க. பிரசன்னா
இன்றைய இளம் தலைமுறையினர் தொடக்கம் மூத்தோர் வரையிலும் சகலருக்குமே மிகவும் ஆபத்தான நோய்த் தொற்றாக “செல்பி இருக்கின்றது. இன்றைய சமூக வலைத்தளங்களை பெரும்பாலும் இந்த செல்பிக்களே ஆளுகின்றன. இதிலென்ன ஆச்சரியமான விடயமிருக்கிறதென்று சகலருமே யோசிக்கலாம். ஆனால் உலகில் மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளில் செல்பியும் இடம்பெற்றிருப்பதுதான் வருத்தத்திற்குரியது. பொழுதுபோக்கு அம்சங்களையெல்லாம் மனிதன் தனது மரணத்திற்கான வழியாக பயன்படுத்திக் கொள்வது தொழில்நுட்ப உலகில் இயல்பான விடயமாக மாறியிருக்கிறது. இவற்றில் வீடியோ கேம்கள், சமூக வலைத்தள பதிவேற்றங்கள் என்பவற்றோடு தற்போது செல்பிகளும் இணைந்துள்ளன.
மிக குறுகிய காலத்திலேயே சிறுவர்கள் முதல் பெரியோர் வரையும் சகலருமே இந்த செல்பி மேனியாவுக்கு அடிமையாகிவிட்டார்கள். இதனால் செல்பிக்களின் தொகை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆகவே, வித்தியாசமான முயற்சிகளில் செல்பிக்களை எடுக்க பலர் முனைந்து வருகின்றனர். செல்பி என்பது குழுவாகவோ அல்லது தனியாகவோ எடுத்துக்கொள்ளும் சுயபடமாகும். அந்த சுயப்படமே உங்களுக்கு இறுதிப் படமாக அமைவதென்றால் செல்பியை எப்படி ஆபத்தற்ற வழிமுறை என்று கூறமுடியும். சமூக வலைத்தள உலகிற்கு புதிய புதிய செல்பிகளை அறிமுகப்படுத்த சிலர் மிக ஆபத்தான வழிமுறைகளை கையாள்கின்றனர்.
மிக உயரமான கட்டிடங்கள், கோபுரங்களிலிருந்து செல்பி எடுத்தல், புகையிரத மிதிபலகையை பயன்படுத்தல், ஆபத்தான விலங்குகளுடன் செல்பி எடுத்தல், கடல் மற்றும் நதி, நீர்வீழ்ச்சிகள் போன்ற ஆபத்தான நீர்நிலைகளில் செல்பி எடுத்தல் என்பவற்றோடு துப்பாக்கி மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற பாவனையையும் சுயபடம் எடுக்கும் போது அவையும் தற்கொலையிலேயே முடிந்து விடுகின்றன. இது உலகளவில் செல்பி கலாசாரத்தின் மறுபக்கமாக இருக்கின்றது. இந்த ஆபத்தான கலாசாரத்தோடு அறைக்குள் நடக்கும் அந்தரங்க விடயம் தொடக்கம் உறவினர், நண்பர்களின் மரண வீடுகள் வரையும் இந்த செல்பி கலாசாரத்தால் ஏற்படும் இம்சைகளுக்கு அளவில்லை.
சமீபத்தில் இரண்டு இலங்கைப் பெண்கள் ஓமானில் நீரூற்றுப் பகுதியில் செல்பி எடுக்க முனைந்தபோது மோசமான விபத்தைச் சந்தித்து உயிரிழந்திருந்தனர். ஒரு பெண் நீரூற்றுக்கு அருகில் செல்பி எடுக்கும் போது தவறி ஆழமான நீரூற்றுப் பகுதியில் விழுந்த போது மற்றைய பெண் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற தனது கரங்களை நீட்டிய வேளை இருவரும் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோலவே இலங்கையில் அண்மையில் அம்பலாங்கொட ரயில் நிலையத்தில் சீன பெண்மணியின் கவனயீனத்தால் கொடூரமான விபத்து ஏற்பட்டிருந்தது. காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில், 25 வயதுடைய சீனப் பெண் புகையிரதத்தின் மிதிபலகையின் மூன்றாவது படியில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறார். அன்றைய நாள் புகையிரதத்தில் அதிக சனநெரிசலும் இருந்திருக்கவில்லை. புகையிரத மேடைக்கு 300 அடி தொலைவில் புகையிரதம் வந்து கொண்டிருந்த போது குறித்த பெண் மிதிபலகையில் அமர்ந்து தனது கைத்தொலைபேசியின் மூலம் செல்பி எடுத்தவேளை இதை அவதானித்த புகையிரத நிலையப் பொறுப்பாளர், அவருக்கு எச்சரிக்கை செய்திருந்தும் புகையிரதம் மேடையை நெருங்கியதால் அவருடைய கால் மேடையில் அடிபட்டு அவர் புகையிரதத்தின் அடிப்பகுதிக்குள்ளாக தண்டவாளத்தில் வீழ்ந்ததாகவும் புகையிரதம் சென்ற பின்பே அவருடைய உடலை பெறமுடிந்ததாகவும் அம்பலாங்கொட புகையிரத நிலையப் பொறுப்பாளர் சஞ்ஜீவ மனிக்கு புத்துகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கவனயீனம், அதீத ஆர்வம் என்பவற்றால் சில நொடிகளில் தமது வாழ்வையே இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகின்றது. சமூக வலைத்தளங்களின் மீதான ஆர்வக் கோளாறுகளால் எடுக்கின்ற செல்பிகளை உடனடியாக பதிவேற்றம் செய்வதற்கு அதிகமானோர் முக்கியத்துவம் வழங்கிவருகின்றனர். பெரும்பாலான இளம் வயதினருக்கு செல்பிகள் ஞாபகங்களை சேமிக்கும் ஒரு வழியாக இருக்கின்றது. அதே சமயத்தில் செல்பியால் விளைந்த அண்மைய மோசமான சம்பவங்களும் ஞாபகத்திலிருந்து அழிக்க முடியாதவைகளாகவே சகலருக்கும் இருக்க வேண்டும். இது உலகளாவிய ரீதியான பாதிப்பாக இருக்கின்றது. சமூக, கலாசாரங்களில் மோசமானதாகவும் அதிகம் ஆபத்து நிறைந்ததாகவும் செல்பிகள் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலான தொலைபேசி உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் இலாபத்துக்காக செல்பி கலாசாரத்தைப் பயன்படுத்தி நுகர்வோரிடம் சந்தைப்படுத்தல் யுக்தியை கையாண்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீட பேராசிரியர் தயா அமரசேகர ஆங்கில நாளிதழொன்றுக்குத் தெரிவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகமான கைத்தொலைபேசியில் அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். பின்னர் குறுந்தகவல், கமரா என விரிவாக்கம் பெற்றது. தற்போது செல்பிக்காகவே மெருகேற்றப்பட்ட கைபேசிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. இதுவும் நுகர்வோரை ஆபத்தான செல்பிகளை எடுப்பதற்கு தூண்டுவதாக இருக்கின்றது.
ஒரு வருடத்தில் ஒரு நபர் 54 மணித்தியாலங்களை செல்பி எடுப்பதற்காக செலவளிப்பதாகவும் 2014 ஆம் ஆண்டு கணிப்பின்படி, ஒரு நாளைக்கு 1 மில்லியன் செல்பிக்கள் எடுக்கப்படுவதாகவும் மற்றுமொரு கணிப்பில் 47 வீதமான செல்பிகள் குழந்தை பிறப்பின் போதும் 30 வீதமானவை பாலியல் உறவின் போதும் 20 வீதமானவை மரண நிகழ்விலும் எடுக்கப்படுவதாக கிரிபத்கொட தள வைத்தியசாலையின் மருத்துவ உளவியலாளர் டாக்டர் என். குமாரநாயக்கே தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் உலகளவில் 27 பேர் செல்பிகளால் உயிரிழந்துள்ளனர். இவற்றில் அதிகமானவை சுறா மீன்களால் ஏற்படுத்தப்பட்டவையாகும். 2014 ஆம் ஆண்டு செல்பிகளால் 33,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் இவை வாகனம் செலுத்தும் போது கைப்பேசியில் பேசுதல், செவிமடுத்தல் செல்பி எடுத்தல், பதிவேற்றல், தரவிறக்குதல், மெருகேற்றல் என்பவற்றால் ஏற்பட்டவையாகுமென அமெரிக்காவின் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு செல்பிகளால் ஏற்பட்ட 27 மரணங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை இந்தியாவிலேயே இடம்பெற்றிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலும் இல்லாதவகையில் இந்தியாவிலேயே செல்பிகளுடன் தொடர்புடைய அதிக மரணங்கள் ஏற்படுகின்றன. 2014 இல் 19 பேர் இந்தியாவில் செல்பி எடுக்கும் போது மரணித்துள்ளனர். இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 40 வீதமானவை செல்பிகளுடன் தொடர்புடையவையென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு செல்பி கலாசாரமானது பொதுமக்களிடையே பாவனையில் இருக்கின்ற கைத்தொலைபேசிகளாலும் சமூக வலைத் தளங்களாலும் தூண்டப்படுவதாக இருக்கின்றது. இந்த செல்பி கலாசாரத்தின் பயணமானது மரணங்களை ஏற்படுத்துகின்ற ஆபத்தான செயற்பாடாக மட்டுமல்லாது சமூக கலாசார சீரழிவுகளை ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன. பல நடிகைகளின் ஆபாச செல்பிகள் சமூக வலைத் தளங்களில் பதிவேற்றப்படுவதும் அவை திட்டமிட்ட செயற்பாடு என நடிகைகள் மறுப்பதும் வாடிக்கையான விடயமானாலும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு இவர்களே மேற்கொள்ளும் சதியென்ற கருத்தும் நிலவுகிறது. அதுபோலவே குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் மரணங்களின் போது இறந்த உடல்களுக்கு அருகிலிருந்து செல்பி எடுப்பது, விபத்து அல்லது அனர்த்தம் ஏற்பட்ட பகுதியிலிருந்து செல்பி எடுப்பது என்பன முறைகேடான கலாசாரமாக இருக்கின்றன.
இவ்வருடம் அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவின் போது அவற்றை பார்வையிடச் சென்றவர்கள் செல்பிகள் எடுத்து பகிர்ந்து கொண்டதையும் சுற்றுலா மையம் போல அப்பகுதி காட்சியளித்ததையும் நாம் அறிந்திருப்போம். இவ்வாறான விடயங்கள் சமூக வலைத்தள நண்பர்களிடம் ஒரு லைக்கை பெற்றுக் கொள்வதற்காக மனிதாபிமானத்தை விற்கும் செயலாகவே இருக்கிறது. இதற்காக எடுக்கப்படுகின்ற செல்பிகள் எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.
ஒருவர் குடும்பத்துடனோ அல்லது தனிப்பட்ட ரீதியாக தனது மகிழ்ச்சி அனுபவங்களை வெளிப்படுத்துவதில் தவறில்லை. இங்கு செல்பிகள் தவறிழைக்கவில்லை. அவை எந்த இடத்தில், எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதென்பதை வைத்தே செல்பிகளுக்கான தரம் நிர்ணயிக்கப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை செல்பிகளுடன் தொடர்புடைய 49 இற்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவர்களில் அண்ணளவாக 75 வீதமானோர் 21 வயதுடையவர்களாவர். இதில் மிகக் குறைந்த வயதாக 14 உம் அதிகூடிய வயதாக 31 உம் பதிவாகியுள்ளது. செல்பி மரணங்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாகவிருப்பது மிக உயரமான கோபுரம் அல்லது கட்டிடங்களிலிருந்து செல்பி எடுத்துக் கொள்வதாகும். இரண்டாவதாக நீச்சல் மற்றும் புகையிரத விபத்துகள் இருக்கின்றன. இவ்வாறு செல்பிகள் மிகவும் அழகானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கின்றன. ஸ்டூடியோ கமராக்களை விடவும் கைத்தொலைபேசிகள் அதிகம் படங்களை கிளிக் செய்வதாக இருக்கின்றன.
எனவே செல்பிகளால் மனித இனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய அவரவர் சுயமாகவே முயற்சிக்க வேண்டும். நீங்கள் செல்பி எடுக்கும் போது நிலையான பாதுகாப்பான தரை தளத்தையே பயன்படுத்தலாம். எந்தவொரு துப்பாக்கிகளுக்கு அருகிலிருந்தும் படம் எடுத்தலை தவிர்த்தல், ஆபத்தான மிருகங்கள், கனரக இயந்திரங்களை இயக்கும் போது செல்பிக்களை தவிர்த்தல், மின்சார கோபுரம் அல்லது புகையிரத உச்சிக்கு ஏறுவதை தவிர்த்தல் போன்ற வழிமுறைகளை செல்பி எடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் கடைபிடிப்பீர்களாயின் அழகான மற்றும் ஆபத்தில்லாத செல்பிகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆர்வக்கோளாறின் விளைவாக செல்பிகளுக்காக விலை மதிப்பற்ற உயிரை பணயம் வைப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக