுக்காகவே போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் கிழக்கு பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீண்டு செல்வதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களின் பெற்றோரும் கவலையடைந்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மலையகத்துக்கான, குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான தனியானதொரு பல்கலைக்கழகத்தின் அவசியம் உணரப்படுகின்றது. தேர்தல் காலங்களில் மாத்திரம் இவ்விடயம் தொடர்பாக மலையகத் தலைவர்களால் பேசப்பட்டாலும் பின்னர் கிடப்பில் போடப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷவால் இவ்விடயத்துக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டாலும் அவர் தேர்தலில் தோற்றதால் அவ்விடயம் முற்றாகவே முடங்கிப் போயிருக்கிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கிவரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, தமது பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்கி பார்க்க வேண்டுமென்ற கனவு நனவாகுவதில் பல சிக்கல்கள் நீடிக்கவே செய்கின்றன.
பட்டப்படிப்புக்காக நெடுந்தூரம் பயணம் செய்யும் இவ்வாறான மலையக மாணவர்களின் அவல நிலையினைப் போக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உயர் கல்வியமைச்சும் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்தோடு மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் தொடர்பான விடயத்தை தூசுதட்டி வெளி அரங்குக்கு கொண்டுவர கல்வியியலாளர்களும் சமூக நலன்விரும்பிகளும் அரசியல் தலைமைகளும் முன்வர வேண்டும். இவ்விடயம் சாத்தியமானால் மலையகத்தில் பல நூறு பட்டதாரிகள் சிரமமின்றி உருவாக வழிபிறக்கும்.
..........................................................................
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் தொடர்பில் நானே ஆரம்பத்தில் குரல் கொடுத்தேன். வருடத்துக்கு 500 பட்டதாரிகளை உருவாக்க வேண்டுமென்பதே எனது எண்ணமாகவிருந்தது. இன்று மலையகத்துக்கு தனிப் பல்கலைக்கழகம் அவசியத் தேவையாகும். அன்று தான் தனி மனிதராகவும் அமைப்பு சாரா அமைச்சராகவும் செயற்பட்டமையால் என்னால் இவ்விடயத்தை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. பல தடைகள், அழுத்தங்கள் காணப்பட்டன. ஒரு தோட்டத்துக்கு ஒரு பட்டதாரி என்பதே என் சிந்தனையாகவும் இருந்தது. அவ்வாறிருந்தால் அச்சமூகமே மாற்றமடையும். இன்று அரசியலில் ஒரு போட்டி நிலைமை காணப்படுவதால் தனிப் பல்கலைக்கழக விடயத்தில் இழுபறி நீடிக்கிறது. இதுவொரு அரசியல் விடயமல்ல. சமூகத்துக்கான மாற்றமாகவும் வெற்றியாகவும் எண்ணி சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இன்றும் தனிப் பல்கலைக்கழகமென்பது சாத்தியமான விடயமாக இருக்கின்றது. செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.
அருள்சாமி
முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர்
மத்திய மாகாணம்.
- ...........................................................................................
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகமென்பது எல்லோராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. தற்போதும் கூட மலையக மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பு 5 வீதமாக இருந்தும் கூட 0.5 வீதமானோரே பல்கலைக்கழகம் செல்கின்றனர். மலையகத்தில் தனிப் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தேவையான மாணவர் தொகை, விரிவுரையாளர்கள் போதியளவு இல்லை கட்டிடத்தை வேண்டுமானால் அமைத்துக் கொள்ள முடியும். ஆதலால் புதிதாக பல்கலைக்கழக வளாகத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்கு ஜப்பான் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் அவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வவுனியா, ஒலுவில் என்பன முதலில் இவ்வாறே ஆரம்பிக்கப்பட்டன. தற்போதைய திட்டத்தில் மாதிரிப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வளாகம் என்பன அமைக்கப்படும். கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் போராட்டத்தால் சகல மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு தனியானதொரு அழுத்தத்தை எம்மால் பிரயோகிக்க முடியாது.
வீ. இராதாகிருஷ்ணன்
கல்வி இராஜாங்க அமைச்சர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக