கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

14 ஆகஸ்ட், 2015

விதவைகளின் விடிவுக்கு வழி என்ன ?


ஆண், பெண் என்ற பாகுபாட்டில் உரிமைகள் என்பது சரி நிகராக காணப்பட்டாலும் பெண்களை வஞ்சிக்கின்ற சமூகங்களே அதிகமாக இருக்கின்றன. இவற்றில் விதவைகள் அல்லது கைம் பெண்களின் நிலை மோசமானது. ஆண்கள் தன் துணைவியரை இழந்தால் மீண்டும் மறுமணம் செய்து கொண்டு சமூகத்தில் முதன்மை பெற இருக்கும் சந்தர்ப்பங்கள் விதவைகளான பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகின்றன. இவற்றை எவ்வாறு பெறுவது ? இதற்காக சமூகம் எவ்வாறு மாற்றம் பெற வேண்டும் என்பது இன்று வரையும் புரிந்து கொள்ள முடியாத புதிர். இலங்கை  மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகக் காணப்படும் விதவைகளின் நிலைமையும் இன்று இவ்வாறு தான் இருக்கின்றது.
ஐ.நா. சபையின் தகவல்களின் படி உலகில்  245 மில்லியனுக்கும் அதிகமான  விதவைகள் இருக்கின்றனர். இலங்கையில்  கடற்கோள் அனர்த்தம் மற்றும்  30 வருட கால யுத்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விதவைகள் காணப்படுகின்றனர். இவர்களில் கிழக்கு மற்றும்   வடக்கு மாகாணங்களில் மட்டும்  89 ஆயிரத்துக்கும்  அதிகமான விதவைகள் உள்ளனர்.  இவர்களில் பலர் தமது  குடும்பத்தை தலைமையேற்று வழிநடத்தும் துர்ப்பாக்கிய சூழலிலும் இருக்கின்றனர். ஆனால், சமூகம் இவர்களை இன்னும்  சாதாரண மனிதர்களாகக் கூட இனம் காண மறுக்கின்றது.

உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் இடம்பெறும் யுத்தங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் விதவைகளை பெருமளவில் உருவாக்கி வருகின்றன. இவர்கள் அனைவரும் பிற்காலங்களில் தங்களது குடும்பங்களாலேயே தவறான பாதைகளை நோக்கி தள்ளிவிடப்படுகின்ற நிலைமையும் காணப்படுகிறது. இவற்றை எவ்வாறு தடுப்பது ? இதற்காகவே கடந்த  2010 ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் ஜூன்  23 ஆம் திகதி சர்வதேச விதவைகள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பற்றி அறிந்தோர் எம் மத்தியில்  எத்தனைபேர் ? விதவைகளை சமூகத்தில் சமமாக மதிக்கத் தெரியாதோர் இதைப் பற்றி எப்படி தெரிந்திருக்க முடியும்.

 காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், முட்டாள்கள் தினம் என்று  இவற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் சரிபாதி கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை. விதவைகளிலும் அன்னையர் இருப்பதை இந்த சமூகம் ஏனோ மறந்து விட்டது போலும் . உலகில் பல பாகங்களில் காணப்படும் விதவையர் இளம் வயதினராக இருப்பதால் தமது எஞ்சிய வாழ்நாட்களை கடப்பதில்  அவர்கள் பாரிய சவாலை எதிர்நோக்குகின்றனர். செல்வந்த மேற்கத்தேய நாடுகளில் உள்ள விதவைகளுக்கும் ஆசியா , தென் அமெரிக்கா,  ஆபிரிக்கா போன்ற நாடுகளிலுள்ள விதவைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு. இவை சமூகம், உரிமை, உதவி என சகல வகையிலும் வித்தியாசப்படுகிறது. செல்வந்த நாடுகளில் விதவைகளுக்கு சமூகப் பாதுகாப்பு, கொடுப்பனவு, வேலை வாய்ப்பு,  தங்களுடைய சம்பளத்துடன் கணவன்மாரின் ஓய்வூதியம் என சகல சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆனால், எமது சமூகம் அவ்வாறு இருக்கின்றதா ? குறைந்த பட்சம் அவர்களுக்கு அடிப்படை வாழ்வாதார வசதிகளையாவது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதா ?  ஆனால், அவர்களை தவறான பாதைகளுக்கு அழைத்துச் செல்ல  ஆயிரம் மனிதர்கள் காத்திருக்கின்றார்கள் என்பது உண்மை.

 இவர்கள் கடுமையான வறுமை மட்டத்துக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ள பெண்களாக இருக்கின்றனர். உலகில்  245  மில்லியன் விதவைகளில்  115 மில்லியன் விதவைகள் ஆபிரிக்க நாடுகளில் காணப்படுகின்றனர். இவர்கள் உள்நாட்டுப் போர்ச் சூழலாலும் எயிட்ஸ் நோயினாலும் தமது வாழ்க்கை துணையை  இழந்தவர்களாக இருக்கின்றனர்.  இந் நிலைமையினை எதிர்காலத்தில் எவ்வாறு இவர்கள் சமாளித்துக் கொள்வார்கள். இவர்களை தலைமையாகக் கொண்டு  செயற்படும் குடும்பங்களின் நிலையென்ன ? இவை தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளே கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் ஈராக் விதவைகளின் நிலை மிக மோசமாகியுள்ளது. ஈராக்கில் நிலவும் கடுமையான உள்நாட்டு யுத்த சூழ்நிலை காரணமாக தினந்தோறும் அதிகமான விதவைகள் உருவாகி வருகின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையினை கொண்டு நடத்துவதில் கடுமையான நெருக்கடி சூழ்நிலைகள் தோன்றுகின்றன. விதவைகள் பலவந்தமாக பாலியல் தொழில்களுக்குள் தள்ளப்படுகின்றனர். இதனை சமூகம் வரவேற்கிறது. இது  விதவைகள் இருக்கும் அனைத்து சமூகங்களிலும் இவர்கள் மீது வலிந்து திணிக்கப்படும் அடக்கு முறையாகும்.

 இன்று உலகில் அதிகமான  பாலியல் தொழிலாளர்கள்  தோற்றம் பெறுவதற்கு பெண்கள் விதவைகளாக இருப்பதும் ஒரு காரணமாகின்றது. விதவைகளாக நிர்கதியாகும் பெண்களின்  தொகை அதிகரித்து விட்டதால் , வேலை வாய்ப்புகளும் பெருமளவில் குறைந்து விட்டன. இதனால் தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்க õக பிச்சையெடுக்கும் நிலைக்கு தானாகவே முன்வர வேண்டிய சூழல் தோன்றியது.அவ்வாறு பிச்சையெடுக்க வீதிகளுக்கு  வரும் பெண்களை சமூகம் பாலியல் என்ற  துறைக்குள் வலிந்து திணித்து விடுகிறது. பிறகு அவர்கள் விபசாரம் என்ற சமூக அவலத்துக்குள் கண்ணீரோடு நுழைய வேண்டிய சூழல் உருவாகிறது. இது சமூகமே விதவைகளுக்கு ஏற்படுத்தும்  வன்முறையாக இருகிறது.
ஈரான் - ஈராக்கில் அமெரிக்க படையெடுப்புகளுக்கு முன்னர் இந் நாட்டு அரசுகளால் விதவைகளுக்கு வீடு, இலவசக் கல்வி மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது சூழ்நிலை தலைகீழாகியுள்ளதால் அவர்களுக்கான சகல நலத் திட்டங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

 ஈராகில் பெண்கள் உரிமைக்காக  போராடும் அரசு சாரா  அமைப்புகளின் தகவல்களின் படி ஈராக்கிய விதவைகளில்  15 வீதமானோர் தங்களது குடும்பத்திற்காக வேலை தேடி அலைவதோடு தற்காலிக திருமணம் மற்றும் விபசாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.  2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈராக்கில்  4000 க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் இவர்கள் வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டு விபசார தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வாறு ஈராக்கில் விதவைப் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் பெண்களை பாதுகாக்க சமூகங்கள் தவறிவிட்டன. ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்  350,000 விதவைப் பெண்கள் காணப்படுகின்றனர். ஈராக் முழுவதும்  80 இலட்சத்துக்கும் அதிகமான விதவைகள் இருக்கலாமென ஈராக் பெண்கள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ஆனால், இவர்களின் நிலையென்ன ?  இவர்களில் இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி பிறருக்கு அவர்களை விற்று விடுகின்றனர். இவர்கள்  500 டொலருக்கும் குறைவான டொலர்களுக்கு விலைபோகின்றனர்.
 இவ்வாறான சூழ்நிலையே இலங்கையில் தோன்றும் நிலை உருவாகியுள்ளது. விதவைப் பெண்களை விபசார தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கு சமூகம் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. பலர் இதன் வலைக்குள் விழுந்தும் விட்டனர். வட மாகாணத்தில் பெண்களுக்கு காணப்படும் வேலையில்லாப் பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில்  10.9 வீதம், கிளிநொச்சி  29.4 வீதம்,  மன்னார் 21.6 , முல்லைதீவு  20.5 , வவுனியா 9 வீதம் என்ற வகையில் பெண்கள் வேலை வாய்ப்பற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களில் குடும்பத்தை தலைமையேற்று வழிநடத்துபவர்களும் அதிகமுண்டு. எனவே இவ்வாறான பெண்களுக்கு சமூகம் மிகப் பெரிய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். அத்தோடு இளம் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதற்கான வழிகாட்டல்களை சமூகமும், அரசும் முன்னெடுக்க வேண்டும். காலங் காலமாக விதவைகள் மீது கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை தகர்த்து அவர்களை சமூகத்தில் முன்னிலைப்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

 இவர்களும் இச் சமூகத்தில் சந்தோஷமாக வாழப் பிறந்தவர்களே. மனிதனே பெண்களுக்கு இவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறான். எனவே, சம்பிரதாயங்களைக் களைந்து எதிர்காலத்தில் இவர்களையும் சமூக அங்கத்தவர்களாகக்  கொண்டு வாழ்வாதாரங்களை வழிநடத்திச் செல்வது ஒவ்வொரு மனிதனினதும் கடமையாகும்.

க. பிரசன்னா
22/07/2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக