கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 செப்டம்பர், 2017

வருமானம் தரும் நவீன அடிமைகள்

க. பிரசன்னா
உலக நாடுகளில் பண்டைய காலங்களில் அடிமைகளை வைத்து ஆண்டவர்கள் பலரிருந்தனர். ஆனால், காலம் நவீனத்துவமடைந்து சென்ற நிலைகள் மாற்றப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனிமனித சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால், இன்றைய இலத்திரனியல் யுக காலத்தில் மீண்டும் அடிமைகள் யுகம் தோற்றம் பெற்றிருப்பதை அண்மைக் கால புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உலகில் ஆண், பெண் , சிறுவர்களென 45 மில்லியன் பேர் ‘ நவீன அடிமை’ களாக இருப்பதாகவும் இவற்றில் தந்திரமான முறையில் இந்தியாவில் 18.35 மில்லியன் அடிமைகள் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன அடிமைகள் வன்முறைகள், நிர்ப்பந்தம், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றால் கட்டப்பட்ட சூழ்நிலையில் வசித்து வருகின்றனர். இவர்களின் எதிர்காலமே தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
 இந்நிலைமைக்கு பிரதான காரணம், நவீன அடிமைகள் வியாபாரம் பல பில்லியன்களை பெற்றுக் கொடுப்பதாகும். வருடமொன்றுக்கு 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நவீன அடிமைகள் வர்த்தகத் துறை மூலம் பெற்றுக் கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியா 18.4 மில்லியன் அடிமைகளையும் சீனா 3.4 மில்லியன் அடிமைகளையும் கொண்டிருப்பதோடு பாகிஸ்தான் ( 2.1 மில்லியன் ), பங்களாதேஷ் ( 1.5 மில்லியன்) , உஸ்பெகிஸ்தான் ( 1.2 மில்லியன் ) ஆகிய நாடுகளும் அதிகமான அடிமைகளை கொண்டு செயற்படுகின்றன. இவற்றை தடுக்க இந் நாட்டு அரசாங்கங்கள் முயற்சிக்காமையே அதன் துரித வளர்ச்சிக்கு மிக பிரதான காரணமாக இருக்கின்றது.

ஒவ்வொரு நாடுகளிலும் சட்ட விரோதமான முறையிலும் பல்வேறு வகையிலும் அடிமைகள் பயன்படுத்தப்படுகின்றனர். இவை உலகிலுள்ள மிகப் பெரிய ஜனநாயக நாடுகளிலும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இராச்சியத்தில் கூட 10,000 - 13,000 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வெவ்வேறு தளங்களில் கட்டாய பணிக்கமர்த்தப்படல், கட்டாய விபசாரம் என்பனவும் இவற்றில் உள்ளடங்கும். உலகில் மன்னராட்சி காலம் முதல் அடிமைகள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தன்மை காணப்பட்டது. ஆனால், இன்று பெரும்பாலான அரசாங்கங்கள் இதனை  கண்டுகொள்ளத நிலையில் மீண்டும் அதன் தோற்றம் முளைவிடத் தொடங்கியிருக்கிறது. பின்வரும் வகைகளில் அடிமைகள் நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

 கொத்தடிமை  
 மில்லியன் கணக்கான மக்கள் இன்று கொத்தடிமைகளாக இருக்கின்றனர்.  பல்வேறு நிபந்தனைகளுடன் மக்கள் பெறுகின்ற அதிகமான கடன்களே இந்நிலை உருவாக்கத்துக்கு காரணமாகின்றன. இதன்மூலம் கடன்கள் மீள செலுத்தப்படாதப் பட்சத்தில் கட்டளைக்கு அடிபணிந்து தொழில் செய்ய வேண்டிய கட்டாய நிலை தோன்றுகிறது. தெற்காசியாவில் இந்நிலைமை அதிகம் இருக்கிறது. பெற்றுக் கொண்ட கடனுக்காக வட்டியினையும் செலுத்தி அசல் தொகையினையும் செலுத்தும் வரை தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இச்சந்தர்ப்பங்களில் அதிகமான துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன.

 தொழிலுக்காக கட்டாயப்படுத்தப்படும் புகலிட கோரிக்கையாளர்கள்
 தொழில் வாய்ப்பு பெற்று கொடுப்பதாக உறுதியளிப்பதால் குடிபெயரும் மக்கள் பின்பு உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு நிர்ப்பந்தமாக வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் மூலம் இவர்களும் அல்லது இவர்களது குடும்பங்களும் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். சட்ட விரோத இடப்பெயர்வாளர்கள், சட்டத்தின் அடிப்படையில் எந்தவித நன்மைகளையும் பெறமுடியாது. இவ்வாறான அடிமைகளில் பெரும்பாலானோர் பாலியல் அடிமைகளாகவும் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றனர்.

 பாலியல் அடிமைகள் 
 மிக உயர் வருமானம் கொண்ட நாடுகளை நோக்கி இடப்பெயரும் புகலிடக் கோரிக்கையாளர்கள், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கட்டாயப்படுத்தி விபசாரத்துக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வடிமைகள் பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா குறிப்பாக மோல்டோவா, லாவோஸ் போன்ற நாடுகளில் காணப்படுகின்றனர். பெரும்பாலான சிறுவர் பாலியல் அடிமைகள் இந் நாடுகளிலிருந்து மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர். அண்ணளவாக 22 வீதமான அடிமைகள் பாலியல் துறைகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

 இள வயது அல்லது கட்டாய திருமணம் 
 ஒவ்வொரு பிராந்தியங்களிலும் காணப்படும் கலாசார நிலைமைகள் இந்நிலையை தோற்று விக்கின்றன. இளவயது அல்லது கட்டாய திருமணங்களால் உலகில் மில்லியன் கணக்கான பெண்கள் அடிமைகளாகுவதற்கு வழிவகுக்கப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வாய்ப்பளிப்பதில்லை. பெண்ணை விட அதிக வயது கூடியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இச் சூழல் அவர்களுக்கு உளவியல் மற்றும் வெவ்வேறு வகையான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு வாய்பேற்படுத்தி கொடுப்பதாக அமைகிறது.

 சிறுவர் தொழிலாளர் 
 உலகில் இன்று 26 வீதமான சிறுவர் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு வேலை அல்லது கொக்கோ, கொட்டன் அல்லது மீன்பிடி ஆகிய துறைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்தப்படுவதோடு சுயபாலியல் தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். யுத்தம் நடைபெறும் நாடுகளில் சிறுவர்கள் கடத்தப்பட்டு விற்கப்படுவதோடு  சிறுவர் போராளியாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். ஹெய்டியிலுள்ள அடிமைகளில் சிறுவர் தொழிலாளர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

கடத்தல் 
ஒருநபர் இன்னொரு நபர் மீது செலுத்துகின்ற அதிகார துஷ்பிரயோகமாக இது இருக்கின்றது. இவை பெரும்பாலும் விபசாரம், ஏனைய பாலியல் தேவைகள், கட்டாய தொழிலாளர், அடிமைகள், மனித உடலுறுப்புகளை அகற்றுதல் என்பவற்றுக்காக கடத்தல் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச எல்லைகளை கடந்து 60,000- 820,000 வரையான ஆண், பெண் மற்றும் சிறுவர் கடத்தல்கள் இடம்பெறுவதாக அமெரிக்க புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில்  70 வீதமானோர்  பெண்களாகவும் இளவயது  யுவதிகளாகவும் இருக்கும் நிலையில்  50 வீதமானோர் இளம் வயதுடையவர்களாவர்.

 அடிமைகள் முறை ஒழிக்கப்பட்டு 1000 வருடங்கள் கடந்தாலும் கூட பொருளாதார மற்றும் சமூக நிர்ப்பந்தங்கள் கடந்த சில தசாப்தங்களாக அடிமை நிலையை தோற்றுவிப்பவையாக இருக்கின்றன. அவற்றில் பின்வரும் காரணங்களை கூறலாம்.

சனத் தொகை - உலகில் சனத் தொகை மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதிக நாடுகளில் சனத் தொகையை விட பொருளாதாரம் மந்தமாக இருத்தல். இதனால் பொருளாதார ரீதியில் மக்கள் பலவீனமடைதல்.
இடப்பெயர்வு - வறுமையான நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கு மில்லியன் கணக்கானோர் இடம்பெயருகின்றனர். இவர்கள் நலிவடைந்தவர்களாகவும் திரும்பி நாட்டுக்கு செல்ல பணமில்லாதவர்களாகவும் உள்ளனர்.  இது கடத்தல்காரர்களுக்கு சாதகமானது.

இலஞ்சம் - பெரும்பாலான அரசாங்கங்கள் இலஞ்சத்தை பெற்றுக் கொண்டு அடிமைகளை ஏற்கின்றன. முறையான சட்டங்கள் இல்லாமை. வட்டிக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தாமை. அடிமைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பின்மை.

 பகுத்தறிவு - பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பலவீனமானவர்களை பால், சாதி, இனம் போன்றவற்றால் பாகுபடுத்துதல்.
 மேற் கூறப்பட்ட காரணங்கள் அதிகமான அடிமைகளை தோற்றுவிப்பதற்கு வழிகோலுவதுடன் இவை தெற்காசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இத்தோடு இவ்வாறான விடயங்களில் அரசு காட்டுகின்ற மெத்தனப் போக்கும் ஒரு காரணமாகும். இவ்வாறான நவீன அடிமைத்துவத்தை களைவதற்கு அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, சுவீடன் , அவுஸ்திரேலியா, போர்த்துகல், ஸ்பெயின், பெல்ஜியம், நோர்வே என்பன கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றி  வருகின்றன. அத்தோடு வட கொரியா, ஈரான் , எரித்திரியா, ஹொங்கொங், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ, சூடான் என்பன இவ்விடயங்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலைமையே காணப்படுகிறது.

 ‘ சுதந்திரமாக நடமாடுங்கள் ’ ( Walk Free)  அமைப்பு தகவல்களின் படி இலங்கையில்  45,000 நவீன அடிமைகள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது. பெரும்பாலும் தொழில் ரீதியில் இலங்கையில் பலர் அடிமைப்படுத்தப்படுவதை எம்மால் இனங்காண முடிகிறது.  குறிப்பாக சிறுவர் தொழிலாளர்களை குறிப்பிடலாம். அண்மையில் டிக்கோயாவைச் சேர்ந்த  17 வயதுடைய சிறுவன் கிருலப்பனையில் வீட்டு தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையை பொறுத்தவரை இலங்கை சனத் தொகையில்  0.221 வீதமானோர் நவீன அடிமைகளாக அடையாளம் காணப்படுவதோடு, 100 இல் 36.26 பேர் அடிமைத் தனத்துக்குள் சிக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே அடிமைகள் இல்லாத உலகத்தை படைப்பதற்கு காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் பெற்றுள்ள இன்றைய உலக நாடுகள் உறுதி கொள்ள வேண்டும். ஜனநாயக ,குடியரசு நாடுகள் என தம்மை வரையறுத்து கொள்ளும் உலக நாடுகள் முதலில் தனிமனித சுதந்திரத்தையும் உரிமையையும் வளப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும்.

26/06/2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக