ஈரானின் அணு உற்பத்தியை குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்கு அமெரிக்கா கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இதன் ஒரு அங்கமாகவே ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடையாகும். வீட்டோ நாடுகளை தவிர்த்து ஏனைய நாடுகள் அணு ஆயுதங்களை கையாள்வதற்கு பல கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஈரான் அதன் உச்சகட்ட அணு உற்பத்தியினை தம்வசம் வைத்திருந்தது.
இவை சர்வதேச நாடுகளுக்கு ஏற்படுத்தப்போகும் அச்சுறுத்தலே அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைக்கு முக்கிய காரணமாகும். 2012 ஆம் ஆண்டுகளில் இத்தடையினை அமெரிக்கா உட்பட்ட அதன் நட்பு நாடுகள் மேற்கொண்டிருந்தன. இதனால் அமெரிக்காவின் தடையை நீக்க ஈரான் அமெரிக்காவுடனான உறவை வளர்க்க பெரிதும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தது. ஈரானிற்கு எதிரான பொருளாதார தடை நீக்கப்பட்டால் உலகின் எரிபொருள் விலை குறைந்து உலகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதாலும் ஈரானிற்கு அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவு ஏற்றுமதியை செய்ய முடிமென்பதாலும் அமெரிக்காவிற்கு ஈரான் தேவைப்பட்டிருந்தது.
அத்தோடு அமெரிக்காவும் ஈரானும் உறவில் நெருக்கம் கொள்ளுமாயின் அது இஸ்லாமிய தீவிரவாதிகளை மத்திய கிழக்கிலிருந்து துரத்தவும் இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதிசெய்யவும் வழிவகுக்கும். ஆனால், இஸ்ரேலியப் பிரதமரின் உரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பெரிதும் தாக்கியிருக்கிறது. இதனாலேயே ஈரான் அணுவிவகாரத்தில் இஸ்ரேல் - அமெரிக்கா தனித்து இயங்குவதான அறிகுறிகள் அண்மைக்காலமாக தென்படுகின்றன.
மத்திய கிழக்கில் தம்முடைய நிழலை ஆழமாக பதிக்க அமெரிக்கா விரும்புகிறது. இதற்காகவே ஈரானை ஒரு உத்தியாக பயன்படுத்தி அதன்மூலம் சில இலாபங்களை அடைய முயற்சிக்கின்றது. இதற்கு அமெரிக்கா ஈரானிற்கு மறைமுகமான உதவியையும் வழங்கியிருந்தது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் ஈரான் அணு விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்த நிலையில் அமெரிக்கா, இராணுவ நடவடிக்கைகள் குறித்து பேசாமல் தடைகளைப் பற்றியே பிரஸ்தாபித்து வந்திருந்தது.
இது தொடர்பில் அண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த ஒபாமா, முறையான அளவீடுகளுடன் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் குறைந்தது 10 வருடங்களுக்கு முடக்குவது என்ற ஒப்பந்தமானது எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்குப் பதிலாகவும் பொருளாதார நடவடிக்கைக்குப் பதிலாகவும் மிகுந்த பயனளிக்கக்கூடியது என்று தெரிவித்திருந்தார். ஏனைய நாடுகளை பொறுத்தவரையில் அமெரிக்கா வலுகட்டாயமாக தனது இராணுவத்தை திணித்திருக்கிறது. ஆனால் ஈரான் விவகாரத்தில் அப்படி செயற்படவில்லை.
இதன் நீட்சியாகவே கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரான் அணுவிவகாரத்திற்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் கூட்டுப் பேச்சுவார்த்தையின் மூலம் ஈரான் அணுத்திட்டங்களை மேற்கொண்டு வரும் இடங்களில் சர்வதேச பார்வையாளர்களை அனுமதிப்பது, அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தை 5 சதவீத்திற்கு மேல் செறிவூட்டுவதை நிறுத்தி வைக்கவும், மேலும் 5 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை களையவும் ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.
இதனை சர்வதேச நாடுகளும் வரவேற்றிருந்தன. ஆனால், இஸ்ரேல் தனது அதிருப்தியை அப்போதே வெளிப்படுத்தியிருந்தது. ஈரானில் அணுசெறிவூட்டல் என்பது இஸ்ரேல் யூதர்களின் பாதுகாப்பை கேள்விக்குரியாக்கும் என்பதுடன் அவைஅணு நடவடிக்கைகளை ஈரான் தொடர்ந்து மேற்கொள்ள தூண்டுவதாக அமையும் என்பதும் இஸ்ரேல் பிரதமரின் வாதம். ஆனால் தற்போதைய நிலையில் ஈரானின் பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு மேலதிக தடைகள் விதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரான் ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர் கொண்டுவந்த ஒப்பந்தம், அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 60 நாட்கள் ஒத்திவைக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்ய உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இஸ்ரேலியப் பிரதமரின் உரை ஆத்திரமூட்டுவதாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்கா ஈரானோடு நெருங்குவது இஸ்ரேலை பொறுத்தவரை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.
08.03.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக