கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

விபத்துகளுக்கு காரணம் என்ன?
க.பிரசன்னா
அதிக தண்டப்பணம், கண்காணிப்பு, கடுமையான சட்ட அமுலாக்கம் என்பன இருந்தும் கூட வீதி ஒழுங்குவிதிகளை மீறி விபத்துகள் ஏற்படுகின்றன. வருடாவருடம் இவ்வாறான விபத்துகளால் ஏற்படுகின்ற இழப்புகளும் அதிகமாக இருக்கின்றன. கடந்த வருடம் வீதி விபத்துகளின் மூலம் இறந்தோரின் தொகை 3003 ஆக இருக்கின்றது. இது 2015 இல் 2816 ஆகவும் 2014 இல் 2440 ஆகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கடந்த தசாப்தங்களில் வாகனமயமாக்கலில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. இது பாதைகளில் ஒழுங்கற்ற முறைகளில் பயணிப்பதையும் மோசமான பாதசாரிகளின் நடத்தைகளையும் துரிதப்படுத்தியிருக்கிறது. இதனால் ஏற்படும் இழப்புகளில் நம் வாழ்நாளையே தொலைக்க வேண்டியிருக்கிறது.
வீதி விபத்துகளின் மூலம் பலர் இறக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர். மற்றும் சிலர் நிரந்தர அங்கவீனர்களாக மாறுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் வீதி வலைப்பின்னலை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வீதி அதிகார சபைகள், திட்டமிடலாளர்கள், பொறியியலாளர்கள் வீதிகளில் ஏற்படுகின்ற விபத்துகளை குறைப்பதற்கு மீள் வடிமைப்பு மற்றும் மீள் உருவாக்கத்தை வீதி அமைப்பில் கொண்டுவர வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. அத்தோடு பாரம்பரிய வீதிப் பாதுகாப்பு கொள்கையில் இருந்து விடுபடுதல், புதுமையான கொள்கைகளை பின்பற்றுதல் என்பனவற்றின் மூலம் இறப்புக்களை 50 வீதத்தாலும் வைத்தியசாலை அனுமதியை 40 வீதத்தாலும் குறைத்துக் கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசும் வீதி அதிகார சபையும் வீதிகளில் அபாயகரமான சம்பவங்கள் இடம்பெறாத வகையிலான புதிய கொள்கைகளை உருவாக்கி பாதுகாப்பான வீதிப் போக்குவரத்து அமைப்புகளில் அமுல்படுத்த வேண்டும்.
வருமானத்தையும் வாய்ப்புகளையும் அதிகரித்துக் கொள்வதற்கு வியாபாரம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு வாகன உரிமம் பெறப்படுகின்றது. இதனால் வாகனங்களின் தொகை சடுதியாக அதிகரித்திருக்கிறது. போட்டி நிலைமைகளால் வீதிகளில் ஆபத்துகளும் காத்திருக்கின்றன. மற்றுமொரு காரணியான வீதி ஒழுக்குங்கள் மற்றும் வீதி ஒழுங்குகளுக்கு மதிப்பளித்தல் என்பன வெளிப்படையாகவே மீறப்படுகின்றன. இவ்வாறான இடர்பாடுகளை தவிர்ப்பதற்கு தேசிய மற்றும் பிராந்தியங்கள் ரீதியாக கொள்கைகளில் திருத்தங்களை ஏற்படுத்தி உயர் தொழில்நுட்பத்திலான போக்குவரத்து முகாமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். புள்ளிவிபரங்களின் படி பெருந்தொகையான இலங்கையர்கள் பெரும்பாலான நேரத்தை வீதிகளிலேயே கழிக்கின்றனர். அதிக எரிபொருளை செலவழிக்கின்றனர். இவற்றுக்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். இவ்வாறான வாகன அதிகரிப்புகளே வீதி விபத்துகளுக்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆரய்வதுடன் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
உலகில் வீதி விபத்துகள்
உலகில் 15-23 வயது வரையான இளைஞர்களின் இறப்புகளில் பெரும்பாலானவை வீதி விபத்துகளுடன் தொடர்பானவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் அண்ணளவாக 1.25 மில்லியன் மக்கள் வீதி விபத்துகளால் இறக்கின்றனர். 20 - 60 மில்லியன் மக்கள் காயமடைகின்றனர். உலக வீதி போக்குவரத்து இறப்புகளில் 48 வீதமானவை 15 - 44 வயதுக்கிடைப்பட்டோருடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. அத்தோடு பெண்களை விட ஆண்களே இவ்வாறு விபத்துகளில் அதிகம் இறக்கின்றனர். 25 வயதுக்குட்பட்ட இளம் வயது பெண்களை விட 3 மடங்கு அதிகமாக இளம் வயது ஆண்கள் கார் விபத்தில் மரணிக்கின்றனர். உலகளாவிய கணிப்பின் படி வீதி விபத்துகளுடன் தொடர்புடைய உயிரிழப்புகளில் 90 வீதமானவை குறைந்த மற்றும் மத்தியதர வருமானத்தைப் பெறும் நாடுகளிலேயே இடம்பெறுகின்றன. இவ்வாறு இறப்பவர்களில் அரைவாசிப்பேர் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களாகவே இருக்கின்றனர்.
எனவே இவற்றுக்கு நிரந்தர தீர்வு முன்வைக்கப்படவில்லையாயின் 2030 இல் வீதி விபத்துகள் இறப்புக்கு 7 ஆவது முன்னணி காரணமாக அமைந்துவிடும். வாகன சாரதிகள், பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடித்தாலே பாரிய விபத்துகளை தவிர்க்க முடியும். பின்வரும் வகையான வீதிப் பாவனையாளர்கள் அதிகம் உயிரிழப்புகளை சந்திப்பவர்களாக இருக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள்
வீதி விபத்துகளில் அதிகமாக உயிரிழப்பவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களாகவும் பின்னால் அமர்ந்து செல்பவர்களாகவுமே இருக்கின்றனர். ஆசிய பசுபிக் பிராந்தியங்களில் இவை அதிக நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. கடந்த வருடம் 1157 மோட்டார் வாகன ஓட்டுனர்கள் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இது நாட்டின் வீதி விபத்துகளில் அண்ணளவாக 38 வீதமாகும். கடந்த தசாப்தங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களே அதிகமாக இறப்புகளை சந்தித்திருக்கின்றனர். இலங்கையில் அதிகமாக பதிவு செய்யப்படும் வாகனமாக மோட்டார் சைக்கிளே (3699630) இருக்கின்றது.
மோட்டார் வாகனத்தைச் சுற்றி எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. இதனாலேயே விபத்தின் போது மிகக் கடுமையாக உடலும் தலையும் பாதிக்கப்படுகின்றன. மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இரவு மற்றும் பகல் வேளைகளிலும் விளக்குகளை ஒளிரவிடுதல், அடையாளங் காணக்கூடிய ஜக்கெட்டுகளை அணிதல் என்பன பாதுகாப்பை அதிகப்படுத்தலாம். தலைக்கவசங்களை முறையாக அணியாமையினால் 40 வீதமான இறப்புகள் ஏற்படுவதுடன் 70 வீதத்துக்கும் அதிகமானோர் காயங்களை சந்திக்கின்றனர். தரமான தலைக் கவசங்களை அணிபவர்களின் தொகை அதிகரிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றுகளையுடையவையும் தலைக்கு அதிகம் பாதுகாப்பையும் வழங்கக்கூடியதுமான தலைக் கவசங்களை பாவித்தல் முக்கியமாகும்.
அடுத்து இவ்வாறு வீதி விபத்துகளில் பாதிக்கப்படக்கூடியவர்களாக பாதசாரிகள் இருக்கின்றனர். கடந்த வருடம் இவ்வாறு 877 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு 803 பேரும் 2014 இல் 728 பேரும் இவ்வாறு உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர். 1950 - 2005 வரையான காலப்பகுதியில் வீதி இறப்புகளில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக பாதசாரிகளே இருந்துள்ளனர். பாதசாரிகள் முறையாக வீதி ஒழுங்குகளை கடைப்பிடிக்காமையும் வாகன சாரதிகளின் கவனயீனமும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அடுத்து மோசமாக பாதிக்கப்படக்கூடிய வகையினரில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் இருக்கின்றனர். கடந்த வருடம் 405 பேர் இதனால் உயிரிழந்திருக்கின்றனர். இதேபோல 2015 இல் 378 சம்பவங்களில் 328 உயிரிழப்புகளும் 2014 இல் 274 உயிரிழப்புகளும் முச்சக்கர வண்டி விபத்தினால் ஏற்பட்டிருந்தன. இலங்கையில் மோட்டார் வாகன பிரிவில் முச்சக்கர வண்டிகள் (1115987) மிக அதிகமாக காணப்படுகின்றன. முச்சக்கர வண்டி நிறுத்துமிடங்களில் மாத்திரம் பயணிகளை ஏற்றுதல், ஓட்டுனர்களுக்கான தனியான சீருடை போன்ற பாரிய மாற்றங்களை தாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் மேல் மாகாணம்
அதிகம் வீதி விபத்துகளை எதிர்நோக்குவதாக மேல் மாகாணம் இருக்கிறது. இவ்வாறு கடந்த வருடம் 804 பேர் உயிரிழந்துள்ளனர். வீதிப் பயணங்களின் போது அதிகம் விபத்தால் பாதிக்கப்படக்கூடிய மாகாணமாகவும் இருக்கிறது. அதிகமான சனத்தொகை கொண்ட வலயமாக இம்மாகாணம் இருப்பதோடு வர்த்தக நடவடிக்கைகளும் அதிகமாக காணப்படுகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெளி மாகாணங்களிலிருந்து வருகை தருகின்றன. ஏ தர வீதிகள் காணப்படுவதால் இப்பிராந்தியம் அதிகமான பயணிகள் மற்றும் வணிக போக்குவரத்துகளை முன்னெடுக்கிறது.
நுகேகொடை பொலிஸ் பிரிவிலேயே கடந்த வருடம் வீதி விபத்துகளினால் அதிகமாக 146 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கம்பஹா பிரிவில் 139 மற்றும் களனிப் பிரிவில் 137 இறப்புகளும் பதிவாகியுள்ளன. வடமேல் மாகாணத்திலுள்ள பொலிஸ் பிரிவுகளான குருநாகல், குளியாபிட்டிய, நிக்கவரட்டிய, புத்தளம் மற்றும் சிலாபத்தில் 448 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. ஏனைய பிராந்தியங்களை விட இப்பிராந்தியத்தில் அதிக வணிக போக்குவரத்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பன காணப்படுகின்றன. வேறு மாகாணங்களுக்கு செல்வதற்கான பிரதான பாதைகள் இங்கு காணப்படுவதால் வீதிகள் மீது பொலிஸாரும் வீதி அதிகார சபையினரும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். வீதி விஸ்தரிப்பு, நவீனமயப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு தென் மாகாணத்தில் 421 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகமானவை ஏ2 தர வீதிகளிலேயே இடம்பெற்றுள்ளன. கணிசமானளவு மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், வணிக போக்குவரத்துகள் இடம்பெறுவதால் இழப்புகள் அதிகமேற்படுகின்றன. கதிர்காமம், யால பகுதிகளுக்கே அதிக போக்குவரத்துகள் இடம்பெறுகின்றன.
வார இறுதிநாட்களில் அதிக விபத்து
கடந்த சில வருடங்களாக அதிகமான இறப்புகள் வார இறுதியிலேயே பதிவாகியுள்ளன. உள்வீதிகளிலேயே அதிகமான போக்குவரத்துகள் இடம்பெறுகின்றன. வார இறுதி நாட்களில் விசேட நிகழ்வுகள், விழாக்கள், ஓய்வுப் பொழுதை கழித்தல், வியாபார வாய்ப்புகள், நகரமயமாக்கல் ஊக்குவிப்பு என்பன அதிகம் இடம்பெறுகின்றன. வெள்ளிக்கிழமைகளிலேயே அதிகமான விபத்துகளினால் 448 இறப்புகள் பதிவாகியுள்ளன. சனிக்கிழமை 425 உம் ஞாயிற்றுக்கிழமை 420 மாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு இழப்புகள் ஏனைய நாட்களைவிட வார இறுதி நாட்களிலேயே அதிகமாக பதியப்படுகின்றன.
வேகமாக வாகனத்தை செலுத்துதல், முந்திச் செல்தல், சாரதிக்கு அசதி ஏற்படல், மது அருந்தி வாகனம் செலுத்துதல், விதிகளை அப்பட்டமாக மீறுதல் என்பன இழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன.
ஆசன பட்டிகள் அணியாமை
வாகனத்தில் முன் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் ஆசனப் பட்டியை அணிவதால் 40 - 50 வீதமும் பின் இருக்கையில் இருக்கும் பயணிகள் ஆசனப் பட்டி அணிந்திருந்தால் 25 - 75 வீதமும் அபாயகரமான இழப்புகளை எதிர்நோக்குவதிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. ஆசனப் பட்டிகளை சரியான முறையில் பாவித்தல், குழந்தைகளுக்கும் பாவித்தால் 70 வீதமான இறப்புகளை குறைக்க முடிவதுடன் சிறுவர்களில் 54-80 வீதம் வரை இறப்புகளை தடுக்க முடியும். மேலும் தொலைபேசிகளை பாவித்தல், குறுஞ்செய்திகளை அனுப்புதல் என்பனவும் மோசமான இழப்புகளை ஏற்படுத்துவதற்கு தூண்டுகின்றன.
கட்டாக்காலி மாடுகள்
அடுத்ததாக வீதிகளில் திரிகின்ற கட்டாக்காலி மாடுகளும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன. கடந்த வருடம் ஏற்பட்ட 113 விபத்துகளில் 117 பேர் கட்டாக்காலி மாடுகளின் இடையூறால் ஏற்பட்ட விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர். 2015 இல் 136 விபத்துகளில் 132 உயிரிழப்பும் 2014 இல் 123 விபத்துகளில் 130 உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது கொழும்பு நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளை நகர சபை அகற்றி வருகின்றது. இவ்வாறு நாடு முழுவதிலுமுள்ள வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் பெருக்கமானது விபத்துகளை ஏற்படுத்தியே வருகின்றன.
இவ்வாறு வீதி விபத்துகள் ஏற்படுவதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. நாடு முழுவதிலும் தற்போது வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. எனவே சகல வீதிகளிலும் செல்கின்ற வகனங்களை பொலிஸாரால் எந்நேரமும் அவதானிக்க முடியாது. ஆதலால் உயர் தொழில்நுட்ப திட்ட முறைமையே பயன்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்படுகின்றது. ஒவ்வொரு பிராந்தியங்களிலும் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை கண்காணிக்க சிசிரிவி கமராக்களை பயன்படுத்த முடியும். தண்டப் பணத்தை அதிகரிப்பதால் மாத்திரம் வீதி ஒழுங்கை மீறல், விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இலங்கையில் கடந்த வருடம் முதல் தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டாலும் விபத்துகளின் தொகை தொடர்ந்து அதிகரித்தே செல்கின்றது. எனவே அதிகம் பயன்தரக்கூடியதும் இலகுவானதுமான திட்டங்கள் தொடர்பில் அரசும் பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக