
2015ஆம் ஆண்டில் ஐரோப்பாவில்
இடம்பெற்ற பத்திரிகையின் மீதான தாக்குதல் சம்பவத்தின் மூலம் இவ்வுலகம் இவ்வருடத்தில்
முதலாவது பாரிய தீவிரவாத தாக்குதலை சந்திக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள சார்லி
ஹெப்டோ என்ற கேலிச் சித்திரங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிடும் வாரப் பத்திரிகையின்
மீதே இரு தீவிரவாதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் பத்திரிகை ஆசிரியர், கேலிச் சித்திர ஓவியர்கள், பொலிஸார் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் மேற்கொண்ட இரு தீவிரவாதிகளும் தப்பிச் சென்றிருந்தும், பின்னர் சுற்றி வளைப்பின்
பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பத்திரிகைச் சுதந்திரத்தை மீறும் செயல்
என உலக அளவில் கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் பத்திரிகைச் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யும்
வகையிலும் பிற மதத்தினை புன்படுத்தும் வகையிலும் கேலிச் சித்திரங்களை வழங்குவது எவ்வகையில்
சுதந்திரமான ஊடகத்துறையின் செயற்பாடாக அமையும்.
ஐரோப்பிய நாடுகளில் அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடு பிரான்ஸ்.
இங்கு முஸ்லிம் எதிர்ப்பு வாதம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையே முஸ்லிம்களுக்கு
எதிரான வெறுப்புணர்ச்சிக்கு காரணமாகும். இதன் ஒரு அங்கமே நபிகள் நாயகம் மீதான அவதூறு
கேலிச் சித்திரமாகும். இதற்கு மறைமுக ஆதரவை பிரான்ஸ் அரசு வழங்கி வருகின்றதா? என்ற கண்ணோட்டத்திலேயே இவ்விடயத்தை அணுக வேண்டும். காரணம் சார்லி
ஹெப்டோ பத்திரிகை அலுவலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு சில தினங்களிலேயே அதன்
அடுத்தவார பதிப்பில் மீண்டும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவதான கேலிச்சித்திரம் வெளியிடப்படுமென
சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் அறிவித்ததுடன் கடந்த புதன்கிழமை வெளியிட்டும் விட்டது.
இப்பதிப்பினை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்
சென்றுள்ளனர். சார்லி ஹெப்டோ வாரப் பத்திரிகை சாதாரணமாக 60,000 பிரதிகளே விற்பனையாகின்றன. எனினும், புதன் வெளியான புதிய பதிப்பில்
5 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி
உள்ளன. 30 நிமிடங்களுக்குள் அனைத்து
பிரதிகளும் விற்பனையாகியுள்ளதுடன் புதிய பிரதி ஆங்கிலம், அரபு மற்றும் துர்கிஷ்
உட்பட 16 மொழிகளில் வெளியாகியுள்ளன.
இவற்றில் ஒரு சில அச்சிடப்பட்டாலும் ஏனையவை இணையத்தில் வெளியிடப்பட்டன.
![]() |
| தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் |
சார்லி ஹெப்டோ பத்திரிகையின் முன் பக்கம் ஏற்கனவே பிரான்ஸ் இணையத்தளங்களில்
வெளியாகி இருந்தன. பிரான்ஸ{க்கு வெளியில் வொஷங்டன் போஸ்ட், ஜேர்மனியின் பிராங்போர்ட், இத்தாலியின்
கொரியன் செரா, பிரிட்டனின் கார்டியன் பத்திரிகைகளில் வெளியாகின. அத்தோடு துருக்கியின்
சும்ஹீயத், மத்திய கிழக்கு மற்றும்
வட ஆபிரிக்க நாடுகளில் ஊடகங்கள் இதனை சிறிய அளவில் வெளியிட்டிருந்தன. எனினும், இதற்கு சர்வதேச அளவில் இணையம் மூலம் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஐரோப்பிய முஸ்லிம் பிரிவினையை விரும்பாதவர்கள், ஈராக், சிரியா, எகிப்து, மியன்மார் போன்ற நாடுகளைப்
போன்று கிளர்ச்சிகளை வெளிப்படுத்தாதவர்கள். எனவே, ஐரோப்பாவில் நிகழும் முஸ்லிம் தீவிரவாத தாக்குதலுக்கு முஸ்லிம்
அல்லாதவர்களே பச்சைக்கொடி காட்டுவது சார்லி ஹெப்டோ பத்திரிகையிலிருந்து தெரியும் உண்மை.
இத்தாக்குதலுக்கு யேமன் அல்கொய்தா அமைப்பு உரிமை கோரியுள்ளது. சார்லி ஹெப்டோ நபிகள்
நாயகத்தினை இழிவுபடுத்தும் வகையில் கேலிச் சித்திரங்களை வரைந்தமைக்கு பழி தீர்க்கும்
வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அரேபிய வளைகுடாவிற்கு பொறுப்பான அல்கொய்தா அமைப்பினால்
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, துப்பாக்கிச் சூடு நடத்திய
ஆயுததாரி ~நாங்கள் யேமன் அல்கொய்தாவைச்
சேர்ந்தவர்கள் என ஊடகங்களுக்குச் சொல்லுங்கள்| எனக் கூறிச் சென்றுள்ளார்.
![]() |
| தீவிரவாதிகள் |
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸில் இடம்பெற்ற மோசமான தாக்குதல்களில்
ஒன்றாக சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் கணிக்கப்படுகின்றன.
இத்தாக்குதல்கக்குப் பிறகு பிரான்ஸில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் ஓரளவிற்கு கட்டவீழ்த்து
விடப்பட்டுள்ளன. பிரான்சின் இரு நகரங்களிலுள்ள மசூதீகள் கொளுத்தப்பட்டதுடன் லீ மான்ஸ்
நகரிலுள்ள மசூதி மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
போர்ட்லா நோவில் முஸ்லிம்களின் வழிபாட்டு கூட்டங்களின் மீது
துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது என முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சிகள் ஆங்காங்கே
தீயிடப்படுகின்றன. எனினும்> இதுவரை எவ்வித உயிரிழப்புகளும்
ஏற்படவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் தீவிரவாதத்தின் காரணமாக அதிகமான
முஸ்லிம்கள் இடப்பெயர்ந்து மேற்கு நாடுளில் தஞ்சமடைந்திருக்கையில் அங்கும் அவர்களது
உரிமைகள் மீறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஈராக்கில் இஸிஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்காவுடன் பிரான்ஸ்
கைகோர்த்து செயற்படும் தறுவாயில் சொந்த நாட்டுக்குள் உரிமைகள் மறுக்கப்படுவதும்> மீறப்படுவதும் தொடர் கதையாகிவிடுகிறது. இதே போலவே 2011ஆம் ஆண்டு நபிகளுக்கு எதிராக கட்டுரை வெளியிட்டமைக்காக இதே அலுவலகம்
மீது கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும்> இத்தாக்குதலை கண்டித்தும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவு
தெரிவித்தும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் 44 நாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜேர்மனி> இத்தாலி> பிரித்தானியா> துருக்கி, இஸ்ரேல்> பாலஸ்தீனம் ஆகிய நாட்டுத் தலைவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ஜேர்மனிய நாசிப் படைகளிமிடருந்து பிரான்ஸ் 1944ஆம் ஆண்டு விடுதலை பெற்றபின்பு
இடம்பெறும் மிகப்பெரிய ஊர்வலமாக இது காணப்படுவதுடன் 30 இலட்சம் மக்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்நிகழ்வில் அமெரிக்கா
சார்பாக எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் இவை திட்டமிட்ட விலகலா எனவும் பேசப்படுகிறது.
இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையிலும், துருக்கி உள்நாட்டு பிரச்சினையிலும்
மேற்கு நாடுகளின் பங்கு அதிகம். ஆனாலும், இங்கு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் ஆதரவு
நிலைப்பாட்டை கடைபிடித்திருப்பது வியப்புக்குரியது. ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம்
என்ற வகையில் சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை கண்டித்தாலும் வெளிப்படையாக
இடம்பெறும் மத வெறுப்புணர்ச்சி மற்றும் போலித்தனமான,
நேர்மையற்ற விதத்தில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு ஆதரவாக உலகம் செயற்பட
முனையக்கூடாது. கருத்துச் சுதந்திரத்தை மாத்திரம் இச்சம்பவம் வலியுறுத்தவில்லை. மாறாக
ஒவ்வொரு மதத்தின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தவும் கோருகின்றது.
க.பிரசன்னா
18.01.2015





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக