கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 செப்டம்பர், 2015

வெற்றி தந்துள்ள ஒரு வருட தேடல்


 கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி உலகை அதிரவைத்த ஒரு விமான விபத்து, கடந்த ஒரு வருடத் தேடல்களிலும் எந்தவித ஆதாரமுமே இல்லாமல் தொலைந்து போன மலேசிய எயார் லைன்ஸ்க்கு சொந்தமான Mஏ 370 விமானத்தின் பாகங்கள் கடந்த வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விமானத்தின் பாகங்கள் பெரும்பாலும் கடந்தாண்டு காணாமல் போன மலேசிய விமானமான Mஏ 370  இன் பாகங்களாக இருக்கலாமென மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சந்தேகத்திற்கிடமான செய்தியாகவே வெளியாகியுள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானப் பாகங்கள் மேலதிக ஆய்வுகளுக்காக பிரான்ஸில் இருக்கும் தவ்லோஸுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாகமானது விமான இறக்கையின் ஒரு பகுதியாகவே  இருக்கிறது. இவை தொடர்பான ஆய்வுகள் பிரான்ஸில் மேற்கொள்ளப்படவுள்ளன. ஒரு விமானத்தில் எல்லாப் பாகங்களிலும் அவ்விமானத்தின் வரிசை எண் பதிவிடப்பட்டிருக்கும் என்பதால் இவ்விமானப் பாகங்களைக் கொண்டு இலகுவில் விமானத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். தென்பிராந்திய கடற்பகுதியில் இதுவரை எந்தவொரு போயிங் 777 வகை விமானமும் விபத்துக்குள்ளாகியிருக்கவில்லை என்பதால், தேடுதலின் தீவிரம் அதிகரித்துள்ளதோடு  அது விபத்துக்குள்ளான மலேசிய விமானமாக இருக்கலாமென எதிர்வுகூறப்படும் நிலையில், விமானப்பாகங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதிக்கு கிழக்கேயுள்ள 6000 கிலோமீற்றர் பகுதியில் தேடுதல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து 227 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகளுடன் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த வேளை, Mஏ 370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தது. இவை தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில்  அவுஸ்திரேலியா தலைமையில் பாரிய தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளும் இணைந்திருந்தன. மலேசிய எயார்லைன்ஸின் போயிங் 777 விமானங்களில் அதிக சேதம் விளைவித்த நிகழ்வாக இந்த விபத்து அமைந்திருந்தது.
அத்தோடு, உலகில் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக சேதம் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வாகவும் போயிங் 777 விமானம் இவ்வாறு மீட்க முடியாமல் காணாமல் போன மூன்றாவது சம்பவமுமாக இவ்விபத்து பதிவாகியிருந்தது. 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போயிங் 777 விமானமானது இதுவரை 5 மோசமான விபத்துகளைச் சந்தித்துள்ளது. 2008 ஜனவரி 17 ஆம் திகதி பிரிட்டிஷ் எயார்வேஸ் ஜெட் விமானம், ஜூலை 2011 எகிப்து எயார் 777 விமானம், ஜூலை 2013 ஏசியன் எயார்வேஸ் விமானம், மலேசியாவின் MH 370 விமானம், ரஷ்யாவினால் சுட்டு வீழ்த்தப்பட்ட Mஏ 17 விமானம் என்பன இவ்விபத்தில் உள்ளடங்குகின்றன.

இருப்பினும், கடந்த வருடம் காணாமல் போன MH 370 விமானத்தின் பின்னணியில் விமானியே செயற்பட்டாரென தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. இருப்பினும் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டது. தற்போது அந்நம்பிக்கையும் தகர்ந்துள்ளது. இவ்விமானத்தில் பயணம் செய்த இருவர் திருடப்பட்ட கடவுச் சீட்டுகளை பயன்படுத்தி பயணித்தமையால் விமானம் காணாமல் போனமை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருக்கலாம்  என்ற வகையிலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. எனினும், மார்ச் 15, 2014 ஆம் ஆண்டு விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பு வேண்டுமென்ற செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதாக மலேசியா அறிவித்திருந்தது. செயற்கைக்கோள் மற்றும் ராடர் ஆதாரங்களின் படி இவ்விமானமானது தனது பாதையினை மாற்றியிருப்பதோடு சுமார் 7 மணி நேரம் வானில் பறந்திருந்ததாகவும் இதனால் விமானம் ஒருவரால் வேண்டுமென்றே இயக்கப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்பட்டு  பிரதான விமானியின் பக்கம் அனைவரின் தேடுதலும் இருந்தது.

சில அரசியல் விவகாரம் காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரதான விமானியாலேயே இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருக்கலாமெனவும் மலேசியா தெரிவித்திருந்தது. மார்ச் 13, 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் பணியானது இன்றுவரை தொடர்ந்த வண்ணமேயிருக்கிறது. அவுஸ்திரேலியா தலைமையில் சீனா, தாய்வான், மலேசியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகள் தமது தேடுதலை கடும் காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியிலும் மேற்கொண்டு இன்று பெரும் சவாலான ஒரு விடயத்தை வெற்றிகரமாக முடித்திருப்பதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன.
ஆனால், உயிர்கள் பற்றிய தெளிவான புரிதல் விமான விபத்துக்குள்ளான காலப் பகுதியிலேயே இருந்தது. அவர்கள் ஒருவரும் இனிமேல் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பில்லை. ஆனால், ஒரு தேடல் வெற்றியை தந்துள்ளது. இதற்கு முன்பும் மலேசிய விமானத்துக்குச் சொந்தமானதென பல விமானப் பாகங்கள் மீட்கப்பட்டிருந்தாலும் அவை யாவும் நிரூபணமாகியிருக்கவில்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி MH 370 விமானத்தினுடையதாக இருந்தால் தொடரும் முயற்சிகளில் விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு விபத்தின் மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம். ஆனால் இழப்புகள் மட்டும் உறுதியானவை.

க.பிரசன்னா
01.08.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக