கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 செப்டம்பர், 2015

விண்ணில் கலந்த ஏவுகணை நாயகன்


“இளைஞர்களே கனவு காணுங்கள்’ என விழித்த இந்தியாவின் குடிமகன். இந்திய ஏவுகணை நாயகன், மக்கள் ஜனாதிபதி என புகழப்பட்ட ஏ.டி.ஜே.அப்துல்கலாமின் ஆன்மா கடந்த திங்கள் இவ்வுலகை விட்டு நீங்கியது. ஆனால் வரலாறுகள், பூமியின் உயிரின விருத்தி அடங்கும் மட்டும் பேசப்படும் என்பதே உண்மை. இன்று இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் இவரை அவ்வளவு எளிதில் உலகம் மறந்துவிடாது. ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம் 1931 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி இவ்வுலகை தரிசித்தார். ஒரு ஏழைக் குடும்பத்தின் மகனாக பிறந்து இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதியாக பரிணமித்தவர். உலகின் மிகச்சிறந்த மனிதர்களை தோற்றுவிக்க 130கோடி இந்திய மக்களின் புன்னகைக்காக உழைத்தவர்.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலும் விண்வெளி பொறியியலாளராக இருந்து ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியதால் ஏவுகணை நாயகன் எனப் போற்றப்படுபவர். அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவன் என்று வஞ்சிக்கப்பட்ட கலாம் 1998 இல் நடந்த போக்ரான் ஐஐ அணுஆயுத பரிசோதனையின் வெற்றியில் பங்காற்றியவர். தான்  ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கருணை மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் குற்றவாளிகள் மீதான தண்டனை காலம்தாமதமானதற்காக விமர்சிக்கப்பட்டார். ஆனால், உலகம் அறிந்திராதவராக பிறந்த கலாம் இன்று உலகமே போற்றும் இந்திய குடிமகனாய் தாய்நாட்டுக்கு  மிகப்பெரிய கௌரவமளித்தவர். பாரத ரத்னா விருதை அலங்கரித்த தமிழன் என்ற பல்வேறு மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளில் அனுபவித்த கலாம் தனது 83 ஆவது அகவையில் இவ்வுலகைவிட்டு நீங்கி அயராத சோகத்தை அளித்துவிட்டார்.

வறுமையான குடும்பத்தில் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்த கலாம் தனது குடும்ப வறுமைக்காக பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைகோள் வாகனமான ரோகினியை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக ஏவியதானது கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் சேர்ந்தது மிகப்பெரிய கௌரவமாக கருதப்பட்டது. விண்வெளித் துறையில் மட்டுமல்லாது 1988 இல் இதய மருத்துவரான வைத்தியர் சோமராஜுவுடன் இணைந்து குறைந்த செலவில் “ கரோனரி ஸ்டென்ட்’ உருவாக்கினார். இதனால் அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் “கலாம், ராஜு ஸ்டென்ட்’ என பெயரிடப்பட்டது.2012 இல் கிராமபுறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டெப்லட் கணினி கலாம், ராஜு டெப்லட் கணினி என்று பெயரிடப்பட்டது. இவ்வாறு பல சாதனைகளை புரிந்து மக்களுக்காக சேவை செய்த கலாம் இந்திய மக்களின் புன்னகைக்காக உழைத்தவர். இவரே  2002 ஆம் ஆண்டு இந்திய குடியரசின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்திய குடியரசு தலைவராக பதவியேற்கும் முன் பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியாவார். அவரின் ஜனாதிபதி காலத்தில் இவர் “மக்களின் ஜனாதிபதி’ என்று அன்பாக அழைக்கப்பட்டவர். இருப்பினும் இவருடைய ஆட்சிக்காலத்தில் கிடைக்கப்பெற்ற 21 கருணை மனுக்களில் 20 கருணை மனுக்கள் கிடப்பில் போட்டபட்டதே இவருடைய ஜனாதிபதி காலப்பகுதியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட சம்பவமாகும். இவற்றில் 2001 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தாக்குதலில் சம்பந்தப்பட்ட மரணதண்டனை கைதியின் கருணை மனுவும் அடங்கும். இவ்வாறான பல எல்லைகளைக் கடந்தே அப்துல்கலாம் தனது வாழ்நாட்களை கடத்தி வந்தார் என்பது குறிப்பிடப்படவேண்டியது.

2007 ஆம் ஆண்டோடு அவருடைய பதவிக்காலம் முடிவடையும் தறுவாயில் அவர் மீண்டும் குடியரசு தலைவராக நியமிக்கப்படும் வாய்ப்பிருந்தும் போதிய ஆதரவு இன்மையால் கைவிடப்பட்டது. அத்தோடு மீண்டும் 2012 ஆம் ஆண்டில் அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட சாத்தியம் இருந்தும், அதனை  கலாம்  கைவிட்டுவிட்டார். மீண்டும் கலாம் ஜனாதிபதியாவதற்காக இந்தியா முழுவதும் மாணவர்களிடமிருந்து பலத்த ஆதரவு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மாணவர்களின் மனதில் அதிகம்  நிறைந்திருந்த ஒருவராகவே கலாம் இருந்திருந்தார்.

இன்று கலாம் இந்தியாவின் முக்கிய நபராக போற்றப்பட்டாலும்கூட அவர் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்துள்ளார் என்பதையும் மறுப்பதற்கில்லை. 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்னடி விமான நிலையத்தில் தனிநபர் சோதனைக்கு இவர் உள்ளானார். இந்திய முன்னாள் குடியரசு தலைவருக்கு இது மிகப்பெரிய அபகீர்த்தியை ஏற்படுத்தியது. அமெரிக்க பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் அவருக்கு விலக்களிக்கப்படவில்லை. ஆனால் பின்பு அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டது. அத்தோடு இந்தியாவின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலும் கூட மிக கடுமையான தனிநபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். இது ஜனாதிபதி ஒருவருக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கம். அது கலாமிற்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான பல சவால்களை தாண்டிவந்த கலாம் தனது “இந்தியா 2020’ எனும் நூலின் மூலம் இந்திய மக்களின் புன்னகையை பெற விரும்பியிருந்தார். அதற்காக அவர் பாடசாலை, கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து தனது செயற்றிட்டங்களை முன்னெடுத்தார். இந்தியா 2020 எனும் நூலில் 2020 ஆம் ஆண்டு இந்தியாவை அறிவியல் வல்லரசாகவும் வளர்ந்த நாடாகவும் மாற்றுவதற்குரிய திட்டங்களை முன்வைத்திருந்தார்.

கலாம் விஞ்ஞான ஆலோசகர் பதவியிலிருந்து 1999 ஆம் ஆண்டு இராஜினமா செய்த பிறகு ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கான திட்டத்தை கூட முன்வைத்திருந்தார். அவ்வாறானதொரு சந்தர்ப்பமாக கூட அவருடைய இறுதி உரையாடல் அமைந்திருக்கலாம். கலாமின் இந்தியா 2020 நூல் தென்கொரியாவிலும் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையான நூலாக இருக்கிறது. “அவருடைய கனவு 2020 ஆம் ஆண்டில் எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?ச ஒருவேளை நிறைவேறும் பட்சத்தில் அதுவே அவருக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவமாக கூட இருக்கலாம். தற்போது அவர் இல்லாத நிலையில் அது சாத்தியப்படுமா?

இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றியவர்கள் வரிசையில் கலாமின் பங்கு அக்கயது. அவற்றில் 2011 ஆம் ஆண்டு கலாம் “நான் என்ன கொடுக்க முடியும்’ என்று ஊழலுக்கு எதிரான ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அத்தோடு கவிதைகள் எழுதுவதிலும், கம்பியால் இணைக்கப்பட்ட வீணை மீட்டுவதிலும் அதிகம் திறமை படைத்தவராக இருந்தார். கலாம் இதுவரை 1இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் “அக்கினிச் சிறகுகள்’ எனும் அவருடைய சுயசரிதையை கூறும் நூல் மிகவும் பிரபலமானது.

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட பல்வேறு உயரிய விருதுகளையும் பல நாடுகளின் டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார். இவருடைய உழைப்பின் நினைவாகவே கலாமின் 79 ஆவது பிறந்ததினமானது உலக மாணவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் இவருக்கு வழங்கப்பட்ட கௌரவம் இன்றும், என்றும் நிலைத்திருக்கக்கூடிய வாய்ப்புகளை உலக மக்கள் வழங்கி வருவதை இன்றும் கூட எம்மால் காணமுடிகிறது.

கலாம் பிறந்த இராமேஸ்வரத்திலுள்ள அவருடைய மசூதி தெருவில் உள்ள வீட்டின் முதல் மாடியில் “மிஷன் ஒப் லைப் கலேரி’ (Mடிண்ண்டிணிண ணிஞூ ஃடிஞூஞு எச்டூடூஞுணூதூ) என்ற பெயரில் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் அவர் எழுதிய நூல்கள் என்பன காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நாள்தோறும் எம்மால் இலவசமாக பார்வையிட்டு அவரின் வளர்ச்சியினை கண்டுகொள்ள முடியும். இலங்கை போன்ற தீவு நாடுகளில் இருக்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் காலை உணவிற்காக கோடி ரூபாக்களை செலவழிக்கும் நிலையில் கலாமின் மிக நீண்ட நாள் காலை உணவு ஒரு அப்பமும் ஒரு குவளை பாலுமேயாகும். இவ்வாறு தனது எளிமையை இறக்கும் வரை உலகுக்கு உணர்த்தியவர்.

இத்தனை அம்சம் பொருந்திய கலாம் எனும் மனிதம் கடந்த ஜூலை  27 ஆம் திகதி மோகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் இடம்பெற்ற மாணவக் கலந்துரையாடலின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த வியாழன் கலாமின் உடல் பூரண அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உலகமே சோகத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் கலாமைப் போலவே வாழ ஆசைப்படுகிறான். கலாமின் இந்தியா 2020, 130 கோடி மக்களின் மனங்களில் வாழ்வதால், அவை இன்னும்  தொலைதூர நாட்களில்  சாத்தியமாகும். நாமும் பிரார்த்திப்போம்.

க.பிரசன்னா
02.08. 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக