கிரேக்க அரச கொள்கைகள், மக்கள் விருப்பு என்பன இவற்றுக்கு அதிகளவில் இடம்கொடுக்கவில்லை. 2009ஆம் ஆண்டு கடன் நெருக்கடியில் சிக்கிய கிரேக்கம் இன்றுவரையும் போராடி காலம் தள்ளிய நிலையில் இனிமேல் முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, தேர்தல், இராஜினாமா என பல உள்ளூர் தடைகளை தாண்டியிருக்கிறது கிரேக்கம். தற்போது கிரேக்க நிதியமைச்சரும் இராஜினாமா செய்துள்ள நிலையில் யூரோ வலய நாடுகளின் நெருக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
மேலும், மோசமான நிதி நெருக்கடியில் தவிக்கும் கிரேக்கமானது இன்னொரு பிரச்சினையிலும் சிக்கி தவிக்கிறது. கிரேக்கத்தின் லெஸ்பாஸ் தீவுகளுக்கான குடியேற்றவாசிகளின் வருகையும் அதிகரித்திருக்கிறது. அண்மைய வாரங்களில் மட்டும் 1600 குடியேறிகளை இத்தீவு சந்தித்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையே இதற்கு காரணமாகும். இவை கிரேக்கத்துக்கு இன்னொரு பிரச்சினையாக உருவாகியிருப்பதோடு அதிக தொகையினை குடியேறிகளுக்கு ஒதுக்கும் நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, பல்முனை போட்டியில் தவிக்கும் கிரேக்கத்தின் நிலை என்னவாகப் போகிறது?
பொது வாக்கெடுப்பு
கிரேக்க கடன் நெருக்கடியானது சர்வதேச நாடுகளையும் மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதுடன் கிரேக்கத்தில் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டதுடன் ஏ.டி.எம்.களிலும் பணமீளப் பெறுகையான கட்டுப்படுத்தப்பட்டது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 1.8 பில்லியன் டொலர் தவணைக்கான காலக்கெடு முடிவடைந்திருந்த நிலையிலும் ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியன வழங்க முன்வந்த நிபந்தனைகளுடனான கடன் மீட்பு தொகைக்கான நிபந்தனையினை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுமென கிரேக்க பிரதமர் அலக்ஸிஸ் சிப்ராஸ் தெரிவித்திருந்தார்.
இதன்படி பொது வாக்கெடுப்பு கடந்த ஜூன் 5ஆம் திகதி இடம்பெற்றதுடன் சிக்கன நடவடிக்கை தொடர்பான நிபந்தனைகளுக்கு எதிராக மக்களை வாக்களிக்குமாறும் பிரதமர் கோரியிருந்தார். இச்சிக்கன நடவடிக்கை தொடர்பான நிபந்தனைகளை ஏற்பதன் மூலம் கிரேக்க மக்கள் மோசமான நிலைக்கு ஆளாகும் நிலை தோன்றலாம் என கருதியே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். ஆனால், இவ்வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றி பெற்றால் யூரோ வலயத்திலிருந்து கிரேக்கம் வெளியேறுவதுடன் யூரோ நாணய அலகையும் இழந்துவிடுமெனவும் பல தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி ஜூலை 5இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மூன்று நிறுவனங்களின் நிபந்தனைகளையும் ஏற்க கூடாதென 61.31 வீத மக்களும் ஆதரவாக 38.69 வீத மக்களும் வாக்களித்திருந்தனர். இது இம்மூன்று நிறுவனங்களுக்கும் விழுந்த பலத்த அடியாகவும் கூட இருந்தது. இருப்பினும் 5 மாதங்களுக்கு கடன் மீட்பினை நீடிக்க இவ்வமைப்புகள் ஒத்துக் கொண்டாலும் தங்களது நிபந்தனைகளில் உறுதியாகிவேயுள்ளன.
கடன்மீட்புத் திட்டம்
2008ஆம் ஆண்டு ஏற்பட்ட கிரேக்க நிதி நெருக்கடியால் 2010ஆம் ஆண்டு கிரேக்க பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படவே 2012ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியன கடன் வழங்க ஒப்புக் கொண்டிருந்தன. தற்போது கிரேக்கத்தில் கடன் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் கடன் மீட்புத் திட்டம் எனும் நோக்கில் பல நிபந்தனைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி கிரேக்க அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வரிகளை உயர்த்த வேண்டுமெனவும் அரசின் வரவு-செலவுத் திட்டங்களை குறைக்க வேண்டுமெனவும் கோரியிருந்தன.
மேலும், அரசின் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்தல் வேண்டும், வரி ஏய்ப்புகளைத் தடுக்க வேண்டும், வணிகம், தொழில் பெற வழிவகை செய்ய வேண்டுமெனவும் கோரி இருந்தன. இந்நிலையிலேயே இவை தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமென பிரதமர் அறிவித்திருந்தார். இச்செயற்பாடுக்கு அந்நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால், இதனை ஏற்றால் ஐரோப்பாவில் கிரேக்க மக்கள தன்மானத்துடன் வாழ முடியாதென கிரேக்க பிரதமர் கருதியதாலேயே மக்களை எதிராக வாக்களிக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், தன்னுடைய நிபந்தனைகளில் உறுதியாக இவ்வமைப்புகள் இருப்பதற்கு முக்கிய காரணம், கிரேக்கத்தை முதன்மையாக கொண்டு கடன் பெற்றுள்ள ஏனைய நாடுகளும் கடனை திருப்பிச் செலுத்துவதில் தயக்கம் காட்டலாம் என்பதாலேயே ஆகும். வளர்ச்சி பெற்ற நாடாக கிரேக்கம் உள்ள போதும், சர்வதேச நாணய நிதியத்துக்கு செலுத்த வேண்டிய 1.5 பில்லியன் யூரோவை செலுத்தாததால், கடனை செலுத்த தவறிய முதலாவது வளர்ந்த நாடு என்ற அவப்பெயரும் கிரேக்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அவசர தேவையாக 30 பில்லியன் யூரோக்களை வழங்குமாறும் கிரேக்கம் கோரி வருகிறது. ஆனால், அவற்றுக்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவேயுள்ளன.
கிரேக்க வங்கிகளில் பணமில்லை
கிரேக்கத்தில் நிலவுகின்ற பணநெருக்கடி காரணமாக வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் ஏ.டி.எம்.களில் பணம் பெறுகின்ற தொகையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருவார காலப்பகுதிக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் வங்கிகளின் ஏ.டி.எம்.மூலம் ஒரு நாளைக்கு பெறப்படும் தொகை 60 யூரோக்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், ஓரிரு நாட்களில் ஏ.டி.எம்.களில் காணப்படும் பணமும் மீளப் பெற்றுவிடப்படும் நிலையில், அனைத்து வங்கிகளிலும் பணம் இல்லாத நிலை உருவாகும். இது அந்நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்கக்கூடிய நிலை உருவாகலாம்.
இந்நிலையில் கடன் பிணையை பெறுவதற்கு கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடலில் 30 வீதமான கிரேக்க கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே கிரேக்கத்திற்கு வழங்கிய 350 கோடி யூரோவை எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் வழங்க வேண்டுமென்ற நிபந்தனையை ஐரோப்பிய மத்திய வங்கி விதித்துள்ளது. எனவே, குறித்த காலத்தில் கிரேக்கம் கடனை செலுத்தாவிடின் அவசர கால கடன் உதவியை ஐரோப்பிய மத்திய வங்கி முற்றிலும் நிறுத்திவிடலாம். ஏற்கனவே வங்கிகள் அனைத்தும் காலியாகவுள்ள நிலையில் இக்கடன் தொகையும் நிறுத்தப்பட்டால் கிரேக்க வங்கிகளின் நிலை மிகவும் மோசமாகிவிடும்.
கிரேக்க கடன்தாரர்கள்
ஐரோப்பாவின் கடன் நெருக்கடியானது, 2008ஆம் ஆண்டு ஐஸ்லாந்தின் வங்கிமுறைமை சிதைவடைந்ததை தொடர்ந்து உருவானது. இதனால் 2009ஆம் ஆண்டு கிரேக்கம், போர்த்துக்கல், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. மேலும், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளும் ஓரளவுக்கு பாதிப்படைந்தன. இந்நிலையானது யூரோ வலய நாடுகளையே அதிகம் பாதித்தன. இதுவே தற்போது கிரேக்கத்தையும் ஆள்கின்றது. யூரோ வலயமானது 17 நாடுகளின் தனி நாணயத்துக்கான கூட்டிணைவாகும். யூரோ நாணயத்தை இந்த 17 நாடுகளும் தேசிய அலகாக பயன்படுத்துகின்றன. 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2002ஆம் ஆண்டு பாவனைக்கு வந்தது.
தற்போது இவ்வலயத்தில் அதிகமான நிதி நெருக்கடியில் இருப்பது கிரேக்கம். யூரோ வலயம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் என பல நாடுகள் கிரேக்கத்துக்கு கடன்தாரார்களாக இருக்கின்றன. ஆனால், கிரேக்கம் இவர்களுக்கான கடன் தொகையை மீளளிப்பதிலேயே பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது.
மேற்படி நாடுகள் மற்றும் அமைப்புக்களிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையினை மீள செலுத்துவதற்கான கால எல்லை நெருங்கி வரும் நிலையில் கிரேக்கம் கடும் நெருக்கடியினை சந்தித்துள்ளது. முன்னதாக கிரேக்க வங்கிகளை இயங்க வைத்துக் கொண்டிருந்த ஐரோப்பிய மத்திய வங்கி தனது அவசரகால நிதியுதவிக்கான உச்சவரம்பை மட்டுப்படுத்தி அறிவித்தவுடனேயே கிரேக்க வங்கிகள் அனைத்தும் தமது செயற்பாடுகளை நிறுத்தி கொண்டிருந்தன. இவ்வாறான நிலையில் கிரேக்கத்துக்கான கால எல்லை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை மூன்று அமைப்புகளும் கடன் மீள்பெறும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமானால் கிரேக்கத்தின் எழுச்சியில் ஓரளவு முன்னேற்றத்தை காணமுடியும். இல்லாது போனால் கிரேக்கம் இவர்களுடைய நிபந்தனைகளை ஏற்று செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இவற்றில் ஒன்றே கிரேக்கத்தின் தலைவிதியை தீர்மானிக்கும்.
அதேவேளை, கிரேக்கத்தில் இடம்பெற்ற பொது மக்கள் வாக்கெடுப்பில் கடன் தாரர்களின் நிபந்தனைகளுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பு இடம்பெற்றுள்ள நிலையில் யூரோ வலயத்திலிருந்து கிரேக்கம் வெளியேறும் என்ற நிபந்தனையை பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய பலம் வாய்ந்த நாடுகள் தடுக்கும் சூழ்நிலையில் கிரேக்கத்திற்கு மேலும் உதவ முன்வரலாம். கிரேக்கம் யூரோ வலயத்திலிருந்து விலகுமாயின் அது பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு சவாலாக அமைவதுடன் பலவீனமான நிலைக்கும் தள்ளப்படும். எனவே, ஏதோவொரு வகையில் மீண்டும் கிரேக்கத்துக்கான சாதக நிலைமைகளை ஐரோப்பிய அமைப்புகள் தோற்றுவிக்கலாம். இல்லையெனில், கிரேக்கத்தின் நிலைமை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.
12.07. 2015




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக