கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

பெருந்தோட்ட தொழிலாளர்கள் சுயமாக தீர்வுகளை நாடும் போதே முன்னேற்றத்தை உணரலாம்
சனா
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கடந்த ஒருவருட காலத்துக்கும் மேலான தொழில் பிணக்காக நீடித்துவரும் கூட்டொப்பந்தம் இம் மாதமளவில் கைச்சாத்திடப்படும் சாத்தியம் இருப்பதாக மலையகத் தலைமைகள் கூறிவருகின்றனர். இதனையே 2015 முதல் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்போடு செயற்பட்ட சகல மலையக ஆட்சியாளர்களும் 1,000 ரூபாவை மலையகத் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி வாக்குகளை கவர செயற்பட்டு தேர்தலையும் ஒரு சிலர் வெற்றிக் கொண்டுவிட்டனர். ஆனால் கொடுத்த வாக்குப்படி 1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க சகலரும் தடுமாறி தற்போது அவை சாத்தியமில்லையென உணரத் தொடங்கியிருக்கின்றனர்.
இதன் விளைவே கிடைத்ததைக் கொண்டு ஒப்பந்தத்தை கையெழுத்திட சகலரும் முன்வந்திருப்பதாக தெரிகிறது. ஆனாலும் 1,000 ரூபாவுக்கும் குறைவான ஒரு தொகையே கூட்டொப்பந்தம் மூலம் தொழிலாளர்களின் வேதனமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிந்தாலும் அத்தொகையும் இன்னும் இழுபறியிலேயே இருக்கின்றது. அல்லது இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது. இவ்வாறு 17 மாதங்களாக கடத்தப்பட்டு வந்த சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக அறியமுடிகிறது.
சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே- இணக்கப்பாடு எட்டப்பட்டால், அன்றைய தினமே கூட்டொப்பந்தம் கைச்சாத்தாகுமெனவும் முன்னணி கூட்டொப்பந்த பங்குதாரரான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தெரிவித்திருந்தார். கூட்டொப்பந்தம் கடந்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி முடிவடைந்து 17 மாதங்கள் கடந்துள்ள போதும் பேச்சுவார்த்தை இழுபறி என்று கூறியே நாட்கள் கடத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை கூட்டொப்பந்தத்துக்கான இறுதிநாளாக கணிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொழிலாளர்களுக்கு 620 ரூபா சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இதில் நாளாந்த ஊதியமாக 450 ரூபாவும் வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 140 ரூபாவும் விலையில் தங்கியிருக்கும் குறைநிரப்பு 30 ரூபாவாகவும் சேர்த்து மொத்தமாக 650 ரூபா வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த 2015 ஏப்ரலுக்கு பிற்பாடான காலப்பகுதியில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் தேர்தல் வாக்குறுதியான 1,000 ரூபா என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.எனினும் அது சாத்தியப்படாமல் போகவே முதலாளிமார் சம்மேளனத்தினால் 100 ரூபா சம்பள அதிகரிப்புடன் 720 ரூபா வழங்க பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இதில் நாளாந்த ஊதியமாக 550 ரூபாவும் வருகை ஊக்குவிப்பாக 190 ரூபாவும் விலையில் தங்கியிருக்கும் குறைநிரப்பு 30 ரூபாவுமாக 720 ரூபா வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத தொழிற்சங்கங்கள் 1,000 ரூபா சம்பள உயர்வையே தூக்கிப் பிடித்து வந்தன. ஆனால் அவை தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் சாத்தியமில்லாது போகவே இடைக்கால கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்கும் திட்டம் அரசாங்கத்தின் உதவியோடு தற்போது அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியோடு அங்கம் வகிக்கின்ற த.மு. கூட்டணியால் நிறைவேற்றப்பட்டு தொழிலாளர்களின் வேலை நாட்களுக்கேற்ப ஒருநாள் சம்பளத்தில் 100 ரூபா அதிகரிப்பு கடந்த இருமாதகாலமாக வழங்கப்பட்டு தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை இக்கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறியவர்கள் தற்போது மௌனம் சாதித்துவரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென எதிர்வு கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டாலும் தொழிலாளர்களுக்கு கடந்த 17 மாத காலமாக வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைகள் வழங்கப்படுமா? அதேபோல் ஊ.சே.நி., ஊ.ந.நி என்பன செலுத்தப்படுமா? என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது. அரசால் பரிந்துரைக்கப்பட்ட 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவும் அரச வங்கிகளில் கடனடிப்படையிலேயே பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால கொடுப்பனவுகள் மீண்டும் அறவிடப்படுமா? போன்ற கேள்விகளுக்கு பதிலில்லாமலே இருக்கின்றன. ஆனால் தொழிலாளர்களுக்கு நிலுவைகள் வழங்கப்படாது என்பது போலவே செய்திகள் தெரிவிக்கப்பட்டாலும் அவ்வாறானதொரு நடைமுறையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடப்போகும் கூட்டொப்பந்தத்தில் கையொப்பமிடும் இரு தொழிற்சங்க பொதுச் செயலாளர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாவர். எனவே இவர்கள் தொழிலாளர்களின் நலன் கருதி செயற்பட வேண்டுமேயொழிய தொழிற்சங்க போட்டியோடு செயற்படக்கூடாது.
தற்போது மலையகத்தில் தொழிற்சங்கங்களுக்கிடையிலான போட்டி நிலையே 1,000 ரூபா சம்பள உயர்வு என்று சாத்தியமற்ற தீர்வு முன்வைக்கப்பட்டு கடந்த 17 மாதகாலமாக தொழிலாளர்களின் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இழுபறி நிலையிலிருந்தது. தொழிலாளர்களை வைத்து அரசியல் செய்யும் இவர்களை தட்டிக் கேட்பதற்கு எவருக்கும் துணிவில்லையென்பதாலேயே பெருந்தோட்ட மக்களின் குறைகள் இதுவரையும் முழுமையாக களையப்படாமைக்கு பிரதான காரணமாகும். 2015 மார்ச் 31 ஆம் திகதி நிறைவடைந்த கூட்டொப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்டிருந்தால் இன்னும் 5 மாதங்களில் 2017 மார்ச் 31 ஆம் திகதி அடுத்த ஒப்பந்தத்துக்கு தொழிற்சங்கங்கள் தயாராகியிருக்க வேண்டும். ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தமே முழுமையாக அமுலுக்குவராத நிலையில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தம் சாத்தியமா?
இதன்மூலம் தொழிலாளர்கள் வெளிப்படையாகவே தொழிற்சங்கங்களால் ஏமாற்றப்படப் போகின்றார்கள். இதனை எவரால் நியாயபூர்வமாக அணுகமுடியும்? பொதுவாகவே கூட்டொப்பந்தம் என்பது தொழிலாளர்களின் வேதனத்துக்காக மட்டுமே என வரையறுக்கப்பட்டுவிட்டது. இதனால் தோட்ட நிர்வாகங்களிடமிருந்து முறையாக கிடைக்கப்பெற வேண்டிய எந்தவொரு சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. வெறுமனே நிச்சயமற்ற, பொருளாதாரத்துக்கு சாத்தியமற்ற சம்பள உயர்வுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏனைய சகல தேவைகளுக்கும் அரசாங்கத்தினை நம்பியே வாழவேண்டிய சூழல் காலங்காலமாக இவர்களுக்கிருக்கிறது. குறைந்தபட்சம் அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்றுவதற்கு தோட்ட நிர்வாகங்கள் இணங்க வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் ஆராய வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க அரசியலை நம்பி வாழ பழகி விட்டதால் அவர்களால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுயமாக இயங்க முடியாத நிலை இருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால அரசியல் தலைமைகள் என்று கூறிக் கொள்பவர்களும் சரி, தற்போது புதிதாய் அப்பட்டியலில் இணைந்துள்ளவர்களும் சரி, எந்த சந்தர்ப்பத்திலும் முழுமையான தீர்வுகளை மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததுமில்லை. இனி கொடுக்கப் போவதுமில்லை. எனவே மலையக மக்கள் சுயமாக தீர்வுகளை நாடும் போதே அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை உணரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக