
கடந்த ஆண்டு ஜனவரி 17 ஆம்
திகதி மர்மமான முறையில் இறந்து
கிடந்த இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின்
மனைவியான சுனந்தா புஷ்கரின் மரணம்
தொடர்பில் சந்தேகம் வலுத்த நிலையில் டில்லி
பொலிஸார் சுனந்தாவின் மர்ம மரணத்தினை கொலை
வழக்காக பதிவு செய்து, மூன்று
வாரங்களிலேயே சுனந்தாவின் கணவர் சசிதரூரிடம் விசாரணையை
மேற்கொண்டுள்ளதுடன், விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான
விடயங்களை கேள்விகளாக கேட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த
2014 ஆம் ஆண்டு டில்லியில் உள்ள
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின்
மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான
முறையில் இறந்திருந்தார். மரணமடைந்த சுனந்தாவின் உடலில் 15 இடங்களில் காயம் இருந்தது பற்றியும்
கடந்தாண்டு ஜனவரி 15 ஆம் திகதி இருவருக்கும்
இடையே ஏற்பட்ட சண்டை குறித்தும்
டில்லி பொலிஸார் தற்போது சசிதரூரிடம் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர். இம்மரணம் தொடர்பான விசாரணைகளை சிறப்பு புலனாய்வுக் குழுவினர்
முன்னெடுத்திருந்தனர். கடந்த 19 ஆம் திகதி இரவு
8 மணிக்கு ஆரம்பமான விசாரணை இரவு 11 மணியளவில்
நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. இவ்விசாரணையில் சசிதரூரிடம் 50 வரையான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும்
ஆனால் அக்கேள்விகளுக்கு அவர் முழுமையான பதில்களை
வழங்கியிருக்கவில்லையெனவும்
கூறப்படுகிறது. பாகிஸ்தானிய பத்திரிகையாளர் மெஹருடன், சசிதரூர் கொண்டிருந்த உறவு, சுனந்தாவின் உடலில்
இருந்த காயங்கள், கடைசி நாளில் நடந்த
சம்பவங்கள் உள்ளிட்டவை
குறித்து புலனாய்வுத் துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சசிதரூருக்கும்
பாகிஸ்தானிய பத்திரிகையாளர் மெஹருக்கும் இடையில் உறவு இருந்ததாகவும்
அதனால் சசிதரூர்- சுனந்தா தம்பதியினரிடையே அடிக்கடி
தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையே சுனந்தாவின் உடல் உறுப்புக்களை ஆய்வு
செய்த போது அவர் விஷம்
கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்
வலுத்ததாலேயே தற்போது வழக்கு பதிவு
செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்
இவ்வழக்கு தொடர்பாக முரண்பாடான கருத்துகள், பலவிதமான மருத்துவ அறிக்கைகள், பல்வேறு அறிக்கைகள் இவ்வழக்கை
மேலும் குழப்ப நிலைக்கு தள்ளுவதுடன்
பொலிஸாருக்கும் அதிகரித்த சவாலை ஏற்படுத்தியிருந்தது. வீட்டு வேலைக்காரரிடம்
இடம்பெற்ற விசாரணையின் மூலம் கேத்தி என்பவரின்
காரணமாக இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கேத்திக்காக ஒருமுறை டுபாயில் கூட
சண்டை ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கட்சித் தலைவர்,
முன்னாள் அமைச்சர்கள் சிலர் இருவருக்குமிடையில் சுமுகமான
உறவு இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
எய்ம்ஸ்
மருத்துவமனை வைத்தியர்களின் கருத்துப்படி, சுனந்தா இறப்பதற்கு இரண்டு
நாட்களுக்கு முன் முழங்கால் வலிக்கான
சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததாகவும் சசிதரூருக்கும் சுனந்தாவுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்க
வாய்ப்பில்லை எனவும் தெரிவித்திருந்தனர். எய்ம்ஸ்
மருத்துவமனை அறிக்கையின்படி சுனந்தாவுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியளவில் எவ்வித நோயும் உடலில்
காணப்படவில்லை எனவும் மன அழுத்தம்
தொடர்பான எவ்வித மருந்துகளையும் பரிந்துரைத்திருக்கவில்லையெனவும்
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் டில்லி பொலிஸாரை மேலும்
குழப்ப நிலைக்கு உள்ளாக்கியிருந்தது. மரணம் இடம்பெற்றவேளை சசிதரூர் மத்திய
அமைச்சராக செயற்பட்டிருந்தார். ஆதலால் இம்மரணம் தொடர்பில்
குற்றங்களை மறைக்க ஒருவேளை முயற்சித்திருக்கலாம்.
ஆனால் தற்போது எவ்வித பதவிகளையும்
அவர் வகித்திருக்காத நிலையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஓரளவுக்கு நம்பகத்தன்மையினை உலகுக்கு வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
மேலும்
பொலிஸாரின் தகவல்களின் படி, சுனந்தாவுக்கு அல்பிரஸோலம் விஷமருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அவர்கள்
அறிக்கையின்படி, சுனந்தாவுக்கு வாய் வழியாகவோ அல்லது
ஊசி மூலமாகவோ மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவரது உடலில் ஏற்பட்டிருந்த காயம்
ஊசி மூலம் ஏற்பட்டதெனவும் இன்னொரு
காயம் பல் கடியால் ஏற்பட்டதெனவும்
இதனால் கட்டாயப்படுத்தி இவ்விடயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் 1 முதல் 15 வரையான காயங்கள் மரணத்திற்கு
முன்பு 12 மணி நேரம் முதல்
4 நாட்கள் வரையான காலப்பகுதியில் ஏற்பட்டவையாகும்.
கடந்தாண்டு டிசம்பர் 29 ஆம் திகதி வெளியான
அறிக்கையின்படி 52 வயதான சுனந்தாவுக்கு எவ்விதமான
நோயும் உடலில் இருக்கவில்லை என
குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனந்தா
சசிதரூரின் 3 ஆவது மனைவியாவார். அதேபோல்
சுனந்தாவுக்கு சசிதரூர் 4 ஆவது கணவராவார். பன்முகம்
கொண்ட சசிதரூர், இந்திய அரசின் பிரதி
வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிவராவார். தனது இரண்டாவது மனைவியான
திலோத்தமா முகர்ஜியை விவாகரத்து செய்த சசிதரூர்,
2010 ஆம் ஆண்டு சுனந்தாவை முறைப்படி
திருமணம் செய்து கொண்டார். சசிதரூரை
திருமணம் செய்ய முன்னே தனது
இரண்டாவது கணவருக்கும் சுனந்தாவுக்கும் சிவ் என்ற மகனும்
உள்ளார். சுனந்தாவும் தன்வாழ்வில் அதியுயர் பதவிகளை வகித்தவர் என்பதுடன்
இந்தியாவின் ஐ.பி.எல்லில்
கொச்சி அணியின் பங்குதாரராகவும் செயற்பட்டிருந்தார்.
இதில் கொச்சியை சுனந்தா குழு தக்கவைத்துக்
கொள்வதற்காக சசிதரூர் சுனந்தாவை பயன்படுத்திக் கொண்டதான சர்ச்சையும் இவருக்குண்டு. இது சுனந்தாவின் மர்ம
மரணத்திற்கு ஒரு காரணமாகவும் பேசப்பட்டது.
இச்சம்பவங்களின்
போதே சசிதரூருக்கும் பாகிஸ்தானிய பெண் நிருபருக்கும் இடையில்
தொடர்பிருப்பதாக சுனந்தாவால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையிலேயே விசாரணையின் போது மெஹர் தொடர்பான
விடயங்களும் கேட்கப்பட்டிருந்தன என்பதுடன் மெஹர் சசிதரூரை இரு தடவைகள் டுபாயில்
சந்தித்திருந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார் என்பதுடன் சசி தன்னுடைய நண்பர்
என்றே தெரிவித்திருந்தார். ஆனால் சுனந்தா, தன்
கணவரை தொடரும் உளவாளி என்றே
மெஹர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
இதன் பின்னணியிலேயே சுனந்தாவின்
மர்ம மரணமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில்
சுனந்தாவின் மரணம் இடம்பெற்ற பகுதியில்
கண்டெடுக்கப்பட்ட துணிகள், மருந்துகள் உள்ளிட்டவையும் ஜனவரி 20, 2014 இல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
அதைத் தொடர்ந்து செப்டெம்பரில் வெளியான அறிக்கையில் சுனந்தாவுக்கு
விஷம் காரணமாகவே மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனக்
கூறப்பட்டது. அதன் பிறகு எய்ம்ஸ்
மருத்துவமனையின் மூவர் அடங்கிய வைத்தியக்
குழுவின் இறுதி பரிசோதனையின் அறிக்கையின்படி,
சுனந்தாவின் உடலில் கபைன், கோட்டினைன்,
எதில், அல்கஹோல், பொலோனியம் 210, தாலியம், நீரியம், பாம்பு விஷம் ஆகியவை
இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்பே சுனந்தாவின்
மரணம் கொலையாக இருக்கலாம் என்ற
சந்தேகம் பொலிஸாருக்கு வலுத்தது. காரணம் பொலோனியம் 210
ரஷ்யாவில் மட்டுமே கிடைக்கும் கொடிய
விஷமாகும். பொலோனியம் கிடைக்கும் இடங்கள் அதிகளவில் ரஷ்யாவிலேயே
இருக்கின்றன. ஆனால் இப்பொலோனிய விஷம்
மக்கள் கைகளுக்கு எளிதாக கிடைக்கக்கூடியதல்ல.
அப்படியெனில்
அதிகாரம் படைத்தவொருவரோ அல்லது செல்வந்தர் ஒருவரோ
இதனை கொள்வனவு செய்திருக்க முடியும். அவ்வாறு அப்போது அதிக
பலத்தில் இருந்தவர் சசிதரூரே. ஒருவேளை சசிதரூர் இதனை
நேரடியாக செய்யவில்லையாயின், முகவர் ஒருவரை பெற்றுக்
கொண்டிருந்தாரா? சுனந்தாவின் மரணத்தை முதலில் அறிந்தவர்
சசிதரூரின் உதவியாளரே. அப்படி இருக்கையில், அவரின்
பாதுகாப்பை மீறியா இச்சம்பவம் இடம்பெற்றது
என பல கேள்விகள் எழவே
செய்கின்றன. தற்போது முதற்கட்ட விசாரணைகள்
நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இறுதி விசாரணை வரை
இம்மர்ம மரணம் தொடர்பான முடிச்சுகளை
அவிழ்க்க முடியாமலே இருக்கும்.
க.பிரசன்னா
28/01/2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக