கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

5 ஏப்ரல், 2015

யேமன் விவகாரம்: அச்சுறுத்தலுக்குள் வளைகுடா மீட்க சவுதி போராட்டம்



வளைகுடா  நாடான யேமனில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்பநிலைகள் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்றுவரும் சிவில் யுத்தத்தை தோற்றுவிப்பதாக அமையுமென ஐ.நா. எச்சரித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் யேமனில் உள்நாட்டு கிளர்ச்சிகள் ஆயுதம் ஏந்திய போராட்டமாக இடம்பெற்று வருகின்றன. அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவரும் வேளையில் கடந்த சில தினங்களாக  அதெனில் இடம்பெற்றுவரும் சவுதி வான் தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே யேமனில் ஸ்திரமான அரசியல் சூழ்நிலைகள் காணப்பட்டிருக்கவில்லை. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இங்கு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவரும் அல்கொய்தா மற்றும் ஈரானின்  ஆதரவு பெற்ற ஹெளதி  அமைப்புகளின் மூலம் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை யேமன் சந்தித்து வருகின்றது. அண்மைக்காலமாகவே யேமன் நாட்டு ஜனாதிபதியை பதவியிலிருந்து  நீக்குவதற்கு இவ்வமைப்புகள் கடுமையாக போராடி வருகின்றன. "செப்டெம்பர் 21' புரட்சி  என்று அழைக்கப்படும் இப்போராட்டமானது கடந்த ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி தலைநகர்  சனாவில் நடைபெற்ற புரட்சியின் விளைவாக தோற்றம் பெற்றதாகும்.தொடரும் இவ்வாறான தீவிரவாத தாக்குதல்களால் யேமன் நாடு ஈரானின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.



இதனால், ஹெளதி கிளர்ச்சியாளர்கள் நாட்டின் தென்பகுதியை நோக்கி முன்னேறுவதை தடுக்க அரபு வளைகுடா நாடுகளை தலையிடுமாறு வலியுறுத்தியிருந்தார். யேமனின் ஹெளதிகளின் முன்னேற்றம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை கவலையடையச் செய்துள்ளதாகவும், குறிப்பாக சுன்னி முஸ்லிம்களின் ஆதிக்க நாடான சவுதி அரேபியா இதனை கூர்மையாக அவதானித்தும் வருகிறது.  ஹெளதிகளின் பின்னணியில்  ஈரான் செயற்பட்டு வருவதாக சவுதி அரேபியா குற்றம் சுமத்திவரும் வேளையில் இதனை ஹெளதி அமைப்பினரும் மறுத்து வருகின்றனர். யேமன் வளைகுடா விவகாரமானது நேரடியாகவும் மறைமுகமாகவும் சவுதி அரேபியாவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஆதலாலே வளைகுடா பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு சவுதி அரேபியா போராடி வருகின்றது. யேமனில் அல்கொய்தா தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் அவ்வப்போது தாக்குதலை மேற்கொண்டும் அங்கு முன்னேற்றங்களை காணமுடியவில்லை. இந்நிலையில் வேகமாக முன்னேறிவரும் ஹெளதி கிளர்ச்சியாளர்கள், அந்நாட்டின் அல் அனத் விமானத் தளத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்த விமான தளத்தில் இருந்த சிறப்பு படையினர் உட்பட்ட சுமார் 100 அமெரிக்க துருப்பினர் கடந்த மாதமளவில் அகற்றப்பட்டனர். விமான தளத்தின் அருகில் இருக்கும் நகரில் அல்கொய்தா முன்னேற்றம் கண்டதாலேயே அமெரிக்க படைகள் யேமனில் இருந்து தற்போது விலகியுள்ளன.

தற்போது அங்கு பதற்ற சூழ்நிலைகள் அதிகரித்திருக்கும் நிலையில் பிரிட்டனும் தமது  சிறப்பு படையினரை அங்கிருந்து அகற்றிக் கொண்டுள்ளது. இதனால் யேமன் எல்லையை நோக்கி பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்களை  சவுதி நகர்த்தி வருகிறது. யேமன் உள்நாட்டு யுத்தத்தால் எண்ணெய் வளநாடான சவுதி பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பதாலேயே இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹெளதி இயக்கத் தலைவர் அப்துல் மாலிக் ஹெளதி தலைமையில் தொடங்கிய இப்புரட்சியின் காரணமாக யேமன் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதுடன், ஆயுததாரிகள் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி புதிய அரசை நிறுவினர்.  ஆனால் இதனை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை. தற்போது தலைநகர் சனாவிலிருந்து தப்பி வந்த ஜனாதிபதி ஹதி, அதென் நகரில்  தஞ்சமடைந்து ஆட்சி நடத்தி வந்திருந்தார். தற்போது கிளர்ச்சியாளர்கள் அதென் நகரிலிருந்து 60 கிலோமீற்றர்  தூரத்திலுள்ள சனாவை கைப்பற்றியுள்ள நிலையில் ஜனாதிபதி ஹதி அதெனிலிருந்து செங்கடல் வழியாக வெளியேறி சவுதியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது யேமனின் அதென் நகரின் மீது வான்தாக்குதல்களை சவுதி  மேற்கொண்டுவருவதுடன்,  தரைவழியாகவும் படைகளை அனுப்ப உத்தேசித்துள்ளது. இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்ட ஹெளதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் 500 பாகிஸ்தானியர்களும் 84 இராஜதந்திரிகள் ஐ.நா.வின் 100 சர்வதேச பணியாளர்கள் யேமனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் இடம்பெற்ற தாக்குதல்களில் அஸ்மக்ரக் அகதி முகாமில் 40 பேர் உயிரிழந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு ஹெளதிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களே இங்கு தஞ்சமடைந்திருந்தனர். தற்போது 500 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் தாக்குதலுக்கு பரஸ்பரம் இருதுருப்புக்களும் குற்றம் சாட்டி வருகின்றன.

யேமனில் இடம்பெற்றுவரும் தற்போதைய தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதில் சவுதி அரேபியா கடுமையாக  உழைத்து வருகிறது. ஏனைய வளைகுடா நாடுகள் இப்போரில் பங்குபற்றுவது தொடர்பில்  எவ்வித அறிவித்தலையும் இதுவரை வெளியிடவில்லை. தற்போது அரபு கூட்டுப்படை ஒன்றை அமைப்பதற்கு அரபு லீக் மாநாட்டில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. எனினும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கூட்டுப்படையில் அரபு லீக்கிலுள்ள 22 நாடுகளும் பங்கு கொள்ளும் சாத்தியமில்லையென தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு உருவாக்கப்படும் கூட்டுப்படையில் யுத்த விமானங்கள், கடற்படை கப்பல்களின் உதவியுடன் சுமார் 40,000 சிறப்பு படையினர் உள்வாங்கப்படுவர் என அறியமுடிகிறது. யேமன் தற்போது இருக்கும் நிலையில் ஏனைய வளைகுடா நாடுகளுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாகவே இருக்கின்றது. எனவே, கூட்டுப்படைகளின் விரைவு நடவடிக்கைகள் ஒரளவு நல்ல பலனைத் தரலாம். பாகிஸ்தான் கூட யேமன் ஆதரவு படைகளுடன் இணைவதற்கான சமிக்ஞையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், நேரடியாக தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றியிருக்கவில்லை. தற்போது, கூட்டு இராணுவ பயிற்சிக்காக 292 பாகிஸ்தான் இராணுவத்தினர் சவுதியில் நிலை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன் கிழமை சவுதி  மேற்கொண்ட வான் தாக்குதல்களில் கடற்கரை நகரமொன்றிலுள்ள பாற்பண்ணை தொழிலாளர்கள் 23பேர் கொல்லப்பட்டிருந்தனர். யேமனில்  சவுதியின் தாக்குதல்கள் ஆரம்பமான தினத்திலிருந்து இன்றுவரை 62 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அறிவித்துள்ளதுடன் இதுவரை தாக்குதல்களில் 93க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது யேமனில் யுத்தம் உக்கிரமடைந்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இத்தொகை அதிகரிக்கப்படலாம்.

சவுதி கூட்டணியால் தற்போது வான்வழியான தாக்குதல்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரைவழியாக படைகளை அனுப்பும் பட்சத்தில் ஹெளதிகளுடன் மீண்டும் ஒரு  கொரில்லா போரினை கையாள வேண்டிய இக்கட்டான நிலை தோன்றவும் இதனால்  நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்பிருப்பதாகவும் அவதானிகள் எச்சரித்துள்ளனர். எனினும், தற்போது நடத்தப்படும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பாரிய அழிவினை சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

யேமன் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் ஏற்கனவே மோசமான நிலையில் காணப்படுகையில் இப்போதைய அரசியல் குழப்பம் அதனை மேலும் தூண்டியுள்ளது. யேமனில் 61 வீதமான மக்கள் உணவு, உடை, இருப்பிடம் என மனிதாபிமான  உதவிகளை எதிர்பார்த்தே வாழ்கின்றனர். 9 இலட்சம் குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து என்பன கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

உலகளவில் ஏற்பட்டுள்ள யுத்தங்களின் காரணமாக அதிகளவிலான அகதிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இடம்பெயர்ந்துவரும் நிலையில் யேமன் நாட்டு மக்களின் தொகையும் தற்போது இதில் இணைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஈராக்கில் தோன்றிய முஸ்லிம் மதப்பிரிவினையே தற்போது யேமன் நாட்டு தாக்குதல்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது.

ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளால் முடியாமல் போனதை வளைகுடா நாடான யேமனில் சவுதி தலைமையிலான கூட்டணி நிறைவுக்கு கொண்டுவருமா என்பதும் இப்போதைக்கும் பதில் காண முடியாத  பிரச்சினை. 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பமான யேமன் அரசியல் குழப்பம் இன்று ஹெளதி, அல்கொய்தா  ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளிடம் சிக்குண்டுள்ளது. இதுவரையும் அமெரிக்காவின்  ஆதரவில் செயற்பட்டு வந்த யேமன் தற்போது திடீர் விலகல் காரணமாக சவுதியின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. யேமன் உளவுப் பிரிவுடன் தலைநகர் சனாவில் செயற்பட்டு வந்த  அமெரிக்க உளவு பிரிவினர் 200 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் யேமன் தனித்துவிடப்பட்டுள்ளது. ஆனால் மறைமுகமாக யேமனில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட அமெரிக்கா விரும்பியிருந்தது.

அரேபியாவின் தென்மேற்கில் அமைந்துள்ள பாப் எல் மாந்தேப் நீரிணைக்கு  வலதுபக்கமே யேமன் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்நீரிணையில் 20,000 கப்பல்கள் இந்தியப் பெருங்கடல், செங்கடல், சுயஸ்கால்வாய் இடையே கடந்து செல்கின்றன. அவ்வாறு வணிகத் துறை மத்தியஸ்த்தமாக யேமன் செயற்படுகிறது. எண்ணெய்வளம் தீர்ந்து போக கூடிய ஒரு நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால் தற்போது சவுதியே அதிகளவில் போராடி வருகிறது. யேமனின் வருமானத்தில் 70வீதம் எண்ணெய் உற்பத்தி மூலமே பெற்றுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மாரிப் என்ற பகுதியே எண்ணெய் வளம்  மிகுந்தது. எரிவாயு உற்பத்தியில் 70வீதம் இங்கேயே மேற்கொள்ளப்படுகிறது. ஹெளதி படைகளின்  அடுத்த இலக்கு இப்பகுதியாகவே இருக்கிறது. இதனாலேயே சவுதி தற்போது அங்கு வசிக்கும் பழங்குடியினருக்கு ஆதரவாக  செயற்பட்டு வருகிறது.
தற்போது யேமனின் சிறுபான்மையினமான ஷியா பிரிவைச் சேர்ந்த ஹெளதிகள், ஜனாதிபதிக்கு ஆதரவான குழு மற்றும் அரபு தீபகற்பத்தின் அல்கொய்தா இவற்றுக்கு இடையிலேயே முக்கோண யுத்தம் இடம்பெற்று வருகிறது.

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு ஐ.நா. முயன்றாலும் கூட அதன் சாத்தியப்பாடுகள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. யேமனின் நிலைமை வளைகுடாவையே அச்சுறுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின்  கழுகுப்பார்வையையும் யேமன் பக்கம் திரும்ப வழிசெய்துள்ளது. எனவே, இவற்றிலிருந்து வளைகுடாவை மீட்கவே தற்போது சவுதி  கடுமையாக போராடி வருகிறது.  20102011 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட்ட அரபு வசந்தம் தற்போதும் வீசுவதாக தென்படுகிறது. இது அரசியல் வழிப்பயணமாகவே காணப்படுகிறது. இப்பயணம் இன்னும் நீளுமானால் யேமனின் நிலைமை இன்னும் மோசமடையும் என்பதும், அது ஈரானிற்கும் அமெரிக்காவுக்கும் சாதகமாக அமையும் என்பதும் உண்மை.

க.பிரசன்னா
29.03.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக