கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 செப்டம்பர், 2017

உலகதொழிலாளர் தினம்

thumbnailImage (1280×720)சனா
உலக தொழிலாளர்களின் உரிமைகளை ஒவ்வொரு வருடமும் முதலாளிமார் வர்க்கத்திற்கு தெளிவுபடுத்துவதற்காக மே 1, உலகதொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லையென்பதுதான் உண்மை. 130 வருடகால தொழிலாளர்தின வரலாற்றில் மலையக தொழிலாளர்கள் பெற்றுக்கொண்டது என்ன? வருடாவருடம் இத்தினம் வந்துபோனாலும், ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் கைகளிலேயே இவர்களுக்கான வரப்பிரசாதங்களும் தங்கியுள்ளன. வருடங்கள் கடந்தும் தீர்வுகாணாமல் போன சம்பள விவகாரம், புதிய மலையக அமைச்சால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் என்பனவே இம்மேடைகளின் பாடுபொருளாக இருக்கும் என்பது வெளிப்படையான உண்மை.
அதுபோலவே மலையக தொழிலாளர்களின் முதன்மை பிரதிநிதிகளின் சிம்மாசனத்திற்கு போட்டியிடுகின்ற பிரதான இரு கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி தலவாக்கலையிலும் இ.தொ.கா. நுவரெலியாவிலும் தமது மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கின்றன. இத்தினத்தில் தொழிலாளர்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ? கட்சிகளுக்கு பெரும் கொண்டாட்டம்தான். இதனால் தொழிலாளர்கள் வெயிலில் காய்ந்து உலர்ந்து, பேரணிகளில் கலந்து ஏதோ அரசியல் பிரசார மேடைகளை பார்ப்பது போலவே இவர்களும் பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கம் உருவாகிவிட்டது.

மேதினக் கூட்டங்களில் உணர்ச்சிமிகு அளவில் பேசக்கூடிய வார்த்தைகள் எவையும் நடைமுறையில் நிறைவேற்றப்படுவதில்லை. இவர்களின் பேச்சுகளை கேட்டு தொழிலாளர்கள் அதிகமாகவே மயக்கமடைந்து விடுவார்கள் என்பதற்காகவே விழா மேடைகளில் இசைக்கச்சேரிகளும் ஒரு அங்கமாக மாறியுள்ளன. இம்மாதம் முதல் அரசால் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வும் கிடப்பில் கிடக்கின்ற நிலையில், தொழிற்சங்கங்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட 1000 ரூபா சம்பள உயர்வு சாத்தியமேயில்லாமல் போய்விட்டது. மேலும் மலையக தொழிலாளர் பிள்ளைகளுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனம், தோட்ட உட்கட்டமைப்புகள் என சகல விடயங்களும் நிறைவேறுவதில் மலையக மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கொண்டாடும் மேதின நிகழ்வுகளில் இவற்றை நிறைவேற்றுவதற்குரிய தீர்மானங்களையோ அல்லது தொழிலாளர்களின் உரிமை தொடர்பாகவோ பேசப்படுவதில்லை. மாறாக தொழிற்சங்கத்தின் நலன் மற்றும் போட்டி அரசியல் மேடையாகவே மேதின நிகழ்வுகள் மலைய மக்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டன. சர்வதேச தொழிலாளர் தினத்தின் தாற்பரியத்தை கூட தொழிற்சங்கங்கள் மலையக மக்களுக்கு கற்றுக்கொடுக்க தவறியிருக்கின்றன. உணவு பொதியையும் மதுபானத்தையும் வாரி வழங்கிவிட்டு மேதினத்தில் மக்களை சந்தோஷப்படுத்தியதாக தொழிற்சங்கங்கள் தம்பட்டமடிக்கின்றன.

தனிவீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நிறைவுபெற்றதுமே மலையக மக்களுடைய சகல உரிமைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டு விட்டதாக கூறும் இவர்கள், அதை கட்டிமுடித்துவிட்டல்லாவா? பேசவேண்டும். பின்னர் மீரியபெத்த வீடமைப்பு திட்டம் போன்று வருடக்கணக்கில் ஒருவரையொருவர் கைகாட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழல் வருமோ தெரியாது. எனவே மலையக மக்களின் உரிமை தினமான மேதினத்தில் அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும் உரிமைகளையும் வென்றெடுக்கும் வகையிலான பிரசாரங்களையும் தீர்மானங்களையும் முன்னெடுப்பது அவசியம். இவற்றில் முக்கியமானது சம்பளப் பிரச்சினை.

தேர்தல் காலங்களின் போது பரவலாக சகல கட்சிகளுமே மலையக மக்களுக்கான 1000 ரூபா சம்பளவுயர்வு பற்றி பேசின. ஆனால் தற்போது வெற்றிபெற்றுள்ள மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆரம்பத்தில் பிரதமர் ரணில் நாடு திரும்பியவுடன் சம்பளவுயர்வு பெற்றுக்கொடுக்கப்படும், ஜனாதிபதி எமக்கு உறுதியளித்துள்ளார் என்று கூறித்திரிந்தவர்கள் தற்போது வீடமைப்பு எனும் தேவையை காட்டி மக்களின் மனங்களை மாற்ற போராடுகின்றனர். இதனை மலையக மக்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை. அதேபோலவே சேவல் சங்கமும் மக்களிடம் தம் மீதுள்ள நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது 1000 ரூபா பற்றி அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கும் மேலாக தமிழ்முற்போக்கு கூட்டணியின் கல்வி இராஜாங்க அமைச்சர் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது மக்களிடையே தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட இன்னொரு சுமை. காரணம் இதுவரையும் வேறு தொழில்களில் கோலோச்சியிருந்த தமது பிள்ளைகள் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதிலும் கணிசமானளவு பங்குவகித்திருந்தனர். தற்போது இவர்களுக்கு வழங்கப்படுகின்ற 6000 ரூபா சம்பளத்தில் அவர்களுடைய போக்குவரத்து மற்றும் ஏனைய தேவைகளையே முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இதனால் இவர்கள் மீண்டும் பெற்றோரின் தயவை நாடிச்செல்ல வேண்டியேற்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்களின் குடும்பநிலை மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. தற்போது ஆசிரியர் உதவியாளராக தொழில்புரியும் அநேகமானோர் தலைநகரில் ஏற்கனவே உயர்ந்த சம்பளத்தில் தொழில்புரிந்தவர்கள். இதில் இவர்களின் குடும்பமும் ஓரளவு வருமானத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது இவர்கள் வாழ்வை போராட்டத்துடன் எதிர்கொள்ளவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் மலையக இளைஞர், யுவதிகளின் அபிவிருத்தியா? நம்மைப்போலவே தமது பிள்ளைகளும் ஆகிவிடுவார்களோ என்ற ஏக்கம் மலையக பெற்றோருக்கும் இல்லாமல் இல்லை.

எனவே மேதின நிகழ்வை அர்த்தமுள்ளதாக கடைப்பிடிப்பதற்கும் தங்களுடைய உரிமைகளையும் கோரிக்கைகளையும் முன்வைப்பதற்கும் பயன்படுத்த தொழிற்சங்கங்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் இலங்கை மேதின வரலாற்றில் அப்படியொரு சம்பவம் நடைபெற்றதாக தெரியவில்லை. ஆனால் இனியாவது இதற்கு முயற்சிக்கலாம். வெறுமனே மேதின மேடைகளை, அரசியல் மேடைகளாக பயன்படுத்தி போட்டி அரசியலுக்கு வித்திடக்கூடாது. கிருலப்பனையில் நடைபெறப்போகும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின கூட்டத்தைவிட தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினத்துக்கு அதிக கூட்டம் வரும் என்று மலையக மக்களை அரசியல் பணயமாக வைப்பதெல்லாம், ஒரு அமைச்சரின் கடமையல்ல என்பது அவருக்கு தெரியுமா?

30/04/2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக