கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 ஜூலை, 2015

யாங்ட்ஸே ஆற்றில் ஏற்பட்ட கப்பல் விபத்து

ஆசியாவின் மிக நீளமான நதியான யாங்ட்ஸே ஆற்றில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் இதுவரை 82 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் உத்தியோகபூர்வமாக தகவல்களை தீர்மானிப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. கடந்த திங்கள் இரவு ஏற்பட்ட விபத்தில் சுமார் 458 பேர் பயணித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரமான நான்ஜிங்கில் இருந்து தென்மேற்கு நகரான சோங்கிங் நோக்கியே ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
406 பயணிகளும், 5 வழிகாட்டிகளும், 47 ஊழியர்களும் இக்கப்பலில் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கப்பலின் கப்டன் மற்றும் துணைக்கப்டன் இருவரும் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்விபத்தில் சிக்கியுள்ள ஏனையோர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பல தசாப்தங்களுக்கு பிறகு இடம்பெற்ற மிகப்பெரிய கப்பல் விபத்தாக சீனாவில் இது பதிவாகியுள்ளது. தற்போது இவ்விபத்தில் பலியானோரின் 82 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் பலரின் சடலங்கள் மீட்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.



இக்கப்பலில் பயணம் செய்த பயணிகளில் அதிகமானோர் 50-80 வயதிற்கு இடைப்பட்டவர்களெனவும் இவர்களில் 406 பயணிகள், கப்பல் பயண நிறுவனத்தில் பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனரெனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுடன் 5 பயண வழிகாட்டிகளும் பயணித்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் மாத்திரம் 10 மணித்தியாலயங்களின் பின் நீந்தி கரைசேர்ந்திருக்கிறார். இவ்விபத்தின் மூலம் கிழக்கு ஆசிய நாடுகளில் இடம்பெறும் உள்ளூர் கப்பல் சேவை தொடர்பில் அதிக பாதுகாப்பு நடைமுறைகள் கையாளப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுபெற்றுள்ளன.

இதற்கு முன் கடந்த ஆண்டில் வடகொரிய படகு விபத்தில் 306 பேர் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2000 ஆம் முதல் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் 16,881 பேர் பாதுகாப்பற்ற உள்ளூர் படகு விபத்துக்களில் இறந்துள்ளதாக சர்வதேச படகு பயண பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் இதற்கு முன்னரான இவ்வருடத்திலான விபத்துகளில் 86 பேர் உயிரிழந்தும் அல்லது காணாமலும் போயிருக்கின்றனர். இவற்றில் ஈஸ்டர்ன் ஸ்டார் கப்பல் விபத்து உள்ளடக்கப்படவில்லை.

சீனாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு 121 பேர் உள்ளூர் கப்பல் விபத்தில் உயிரிழந்திருந்தனர். இந்த வருடத்தில் பங்களாதேஷில் 37 பேரும், இந்தோனேஷியாவில் 25 பேரும், பிலிப்பைன்ஸில் 14 பேரும் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாங்ட்ஸே ஆற்றின் மூலம் வருடத்திற்கு 400,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்கின்றனர். இவ்வாற்றின் மூலம் சாதாரண கப்பல்களில் பயணிப்போரின் தொகை அதிகரிப்பதற்கு சொகுசு கப்பல்களின் கட்டணவுயர்வும் காரணமாகும். சொகுசு கப்பல்கள் ஒருபயணத்திற்கு 600 டொலர்கள் வரையும் வசூலிக்கின்றன.

 ஈஸ்டர்ன் ஸ்டார் கப்பல் சூறாவளி காரணமாகவேமூழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பல் 2 நிமிடங்களில் மூழ்கிவிட்டிருந்தது என்பதுடன் பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான கப்பல் அரசு நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். 76 மீற்றர் நீளங்கொண்ட இந்தக் கப்பல் கடந்த 20 வருடங்களாக சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இக்கப்பலானது 534 பேரை ஏற்றச்செல்லும் திறனையுடையது. எனினும் சீரற்ற காலநிலையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

தற்போது தேடுதல் பணிகளில் 36 கப்பல்கள், 117 படகுகள், 1840 இராணுவ வீரர்கள், 1500 பொலிஸார் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரை சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கப்பெறவில்லை. இக்கப்பல் விபத்துக்குள்ளாகும் போது அபாயஒலி எழுப்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச படகுபயணபாதுகாப்பு சங்கம் பாதுகாப்பான உள்ளூர் படகு, கப்பல் சேவைகள் தொடர்பில் சில நாடுகள் முறையான கவனம் செலுத்தவதில்லையென தெரிவிக்கிறது. குறிப்பாக பயணிகளுக்கு வழங்கப்படும் உயிர் கவச அங்கி கூட தரமானதாக இருப்பதில்லை.எனவே உள்ளூர் நீர் போக்குவரத்தில் சர்வதேச அரசுகள் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

க.பிரசன்னா
07.06. 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக