சர்வதேச ரீதியில் பொருளாதார வளர்ச்சியிலும் ஏனைய உள்கட்டமைப்பு அபவிருத்தியிலும் முன்னேறும் இலக்கை ஆசிய நாடுகள் கொண்டிருப்பதை அண்மையகால செயற்பாடுகள் மூலம் அதிகம் உணர முடிகின்றது. இதில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முனைப்புடன் செயற்படுகின்றன. சீனாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, ரஷ்யாவில் நடந்து முடிந்துள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மற்றும் பிரிக்ஸ் மாநாடு, பிரிக்ஸ் வங்கி என்பன ஆசிய நாடுகளின் மிகப்பெரிய இலக்கினை நிர்ணயிக்கும் சக்திகளாக மாற்றமடையவிருக்கின்றன.

குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கடைப்பிடிக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையின் பிரகாரம் மேலைத்தேய நாடுகளில் தங்கியிருப்பதையும் அவற்றின் ஆதிக்கத்தையும் இவை குறைத்துக்கொள்ள விரும்புகின்றன. குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற உலக வல்லரசுகள் கடும் நெருக்கடிகளை அண்மைக் காலமாக சந்தித்து வருகின்றன. எனவே, இவ்வாறான நெருக்கடிகளை தவிர்க்க மேற்படி செயற்பாடுகளை இவை முழுமையாக பயன்படுத்தக்கூடும். அத்தோடு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றில் காணப்படும் மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்தை இந்நாடுகள் விரும்பாமையும் இவ்வாறான வங்கிகள் தோற்றம் பெற வாய்ப்பாகவும் அமைந்திருக்கின்றன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமையம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமையமானது மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளின் கூட்டினைவாகும். இந்நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்புக்கான மிகப்பெரிய ஏற்பாடாகும். பெய்ஜிங்கை தலைமையமாக கொண்டு செயற்பட்டு வரும் இவ்வமைப்பில் சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆரம்ப உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பார்வையாளராக இருந்த இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ரஷ்யாவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆசிய நாடுகளில் அதிக இராணுவ பலத்தினை ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. இந்நாடுகளின் கூட்டானது ஆசிய நாடுகளில் மிகப்பெரிய பலத்தை உருவாக்கும். இது சீனா- ரஷ்யாவின் மேற்கத்தேய எதிர்ப்புக்கு சாதகமாகவே அமையும். தற்போது ஆசியாவில் தோற்றம் பெற்றுள்ள சீனாவின் தலைமையிலான சகல நிறுவனங்களும் எதிர்காலங்களில் பிரமாண்ட வளர்ச்சியினை எட்டும்போது அது சர்வதேசத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தும்.
பிரிக்ஸ்/ பிரிக்ஸ் வங்கி
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாபிரிக்காவையும் சேர்ந்து 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐந்து வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பாகும். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா போன்றன வளர்ந்து வரும் நாடுகளாக இருப்பதுடன் உலக சனத்தொகையில் இந்நாடுகளின் சனத்தொகை பாதியாக இருப்பதுடன், இந்நாடுகளின் கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.6 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அந்நிய செலவணி கூட்டுக் கையிருப்பு 4 டிரில்லியன் டொலர்களாகும். எனவே, இவ்வாறு பலம் பொருந்திய அமைப்புகள் ஆசிய நாடுகளை தலைமையிடமாகக் கொண்டு செயற்படுவது ஆசியாவின் வளர்ச்சிப்பாதையினை மேலும் வலுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிரிக்ஸ் கூட்டணியானது தங்களுக்கான பிரிக்ஸ் வங்கியினை அறிமுகம் செய்துள்ளதோடு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டுக்கு வருமென கூறப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் பிரிக்ஸ் அபிவிருத்தி வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமையப் பெற்றுள்ளது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மேலைத்தேய நாடுகள் உலகளவில் செல்வாக்கு செலுத்தவே இவை பயன்படுவதாகவும் இந்நிறுவனங்களில் வாக்குரிமையை கூட வளர்ந்து வரும் நாடுகளுக்கு மேற்குலக நாடுகள் போதியளவு தருவதில்லை என்ற பிரச்சினை நீண்டகாலமாக காணப்பட்ட நிலையிலேயே மேற்படி நாடுகள் தமக்கான கூட்டு வங்கியினை செயற்படுத்தி தமது உள்கட்டமைப்புகளை பலப்படுத்த விரும்பியிருந்தன.
இந்த வங்கியின் தொடக்கத்திற்கு தேவையான முதலீட்டை ஐந்து நாடுகளும் சமமாக பகிர்ந்து கொள்ளும் என்பதுடன் இவ்வமைப்பின் முதல் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நாடுகள் உலகில் அதி வேகமாக வளர்ந்து வரும் நிலையினை கொண்டிருப்பதால் அவற்றின் உட்கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு தேவையான நிதியினை இந்நாடுகளே பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளதால் உலக பன்னாட்டு வங்கிகளை அணுக வேண்டிய தேவை குறைவாகவுள்ளதுடன் இலகுவான கடன் முறைமைகளையும் பின்பற்றக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
சீனாவும் இந்தியாவும் அதன் எல்லைப் பிரச்சினைகளில் அதிகளவில் நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில், இவ்வங்கியின் தோற்றம் மூலம் நெருக்கமான சூழ்நிலையை தோற்றுவிக்கலாம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வட்டி வீதமானது மிகவும் குறைவாகும். இதனால் வளர்முக நாடுகளுக்கு அதிகளவு தொகை பணம் வந்தாலும் அவை நிலைத்திருப்பதில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண 2009ஆம் ஆண்டு ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் உறுதியளித்திருந்த நிலையில் இன்றுவரையும் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.
சீனாவானது வளர்ந்த நாடு என்பதுடன் அதன் உள்நாட்டு உற்பத்தியும் அதிகமாகும். அத்தோடு இவ்வங்கியில் அதிக முதலீடுகளையும் மேற்கொள்ள விருப்பதால் இதன் தலைமையகம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டிலேயே ஜப்பான் “ஆசிய நாணய நிதியம்’ என்ற அமைப்பை தோற்றுவிக்க முனைந்திருந்தாலும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் காணப்படும் ஜப்பானின் செல்வாக்கும் ஏனைய நாடுகளின் அதிருப்தியின்மையும் காரணமாக இம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. தற்போது சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் காணப்படும் அரசியல் குழப்ப நிலைகள் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தியிருக்கும் நிலையில் இவ்வங்கியின் தோற்றம் அமைந்திருக்கிறது. இந்தியா அதிக வருமானத்தை கொண்ட நாடாக இருந்தாலும் அதிகமானோர் ஏழையாகவே இருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் பிரிக்ஸ் வங்கியின் தோற்றம் இந்நாடுகளின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துமா? ஆனால், சர்வதேச நாடுகளுக்கு சீனா- ரஷ்யாவின் செயற்பாடுகள் ஓரளவு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமையலாம். சீனா தனது பலத்தினை ஆசியாவிலும் சர்வதேசத்திலும் நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
அவற்றில் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிரிக்ஸ் வங்கி என்பன சீனாவை தலைமையகமாக கொண்டுள்ளதால் பிராந்திய ரீதியில் அதன் செல்வாக்கு உயரும் நிலை காணப்படுகிறது. மேலும், தமது இராணுவ ரீதியான பலப்படுத்தலுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, சீன-ரஷ்ய பாதுகாப்பு கட்டமைப்பு என பல்வேறு ரீதியில் செயற்பட்டு வருகிறது. தெற்காசியாவில் சீனாவை சமப்படுத்தும் ஒரு நாடாக இந்தியா மட்டுமே இருக்கிறது. சீனாவின் வலையில் இந்தியா முழுமையாக சிக்கிக் கொள்ளுமாயின் ஆசியா, சீன-ரஷ்யாவின் அடிமையாகக் கூட மாறிவிடலாம்.
க.பிரசன்னா
19.07. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக