க.பிரசன்னா
கழிவுகளை அகற்றுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பன உலகுக்கு சவாலான விடயமாகவே இருக்கின்றன. பூமியின் நிலப்பகுதியிலிருந்து அண்டம் வரைக்கும் குப்பைகள் சூழ்ந்திருக்கின்றன. இலங்கையில் மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிந்து ஏற்படுத்திய அழிவினைப் போல் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் கழிவுகளால் நிறைந்த சுற்றுச்சூழலினால் அதிகம் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றான். இவ்வாறானதொரு நிலையில் ஆசிய நாடுகளில் இலத்திரனியல் கழிவுகளின் பெருக்கம் மோசமான வகையில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
உலகில் மிக அதிகமான சனத்தொகையைக் கொண்ட ஆசிய கண்டத்தில் இலத்திரனியல் பொருட்களின் நுகர்வு அதிகரித்திருக்கிறது. ஸ்மார்ட்போன்கள், கணினிகள் , டிவிக்கள், குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்கள் இவ்வாறு அதிகமாக கொள்வனவு செய்யப்படுவதால் மனித சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் பிரச்சினைக்கும் அவை வழிவகுக்கின்றன. நம்பமுடியாத வகையில் கடந்த 5 வருடங்களில் ஆசிய நாடுகளில் இலத்திரனியல் கழிவுகளின் பெருக்கம் 63 வீதத்தால் அதிகரித்திருப்பதாக ஐ.நா. தரவுகள் தெரிவிக்கின்றன. மிக நீண்டகாலமாகவே ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவில் உலகளவிலிருந்து பெறப்படுகின்ற இலத்திரனியல் கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதுவே பிற்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.
இலத்திரனியல் அல்லது இலத்திரனியல் உபகரணங்களை ஒதுக்குவதே இலத்திரனியல் கழிவுகளாக கொள்ளப்படுகின்றன. இவ்வாறான இலத்திரனியல் உபகரணங்கள் மீள் பாவனை, மீள் விற்பனை, நீர் மற்றும் நெருப்பில் கலக்காமல் தடுத்தல், மீள் சுழற்சி அல்லது இல்லாது செய்தல் என்பனவற்றை கருத்தில் கொண்டே பாவனைக்கு விடப்படுகின்றன. ஆனால் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற முறையற்ற நடவடிக்கைகளின் காரணமாக இலத்திரனியல் கழிவுகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் சுற்றுச்சூழல் மாசடைவை ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன. இலத்திரனியல் துணுக்குகளில் கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய லித்தியம், காட்மியம், பெர்லியம் அல்லது புரோமினேட் சுடர் என்பவை அடங்கியுள்ளன.
இவ்வாறு மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய இலத்திரனியல் கழிவுகளுடனேயே நாம் அன்றாட வாழ்க்கையை வாழ வலிந்து தள்ளப்பட்டுள்ளோம். தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியும் அதன் மீது மனிதன் கொண்டுள்ள நாட்டமுமே இலத்திரனியல் பாவனை வெகுவாக அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. இதற்கு மனிதர்களை குறைகூற முடியாது என்றாலும் அவர்கள் இலத்திரனியல் உபகரணங்களை பாவிக்கும் முறையும் கழிவுகளாக வெளியேற்றும் முறையுமே அதிகம் பாதிப்பினை உடையதாக இருக்கின்றது.
பெரும்பாலான உபகரணங்கள் மனித பாவனைக்கு உட்படுத்தப்பட்டு கழிவுகளாக வகைப்படுத்தப்பட்ட பின்னரும் இன்னும் பெரும்பாலான கழிவுகள் வீடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தேக்கி வைத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. கடையில் ஒரு இனிப்பை வாங்கி உண்டுவிட்டு அதன் கடதாசியை எவ்வளவு இலகுவாக வீதியில் வீசியெறிகிறோமோ அதுபோலவே இலத்திரனியல் கழிவுகளையும் வீசும் நிலையே இன்றும் காணப்படுகின்றது. அதேபோலவே அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்தல் அல்லது இல்லாது செய்தல் என்பவற்றில் தொடர்புபட்டுள்ள தொழிலாளர்கள் அல்லது சமூகம் குறிப்பிடத்தக்க உடல் ரீதியான ஆபத்துகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
மீள்சுழற்சியின் போது தேவையான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க தவறுவதுடன் இவற்றின் குப்பைகளிலிருந்தும் எரியூட்டலினாலும் மூலப்பொருட்கள் மற்றும் கடின உலோகக் கழிவுகள் என்பன ஏற்படுவதற்கு வாய்ப்பாகின்றன. மேலும் வறுமையை பயன்படுத்தி மேலைத்தேய செல்வந்த நாடுகள் தங்கள் நாட்டு கழிவுகளை இவ்வாறு அபிவிருத்தியடைந்துவரும் அல்லது வறுமையான நாடுகளுக்கு தள்ளிவிடுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளை விடவும் ஹெய்டி வறுமையான மற்றும் நியூயோர்க் துறைமுகத்துக்கு அருகிலும் இருக்கும் ஒரு நாடாகும். ஆனால் பெரும்பாலான இலத்திரனியல் கழிவுகள் நியூயோர்க்கிலிருந்து ஹெய்டியை விட ஆசியாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், மீள்பாவனை, புதுப்பித்தல், திருத்துதல் மற்றும் மீள் உற்பத்தி என்பவற்றில் தொழிலாளர்களாக கடமை புரிகின்றனர். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சரிவே ஏற்படாத துறையாகவே இத்துறை இருக்கின்றது. இவ்வாறு கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதை மூன்றாமுலக நாடுகளால் தடுக்க முடியாமலேயே இருக்கின்றது. அவ்வாறு தடுத்தால் தொழில் இழப்பு ஏற்படுமென்பதோடு இலத்திரனியல் உபகரணங்களுக்கான தட்டுப்பாடும் ஏற்படுமென்பது கட்டாயப்படுத்தி கழிவுகளை திணிப்பதற்கு மேலைத்தேய நாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இவ்வாறு இந்தியா, கானா, ஐவரிகோஸ்ட் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளுக்கு அதிகமான இலத்திரனியல் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அண்ணளவாக வருடமொன்றுக்கு 40 மில்லியன் தொன்கள் இலத்திரனியல் கழிவுகள் உலகளவில் பெறப்படுகின்றன. எனவே உலகம் குப்பைகளால் சூழ்ந்து போவதை தடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இலத்திரனியல் கழிவுகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றை மீள் சுழற்சி செய்வதே ஒரே தீர்வாக இருக்கின்றது. ஆனால் இலத்திரனியல் கழிவுகளில் பெறப்படுகின்ற அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் போர்ட்டுகளை மீள் சுழற்சி செய்வதே மிகப்பாரிய சவாலான விடயமாக இருக்கின்றது.
இந்த சர்க்யூட் பலகையானது விலைமதிப்பற்ற தங்கம், சில்வர், பிளட்டினம் போன்ற உலோகங்களைக் கொண்டிருக்கின்றது. மற்றும் அடிப்படை உலோகங்களான கொப்பர், இரும்பு, அலுமினியம் என்பவற்றையும் கொண்டுள்ளது. முறையான வகையில் இலத்திரனியலை மீள் பாவனை செய்வதன் மூலம் உடலுக்கு தீங்கு ஏற்படாமலும் பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றம் ஏற்படாமலும் தடுக்க முடியும். 2010 - 2015 வரையான காலப்பகுதியில் 12 நாடுகளில் (கம்போடியா, சீனா, ஹொங்கொங், இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா, தாய்வான், தாய்லாந்து, வியட்நாம்) 13 மில்லியன் தொன்கள் இலத்திரனியல் குப்பைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சீனா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்றன மீள்சுழற்சிக்காக அதிக முதலீடுகளை மேற்கொள்வதுடன் முதன்மை மீள் சுழற்சி சந்தையையும் கொண்டுள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறு மீள் சுழற்சிக்கான முதலீடு மிகக் குறைவு என்பதுடன் கழிவு முகாமைத்துவமும் அரசியலாகவும் ஊழல் நிறைந்த துறையாகவுமே இருக்கின்றன. மேல் மாகாணம் மற்றும் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் குப்பைகளை தரம் பிரித்து அகற்றுவது தொடர்பிலான செயற்றிட்டம் ஜனாதிபதி மாளிகையில் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒருசில அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கழிவுகள் பிளாஸ்டிக், கண்ணாடிகள், கடதாசி என மூன்று வகையான நிற குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டாலும் கூட குப்பைகளை அகற்றும் ஊழியர்கள் அவற்றை ஒரே வாகனங்களில் கலந்து ஏற்றிச் செல்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். எனவே அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியடைந்ததாகவே இருக்கின்றது.
எனவே குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் வகையிலும் அப்புறப்படுத்தவும் நடவடிக்கையெடுக்க வேண்டும். இலங்கையில் இயற்கையைவிட செயற்கையான குப்பை மலைகள் மக்களுக்கு மிகவும் பாதுகாப்பில்லாதவையாக காணப்படுகின்றன. இவற்றுக்கு கழிவு முகாமைத்துவம் முறையாக செய்யப்படாமை பிரதான காரணம். அவ்வாறானவற்றில் இந்த இலத்திரனியல் கழிவுகளை அப்புறப்படுத்தல் மற்றும் மீள்சுழற்சி செய்தல் என்பன அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவை முறையாக மேற்கொள்ளப்படாதவிடத்து தைரோய்ட், நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள், எதிர்மறையான குழந்தை பிறப்பு, குழந்தை பருவ வளர்ச்சி மாற்றம், மனத்தாக்கம், அறிவாற்றல் குறைபாடு என்பன ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தோற்றுவிக்கப்படுகின்ற இலத்திரனியல் கழிவுகளில் அதிகமானவை வாடிக்கையாளர்களால் அதிகம் நுகரப்படுகின்ற தொலைபேசிகள், டெப்லட், குளிர்சாதனப்பெட்டி, மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் என்பனவாகவே காணப்படுகின்றன. எனவே இவற்றின் நீண்டகால பாவனையை உறுதிப்படுத்தினாலே அதிகமான கழிவுகளை தவிர்த்துவிடலாம். மேலும் இவற்றை முறையற்ற விதத்தில் அப்புறப்படுத்துவதால் நிலம், நீர், வளி போன்ற மனிதனின் அத்தியாவசிய வளங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தற்போது 12.5 வீதமான இலத்திரனியல் கழிவுகளே மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக 1 மில்லியன் கைத்தொலைபேசியிலிருந்து 35,274 பவுண்ட்ஸ் கொப்பர், 772 பவுண்ட்ஸ் சில்வர், 75 பவுண்ட்ஸ் தங்கம் மற்றும் 33 பவுண்ட்ஸ் பல்லடியம் என்பவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இதனால் மீள் சுழற்சி மூலம் அதிகமான வருமானத்தை பெறமுடியும். இவற்றைவிடுத்து இலத்திரனியல்களை குப்பைகளில் வீசுவதால் டொக்ஸிக் உலோகங்கள் நிலத்தடி நீரில் கலக்கின்றன. இவை வெப்பமடைவதால் டொக்ஸிக் இரசாயனங்கள் வளியில் கலந்து வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன. எனவே இலத்திரனியல் கழிவுகளை தரம்பிரித்து மீள் சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். அவற்றை குப்பைகளில் கலப்பதை தவிர்க்க வேண்டும். மீள் சுழற்சிக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் பாதிப்புகளை சற்றேனும் குறைத்துக் கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக