கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

தற்கொலை என்பது தனி மனிதனின் முடிவா?
க.பிரசன்னா
தற்கொலை மனிதனின் சுயவிருப்பில் இடம்பெறும் மரணம் என பொதுவாக கருதப்பட்டாலும் அவற்றை பல்வேறு புறக் காரணிகளே தூண்டுவதாக இருக்கின்றன. எனவே தற்கொலையை தனி ஒரு மனிதனின் முடிவு எனக் கொள்ள முடியாது. அதனை பின்வரும் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.
சம்பவம் 1- பண்டாரவெல, பொரலந்த பொலிஸ் கல்லூரியில் கடமையிலீடுபட்டிருந்த அம்பாறை வீரகொட பிரதேசத்தைச் சேர்ந்த லக்மால் பிரியந்த என்பவரே தற்கொலை செய்து கொண்டவராவார். காதல் தொடர்பு காரணமாக ஏற்பட்ட மனவேதனையே அவரின் தற்கொலைக்கு காரணமென அவருடைய முகநூல் பதிவுகள் மூலம் அறிய முடிகின்றது. அத்துடன் இறுதியாக தன் தாயாருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளதுடன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் 2- மதவாச்சி-பிஹிவியகொலாவ பகுதியில் இளம் குடும்பஸ்தரான 23 வயதுடைய சிசிர குமார என்பவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி அருகிலுள்ள பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் 3- கிரிந்திவல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞரொருவர் கடுவலை பகுதியில் வீதியொன்றில் நின்று கொண்டிருந்த வேளை திடீரென பாரவூர்தியின் பின்சில்லில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவரென்பதுடன் தற்கொலை செய்வதற்கு முன் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் தாயிடமும் கூறியுள்ளார்.
சம்பவம் 4- அண்மையில் ஷார்ஜாவில் இலங்கை குடும்பமொன்று தற்கொலைக்கு முயற்சித்த வேளை மூவர் உயிரிழந்துள்ளனர். 19 வயதான மகன் வலிப்பு காரணமாக உயிரிழந்த துயரினாலேயே இவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். 5 பேரைக் கொண்ட இந்தக் குடும்பம் தற்கொலைக்கு முயற்சித்த போது அதில் இரண்டு சகோதரிகள் மாத்திரம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குடும்ப மற்றும் சொந்தப் பிரச்சினைகளே பலரின் தற்கொலைத் தூண்டுதல்களுக்கு காரணங்களாக இருக்கின்றன. சில மணி நேர விரக்தியின் விளைவால் இந்த அவசர முடிவு எடுக்கப்படுகிறது. தற்கொலையை தடுப்பதற்கு பல்வேறு ஆலோசனை நிலையங்கள் செயற்பட்டாலும் அவற்றை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளாமையே இவ்வாறான சம்பங்களுக்கு காரணமாக அமைகின்றன. மேற்கூறிய சம்பவங்கள் இம்மாதம் முதல் பகுதியில் மாத்திரம் ஏற்பட்டவையாகும். இவ்வாறு இலங்கையில் நாளுக்கு நாள் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றன. இலங்கையில் சராசரியாக 3 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்றவகையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்படுவதோடு இவற்றில் ஆண்களே முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடம் முதல் ஆறுமாத காலப்பகுதியில் 1275 ஆண்களும் 322 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இலங்கையில் 1995 ஆம் ஆண்டு தற்கொலைத் தொகை 8500 ஆக காணப்பட்டதாகவும் ஆனால் 2015,2016 காலப்பகுதியில் 3025 ஆக குறைந்துள்ளதாகவும் 1988 இல் பூச்சிக்கொல்லியை விழுங்குவதால் ஏற்படும் மரணம் 1524 ஆகவும் 2016 இல் 873 ஆகவும் காணப்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதே வேளை 2015 இல் 2389 ஆண்களும் 2016 இல் 2339 ஆண்களும் 668 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்துகொள்ளும் மனப்போக்கை மாற்றுவதற்கு இளைஞர்களை மையப்படுத்தி சுகாதார அமைச்சின் உளவள ஆற்றல் சேவைகளை நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்திய சாலைகளில் சுகாதார அமைச்சு நிறுவியுள்ளது. ’யொவுன்பியச’ என்ற பெயரில் தற்போது 25 ஆலோசனை நிலையங்கள் இவ்வாறு செயற்பட்டு வருகின்றன. இங்கு இளைஞர்களின் கவலைகளை எவ்வாறு கையாள்வது, திறன்களை புத்துணர்ச்சியுடன் கட்டியெழுப்ப வழிசெய்வதோடு, சரியாக சிந்திப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தற்கொலை செய்து கொள்வோரில் உயர்கல்வி கற்றவர் முதல் கல்வியறிவு இல்லாத சகலருமே உள்ளடங்குகின்றனர். இதில் ஆண், பெண் வித்தியாசமில்லை.
2016 இல் தற்கொலை செய்துகொண்ட 3025 பேரில் 100 பேர் பாடசாலைகளுக்கு செல்லாதவர்களாகவும். 641 பேர் தரம் 1-7 வரை கல்வி கற்றவர்களாகவும் 1065 பேர் தரம் 8 கல்வியையும் 728 பேர் சாதாரண தரத்தையும் 93 பேர் உயர்தரத்தையும் கற்றவர்களாவர். 13 பேர் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களும் 385 பேர் ஏனைய கல்வியினை பின்பற்றியவர்களாகவும் இருக்கின்றனர். அத்தோடு தற்கொலை செய்து கொண்டவர்களில் 2248 பேர் திருமணமானவர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஆண்கள் 1800 ஆகவும் பெண்கள் 448 ஆகவும் காணப்படுகின்றனர். எனவே குடும்ப ரீதியிலான மனக்கசப்புக்களும் அதிகம் தற்கொலைக்கு தூண்டும் காரணிகளாக இருக்கின்றன.
2015 இல் உலகளவில் 828,000 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 1990 இல் இத்தொகை 712,000 ஆக காணப்பட்டது. உலகில் மரணத்திற்கு காரணமான 10 முக்கிய காரணிகளில் தற்கொலையும் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 15-29 வயதுக்கிடைப்பட்டோரில் தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைந்திருப்பதோடு 78 வீதமான தற்கொலைகள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுவாக தீர்க்கப்படக்கூடிய சாதாரண காரணிகளே தற்கொலைக்குத் தூண்டுவதாக அமைகின்றன.
2016 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட தற்கொலைகளில் பின்வரும் காரணங்கள் பதிவாகியுள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகள், வறுமை, தொழில் பிரச்சினை, முதியோருடன் தொடர்புடையவை, குடும்ப வன்முறைகள், காதல் தொடர்புடையவை, பாலியல் வன்முறைகள், வன்புணர்வு, போதைப் பொருளுக்கு அடிமையாதல், பெற்றோர்-உறவினரை இழந்த சோகம், சொத்துக்களை இழத்தல், பரீட்சையில் சித்தியடையாமை, பிள்ளைகளால் கவனிக்கப்படாமை, உளப்பாதிப்பு, தீராத நோய்கள், உடலியல் பாதிப்புகள் மற்றும் ஏனைய பலகாரணங்களால் பலர் தற்கொலைச் செய்து கொண்டுள்ளமையை அறியமுடிகிறது.
இவற்றில் பெரும்பாலான காரணிகளை முறையான ஆலோசனைகளின் மூலம் வெற்றிகொள்ளக்கூடிய சூழல் இருந்தும் ஒரு சில மணிநேர விரக்தியே பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எனவே உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல்களை பாதிக்கப்பட்டோர் பெற்றுக்கொள்வது கட்டாயத் தேவையாகும். குடும்பப் பிரச்சினைகளே அதிகமான தற்கொலைகளுக்கு முதன்மை காரணியாக அமைந்திருக்கின்றன. உலகளவில் இடம்பெறுகின்ற தற்கொலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்களாகவே இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கையை பொறுத்தளவில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சின் ஆய்வுகளின் படி 2009 இல் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 124 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2010 இல் 137 பேரும், 2011 இல் 141 பேரும், 2012 இல் 153 பேரும், 2013 இல் 158 பேரும், 2015 ஆம் ஆண்டு 139 பேரும், 2017 ஆம் ஆண்டில் ஜுலை 31 ஆம் திகதி வரையில் 151 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் இவர்களில் பெண்களே அதிகமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் 40-55 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகமாகும். இதில் அதிகமானோர் தனியாக வாழமுடியாத சமூக பிரச்சினை காரணமாகவும் யுத்தத்தில் கணவர் மற்றும் உறவினர்களை இழந்தமையும் யுத்தத்தில் அனைத்தும் அழிந்து போனமை, எதிர்பார்ப்பு நிறைவேறாமை என்பனவே அதிக தற்கொலையில் தாக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 இல் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைகளில் அதிகம் தூக்கில் தொங்கியதால் ஏற்பட்டதாகும். மேலும் பூச்சிக் கொல்லியை அருந்துதல், நீரில் பாய்தல், வெடிபொருட் சாதனங்களை பயன்படுத்துதல், கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்துதல், தீக்குளித்தல், ரயில் மற்றும் வாகனங்கள் முன்பாய்தல், அசிட் குடித்தல், எரிபொருளை குடித்தல், இயற்கை நஞ்சுகளை உண்ணுதல், உயரமான இடத்திலிருந்து குதித்தல், மேற்கத்தைய மருந்துகளை பாவித்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளில் பலர் தற்கொலை செய்திருப்பதை அறிய முடிகின்றது. இவற்றை எவ்வாறு தடுப்பது என்பதே எம்முன்னுள்ள கேள்வி. எனவே பிரச்சினைகளை இழப்புக்களற்ற தீர்வாக மாற்றிக் கொள்ள சகலரும் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். உளவள ஆலோசனைகளை பெறுவதற்கு வைத்தியர்களின் உதவியை நாட வேண்டும். பிரச்சினைகளை வெளியே சொல்லாமல் வைத்திருப்பதால் மன அழுத்தமே ஏற்படுகின்றது. இவற்றுக்காகவேனும் நம்பகரமான ஆலோசகர்களின் உதவிகளை நாடலாம். பதற்றமாக இருப்பது, தற்கொலைக் குறிப்பு எழுதி வைப்பது, எதிலுமே ஈடுபாடில்லாமல் இருப்பது, தற்கொலை விருப்பத்தை வேறொருவரிடம் கூறுதல் என்பன தற்கொலை முயற்சியில் ஈடுபடப் போகின்றவரின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கின்றன.
இவற்றை தடுப்பதற்கு பாடசாலைக் கல்வியிலேயே பக்குவம் தொடர்பில் பயிற்றுவிக்க வேண்டும். பிள்ளைகளின் ஆளுமைத்திறன், தலைமைத்துவப்பண்பு என்பவற்றை வளர்க்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுதல். ஆலோசனை மையங்களின் உதவியை நாடுதல், பரீட்சை பெறுபேறுகளைக் கொண்டு பிள்ளைகளை பெற்றோரும் பாடசாலைகளும் குறைத்து மதிப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரத் தன்மையைப் பேண அரசாங்கம் வழிசெய்ய வேண்டும். இவ்வாறான நடைமுறைகளை சமூகங்கள் ஊக்குவிக்க வேண்டும். ஊடகங்களும் இவை பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
.......................................................................................................
இவ்வாறான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளை வைத்தியர்களே வழங்க வேண்டுமென்றில்லை. அவர்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவர்களையே தீர்வுக்கு நாடச்செய்ய வேண்டும். நாங்கள் அவர்களுக்கு தீர்வை வழங்கி அதன்படி செயற்படச் சொல்வதில்லை. பாதிக்கப்பட்ட ஒருவரின் மனக்குறைகளை செவிமடுத்து, தற்கொலை என்பது சரியான தீர்வல்ல என்ற உணர்வை அவர்களின் மனதுள் ஏற்படுத்த வேண்டும். தாமாகவே தன் தவறை உணர வேண்டும். இளைஞர்கள் துடிப்பானவர்களாகவும் தீர்வு தெரியாதவர்களாகவும் இருப்பதால் இலகுவாக பிறருடன் முரண்பட்டு தற்கொலைக்கு அதிகமாக முயலுகின்றனர்.
டாக்டர். கே. முருகானந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக