பங்களாதேஷில் திறந்தவெளி கழிப்பறையை 3 வீதமான மக்கள் பயன்படுத்தும் நிலையில் பாகிஸ்தானில் 25 வீதமானோரும், இந்தியாவில் 50 வீதமானோரும் பயன்படுத்துகின்றனர். இது இந்திய சனத்தொகையில் சரிபாதியாகும். மிகவும் பின்தங்கிய பிரதேசம் மற்றும் பிற்போக்கு சமூகங்களிலேயே இவற்றை அதிகமாக இனங்காண முடிகிறது. இவை சுகாதார பிரச்சினைகளில் மட்டும் அதிகமான தாக்கத்தை செலுத்தவில்லை. மாறாக சிறுவர்கள், பெண்களின் பாதுகாப்பிலும் அதிகமான தாக்கத்தை செலுத்துகின்றன. இந்தியாவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாகும் சிறுவர்கள், பெண்களில் அதிகமானோர் திறந்தவெளி கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர். இவர்கள் இம்முறையை கையாள்வதே சமூக சீர்கேடுகளுக்கு வழிசெய்கிறது என்கின்றன ஆய்வுகள்.
இந்தியாவின் தமிழக கிராமப்புறங்களில் 70 முதல் 75 வீதமான மக்களின் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லையென்பது மிகப்பெரிய அவலமாகும். நகர்ப் புறங்களில் 25 வீதமான வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் திறந்த வெளி கழிப்பறையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனை நாம் பல இந்திய சினிமாக்களில் நகைச்சுவையாக பார்த்திருப்போமே தவிர அதனை உணர்ந்ததில்லை. இந்திய மக்கள் அவர்களையே சினிமாவாக காட்டிக் கொள்கின்றனர். இவற்றில் இன்னொரு பிரச்சினையும் உண்டு. சிலரின் வீடுகளில் கழிப்பறை வசதி இருந்தும் 40 முதல் 45 வீதமான மக்கள் அதனை பயன்படுத்துவதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது மக்களுக்கு முறையாக கிடைக்காத விழிப்புணர்வும் கல்வியறிவின்மையையுமே எடுத்துக்காட்டுகிறது. இவர்களில் தங்களது சொந்த பணத்தில் கழிப்பறைகளை கட்டுவோர் பயன்படுத்தினாலும், தன்னார்வ நிறுவனங்கள், அரச உதவிகள் மூலம் கட்டித்தரப்படும் கழிப்பறை வசதிகளை பாவிப்பதில்லை என்ற அதிசயமான விடயங்கள் ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றன. சிலரின் நாளாந்த பழக்கவழக்கங்களும் இதற்கு காரணமாகலாம். சிறுவயது முதல் வயது முதிர்ந்த காலம் வரை திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தும் ஒருவர் இலகுவில் வீடுகளில் பயன்படுத்துவதை விரும்புவதில்லை என்பது ஒரு காரணம்.
எனவே கழிப்பறை வசதி என்பது சிறுவயது முதல் பழக்கப்படவேண்டிய, பழக்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆனால் இலங்கையில் இந்நிலைமை கொஞ்சம் மோசம். இலங்கையில் கிராமம், மற்றும் தோட்டப்புறங்களில் பலர் இன்னும் திறந்தவெளி கழிப்பறையையே பயன்படுத்தி வருகின்றனர். கல்வி அமைச்சின் அண்மைய அறிவிப்பின்படி, நாடளாவிய ரீதியில் 500 பாடசாலைகளில் கழிப்பறை வசதியே இல்லையென்பதுடன் 2000 மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் ஒரேயொரு கழிப்பறையே காணப்படுகிறது. அவ்வாறெனின் இலங்கையும் இவ்வாறான விடயங்களில் அதிகம் முன்னேற வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறான விடயங்களில் பாடசாலை நிர்வாகம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.
இந்தியாவில் 100 சதவீதம் கழிப்பறையை பயன்படுத்தும் மாநிலமாக சிக்கிம் மாநிலம் காணப்படுகிறது. அடுத்ததாக கேரளா, இமாசல பிரதேசங்கள் காணப்படுகின்றன. ஆனால் ஒரிசா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கழிப்பறையை பயன்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. ஒரிசா மாநிலத்தை சுகாதார மாநிலமாக அறிவிக்க இன்னும் 160 வருடங்கள் எடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுபோல் ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், சதீஸ்கர், தமிழ்நாடு, மகாராஸ்டிரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், குஜராத், அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் அஸாம் ஆகிய மாநிலங்களில் வீடுகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த இன்னும் 25 வருடங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் உத்தர பிரதேசத்திலேயே அண்மையில் இரண்டு சிறுமிகள் திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்த முனைந்தபோது வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர். உத்தர பிரதேசத்தில் பல கிராமங்களில் நடக்கும் பெரும்பாலான வல்லுறவுச் சம்பவங்கள் கழிப்பறை வசதியில்லாத பெண்கள், திறந்தவெளி கழிப்பறை வசதியை பயன்படுத்தும் போதே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். வீடுகளில் கழிப்பறை வசதியிருந்திருந்தால் சுமார் 400 வல்லுறவு சம்பவங்களை தடுத்திருக்கலாமென பீஹார் காவல் துறை தெரிவிக்கிறது.
இவ்வாறு திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்துவதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகவே இருக்கின்றனர். ஆபாச வார்த்தைகள் தொடங்கி, பாலியல் துஷ்பிரயோகங்கள் வரை இவர்கள் எதிர்நோக்குகின்றனர். இந்தியா, நைஜீரியா, உகண்டா போன்ற பகுதிகளில் இவற்றை அதிகம் காணமுடிகிறது. இந்தியாவில் கிராமப்புற பெண்களில் 60 வீதமானோருக்கும், பழங்குடி பெண்களில் 60 வீதமானோருக்கும் கழிப்பறை வசதியே இல்லை. இதனால் சுமார் 25 வீதமான கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. திறந்த வெளி கழிப்பறையை பயன்படுத்தும் சில பெண்களுக்கு குறைபிரசவம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக குறைபிரசவங்களில் குழந்தை பிறப்பு காணப்படுவதுடன் சீனா இரண்டாம் இடத்தில் காணப்படுகிறது. எனவே கழிப்பறை வசதியின்மை என்பது வறுமையை காட்டிலும், திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்துவதால் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை சமூகம் அறிந்து கொள்வது அவசியம். இந்தியாவில் சீக்கிய மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களில் 70 வீதமான வீடுகளில் கழிப்பறை வசதி இருக்கிறது. ஆனால் இந்துக்கள் குடும்பத்தில் 45 வீதமான வீடுகளிலேயே கழிப்பறை வசதி இருக்கிறது. இதற்கு காரணம் பெரும்பாலான பணக்காரர்கள் சீக்கிய, கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
சுகாதாரம் என்பது மதம் சார்ந்ததல்ல. ஆனால் இவற்றை சமூகங்கள் உணரவில்லை. இந்தியாவில் கழிப்பறை புள்ளிவிபரங்கள் மதரீதியாகவும் இருக்கின்றன. ஆனால் அவை முன்னேற்றம் காண்பதில் பின்னடைவையே சந்திக்கின்றன. இந்தியாவில் கழிப்பறை வசதி பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை ஒரு வீதமாகவே அதிகரித்து வருகிறது. இவை முழுமை பெற வேண்டுமானால் அவை 15 வீதமான அதிகரிப்பை எட்டவேண்டும். இந்தியாவில் 90 கோடி மக்கள் தொலைபேசி பயன்படுத்துகின்றனர். 70 கோடிக்கும் அதிகமானோர் தொலைக்காட்சி பெட்டிகளையும் 50 கோடிபேர் இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் 40 வீதமானோர் மட்டுமே கழிப்பறை வசதியை கொண்டுள்ளனர். இவற்றில் 20 வீதமானோரே அவற்றை பயன்படுத்துகின்றனர்.
எனவே உலகம் எத்திசை நோக்கி பயணிக்கின்றது என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் அவற்றை முறியடிப்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல. கழிப்பறை வசதியின்மையை பெண்கள் மீது செலுத்தப்படும் மிகப்பெரிய வன்முறை என உலகம் சொன்னாலும் இன்று கழிப்பறையை பயன்படுத்தாத அதிகமான பெண்கள் தொலைபேசிகளையும், தொலைக்காட்சியையும் பயன்படுத்துகின்றனர். எனவே மாற்றம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. இதை சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இலங்கையின் பெருந்தோட்டங்கள் இவற்றில் முக்கியமானவை. தொலைக்காட்சி, ஏனைய இலத்திரனியல் பொருட்கள் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால் பெரும்பாலானோர் திறந்தவெளி கழிப்பறையையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை பெரும்பாலும் எல்லோராலும் வெட்கம் கருதி மறைக்கப்பட்டு வருகின்றன. நகர்புறங்களில் கூட ஒருகுடும்பம் ஒரு கழிப்பறையை பயன்படுத்தும் நிலை இல்லை. அதிகமானோர் பொது கழிப்பறையையே பயன்படுத்துகின்றனர். எனவே சுகாதாரத்தை விரும்பும் சகலரும் இவை தொடர்பில் அதிகமான கரிசனைகளை கொண்டிருப்பது அவசியமாகும்.
\
க.பிரசன்னா
15/07/2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக