மத்திய கிழக்கு நாடுகளில் பாதிக்கப்படும்
இவர்களைப் பாதுகாக்க என்ன வழி ?
இலங்கையின் அந்நியச் செலாவணியில் முக்கிய பங்கு பெறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கில் இலங்கை அரசு இதுவரையும் அதிக அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. ஆட்சி மாறியவுடன் கொடுக்கப்படும் வாக்குறுதிகளும் மாற்றம் பெற்றுவிடுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெரும்பாலானோர் குற்றமிழைக்காமல் தண்டனை பெற்று வருவதாகவும் சிலவேளை உயிருடன் செல்பவர்கள் பிணமாகவும், சிலரின் பிணம் கூடத் திரும்பி வருவதில்லையெனவும் வெளிவரும் செய்திகளை அன்றாடம் நாம் படித்து கொண்டு தான் இருக்கிறோம். எத்தனையோ அனுபவங்களையும் நாம் கண்டிருக்கிறோம்.ஆனால், இவை தொடர்பிலான எந்தவொரு தீர்வுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ, அமைச்சுகளோ முன்வைக்கவில்லை. வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்லும் அனைவரும் பயிற்சி பெற்றதன் பின்பே செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டாலும் அங்கு அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் துஷ்பிரயோகங்களையும் பாதுகாப்பற்ற நிலைமைகளையும் தடுக்க முடியாதுள்ளனர்.
இவ்வாறான நிலைமையை எவ்வாறு தடுப்பது? அல்லது கொலை குற்றச்சாட்டு, திருட்டு போன்ற போலிக் குற்றச்சாட்டுக்களில் சிக்கி தண்டனைகளை அனுபவிப்பவர்களை எவ்வாறு மீட்பது என்பவையெல்லாம் இன்னும் தீர்க்கப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. பணிப் பெண்களாக செல்பவர்களுக்கு சகல தகுதிகளையும் பரிசீலனை செய்யும் பணியகங்கள் அவர்களின் கல்வித் தகுதிகளை இனம் காண்பதில்லை. பெரும்பாலான பெண்கள் மொழிப் பிரச்சினை அல்லது பிரச்சினை ஏற்படும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் கூட கையாளத் தெரியாத நிலையிலிருப்பது கவலையானது.
இலங்கை போன்ற நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்பவர்களுக்கு கல்வித் தகைமை, தொழிற் தகைமை நிர்ணயிக்கப்பட்டால் பணிப் பெண்களாகச் செல்வோரின் தொகை சரிபாதியாக குறையும் வாய்ப்பிருக்கிறது. காரணம் கல்வித் தகைமை, தொழில் தகைமை இல்லாத பெண்களே பெருவாரியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். இவற்றை இதுவரையும் எந்தவொரு அரசும் பரீட்சித்துப் பார்த்ததில்லை. இலங்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் 6000 பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றனர். சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர். இவர்களில் மத்தியக் கிழக்கில் பணிபுரிவோரில் பெண்கள் அதிகமாகும். இவர்களில் 90 வீதமான பெண்கள் குவைத் , சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், லெபனான் ஆகிய நாடுகளில் பணிபுரிகின்றனர். ஆசியாக் கண்டத்திலேயே அதிகளவான பணிப் பெண்களை மத்திய கிழக்கில் கொண்ட நாடு இலங்கையாகும். இவ்வாறு பணிப் பெண்களாக செல்வோரில் அதிகமானோர் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், கொலை என்பவற்றில் சிக்கினாலும் அங்கு செல்லும் தொகையில் மாற்றமில்லை. இவர்கள் முகவர்களாலும் போலி முகவர்களாலும் ஏமாற்றப்பட்டு தினந்தோறும் ஏற்றுமதியாகி சென்ற வண்ணமேயுள்ளனர்.
இவ்வாறு அதிகளவான பணிப் பெண்களைக் கொண்ட இலங்கையானது அவர்கள் தொடர்பில் எவ்வளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும். மரணம் சம்பவித்தால் அவர்களது உடல்களை மாத்திரம் கொண்டுவந்ததால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா ? இவ்வாறு மத்திய கிழக்குக்கு செல்பவர்களில் அதிகமானோர் முகவர்களூடாக சென்றாலும் கூட 24 வீதமானோர் நண்பர், உறவினர்களால் வேலை வாய்ப்பை பெற்று செல்கின்றனர். அதற்கான பணத்தை இவர்கள் 15 - 20 வீத வட்டிக்குப் பெறுகின்றனர். ஆனால் 5 வருடங்கள் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொண்டு கடைசியில் கட்டிய பணத்தையேனும் திரும்பப் பெறமுடியாத நிலையில் கூட சில பெண்கள் நாடு திரும்புகின்றனர். உடல் , உயிர் எல்லாவற்றையும் விற்றும் நோயாளிகளாகவே நாடு திரும்பும் நிலைக்கு, பணிப் பெண்களைப் பொறுப்பேற்கும் மத்திய கிழக்கு குடும்ப எஜமான் , எஜமானிகள் ஆளாக்குகின்றனர். தற்போதைய நிலையில் ஒரு பெண்ணுக்கு மாதமொன்றுக்கு 100 டொலர்களே ஊதியமாக வழங்கப்படுகிறது. 71 வீதமானவர்கள் 95 டொலர்களுக்கும் குறைவான தொகையை பெறுகின்றனர். இவர்களுக்கு சட்ட ரீதியாக அடிப்படை சம்பள அளவு நிர்ணயிக்கப்படவில்லை. இதில் முறைப்படி சம்பளம் வழங்கப்படாமல் இன்னல் அனுபவிக்கும் பெண்களும் உண்டு.
இவ்வாறு பணிப் பெண்களாக செல்பவர்களில் 57.3 வீதமானோர் ஒப்பந்த காலம் நிறைவுடனும் 6.8 வீதமானோர் நோய் மற்றும் காயங்களாலும் கடுமையான வேலை காரணமாக 5.8 வீதமானோரும் நாடு திரும்புகின்றனர். அவ்வாறாயின் 12.6 வீதமானோர் துன்புறுத்தல் காரணமாகவே நாடு திரும்ப வேண்டிய சூழல் காணப்படுகிறது. இவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணம் என்ன ? இலங்கைப் பணிப் பெண்கள் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கப் பிறந்தவர்களா ? இவர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லையா ? என்று கேட்டுக் கொண்டே இருகிறோம். ஆனால், பதிலில்லை. சில வேளைகளில் பணிப்பெண்ணாக சென்று நாடு திரும்புவோரின் குடும்ப கட்டமைப்பு அதிகளவில் மாற்றத்தைக் கொண்டிருக்கிறது. தமது பிள்ளைகளை தந்தை அல்லது உறவினரிடம் ஒப்படைத்துச் செல்லும் நிலையில் அவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை காணப்படுகிறது. இலங்கையில் அதிகமாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சிறுமிகளின் தாய்மார் வெளிநாடுகளிலேயே பணிபுரிகின்றனர். எனவே பணிப் பெண்களாக செல்வோர் அதிக விடயங்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய நிலையிருக்கிறது.
லெபனானில் பணிபுரியும் பெண்கள் குறைந்த வேதனத்தில் 12 மணித்தியாலங்கள் தொழில் புரிகின்றனர். வேலை நேரம் வரையறுக்கப்படாமை, முறையான சுகாதார மருத்துவ வசதிகள் இல்லாமையால் உடல் மற்றும் மன ரீதியாக அதிகம் பாதிப்படைந்தவர்களாக இலங்கைப் பணிப் பெண்கள் இருக்கின்றமையும் வேதனையாகும். இவர்களை முறையாக வேலைக்கு அனுப்பும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் என்ன செய்கிறது ? 12 நாள் மொழிப் பயிற்சியுடன் மட்டுமே இவர்கள் அனுப்பப்படுகின்றனர். 30 - 40 வருடங்கள் இலங்கையில் வசிக்கும் ஒருவருக்கு மாற்று மொழியே தெரியாத நிலையிருக்கையில் 12 நாட்களில் அரபு மொழி மற்றும் தொழில் பயிற்சியை பணியகத்தால் வழங்கி விட முடியுமா ?
இவ்வாறான பொருத்தமில்லாத பயிற்சி முறையையே இதுவரையும் பணியகம் கடைப்பிடித்து வருகிறது. போட்டி மற்றும் ஊழல் நிறைந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க முறையான கட்டமைப்புகள் உருவாக்க வேண்டியது கட்டாயமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள இலங்கைத் தூதரங்கள் பணிப் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும். மற்றும் குற்றமிழைக்காமல் தண்டனைகள் அனுபவித்து வரும் இலங்கையர்களை மீட்பதற்கும் அதிகம் முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் அவர்கள் நாட்டுக்கு உயிரற்ற உடலாக திரும்பி வருவதை தடுக்க முடியாமல் போகும்.
க. பிரசன்னா
29/07/2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக