க. பிரசன்னா
உலகளவில் சமூக வலைதளங்களின் பங்கு அளப்பரியதாகமாறி விட்டது. செய்திகளை வழங்கவும், விளம்பரத்துக்காகவும் பயன்படுவது போல தற்போது பிறரை மிரட்டுவதற்காகவும் மோசடிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. சமூக வலைதளங்களில் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வதை பலரும் அந்தஸ்தாக கருதுவதால் வயது கட்டுப்பாடுகளை மீறுவதற்காக சிலர் போலி கணக்குகளையும் ஆரம்பித்து சமூக ஊடகங்களை தம்வசப்படுத்த முனைகின்றனர். அதேபோல சமூக ஊடகங்களின் தோற்றம் ஆரம்பம் முதல் இன்றுவரை விமர்சனம் செய்யப்படுவதற்கு அவற்றின் அங்கத்தவர்கள் மேற்கெ õள்கின்ற ஆரோக்கியமற்ற செயற்பாடுகளே முக்கிய காரணமாக அமைகின்றன. ஒருவரின் அந்தரங்க விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு சமூக வலைதளங்கள் மிகப் பங்காற்றுவதாலேயே ஒரு சில நாடுகளில் அவை தடை செய்யப்பட்டவையாக இருக்கின்றன.
சமீப காலமாக சமூக வலைதள மோசடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இலங்கைப் பெண்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சைபர் குற்றம் தொடர்பில் மாதாந்தம் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் இதில் அநேகமாக பாதிப்புக்குள்ளாவது பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினையாக தற்போது மலர்ந்திருக்கிறது. இவற்றை எவ்வாறு தடுப்பது ? இலங்கையில் இவ்வாறான குற்றங்களை விசாரிப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவு இருக்கின்ற போதும், இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க முடியாமலிருப்பதை என்னவென்று சொல்வது. இலங்கையில் சமூக வலைதள பாவனையாளர்களிடையே உத்தியோக பூர்வமான அங்கத்துவ கணக்குகள் இருப்பதைப் போன்று போலி கணக்குகளும் இருக்கின்றன. அவற்றை எவ்வாறு தடுப்பு என்பதிலேயே அதிக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதுபோலவே அக்கணக்கு போலியானதா என்பதை அதிகமானோர் ஆராயாமல் நண்பர்களாகி விடுவதும் தகவல்களை பரிமாறிக் கொள்வதும் மோசடிகளுக்கு அதிகம் வழிவகுத்து விடுகின்றன.
எனவே, சமூக வலைதள அங்கத்துவத்தில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியாக நோக்கும் போது ஆண்களுடைய அந்தரங்க விடயங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏற்படுத்துகின்ற இழிவு, பிரச்சினைகளை விட பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், தலைகுனிவு பல மடங்குகள் அதிகமாகும். இதனால் அவருடைய வாழ்க்கையே சீரழிந்து போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. சிலவேளைகளில் தற்கொலைக்கும் தூண்டுகின்றன. இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள், தங்களின் நண்பர்களின் தூண்டுதலாலேயே சமூக வலைதளங்களில் அங்கத்துவம் பெற்றுக் கொள்கின்றனர். நண்பர்களுடைய உதவியால் கணக்குகளை உருவாக்கி கொள்கின்ற பலருக்கு அவற்றை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்ற அடிப்படை தெரியாமை பாரிய குறைபாடாக இருக்கிறது. இவ்வாறான நிலையால் அவர்களால் தெரிந்தும், தெரியாமலும் மோசடிகளுக்கான அத்திபாரங்கள் உருவாக்கப்படுகின்றன.
இன்று நண்பர்கள் கூட சமூக வலைதளங்களில் எமக்கிருக்கின்ற அங்கத்துவத்தை மனதில் இருத்தியே பழகுகின்றனர். பெரும்பாலானோர் சமூக வலைத்தளத்தில் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவே ஸ்மார்ட் போன்களை கொள்வனவு செய்கின்றனர். அந்தளவுக்கு சமூக வலைதளங்கள் அவர்களுடைய மிகப் பெரிய ஈர்ப்பாக மாறியமையால் அதன்பால் மோசடிகளும் அதிகரித்துச் செல்ல காரணமாகியிருக்கிறது. 2009 ஆம் ஆண்டை விட தற்போது இணைய இணைப்பானது இரட்டிப்பு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கடந்த 6 வருடங்களில் இதன் வளர்ச்சி 96.5 வீதமாக இருப்பதாகவும் தொலை தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 21 மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கையில் 5 தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குநர்கள் இருக்கின்றனர்.
2015 இன் இறுதியில் இலங்கையில் 100 பேருக்கு 113 தொலைபேசிகளும் 13 நிலையான இணைப்புகளும் இருப்பதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறு உள்ளூர் இணைய பாய்ச்சல் மற்றும் முன்னேற்றங்களுக்கு சமூக வலைதளங்கள் முக்கிய காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முகப் புத்தகம் மற்றும் யூடியூப் என்பன இரண்டாம் மற்றும் நான்காம் வர்த்தக பலன் பெறுநராக இருக்கின்றன. இன்றைய சூழலில் இலங்கையில் 3 -3.5 மில்லியன் முகப்புத்தக கணக்கு உரிமையாளர்கள் இருக்கின்றனர். இது இந் நாட்டுச் சனத் தொகையில் கிட்டத்தட்ட 16 வீதமாகும். இவ்வாறு சமூக வலைதளங்களின் கட்டுப்பாடற்ற பரவலாக்கமே மோசடிகளுக்கான வழிகளையும் திறந்து விட்டுள்ளன.
முகநூல் மற்றும் இணையத்தளங்களின் ஆழம் அறியாமல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதன் விளைவாகவே அநேகமான பெண்கள் பாதிப்புகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக குற்றப்பு லனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளில் பாரதூரமானவை உடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற போதும் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் இணையத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக குறிப்பிட்ட செக்கன்களுக்குள் அவை பல்வேறு தரப்பினரிடையே பகிரப்படுவதன் காரணமாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களுக்கு தெரியாமலேயே பதிவு செய்வதற்கான தொழில் நுட்பங்கள் அதிகமிருக்கின்றன.
எனவே, நாங்கள் செல்கின்ற இடங்கள், தங்குகின்ற இடங்கள் பாதுகாப்பானவையா ? அத்தோடு பழகுகின்ற நபர்கள் நம்பிக்கைக்குரியவர்களா என்பதை ஆராய்ந்தே தகவல்களை பரிமாற வேண்டும். குறிப்பாக அந்தரங்க விடயங்களை வெளியாரிடம் பகிர்வதை நிறுத்த வேண்டும். சிலவேளைகளில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படுகின்ற புகைப்படங்களை தரவிறக்கம் செய்து ‘ மார்பிங்’ செய்து வெளியிடும் மோசடிகளும் இடம்பெறுகின்றன. நடிகைகளின் படங்கள் இவ்வாறு மார்பிங் செய்யப்பட்டு அடிக்கடி வெளியிடப்படுவது நாம் அறிந்ததே. எனவே, சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெண்கள் இவை தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். அத்தோடு எதிரிகள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
கொழும்பில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு இதுவரை கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் பாரதூரமானவை முறையான விசாரணைகளுக்குப் பின்னர் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றாலும் இந்நடைமுறைகளுக்கு குறிப்பிட்ட காலம் அவசியமாகவிருக்கின்றது. இந்தக் காலப் பகுதிகளுக்குள் சந்தேக நபர்களுடைய திட்டங்கள் நிறைவேறி விடுவதாகவும் இவ்விடயம் தொடர்பில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகுமெனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்கள் தொடர்பாகவோ அல்லது அவர்களுடைய அந்தரங்க விடயங்கள் தொடர்பாகவோ செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகின்ற போது, அவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்கள் அவற்றை பகிராமல் இருப்பது நல்லது.
அவ்வாறு பகிரப்பட்டுள்ள விடயங்களுடன் தொடர்புடையவரை உங்களுக்கு தெரிந்திருந்தால் அவை தொடர்பில் உடனடியாக அறிவிக்கலாம். இவற்றை சகல பாவனையாளர்களும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவரும் பெண்களில் 25 வயது தொடக்கம் 40 வயதுக்குட்பட்டோரே அதிகமாகும். இவற்றை தவிர பாடசாலை மாணவிகளும் சைபர் குற்றம் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளை பொறுத்தவரை பொழுது போக்கு அல்லது காதல் காரணமாகவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இன்று பாடசாலை மாணவ, மாணவிகளிடம் கைபேசி பாவனையானது அதிகமிருக்கின்றது. இது பெற்றோருக்கும் நன்கு தெரியும். சமூக வலைதளங்களை கைபேசிகளிலேயே இயக்கக் கூடிய வசதியும் இருக்கிறது. பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதை உறுதிப்படுத்தும் பெற்றோர்கள். பிள்ளைகள் என்ன கற்கிறார்கள், எவற்றில் அதிகம் நாட்டம் செலுத்துகிறார்கள் என்பதை கவனிப்பதில்லை. தொழில் நுட்ப பாவனை பெற்றோர் பலருக்கு தெரியாமையும் ஒரு காரணமாகும். எனவே, இவை தொடர்பாக பெற்றோரும் பாடசாலை நிர்வாகத்தினரும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதேவேளை , ஏனைய பெண்களைப் பொறுத்தவரை திருமணமாகாதவர்கள், திருமணமாகியும் தனிமையில் இருப்போர் அல்லது விவாகரத்து ஆனோரே முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் முன்பின் தெரியாதவர்களுடன் தங்களது புகைப்படத்தை பரிமாறி உரையாடலை தொடர்வதன் மூலம் நாளடைவில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பிரச்சினைகளை சந்திக்கும் பெண்களின் புகைப்படங்களை விசாரணை செய்யும் அதிகாரிகளே பார்ப்பதற்கு கூச்சப்படுமளவுக்கு மோசமான தொடர்புகளை பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம் பேணுகின்றனர். எனவே அறிமுகமில்லாத நபருடன் புகைப்படங்களையோ, தகவல்களையோ பரிமாறிக் கொள்வதை நிறுத்த வேண்டும். முகப் புத்தகத்தில் நட்புக்கான அழைப்பினை விடுக்கும் சகலரும் உண்மையான நண்பர்களாக, உறவுகளாக இருக்க முடியாது. போலி கணக்குகளை போல போலி உறவுகளும் அதிகமிருக்கின்றன.
இவ்வாறான மோசடிகளில் திருமணமான பெண்கள் சிக்குவார்களாயின் அது அவருடைய கணவருடனான பிரச்சினையாக மாறிவிடும். திருமணமாகாத பெண் பாதிக்கப்படுமாயின் அது அவருடைய எதிர்கால திருமணத்தையே பாதித்து விடும். விவகாரத்தான பெண் பாதிக்கப்படுமாயின் இன்னொரு சிறப்பான வாழ்க்கை அமைவதை தடுத்து விடும். அதேபோல பாடசாலை மாணவிகள் இவ்வாறு மோசடிகளில் சிக்கி பாதிக்கப்படுவார்களாயின் அது அவர்களுடைய எதிர்கால கல்வி வாழ்க்கையையே சீர்குலைத்து விடும். எனவே, இவ்வாறான சமூக வலை தள மோசடிகளை கருத்தில் கொண்டு அவதானமுடன் செயற்பட வேண்டும். எந்தவொரு சமூக ஊடகத்திலும் நாம் புதியதொரு கணக்கை உருவாக்குவதற்கு அதிகமான நடைமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதேபோலவே அவற்றை பின்பற்றாது செயற்படவும் வழியிருக்கிறது. அவ்வாறு பின்பற்றாது செயற்படுபவர்கள் போலி கணக்குகளை உருவாக்குகிறார்கள். எனவே, பாதுகாப்பான ஒரு கணக்கை சமூக வலைதளங்களில் உருவாக்க அவை தொடர்பான முழுமையான விடயங்களை தெரிந்திருத்தல் அவசியம். யாருடைய தூண்டுதலின் பேரிலும் கணக்குகளை ஆரம்பிப்பதையும் முகம் தெரியாத ஒருவருடன் தகவல்களை பரிமாறுவதையோ முற்றாக தவிர்க்க வேண்டும். குடும்ப சூழலில் இன்றும் பெண்களுக்கான உரிமைகள் பெருவாரியாக கிடைக்கப் பெறாத நிலையில் இவ்வாறு மோசடிகளில் சிக்குவார்களாயின் அது அவர்களுடைய எதிர்காலத்தை இன்னும் மோசமாக்கும்.
எனவே, சமூக ஊடகங்களின் நம்பகத் தன்மையை பரிசீலிக்கும் வகையிலான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் உள்வாங்க வேண்டும். சமூக வலைதள பயனர்கள், சமூக ஊடக ஆர்வலர்கள் இவற்றுக்கான சிறந்த தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதோடு, பெண்கள் சமூக வலைதளங்களை பாவிக்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக