மத்திய கிழக்கின் தற்போதைய சூடான மற்றும் கொடூரமான விவகாரமாக யேமன் மீதான சவூதியின் வான் தாக்குதல்கள் அமைந்திருப்பதோடு, பாகிஸ்தானின் வரவும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியக் கிழக்கில் மிகவும் வறுமையான நாடாக கணிக்கப்படும் யேமனில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தால் இன்று அதன் நிலை முன்னையதை விட மோசமானதாக மாறியுள்ளது. இன்று அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளதுடன், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தையும் யேமன் மக்கள் சந்தித்திருக்கின்றனர்.ஈரானின் ஹௌதி மற்றும் அரேபிய தீபகற்ப அல்கொய்தா அமைப்புகளோடு போராடி வரும் யேமன், ஜனாதிபதி ஆதரவு குழுக்களோடு, சவூதி அரேபியாவும் வான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. பெருமளவான தீவிரவாத தாக்குதல்களினால் சிதைந்து போயுள்ள மத்தியக்கிழக்கு மீண்டெழும் என்பது இப்போதைக்கு சாத்தியப்படாத விடயமாகிப் போயுள்ளது. கடந்த சில வருடங்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை கொடூர கொலைகளுக்கு மத்திய கிழக்கு பலி கொடுத்துள்ளது. இதில் தற்போது யேமனும் உள்ளடங்குகின்றது.
சவூதி யேமனுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு தமது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்க கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. யேமனில் கடந்த சிலவாரங்களாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில் 540 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதுடன், 1700இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அத்தோடு கடந்த மார்ச் முதல் இடம்பெற்றுவரும் வன்முறைகளில் 74 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 44 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன் 100,000 மேற்பட்டோர் இடப்பெயர்ந்துள்ளதாகவும் யுனிசெப் அறிவித்துள்ளது. இத்தொகை இன்னும் சில நாட்களில் அதிகரிக்கும் நிலை யேமனில் தோன்றியுள்ளது.
துறைமுக பிராந்திய நகருக்கு நுழைவதற்காக தீவிரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் ஜனாதிபதி ஹதிக்கு ஆதரவான படையினர் இதனை தடுத்து வருகின்றனர். ஐ.நா.வினால் யேமனின் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக கணிக்கப்படும் ஹதி, அதிகரித்த மோதல்கள் காரணமாக தற்போது சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
மிகவும் அபாயகரமான சூழலை எட்டியுள்ள யேமனுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வழங்கிய உதவிகள் கிடைக்கப் பெறுவதிலும் தாமத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வளைகுடா கவுன்சிலின் அழைப்பின் பேரில் இவ்வமைப்பிலுள்ள நாடுகள் தங்களுடைய இராணுவ உதவிகளை யேமனுக்கு வழங்கி வருகின்றன. இந்நாடுகளுக்கே சவூதி தலைமை தாங்கி வருகிறது. ஹௌதி புரட்சி படைகளின் நிலைகளின் மீது தற்போது சவூதி வான் தாக்குதலை நடத்தி வருகிறது. எகிப்து, ஜோர்தான் போன்ற அரபு நாடுகளும் பாகிஸ்தான், சூடான் ஆகியவையும் இதற்கு உதவி வருகின்றன. இருப்பினும், இவை ஐ.நா.வின் ஒப்புதல் இல்லாமலேயே இத்தாக்குதல்களை மேற்கொள்வதுடன், அமெரிக்கா இதற்கான ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றது.
சவூதியின் போட்டி நாடாக கருதப்படும் ஈரானின் தலையீடு வளைகுடாவில் அதிகரிக்கக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டே சவூதி செயற்பட்டு வருகிறது. தன்னுடைய நட்பு நாடான சவூதிக்காகவும், உலகால் அங்கீரிக்கப்பட்ட ஹதி அரசுக்கு ஆதரவாகவும் யேமனில் அமெரிக்கா களமிறங்கியிருக்கிறது. யேமன் தலைநகரம் சனா உட்பட நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஹைளதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. யேமன் மக்கள் கூட வெவ்வேறு பிரிவுகளாக இணைந்து செயற்படுவதால் யேமனின் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
தற்போதைய யேமன் யுத்த நிலைமைகளினால் சீனாவின் கடற்படைக் கப்பல்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் துரிதமாக செயற்பட்டு வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 571 சீனர்களையும், 10 நாடுகளைச் சேர்ந்த 225 வெளி நாட்டவர்களையும் சீனாவின் 3 இராணுவக் கப்பல்கள் மீட்டுள்ளன. போர்க்களத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணியில் சீனா தனது இராணுவத்தை பயன்படுத்தியமை மிகவும் குறைவாகும். யேமனின் ஆபத்தான போர் வலயத்திலிருந்து வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதற்காக சீனாவால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முதலாவது நடவடிக்கையாக இது காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மனிதாபிமான உதவிகள், அழிவுகள் மற்றும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான மேலும் அதிகமான வளங்களை உலக நாடுகள் பெற்றுக் கொள்ள முடியுமென்ற முக்கிய அறிவிப்பை சீனா, உலகுக்கு இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. சீனாவின் வளம், பலம் மற்றும் சனத்தொகையானது ஒருபோதும் அழிவிற்கான சாத்தியமாக இருக்காது எனவும் இதை உணர்ந்தால் இழப்பதைவிட அடைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாகவும் சீன ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
தற்போது மேற்குலக நாடுகளின் எதிரிகளாக ரஷ்யாவும், சீனாவும் காணப்படும் நிலையில் சீனாவின் மனிதாபிமான உதவிகள் இதன்பால் கவனத்தைப் பெற்றுள்ளன. ஆனால், சீனாவின் நேரடி இராணுவப் போட்டி நாடுகளான அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இந்நிலைமையினை ஏற்றுக்கொள்ளுமா என்பது ஒருபுறமிருக்க எதிர்வரும் காலங்களில் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கூடிய மனிதாபிமான உதவிகள் யேமனுக்கு அதிகமாக தேவைப்படக்கூடியதாகும். இங்கும் போட்டித் தன்மை நிலவுமாயின் யேமனின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே மாறிப்போகும்.
க.பிரசன்னா
12.04.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக