கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 ஜூலை, 2015

மத்திய கிழக்கை மிரட்டும் இஸிஸ்



மத்திய கிழக்கை மிரட்டும் ஒரு பிரமாண்ட அமைப்பாக இஸிஸ் மாறியுள்ளது. இல்லை மாற்றப்பட்டது என்றே கூறவேண்டும். இஸிஸ் அமைப்பு தோன்றுவதற்கு முக்கிய பங்காளியாக அமெரிக்காவே செயற்பட்டிருக்கிறது. ஈராக்கில் செயற்பட்ட அமெரிக்காவின் சிறையான பக்காவில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தவர்களே இன்றைய இஸிஸ் போராளிகளாக இருக்கின்றனர்.  இன்று சிரியாவில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக இவர்களால் பாரியளவிலான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. இவை வெளிப்படையாக இடம்பெற்றாலும் கூட உலக நாடுகள் இவை தொடர்பில் பெரியளவில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை சுமார் 100,000 இற்கும் மேற்பட்டோர் பக்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட அந்த சிறையில் இருந்த பலர் இன்று இஸிஸ் தீவிரவாதிகளாக இருக்கின்றனர். இதில் இதன் தலைவர் அல்.பாக்தாதியும் ஒருவராவார். இவர்கள் சிறையில் இருக்கும் போது அமெரிக்க பாதுகாவலர்களால் இவர்களுக்கு மேக்சிம் பத்திரிகை வாசிப்பதற்காக

வழங்கப்பட்டிருந்தது. அப்பத்திரிகையை மறுத்தவர்களை குற்றவாளிகளாக கருதி தனி சிறையில் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களே அங்கு பொறுமையாக திட்டம் தீட்டி இன்று மிக பிரமாண்டமான இஸிஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் திட்டம் தீட்டும் போது அரபு மொழியையே பயன்படுத்தினர். அமெரிக்கர்களுக்கு அரபு மொழி தெரியாது என்பதால் இவர்களுடைய திட்டம் இலகுவில் வெற்றி பெற்றிருந்தது. இஸிஸ் தலைவர் பாக்தாதி பக்கா சிறையில் 10 மாதங்களாக தண்டனை பெற்று வந்தார். இவர் 2004ஆம் ஆண்டு நன்னடத்தையின் காரணமாகவே விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதுவே இன்று அமெரிக்காவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்கள் பொறுமையாக, சுதந்திரமாக திட்டம் தீட்ட அமெரிக்காவே சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இன்று அமெரிக்காவே இவர்களுக்கு எதிராகவும் போராடுகிறது. ஆனால், இவர்கள் எல்லை மிக பரந்துபட்டதாக இருக்கிறது. தற்போதைய அளவில் இவர்களை முற்றாக அழிப்பதென்பது இயலாத காரியமாகவே உலக நாடுகளுக்கு இருக்கிறது. இதன் காரணத்தினாலேயே அவர்களின் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கின்றது.

தற்போது இவர்களின் பிடியில் இருக்கின்ற பெண்கள் அதிகளவான பாலியல் வன்கொடுமைகளுக்கு இலக்காகி வருகின்றனர். குறிப்பாக யசிதி இனப் பெண்களே மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களை கடத்தி வரும் இஸிஸ் தீவிரவாதிகள் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்துவதுடன், இவர்களை பாலியல் அடிமைகளாக சந்தையிலும் விற்று விடுகின்றனர். இவர்களை வாங்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய உச்ச அளவிலான செயற்பாடு முடிந்தவுடன் மீண்டும் சந்தைக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு 20இற்கும் அதிக தடவைகள் சந்தையில் விற்கப்பட்ட பெண்களும் இங்கிருக்கிறார்கள்.

தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களில் கன்னித்தன்மையுடன் இருக்கும் பெண்களை சிரியாவின் ரக்கா நகரில் காணப்படும் அடிமைச் சந்தைகளில் விற்று விடுகின்றனர். இவர்களை விற்பதற்கு முன்பு பெண்களின் கன்னித்தன்மை தீவிரவாதிகளாலேயே பரிசோதிக்கப்படும் கொடுமையும் நடந்து வருகிறது. இவ்வாறு இவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யாத பெண்களை உயிருடன் எரிப்பது, கொதி நீர் ஊற்றுவது என துன்பப்படுத்துகின்றனர். அவ்வாறு இவர்களிடம் இருந்து தப்பித்து வந்த பல சிறுமிகள், பெண்கள் கர்ப்பமாக கூட இருக்கிறார்கள்.

இது உலக நாடுகளுக்கு மனித உரிமை மீறலாக தெரியவில்லையா? அரபு நாடுகளும், அவர்களின் மதக்கொள்கைகளும் ஏன் இவைகளை கண்டு கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாது அதிகமான சிறுவர் போராளிகளை தம்மோடு இணைத்து அவர்களை தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்கு இஸிஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500 குழந்தைகளை கடத்தி இவ்வாறு செயற்படுத்த இவை தீர்மானித்துள்ளன. இதே போலவே கடந்த ஒருமாத காலப்பகுதியில் ஈராக்கின் கிழக்கு, அல்குயிம், அனஹ் மற்றும் ராவா ஆகிய பகுதிகளில் இருந்து 16 வயதிற்கும் கீழ்ப்பட்ட 100 சிறுவர்கள் இதுவரையும் கடத்தப்பட்டுள்ளனர்.

சிறுவர்களை போர்களில் ஈடுபடுத்துவது சர்வதேச குற்றமாகும். ஆனால், இவர்களின் நிலை மோசமாக இருக்கிறது. கடத்தப்பட்ட சிறுவர்கள் மீண்டும் வெடி குண்டுகளாக சமூகத்தின் பக்கம் திருப்பி விடப்படுவார்கள். அப்படியாயின் அச்சூழலை சிரியா, ஈராக் எவ்வாறு சமாளிக்கப் போகிறது. தற்போது இஸிஸ் தீவிரவாதிகள் சிரியா, ஈராக் ஆகியவற்றில் 300,000 கிலோ மீற்றர் பரப்பளவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்நிலப்பரப்பு இத்தாலி நாட்டினை விடவும் பெரியதாகும்.

ஈராக், சிரிய அரசுகளிடம் 20-30 சதவீதமான நிலப்பரப்பே கைவசம் உள்ளன. கடந்த 5 வருடங்களில் இஸிஸ் தீவிரவாதிகளின் இலக்கு மிகப்பெரிய எல்லையை தொட்டிருக்கின்றது. தற்போது இஸிஸ் மாத்திரமல்லாது, குர்திஷ் படை, கிளர்ச்சிக் குழு, அல்கொய்தாவின் அல் நுஸ்ரா போன்றோரின் கட்டுப்பாட்டிலும் சிரியா இருக்கிறது. எதிர்ப்பு தாக்குதல்கள் பலமாக இல்லாமையும், சர்வதேச ரீதியில் தீவிரவாதிகளுக்கான ஆதரவு பெருகியுள்ளமையும் இவர்களை அழிப்பதில், அல்லது தடுப்பதில் பாரிய பின்னடைவு காணப்படுகிறது. இவை உடனடியாக களையப்பட வேண்டும். இல்லையெனில் உலகம் மிகப்பெரிய ஆபத்தினை சந்திக்கலாம்.

க.பிரசன்னா
07.06. 2015 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக