கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 ஆகஸ்ட், 2015

கர்ப்பிணிகள் கவனம்


இன்று உலகளவில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மிகவும் வலியன. இவற்றில் இவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைவது குடும்பம். வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது திருமணமான பெண்களாகவே இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் குழந்தை பேற்றின் போதும் பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இன விருத்திக்காக பெண் ஆற்றும் உயர்ந்தபட்ச விடயமாக குழந்தைப் பேறு காணப்படுகின்ற நிலையில், இவ்வாறான விடயங்கள், சமூகத்தின் இன்றைய நிலைமையைப் பற்றி அதிகமாக ஆராயச் செய்கின்றன.


அமிலத் தாக்குதல், மார்புச் சூடு, வன்புணர்வு, வரதட்சணை  கொடுமை, கௌரவ கொலை, பெண் உறுப்பை சிதைத்தல், கட்டாய திருமணம், பெண் சிசு கொலை,  கட்டாய கருக்கலைப்பு, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, பாலியல்  தொழில் என பல்வேறு  துஷ்பிரயோகங்கள் பெண்கள்  மீது திணிக்கப்படுகின்ற நிலையில், தற்போது கர்ப்பிணிப் பெண்களும் வன்முறைகளுக்கு ஆளாகுவது அனைவரும் சிந்திக்கும் விடயமாகிப் போயுள்ளது.

குழந்தை பிரசவிக்கும் நேரங்களில் வைத்தியசாலைகளில் மட்டுமல்லாது குடும்பங்களினாலும் கர்ப்பிணிப் பெண்கள் வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர். இது இலங்கையில் மட்டுமல்லாது உலக நாடுகளிடையேயும் காணப்படும்  மோசமான வன்முறை உத்தியாகும். இவ்வாறு உடலை வருத்தியோ, பேச்சாலோ அல்லது உணர்ச்சிபூர்வமாகவோ கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தாயை மட்டுமல்லாது குழந்தையையும் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு பெண் திருமணமான பின்பு செல்லும் கணவனின் வீடுகளிலேயே அதிகமான வன்முறைகளை இனங் காணக் கூடியதாகவுள்ளது.
 சில கணவர்களுக்கு மனைவி கருவுற்றலே அவர் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.  அது அப் பெண்ணினதும் குழந்தையினதும்  எதிர்காலத்தை மிகப் பெரிய கேள்விக்குரியாக்கி விடுகிறது. உடல், உள ரீதியான பாதிப்புகளையும் இருவருக்கும் ஏற்படுத்தி விடுகின்றன. உலகில் பெண்களில் மூன்றில் ஒருவர் பாலியல்  அல்லது உடல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

 கொலை செய்யப்பட்டுள்ள பெண்களில் 38 வீதமானவர்கள் அவர்களுடைய துணையினாலேயே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு பெண்களுக்கு சமூகத்தை விட குடும்பங்களே அதிக எதிரியாக இருப்பதை உணர்த்துகிறது. எனவே குடும்பங்கள் தமது செயற்பாடுகளை மாற்றிக் கொள்ளும் வரை இச் செயற்பாடுகளை எம்மால்  தடுக்க முடியாது போகலாம். மேலும் இவ்வாறான வன்முறைகள் பெண்களின்  மனநிலையை வெகுவாக பாதிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறான வன்முறைகளை பொறுத்துக் கொள்ளும் நிலைமையையும் பெண்கள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அந்த ஸ்தாபனம் கோரியுள்ளது.

 அதிகமாக இலங்கை , இந்தியா, பங்களாதேஷ்  போன்ற நாடுகளில்  38 வீதமான பெண்கள் தமது வாழ்க்கைத் துணைகளாலேயே  வன்முறைகளைச் சந்திக்கின்றனர். ஆபிரிக்க நாடுகளில்  37 வீதமாகவும்  ஐரோப்பாவில்  25 வீதமாகவும் இருக்கிறது. கிராமப் புறங்களில் இன்றும்  கர்ப்பிணிப் பெண்களை மிகவும் பாதுகாப்பாக வழிநடத்தும் முறை இருக்கிறது.
 இன்றைய நகர வாழ்க்கை, வேலைப்பளு என்பன அதை கொஞ்சம் தடை செய்திருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தமானது பிறக்கும் குழந்தையின் நடத்தை கோலங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவை  கண்டு பயப்படுதல், பெற்றோர் தொடுவதை கூட தடுப்ப து, மிரட்சியாகவே இருப்பது போன்ற மோசமான அறிகுறிகளை குழந்தைகளிடையே தோற்றுவிப்பதாக அவ்வாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள்  குடும்பங்களில் சந்தித்த வன்முறைகள் இவ்வாறிருக்க, தற்போது குழந்தைப் பேற்றின் போதும் பெண்கள் துஷ்பிரயோகங்களை சந்திப்பது  மோசமான சமூக சீரழிவினையே காட்டுகிறது.

  34 நாடுகளில் நடத்தப்பட்ட  65 ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி உடல், உள , பாலியல் ரீதியான வன்முறைகளை பெண்கள் குழந்தைப் பேற்றின் போதும் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவு மகப்பேற்றின் போதான இறப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த  2010 ஆம் ஆண்டு  2,89,000 தாய்மார் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக  சர்வதேச ஆய்வுகள் ö தரிவிக்கின்றன.
 தனியார் வைத்தியசாலைகள் தாய்மார் மீது கொள்ளும் அக்கறையில் குறைந்த பட்சமேனும் அரச வைத்தியசாலைகள் கொள்வதில்லை.  இன,மத பாகுபாடு இங்கு  பார்க்கப்படுகிறது. அதிகமான செலவீனம் காரணமாக வறிய குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அரச வைத்திய சாலைகளையே நாடுகின்றனர். இங்கேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக துன்புறுத்தப்படும் இடங்களாக அரச வைத்திய சாலைகளே காணப்படுகின்றன. ஆனால், ஆதாரங்கள் எவையும் வெளியாவதில்லை என்பதே மிகப் பெரிய குறை.

 கருவுறாத காலத்தை விடவும் கருவுற்ற காலத்திலேயே பெண்கள் அதிகமான வன்முறைகளை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது வளர்ச்சியடைந்த நாடுகளையும் விட்டு வைப்பதில்லை.  அமெரிக்காவில் வருடாந்தம்  3,24,000 க்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் குடும்ப வன்முறைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது இங்கிலாந்தில்  3.4 வீதமாகவும் அமெரிக்காவில் 3.4 - 33.7 வீதமாகவும் அயர்லாந்தில்  12.5 வீதமாகவும் கனடா, சிலி, எகிப்து , நிக்கரகுவா போன்றவற்றில்  6 - 15 வீதமாகவும் கர்ப்பிணிகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 பதின்ம வயதுப் பெண்களுக்கே இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது. அவற்றில் வறிய நிலை தாய்மார்களுக்கு  38 வீதமாக இவை அதிகரிக்கின்றது. பொதுவாகவே குடும்பம் முதல் சமூகம் வரை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருவதை புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிகிறது. எனவே இவற்றுக்கான தீர்வு குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுவதுடன் வைத்தியசாலைகளும் இவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

 பெரும்பாலும் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறான விடயங்கள் அதிகம் வெளிவருவதில்லை. இலங்கையில் மலையகப் பகுதிகளில் இவ்வாறான நிலைமைகளை அதிகமாகவே உணர முடியும். ஆனால்,  வெளிக் கொணருவதிலும் சிக்கல் நிலையுள்ளது. எனவே தாய்மார் வன்முறைக்கு எதிரான விடயங்களை முன்னெடுக்க வேண்டும். இவை தொடர்பில் நிறுவனங்களின் உதவிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே இவர்கள் குரல் கொடுப்பதன் மூலமே உலகம் இவர்கள் தொடர்பில் அக்கறை கொள்ளத் தொடங்கும்.

க. பிரசன்னா
08.07.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக