
இவ்வருடத்தின் மிகப்பெரிய விமான விபத்தாக ஜேர்மன் விங்ஸ் விமான விபத்தைப் பார்க்கலாம். 1988ஆம் ஆண்டு முதல் பாவனைக்கு வந்த எயார் பஸ் வகையிலமைந்த விமானங்கள், 1990ஆம் ஆண்டுகளிலேயே விபத்தினை சந்திக்கத் தொடங்கியிருந்தன. அன்று முதல் இன்றுவரை மில்லியன் கணக்கான விமான விபத்துகள் பதிவாகிவிட்டன. அதன் அடிப்படையில் கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளான ஜேர்மனி நாட்டுக்குச் சொந்தமான "ஜெர்மனி விங்ஸ்' எயார் ஏ320 ரக விமானம் 150 பயணிகளுடன் பிரான்ஸ் நாட்டின் அல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது.
இவ்விமான விபத்தில் எவருமே உயர் தப்பியிருக்க வாய்ப்பில்லையென அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் 26 ஹெலிகப்டர்களும் 500 அவசர பணியாளர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். விமானத்தின் கறுப்பு பெட்டி மிகவும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், விபரங்கள் வெளியிடப்படவில்லை. 2000ஆம் ஆண்டு கான்கார்ட் விமானம் பிரான்ஸில் விபத்துக்குள்ளானதிலிருந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு இவ்விமான விபத்து பிரான்ஸின் அல்ப்ஸ் மலைத்தொடரில் இடம்பெற்றுள்ளது. இவ்விமானத்தில் பள்ளி சிறுமிகள், பொப் பாடகி, குழந்தைகள் உட்பட 150 பேர் பயணம் செய்திருந்தனர். ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா நிறுவனத்தின் துணை நிறுவனமே "ஜெர்மனி விங்ஸ்' ஆகும். இந்நிறுவனம் குறைந்த கட்டணத்தில் விமான சேவையினை ஐரோப்பிய மக்களுக்கு வழங்கி வருகிறது. ஸ்பெயினின் பார்ஸிலோனா
விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு உள்ளூர் நேரப்படி காலை 10.01 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்திருந்தது.
இவ்விமானம் காலை 11.49 மணியளவில் ஜெர்மனியின் டசல்டார்ப் விமான நிலையத்துக்கு சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், 11.00 மணியளவிலேயே விமானம் ரேடார் திரையிலிருந்து மறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின் இடம்பெற்ற தேடுதல்களில் விமானம் அல்ப்ஸ் மலைத்தொடரில் விழுந்து நொருங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தின் சிதைவுகள் ஹெலிகொப்டர்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தின் சகல பகுதிகளும் நொருங்கிவிட்ட நிலையில், கார் வடிவிலான சிறுபகுதியொன்றே முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் 10.40 மணியளவில் 5000 அடிஉயரத்துக்கு மிக தாழ்வான பகுதியில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் பின்னரே விமானம் அல்ப்ஸ் மலையின் 6000 அடி உயரத்தில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இவ்விமானத்தில் 144 பயணிகள், 2 விமானிகள், 4 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.
விமானத்தில் 72 ஜெர்மனியர்கள், 49 ஸ்பெய்ன் நாட்டவர்களும் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 16 பள்ளி சிறுமிகளும், 2 ஒபேரா பாடகர்களும் அடங்குவர். ஜெர்மனியின் ஹோல்டர்ன் நகரைச் சேர்ந்த பள்ளிச் சிறுமிகள், ஸ்பெயினுக்கான சுற்றுலாவை தனது 2 ஆசிரியர்களுடன் முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வேளையிலேயே விபத்தைச் சந்தித்திருந்தனர். இதனால் ஜெர்மனியின் ஹோல்டர்ன் நகரம் துக்கத்தில் மூழ்கியதுடன் சகமாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கஸகஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளிலுள்ளவர்கள் உள்ளடங்குவர். இருப்பினும், இவர்களில் சிலர் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களாக இருப்பதால் அவர்களின் சொந்த நாடுகள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ஏயார் பஸ் ஏ320 வகையைச் சேர்ந்தாகும். இவ்வகையான விமானம் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.
கடந்த 2007ஆம் ஆண்டு பிரேஸிலில் உள்ள சாவாபோலோ நகரில் தரையிறங்கிய பிரேஸிலின் டாம் ஸின்ஹேராஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 187 பயணிகளுடன் விபத்துக்குள்ளானது. அத்தோடு கடந்த டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எயார் ஏசியா நிறுவன விமானம் 162 பயணிகளுடன் ஜவா கடலில் விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து இவ்வகையான விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதே தற்போதைய பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட விபத்தாகும். இதற்கு முன் கடந்த 2000ஆம் ஆண்டு எயார் பிரான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கன்கார்ட் விமானம், பிரான்ஸிலிருந்து நியூயோர்க் நகருக்கு 109 பேருடன் பயணம் செய்தது. இவ்விமானம் பிரான்ஸின் கொனீஸ் நகரில், ஹோட்டல் ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 109 பேரும் தரையில் இருந்த 4 பேருமாக மொத்தம் 113 பேர் பலியாகினர். இதற்கு பின்பு 15 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸில் இவ்வாறானதோர் விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
தற்போது விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு அதில் பதிவான உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் அதிர்ச்சிகரமான தகவலொன்று வெளியிடப்பட்டிருந்தது. விமானம் பார்சிலோனாவிலிருந்து ஜெர்மன் நோக்கி புறப்படும்போது, விமானிகள் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்துள்ளமை விமானத்தின் கொக்பிட் அறையிலுள்ள பதிவு கருவியில் பதிவாகியுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களில் கொக்பிட் அறையிலிருந்து விமானி ஒருவர் வெளியேறுவதும், ஆனால், அவர் மீண்டும் கொக்பிட்டுக்குள் திரும்ப முடியாமையும் அதில் பதிவாகியுள்ளது.
முதலில் வெளியிலிருந்து கொக்பிட்டின் கதவு மெதுவாக தட்டபட்டிருந்தது, பதில் ஏதும் வராததால் கொக்பிட் கதவினை வேகமாக தட்டியுள்ளர். இவையனைத்தும் அவ்வொலிப்பதிவு கருவியில் பதிவாகியுள்ளது. ஆனால், விமானி ஏன் வெளியில் சென்றார் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. ஆகவே, விமானம் விபத்துக்குள்ளாகும்போது, சக விமானியே விமானத்தை இயக்கியுள்ளமை தெளிவாக தெரிகிறது. சக விமானியின் மோசமான செயற்பாடுகளின் காரணமாகவே விமானம் விபத்தைச் சந்தித்திருந்தது. அத்தோடு விமானம் வானிலேயே வெடித்து சிதறவில்லையென்றும் மலையில் மோதியே விபத்துக்குள்ளானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொக்பிட் அறைக்கதவு நன்றாக மூடப்பட்ட நிலையில், காணப்பட்டதால் விமானியால் கொக்பிட் அறையினுள் செல்ல முடியவில்லை. இது சக விமானிக்கு சாதகமாக அமையவே, விமானம் விபத்துக்குள்ளாக்கப்பட்டது மிகவும் பாதுகாப்பான விமான பயணப் பாதைகளைக் கொண்டது ஐரோப்பா. ஆனால், அங்கேயே இவ்வாறான விபத்துகள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சிகரமானது. ஆனால், விமான விபத்து தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும்.
க.பிரசன்னா
29.03.2015


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக