க.பிரசன்னா
இலங்கையில் இம்மாதம் முதலாம் திகதி முதல் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பெறுமதிசேர் வரி (வற்) 15 வீதமாக உயர்த்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. இதில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபான வகைகளுக்குமான விலைகளும் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. புகையிலைப் பொருட்கள் மீதான அதிகரிப்பானது மக்கள் அதன் பாவனையை குறைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே கையாளப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்திருந்தார். 2020 ஆம் ஆண்டை புகையிலை அற்ற நாடாக பிரகடனப்படுத்துவதும் இவருடைய நோக்கமாக அமைந்திருக்கிறது. இதன்படி சிகரெட் ஒன்றிற்கான விலை 8 ரூபாவாலும் பிரிஸ்டல் 5 ரூபாவாலும் தன்ஹில் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக சிகரெட் 50 ரூபாவாகவும் தன்ஹில் 55 ரூபாவாகவும் பிரிஸ்டல் 35 ரூபாவாகவும் விலை உயர்வு கண்டுள்ளது.
அரசாங்கத்தின் நோக்கம் புகையிலைப் பொருட்கள் மீதான விலை அதிகரிப்பால் வருமானத்தை உயர்த்துவதாக இருக்கின்றதே தவிர, அவற்றை தடுப்பதற்கான காரணியாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவேளை புகையிலைப் பொருட்கள் மீதான மக்கள் பாவனை சடுதியாக குறைவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் மறுபுறம் கிராமங்கள் தோறும் கஞ்சாப் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. எனவே புகையிலை மீதான வரி அதிகரிப்பை விடவும் கஞ்சாப் பாவனையை ஒழிப்பது அரசாங்கத்தின் தலையாய கடமைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலை இன்னும் மோசமாகிச் செல்லும் பட்சத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் புகையிலை அற்ற நாடாக மாறுவதை விடவும் கஞ்சா அற்ற நாடாக மாறுவது மிக முக்கியமானதாகிவிடும். இன்றைய இளம் சமூகத்தினர் சிகரெட் பாவனையை கணிசமானளவு நிறுத்தி விட்டார்களெனினும் புகைப்பதை நிறுத்தவில்லை. மாறாக கஞ்சாவை அவர்கள் அதிகமாக புகைக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் சமூக சீரழிவுகள் எல்லைத் தாண்டி பயணிக்கும் நிலை தோன்றியுள்ளது.
பெரும்பாலான புகையிலைப் பொருட்களை பாவனையாளர்கள் ஒரு நாளாவது அவற்றை பாவிக்காது தம்மை கட்டுப்படுத்திக் கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் கஞ்சா பாவனையாளர்கள் அவ்வாறு செயற்பட முடியாமலிருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் எதைச் செய்யவும் துணிந்தவர்களாகவே இருக்கின்றனர். இதனால் புகையிலைப் பாவனை சரியான தீர்வு என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஏதாவதொரு வழியை முழுமையாக அடைக்காத பட்சத்தில் மற்றொரு வழி திறக்கப்படுவது உறுதியாகிவிடுகிறது. அதுபோலவே புகையிலைப் பாவனை மீதான கட்டுப்பாடுகளும் வரி அதிகரிப்புகளும் கஞ்சாப் பாவனை வளர்வதற்கு வழிவகுத்துவிட்டன. எனவே இவற்றை முற்றிலும் தடை செய்வது மாத்திரமே சமூகத்துக்கு சிறந்த தீர்வாக அமையும். புகையிலைப் பொருட்களை விடவும் கஞ்சா மக்கள் மத்தியில் அதிகம் பாவனைக்கு வருவதற்கு அவை இலகுவாக தங்கு தடையின்றி கிடைக்கின்றமையும் முக்கிய காரணமாகும்.
பாதுகாப்பற்ற கிராமப்புறங்களை விட அதிகம் பாதுகாப்பினைக் கொண்ட நகரங்களிலேயே இதன் சந்தை அதிகம் காணப்படுகின்றது. இவற்றில் கேஜி என்று அழைக்கப்படும் கேரளக் கஞ்சா தற்போது இலங்கையை அதிகம் ஆக்கிரமித்துள்ள போதைப்பொருளாக இருக்கின்றது. ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் முக்கியப் பொருளாக இந்த கேரளக் கஞ்சா காணப்படுவதுடன் இலங்கையே மிகப் பிரதான சந்தையாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இவற்றின் சந்தைப் பெறுமதி மிக அதிகம் என்பதுடன் நுகர்வோரின் தொகையும் அதிகமாகும். இதனாலேயே இதன் விற்பனை கிராமங்கள் தோறும் வளர்ச்சியடைய காரணமாக இருக்கின்றது.
இலங்கையிலும் சட்டவிரோதமாக கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கேரளக் கஞ்சாவுக்கான மவுசு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. நுகர்வோரிடையே கேரளக் கஞ்சாவுக்கான கிராக்கி அதிகரித்ததைத் தொடர்ந்து அதன் உற்பத்திகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கிந்திய மாநிலங்களான ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா எல்லைப் பகுதிகளிலேயே சட்டவிரோத கஞ்சா உற்பத்தியும் வர்த்தகமும் அதிகம் இடம்பெறுகின்றது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கஞ்சாவில் 80 வீதமானவை இவ்வலயங்களிலிருந்தே வருவதாக தி இந்து தெரிவிக்கின்றது. தொன்றுதொட்டு இப்பகுதியில் வசித்து வருபவர்களால் மிக நீண்டகாலமாக கஞ்சா பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
இவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு கொள்வனவு செய்யும் கடத்தல்காரர்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் (மாவோயிஸ்ட்) போன்றவர்களின் ஊக்கப்படுத்தல்களே காரணமாக அமைகின்றன. கடத்தல்காரர்களும் மாவோயிஸ்ட்களும் மிக குறைந்த விலையில் வறுமையான கஞ்சா பயிர்ச் செய்கையாளர்களிடமிருந்து இவற்றை பெற்றுக் கொள்கின்றனர். இது தரமற்ற நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலாபம் தரும் துறையாகவும் இருக்கின்றது. ஆனால் கடத்தல்காரர்களுக்கு இது சுலபமான வேலையல்ல. மிகவும் ஆபத்து மிகுந்தவை. சமீபகாலமாக இந்திய பொலிஸார் இவற்றை தீவிரமாக கண்காணித்து வருவதோடு பறிமுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையிலும் இவ்வாறான பறிமுதல்கள் மேற்கொள்ளப்பட்டும் கேரளக் கஞ்சாவின் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
2012, 2013 ஆம் ஆண்டுப் பகுதிகளில் இவ்வாறு 56 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் 4.7 மெற்றிக் தொன் கஞ்சா ஆந்திர பிரதேசம், ஒடிசா எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2014 ஏப்ரல், அக்டோபர் காலப்பகுதிகளில் 10.5 மெற்றிக் தொன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 117 பேர் கைது செய்யப்பட்டனர். தென்னிந்தியா சகல நாடுகளுக்கும் கஞ்சா வழங்கும் மார்க்கமாக இருக்கிறது. இவற்றில் இலங்கையும் உள்ளடங்கும். கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கஞ்சா விற்பனையானது அதிகளவில் இடம்பெறுகின்றது.
கஞ்சா விற்பனையாளர்களால் நேரடியாக பொருட்களைக் கொடுத்து விற்பனை செய்யப்படுவதில்லை. முதலில் தொலைபேசியில் அழைத்து பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் கஞ்சாவை பெற்றுக் கொள்ளும் இடம் தெரியப்படுத்தப்படும். இவை மின்விளக்கு கம்பங்களின் அருகாமை, குப்பை மேடுகளின் அருகாமை, கோயிலுக்கு அருகாமை, வீட்டு நுழைவாயிலுக்கு அருகாமையில் பெற்றுக் கொள்ள முடியுமென கஞ்சா விற்பனையாளர் ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார். இலங்கையில் அதிகமான பெண்கள் இவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் கேரளக் கஞ்சாவின் 100 கிராமுக்கான சந்தைப் பெறுமதி 12 ஆயிரம் ரூபாவாகும். ஒரு கிலோ 90 ஆயிரம் அல்லது ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. எனவே இவ்வளவு பெறுமதி வாய்ந்த கேரளக் கஞ்சாவை சாமானியர்களும் வாங்கி பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.
எனவே புகையிலைப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பானது அவர்களை எந்த வகையிலும் பாதிக்காதளவிலேயே இருக்கிறது. புகையிலையற்ற நாடாக இலங்கையை இலகுவாக பிரகடனப்படுத்த முடிந்தாலும் கஞ்சா அற்ற நாடாக மாற்றுவது இலகுவான விடயமல்ல. இலங்கையில் சமீப காலங்களாக ஹெரோயின் வர்த்தகம் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு ஓரளவு தடுக்கப்பட்டிருந்தாலும் கூட கஞ்சா உற்பத்தியினையும் விற்பனையினையும் தடுப்பதில் அதிகம் சிக்கல் தோன்றியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
வட ஆந்திரா மற்றும் கேரளாவிலிருந்தே இலங்கைக்கு மீன்பிடிப் படகுகள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக மாநில உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது. இலங்கைக் கடற்படையானது கடந்த வருடம் 140 கடத்தல் காரர்களை கைது செய்திருந்தது. அவர்களில் 20 இந்தியர்களும் உள்ளடங்குவர். கடத்தல்காரர்கள் கஞ்சாவை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இலங்கையை மையமாக பயன்படுத்துவதாகவும் பெரும்பாலான மீன்பிடிப் படகுகள் கேரளா மற்றும் தமிழகத்திலுள்ள வெவ்வேறு கடற்கரையிலிருந்து வருவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவிலுள்ள இளைஞர்கள் அதிகளவில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயங்களை இலங்கை உள்துறை அலுவலகமும் உறுதி செய்திருக்கின்றது. இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மத்தியில் இருப்பது சர்வதேச வர்த்தகத்திற்கு மாத்திரமல்ல சட்டவிரோத வர்த்தகத்திற்கும் சார்பானதாகவே இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிறைவடைந்த யுத்தத்துக்குப் பின்பே சட்டவிரோத போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கேரளக் கஞ்சா மாத்திரமல்லாது ஹெரோயின் விற்பனையும் சடுதியாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவிலிருந்து வரும் போதைப்பொருட்கள் ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளுக்கு விஸ்தரிக்கும் இடமாக இலங்கை இருக்கிறது. கடல் வழி மார்க்கமே இதற்கு பிரதானமாக இருக்கிறது.
தென்னிந்தியாவிலிருந்து (இந்திய ஹெரோயின்), பாகிஸ்தானிலிருந்து (ஆப்கான் ஹெரோயின்) படகு மூலமாக ஹெரோயின் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது. இலங்கையின் சட்டவிரோத போதைப்பொருள் நுகர்வில் கஞ்சா மற்றும் ஹெரோயின் முக்கிய பங்கை வகிக்கின்றன. 2014 இல் இலங்கையில் 500 ஹெக்டேயர் சட்டவிரோத கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 19,644 கிலோ கஞ்சா இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் வேளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 76 வீதம் குறைவாகும். எனவே இலங்கையில் வரி அதிகரிப்பின் மூலம் ஏற்பட்டுள்ள புகையிலை மற்றும் மதுபான வகைகளுக்கான விலையதிகரிப்பு சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை அதிகரிக்கவே செய்துள்ளது. இவற்றை முற்றாக தடுப்பதற்கு புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்களை இலங்கை முற்றாக தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுகின்ற பட்சத்தில் இலங்கையில் போதைப்பொருட்களிலும் அதனால் ஏற்படுகின்ற குற்றச் செயல்களிலும் அதிகரிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக