இதன் விளைவாக நெடுநாட்களாக இழுபறி நிலையினை கொண்டிருந்த ஈரான் அணுவிவகாரம் தற்காலிக தீர்வினை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் திகதிக்குள் இவ்விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டிவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவற்றுடன் ஜேர்மனியும் (G5+1) இணைந்து சுவிட்சர்லாந்தின் லாஸன் நகரில் மேற்கொண்டுவந்த பேச்சுவார்த்தைகள் திட்டமிட்ட காலக்கட்டத்தையும் தாண்டி நீண்டு சென்றதால் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என ஊகிக்கப்பட்ட வேளை இடைக்கால தீர்மானங்களுக்கு ஈரான் ஒத்துழைத்துள்ளது. ஈரானிய அணு உற்பத்திக்கு ஆரம்பத்தில் உதவிசெய்து வந்த அமெரிக்கா, பின்பு ஏற்பட்ட மத வன்முறை, அரசியல் முறுகல் நிலை காரணமாக ஈரான் மீது நெருக்குதல்களை ஆரம்பித்திருந்தது. ஆனால், எண்ணெய் வளம்மிக்க ஈரானை தன்பிடியில் வைத்திருப்பதன் மூலம் மத்தியக் கிழக்குப் பகுதியில் தமது செல்வாக்கை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா- ஈராக் உறவு மத்திய கிழக்கு கிளர்ச்சிகள் மூலம் வலுப்பெற்றிருக்கும் நிலையில் இப்போக்கு சவூதி அரேபியாவை கடுமையாக பாதித்துள்ளது. ஈரானிய ஆதரவு படைகளுக்கெதிராக சவூதி தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா ஈரானின் நடவடிக்கைகளில் மென்போக்கை கடைப்பிடித்து சவூதிக்கு எரிச்சலை உண்டு பண்ணுவதாக அமைந்துள்ளது. இஸ்ரேலும் இந்தக்கூட்டணி தமது பிராந்திய செல்வாக்கை பாதிக்கும் என்ற வகையில் இவ்வுடன்படிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், ஈரானின் அணு விவகாரத்தில் அமெரிக்கா பலவிட்டுக்கொடுப்புகளை செய்துள்ளமை உள்நோக்கம் கொண்டதாகவே நோக்கப்படுகிறது.
தற்போதைய உடன்படிக்கையின் மூலம், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மற்றும் செறிவூட்டப்பட்ட சேமிப்பு களஞ்சியங்களை குறைத்து கொள்ளுதல், அடுத்த 10 ஆண்டுகளில், ஈரான் அதன் 19,000 அணுப்பிளப்பான்களில் 5060 ஐ மட்டுமே செயற்படுத்த அனுமதிக்கப்படும் என்பதோடு, அவ்வாறு செயற்படுத்தப்படுபவையும், மெதுமெதுவாகவே செயற்பட வேண்டும். மேலும், சர்வதேச அணுசக்தி கழகத்தின் தீவிர சோதனைகளுக்கு ஈரான் எச்சந்தர்ப்பத்திலும் இணங்க வேண்டும் என்ற முக்கிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஈரானின் படைத்துறை சாராத அணுசக்தி உள்கட்டமைப்பின் பெரும்பாலானவற்றை அகற்றிவிட வேண்டும். அத்தோடு அணு உலையின் மையப்பகுதி அகற்றப்பட வேண்டும். ஈரானிடம் தற்போது 10,000 கிலோ குறைந்த வீரியம் கொண்ட யுரேனியம் கையிருப்பில் உள்ளது. அதனை எதிர்வரும் 15 ஆண்டுகளில் 300 கிலோவாக குறைத்து கொள்வதற்கும் ஈரான் முடிவு செய்துள்ளது. மேலும், 2011ஆம் ஆண்டு முதல் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை பாரியளவு குறைத்து கொண்டுள்ளமையும், உலக வங்கியியல் அமைப்புகளில் இருந்து ஈரானை தனிமைப்படுத்தி வைக்கும் வகையிலான அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தடைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் ணீ5+1 அமைப்பு தமது அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளது. ஆனாலும், முழுமையாக நீக்கப்படாது. தற்போதைய உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை ஈரான் சிறப்பாக கடைப்பிடித்து செல்லுமாயின் எதிர்காலத்தில் அவை பற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென மேற்படி அமைப்பு அறிவித்துள்ளது.
தற்போதைய பயங்கரவாத, பொருளாதார நெருக்கடியில் ஈரான் இவ்விடயங்கள் தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கலாம். அத்தோடு இப்பேச்சு வார்த்தைக்கான தீர்வினை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட உலக நாடுகள் வரவேற்றாலும், இறுக்கமான, கடுமையான தண்டனைகளை ஈரான் மீது அமுல்படுத்தியதாலேயே, அடிபணிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பெருமிதம் கொண்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு மிகச் சவாலாக காணப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. அதனை தமது கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா பல வருடங்களாகவே முயற்சித்தும் தற்போதே அதன் எண்ணம் ஓரளவு நிறைவேறியிருப்பதாக கருதுகிறது.
1971ஆம் ஆண்டு ஈரான் புரட்சியில் ஆட்சிக்கலைப்பு இடம்பெற்றபோது, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பாரிய எதிர் பிரசாரத்தினை மேற்கொண்டிருந்தது. ஈரான் போரின் போது ஈராக்கிற்கு ஆயுதங்கள் வழங்கியமை, நீண்ட பொருளாதார தடை, இராணுவ தாக்குதல் குறித்த எச்சரிக்கை, இஸ்ரேலின் ஆதரவுடன் இணைய வழி போர்முறை என்பவற்றோடு ஈரானிய விஞ்ஞானிகளின் கொலையும் உள்ளடங்கும். இதேபோலவே ஈரானிடம் பாரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இல்லை என்பதை சதாம் ஹுசைன் நிருபிக்க வேண்டுமெனகோரி இறுதியில் படையெடுப்பின் பின் கொலையும் செய்தது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கைகளால் இன்று மத்திய கிழக்கு நாடுகள் சிதறிப் போய் கிடக்கின்றன. தற்போது மத்திய கிழக்கில் ஓரளவு பலமாக அமெரிக்கா காலூன்றியுள்ள நிலையில் கீழ்பிராத்தியங்களின் வரிசையில் தற்போது ஈரானும் வீழ்ந்துள்ளது. அதிக எண்ணெய் வளமிக்க நாடான ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்கா கொண்டு சென்றுவிட்டால், அதனை ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக விடுகின்ற சவாலாக அமையும். ஏற்கனவே ரஷ்யாவோடு ஐரோப்பிய ஒன்றியம் உறவினை முறித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவ்விடயம் இன்னும் இறுக்கத்தை கொண்டுவரலாம்.
12.04.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக