
பூமியின் விருத்திக்கு உயிரினப் பல்வகைமை அவசியமாகும். ஆனால் தற்போது வேட்டையாடல் என்பது மனிதரிடையே பொழுது போக்காகவும், பணம் பெறும் வழியாகவும் மாறிவிட்டதால் உலகில் பல அரியவகையான விலங்குகள் சூரையாடப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள அரிய விலங்குகளை பாதுகாக்க சர்வதேச ரீதியாக நாடுகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. அவ்வாறான நிலையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஆபிரிக்காவின் சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது. உலகில் மிகவும் பிரபலமானது சிசில் சிங்கம். சிம்பாப்வேயின் ஹவாங்கோ தேசிய சரணாயலத்திலிருந்த இந்த சிங்கமானது வால்டர் ஜேம்ஸ் பால்மர் என்ற அமெரிக்க பல் மருத்துவரால் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் மீது நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
13 வயதுடைய சிசில் (Cecil) சிங்கமானது உலகில் அருகிவரும் விலங்கினங்களில் ஒன்று. ஆதலால் இச்சிங்கத்தை ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டும், அதையும் மீறி சரணாலயத்திலிருந்து மீட்டு அதை கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சரணாலயத்திற்கு வரும் மக்களோடு மிகவும் அன்பாக பழக கூடிய சிசில் சிங்கமானது, எவரும் பயப்படாமல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிய அனுமதிக்கும் குணம் கொண்டது.
தற்போது அந்த சிங்கம் கொல்லப்பட்டுள்ளதால் மக்கள் சோகமாகியுள்ளதுடன், சூழலியலாளர்களை அதிக கோபத்திற்கும் ஆளாக்கியுள்ளது. ஆபிரிக்காவில் பல அரிய வகை விலங்கினங்கள் அழிந்துவருவதை தடுக்க பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஆனால் தடுக்க முடியாமல் இருக்கின்றது. ஆனால் சிம்பாப்வே நாட்டின் துணிச்சலானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொழில் முறை வேட்டையாளரான தியோவுக்கும் நில உரிமையாளர் ஒருவருக்கும் பல் மருத்துவரான வால்டர் ஜேம்ஸ் 50,000 டொலர்களை கொடுத்து இச்சிங்கத்தை வேட்டையாடச் சொல்லியதாக சிம்பாப்வே சுற்று சூழல் பாதுகாப்பு சிறப்பு படையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இருப்பினும் சிசில் சிங்கத்தை கொல்ல வால்டர் ஜேம்ஸால் தூண்டப்பட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பல் மருத்துவரான ஜேம்ஸும் வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் கருங்கரடி ஒன்றை கொன்றார் என தேசிய குற்ற ஆவணங்களில் வால்டர் ஜேம்ஸின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க நீதிமன்ற குற்ற ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வால்டர் ஜேம்ஸ் பல ஆண்டுகளாக சிங்கம், காண்டா மிருகம் போன்ற விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார். அதே போலவே சரணாலயத்திலிருந்து ஜேம்ஸும் தியோவும் சிசில் சிங்கத்தை தந்திரமாக வெளியேற்றியுள்ளதுடன், ஜேம்ஸ் அதன் மீது முதலில் அம்பெய்தியுள்ளதுடன் பின்பு இருவரும் சேர்ந்து சுட்டுக் கொன்றுள்ளனர். இதேவேளை சிசில் சிங்கத்தின் கழுத்திலிருந்த ஜி.பி.எஸ். கருவியையும் மறைக்க முயற்சித்துள்ளனர். கடும் தேடுதல்களின் மத்தியில் 40 மணி நேரத்திற்கு பின்பு அதன் இறந்த உடலை சிறப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.
இங்கு அதன் தலை காணாமல் போயுள்ளதுடன் உடலின் தோல்பகுதியும் உரிக்கப்பட்டு மிக கொடுரமாக கொலைசெய்யப்பட்டிருந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர். ஜேம்ஸ் தற்போது தலைமறைவாகியுள்ளதால் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. சிசிலின் கருப்பு பிடரி மிகவும் பிரபலம். அந்தச் சிங்கத்தை கொன்றதற்காக தான் வருந்துவதாகவும், அது சட்டத்துக்கு உட்பட்ட வேட்டையென்று தான் கருதியதாகவும் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்காவின் மின்சோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ஜேம்ஸின் மருத்துவமனைக்கு முன்பாக போராட்டங்களும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
* நமீபியா, தெற்கு ஆபிரிக்க நாடுகளில் வேட்டையாடுதல் என்பது மேற்கு நாடுகளால் நிகழ்த்தப்படும் போட்டி நிகழ்வாகவே இருக்கின்றது. இதனால் அதிக தொகையினை இலாபமாக பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறு அரியவகை உயிரினங்கள் அழிக்கப்படுவது இவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.
அழிந்துவரும் உயிரினங்களை காப்பதில் உலகமக்கள் தற்போது அதிககவனம் செலுத்தியிருக்கும் நிலையில் இவ்வாறான விலங்கழிப்புகள் அவர்களை வலிமையாக போராடவைக்கின்றன. இதற்கு சிம்பாப்வே உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கும்.
அநகன்
01.08.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக