இஸிஸ் தீவிரவாதிகளின் கொடுமையான தாக்குதல்கள் தற்போது கண்டம் விட்டு கண்டம் பாய தொடங்கியிருக்கின்றன. பிரிட்டன், அமெரிக்கா என்பதையும் தாண்டி ஜப்பானுக்கு சென்று தற்போது ஜோர்தானுக்கு திரும்பி இருக்கிறது. இதனை அண்மையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட ஜோர்தானிய விமானியின் வீடியோ மூலம் விளங்கிக் கொள்ளலாம். 2014 மார்ச் மாதம் தொடங்கிய இஸிஸ் தீவிரவாதிகளின் வன்முறைகள் இன்றும் தொடர்ந்த நிலையிலேயே உள்ளன. பல உலக நாடுகள் ஒன்றிணைந்தும் கூட அவர்களின் செயற்பாடுகளை முடக்க தவறியிருக்கின்றன.
இவ்வாறான அசமந்தப் போக்கான நிலைமையே பல உயிர்களை காவு கொள்வதற்கு காரணமாக இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தமது நாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டவுடன் விறுவிறுப்புடன் பதில் தாக்குதலை ஆரம்பித்தன. ஆனால், அவை காலப்போக்கில் செயலிழந்த தன்மைக்குச் சென்றுவிட்டது. அப்போதெல்லாம் வாய் திறக்காத ஜப்பான் தற்போது தமது நாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டவுடன் பதில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருகிறது. அவ்வாறெனின், ஒவ்வொரு வல்லரசும் தமது சுயநலன்களுக்காகவே தம்மை சமூகத்தில் அடையாளப்படுத்த முனைகின்றதான நிலையினை தற்போது காணமுடிகிறது.
ஒரு குறிப்பிட்டதொரு எல்லைப் பரப்பிற்குள் தீவிரவாதத்தை உலக நாடுகளுக்கு சவால்விடுகின்ற வகையில் மேற்கொள்கின்ற இவர்களுக்கு வல்லரசு நாடுகளின் இராணுவ யுக்திகள் மண்டியிருக்கின்றனவா? கடந்தவாரம் ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகை புகைப்படப் பிடிப்பாளரான கெஞ்சி கோடோ மற்றும் தனியார் பாதுகாப்புத்துறை இயக்குநர் ஹருணா யுகாவா இருவரையும் பணயக்கைதிகளாக்கியிருந்த இஸிஸ் தீவிரவாதிகள் இருவரையும் விடுதலை செய்ய 200 மில்லியன் அமெரிக்க டொலரை ஜப்பானிய அரசிடம் கோரியதுடன் அதற்கு 72 மணிநேரம் காலக் கெடு விதித்திருந்தனர். ஆனால், இதற்கு ஜப்பானிய அரசு செவி சாய்க்காததால் அவர் சிரச்சேதம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சியை தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்று சில நாட்கள் கூட கழிந்து விடாத நிலையில் இன்னொரு பணயக்கைதி மற்றும் ஜோர்தான் விமானி ஆகியோர் இலக்குகளாக இஸிஸ் தீவிரவாதிகளால் நிர்ணயிக்கப்பட்டனர். கெஞ்சியை விடுதலை செய்வதற்கான உதவியை ஜப்பான், ஜோர்தான் அரசிடம் முன்வைத்தது. இதற்கு ஜோர்தான் அரசு சம்மதம் தெரிவித்திருந்ததுடன், விமானி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை இஸிஸ் தீவிரவாதிகளிடமிருந்து கோரியிருந்தது.
ஆனால், பதில் எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே ஜப்பான் பிணை கைதி கெஞ்சி சிரச்சேதம் செய்யப்பட்டிருந்ததுடன், ஜோர்தான் விமானியும் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். கெஞ்சியை சிரச்சேதம் செய்வது தொடர்பான 67 விநாடி வீடியோவில் ஜப்பானிய பிரதமருக்கு; ‘வெற்றி பெற முடியாத போரில் பங்குபற்றிய உங்களது முடிவினால் கெஞ்சி மட்டுமல்ல இன்னும் பல ஜப்பானியர்கள் கொல்லப்படுவார்கள்’ என இஸிஸ் தீவிரவாதிகள் எச்சரிகை விடுத்துள்ளனர். ஆனால், தீவிரவாதிகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.
இஸிஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரின் சகோதரியான 44 வயதுடைய சஜிதா அல் ரிஷாஜி மற்றும் ஈராக் நாட்டின் அல் கொய்தா உறுப்பினர் சியாத் அல் கர்போலி ஆகிய இருவரையும் விடுதலை செய்யுபடியான கோரிக்கையை ஜோர்தான் அரசிடம் இஸிஸ் முன்வைத்திருந்தது. 2005ஆம் ஆண்டு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் சஜிதா, இத்தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். 2008ஆம் ஆண்டு ஜோர்தானிய பிரஜை ஒருவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் கர்போலி என்பதுடன் இருவருக்கும் ஜோர்தான் அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே கடந்த டிசம்பர் மாதம் இஸிஸ் தீவிரவாதிகளின் சிரியாவின் தலைநகர் ரக்காவிலுள்ள நிலைகளின் மீது குண்டு வீசியபோது எப்-6 ரக விமானம் விபத்துக்குள்ளானது அதனை செலுத்திய ஜோர்தானிய விமானியான முயாத் அல் காசாஸ்பெ என்பவரை இஸிஸ் தீவிரவாதிகள் கைது செய்திருந்தனர். இவரை விடுதலை செய்வதற்கான கோரிக்கையை ஜோர்தன் அரசு முன்வைத்த நிலையிலேயே இரு அல்கொய்தா உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கான கெடுவினை இஸிஸ் முன்வைத்தது. விமானி தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்காக காத்திருந்த ஜோர்தான் அரசுக்கு அவர் இறந்ததான வீடியோவை வெளியிட்டது.
இந்நிலையில் விமானி முயாத்தை இரும்புக் கூண்டினுல் அடைத்து பெற்றோல் ஊற்றி தீ வைத்து உயிருடன் எரித்து கொல்வது போன்ற வீடியோவே வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியான வீடியோக்களிலேயே இதுவே மிகவும் கொடூரமானதாக கணிக்கப்படுகிறது. 22 நிமிடங்கள் கொண்ட இவ்வீடியோ தொடர்பில் உலக நாடுகளிலிருந்து கண்டனங்கள் பலமாக அதிகரித்து வருகிறன.
இச்செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ள ஒபாமா, ஜோர்தானின் பாதுகாப்புக்காக எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளார். இஸிஸ் தீவிரவாதிகளின் கொடுமையான செயல்கள் இஸ்லாம் மதத்திற்கு எதிரானதாகவே நோக்கப்படுகிறது. புனித இஸ்லாமியர்கள் என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளும் இவர்களின் செயல்கள் மூர்க்த்தனமாக காணப்படுகின்றன. ஐ.நா.வின் அறிக்கையின் படி கடந்த ஜனவரி மாதம் இஸிஸ் நடத்திய தாக்குதலில் 1375 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் ஜனவரியில் மட்டும் 790 பொது மக்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படைதரப்பில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் கூட்டுப்படைகள் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்கள் பெரிதாக வெற்றியளிப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் தீவிரவாதிகளின் குழுவில் உலக நாடுகளிலுள்ள பலர் இணைந்து கொள்கின்றனர். இவர்களில் பெண்களும் அடக்கம்.
இதனால் அவர்களின் படைபலம் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள அமெரிக்க கூட்டுப்படையில், சவூதி அரேபியா, ஐக்கிய இராச்சியம், ஜோர்தான், பக்ரைன், அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, டென்மார்க், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸிஸ் தீவிரவாதிகளின் இந்த கொடூர நடவடிக்கைக்கு பழிவாக்கல் நடவடிக்கையாக ஜோர்தான் அரசு அல்கொய்தா தீவிரவாதிகள் இருவருக்கும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஜோர்தான் தலைநகர் அம்மானின் தெற்கேயுள்ள சிறைச்சாலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு இருவருக்கும் தூக்கிலிடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஜோர்தான் அரசு அறிவித்துள்ளது. ஆனால், இவை புத்திசாதுர்யமான முயற்சியல்ல. ஒரு பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலேயாகும். எனவே, இனியும் இவ்வாறான தருணங்கள் ஏற்படாமலிருக்க உலக நாடுகள் கூட்டு முயற்சியில் சிரத்தை கொள்ளவேண்டும் என்பதே உலக மக்களின் நிலைப்பாடு.
க.பிரசன்னா
08.02.2015


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக