
சமூகவலைத்தளங்களை ஏதோ ஒரு விடயம் ஆக்கிரமிப்பது வழமை. வலைத்தளங்களை பயன்படுத்துவோரும் போட்டிபோட்டுக்கொண்டு ஏதோ ஒரு விடயத்தை பதிவேற்ற அதிக ஆர்வம் கொள்கின்றனர். இதனாலேயே பல புதிய விடயங்களை எம்மால் அடிக்கடி அறியக் கூடியதாய் உள்ளது. அவ்வகையில் சமீபகாலமாக வலைத்தளங்களை ஆக்கிரமித்த ஒரு விடயம் ஐஸ் பக்கட் சவால் (Ice Bucket Challenge) இது எமக்கு ஒருபுதிய விடயம் என்பதுடன் அதேசமயம் இவையொரு விழிப்புணர்வு பிரசாரம் என்பதும் முக்கியம்.
ஐஸ்வாளி சவால் அல்லது ஐஸ்பக்கட் சவால் என்பது தசையூட்டமற்ற பக்கமார்பு நோய்க்கான(Amyotrophic Lateral Sclerosis - ALS) ஆராய்ச்சியில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட மேற்கொள்ளப்பட்ட சவால் ஆகும். இந்த சவாலை எதிர்கொள்பவர் ஒருவாளி குளிர்ந்த நீரை தனது தலையில் ஊற்றிக் கொள்ளவோ அல்லது அத்தொண்டு நிறவனத்திற்கு 100 அமெரிக்க டொலர் நிதியோ அல்லது இரண்டையுமே 24 மணித்தியாலத்திற்குள் செய்யவோ தன் நண்பர்களால் சவால் விடப்படுவார். மேலும் இந்தச் சவாலை ஏற்கும் ஒவ்வொருவரும் 3 பேரை முன்மொழிந்து அவர்களையும் இந்த சவாலை ஏற்குமாறு கூற வேண்டும். தலையில் குளிர்ந்த நீரை ஊற்ற இதுவே உன்னதகாரணம். உலக சனத்தொகையில் இலட்சத்தில் இருவருக்கு இந்த ஏ.எல். எஸ்.எனப்படும் தசையூட்டமற்ற பக்கமார்பு நோய் ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
உலகில் தினந்தோறும் ஏதோவொரு வகையான நோய் உருவாகிக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு உருவாகின்ற எல்லா நோய்களுக்கும் அரசுகளால் நிதிகளை ஒதுக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தீர்வினைக் கண்டுவிட முடியாது. ஆனாலும் இவ்விடயங்களில் சமூக வலைத்தளங்களின் பங்கு அளப்பரியது என்று கூறமுடியும். அத்தோடும் பிரபலங்களின் தாராள மனதையும் பாராட்டியே ஆக வேண்டும்.கடந்த ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை ஐஸ் பக்கட் சவாலை ஏற்றுக் கொண்ட பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் வீடியோக்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளன. மேலும் டுவிட்டரில் இத் திட்டத்தின் தந்தையான பிராட்ஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதல் ஐஸ் பக்கட் சவால் பற்றி இருபது இலட்சம் முறை பதியப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான நிகழ்ச்சிமுறையினை அமெரிக்காவின் பேஸ்போல் வீரரும் ஏ.எல். எஸ். நோயாளியுமான பீட் பிராட்ஸ் அறிமுகப்படுத்தியிருந்தார். இவருக்கு அவரது நண்பர் ஒருவரே இந்த ஆலோசனையை வழங்கியிருந்தார். ஆனால், இந்த விளையாட்டை பிரபலப்படுத்திய இளம் கொடையாளர் மற்றும் சமூக ஆர்வலரான 27 வயதுடைய கோரி கிரிபின் அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.எஸ். நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 39 மாதங்கள் தான் உயிருடன் இருக்க முடியும். இந்த வகை நோய்களில் 4 சதவீதம் பேரே 10 ஆண்டுகளைத் தாண்டி வாழ்வார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இயற்பியல் எழுத்தாளரான ஸ்டீபன் ஹாக்கிங் இந் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடித்துள்ளார். இதுமிகவும் அரிது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
2014 ஆம் ஆண்டுக்கு முன்பே, 2013 ஆம் ஆண்டு மத்திய காலப் பகுதியிலேயே ஐஸ் தண்ணீர் சவால் என்பது வட அமெரிக்காவில் பிரபலமாகியிருந்தது. புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதி திரட்டவே இது ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இன்று உலக பிரபல்யங்களின் ஐஸ் பக்கட் சவாலாக மாறிப் போயுள்ளது. இந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் ஏற்றுக் கொண்ட 24 மணி நேரத்தில் செய்து முடித்து 10 டொலரை மட்டும் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு நன்கொடையாக தர வேண்டும். சவாலை செய்ய முடியாவில்லையாயின் 100 டொலர்களை நன்கொடையாக தரவேண்டும். ஏற்றுக் கொள்பவர்கள் கமராவின் முன் நின்று இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்க வேண்டும். அடுத்து ஐஸ்கட்டிகள் அல்லது ஐஸ் தண்ணீர் நிறைந்த பக்கட்டினை நிறுத்தாமல் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து தனக்குத் தெரிந்த ஒருவருக்கோ பலருக்கோ சவால் விட வேண்டும். இதுவே இவ் விளையாட்டை விளையாடும் முறை.
இதுவரையிலும் மார்க் ஸ்úக்கர்பெர்க, பில்கேட்ஸ், கிளிண்டன், புஷ் , பிரிட்னி ஸ்பியர்ஸ், கெவின் பீற்றர்சன், மெஸ்ஸி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அத்தோடு ஒபாமாவிற்கு பலபோர் சவால் விடுத்தும் அதற்குப் பதிலாக அவர் நன்கொடையளித்துள்ளார். இந்தியாவிலிருந்து சானியா மிர்சா, யுவராஜ் சிங் மற்றும் திரைப்பட நடிக, நடிகையர் பலரும் இந்த சவாலில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையில் ஹிருணிகா, மஹேல , சங்ககார போன்றோர் பங்குபற்றியதுடன் மத்தியூஸ் , மைக்கல் கிளார்க், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு மஹேல சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க் டைம்ஸ் இதழின் கருத்துப்படி இதுவரையும் ஏ.எல். எஸ். அமைப்பானது 41.8 மில்லியன் டொலர்களை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 21 வரையான காலப் பகுதியில் பெற்றுள்ளது. அத்தோடு புதிதாக 739,000 நன்கொடையாளர்கள் பணம் கொடுக்க முன் வந்துள்ளனர். மற்றும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி மட்டும் 2000 இற்கும் மேற்பட்ட புதிய நன்கொடையாளர்கள் உருவாகியுள்ளனர். இதன் மூலம் 10 மில்லியன் டொலர்கள் வசூலாகியுள்ளன.
இருப்பினும் வழக்கம் போல ஐஸ் பக்கட் சவால் பற்றிய விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த சவாலைச் செய்யும் பல பிரபலங்கள் நன்கொடை தரவேண்டும் என்பதைச் சொல்ல மறந்து வருகின்றனர். வெறும் புகழுக்காக மட்டுமே பலர் இதைச் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ரைஸ் பக்கட் சவால்
உலகெங்கிலும் பிரபலமடைந்துள்ள ஐஸ் பக்கட் சவாலைப் போன்று இந்தியாவில் ஊடகவியலாளர் ஒருவரால் ரைஸ் பக்கட் சவால் என்ற புதிய விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா என்ற பெண்ணே இவ்வாறு இச் சவாலை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கு உதவும் வகையில் இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரைஸ் பக்கட் சவாலை ஏற்றுக் கொள்பவர்கள் தங்களால் முடிந்த அளவு அரிசி அல்லது உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 100 ரூபா மதிப்புள்ள மருந்துகளை வாங்கிக் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதனைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்து அதனை நண்பர்களுக்கும் பகிரலாம். தண்ணீரை வீணாக்காமல் அதனைச் சேமியுங்கள். பசியுடன் உள்ளவர்களுக்கு உணவு அளியுங்கள் என்று அந்த பெண் ஊடகவியலாளர் அறிவுரையும் வழங்கியுள்ளார். இவ்வாறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உலகெங்கிலும் ஏதோ உதவித் திட்டங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனை சமூக வøத்தளங்களும் பிரதிபலிக்கின்றன. உங்கள் சமூகத்தில் இந்தச் சவாலை விடுக்க நீங்கள் தயாரா ?
க.பிரசன்னா
27/08/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக