
இயற்கைவளம் நிறைந்த பகுதிகளை அதிகம் கொண்ட மஸ்கெலியா நகரிலிருந்து
சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள
புளும்பீல்ட் தோட்டத்தில் சுமார் 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்
வசித்து வருகின்றன. இங்கு பொதுவாக பலபிரச்சினைகள் காணப்படினும், மண் சரிவுப் பிரச்சினையே
அபாயகரமானதாகும். மக்கள் வசிக்கும் லயன் அறைகளின் பின்புறம் மிகவும் பள்ளத்தாக்குப்
பகுதி என்பதுடன் அதனை ஊடறுத்து வீதிகள் செல்வதால், மழைகாலங்களில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துப் பாதைகள்
தடைப்படுவதுடன், மேட்டு நிலத்தின் ஒரு பகுதி
மண்சரிவில் பாதிக்கப்பட்டதோடு எஞ்சிய நிலப்பகுதியிலேயே லயன் அறைகள் ஊசலாடி நிற்கின்றன.
இதற்கு தோட்ட நிர்வாகமும் எவ்விதமான முன் ஆயுதங்களையும் மேற்கொள்ளவில்லை
மண்சரிவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் தோட்டத்தின் மண்ணை அப்புறப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ளும். அத்தோடு அதன் கடமை நிறைவடைந்து விட்டதாகவே இருக்கின்றது.
மேலும் குப்பைகளை அகற்றுவதற்காக எந்தவொரு அணுகுமுறையினையும் இத்தோட்டம் கொண்டிருக்கவில்லை.
இங்கு குப்பைகளை இடுவதற்கொன்று ஒரு குப்பைத்தொட்டி கூட இல்லையென்பதே மிகப்பெரிய கொடுமை.
இதனால் குப்பைகளை பாதையோரங்களில் வீசவேண்டிய துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது.

அத்தோடு இன்னுமொரு அத்தியாவசியப் பிரச்சினையாக காணப்படுவது குடிநீர்.
தேவைக்கேற்ற ஊற்றுநீர் இப்பிரதேசத்தில் காணப்படுவதுடன், வீடுகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.
நீர் பெறப்படும் இடம் முறையாக பேணப்படாமையே
இங்குள்ள மிகப்பெரிய குறைபாடாகும். இப்பிரதேச மக்கள் ஆரம்பம் முதலே இங்கிருந்தே
நீர் பெற்று வருகின்றனர். வருகின்றன. இங்கிருந்தே லயன்கள், பாடசாலை மற்றும் பொது இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நீர் ஊற்றும், ஆறும் அருகருகில் அமைந்துள்ளதால் மழைகாலங்களில் ஆற்றுநீர் குடிநீரோடு
கலந்துவிடும் என்பதோடு, ஊற்றுநீர் அமைந்துள்ள பகுதி பள்ளமாகையால் மேட்டு நிலப்பகுதிகளில்
காணப்படும் தொழிற்சாலைக் கழிவுகள், லயன்களிலும் கழிவுகள் மற்றும் மலசலக்கூட கழிவுகள், விலங்குக் கழிவுகள் என
அனைத்துமே ஊற்றுநீர் பகுதியை ஊடறுந்தே ஆற்றை அடைகின்றன.
ஆனால், அவை தொடர்பில் எவ்வித கவலையும்
இல்லாமல் ஏதோ கடமைக்காக நீரை மக்களுக்கு தோட்ட
நிர்வாகம் வழங்குகிறது. இவை தொடர்பில் எந்தவிதமான சிந்தனையும் மக்களிடமும் இல்லை. தட்டிக்கேட்டால்
அவர்களுடைய வேலை அன்று தோட்ட நிர்வாகத்தால் இரத்து செய்யப்படும். இவ் ஊற்றுக்கு அருகிலேயே
விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. புளும்பீல்ட் தமிழ் மகா வித்தியாலய மற்றும் பொது
விளையாட்டுகள் அனைத்துமே இங்குதான் நடைபெறும் ஆனால் இன்று மைதானம் கால்நடை வளர்ப்பின்
இடமாகவே பயன்படுத்தப்படுகிறது. பாடசாலையிலும் விளையாட்டுப் போட்டி நடத்தப்படுவதில்லை
என்பதாலும் ஆற்றுநீர் உட்புகுவதாலும் இன்று
அந்த இடமே மறக்கப்பட்டுவிட்டது. எத்தனையோ அரசியல் தலைவர்கள் அதனை பார்த்து சென்றுவிட்டார்கள்.ஆனால்
எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு உதவிகளும் கட்சி ரீதியாகவும், தெரிந்தவர்களுக்காகவுமே
கிடைக்கின்றன. இன்று எமது பாடசாலை விளையாட்டு என்பதையே மறந்து போயிருக்கிறது.
தோட்ட நிர்வாகம் வீதியோரங்களை மட்டும் அழகுபடுத்தி வைத்திருக்கிறது.
2007 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய
சலுகைகளையே இன்றும் விளம்பரப் பலகைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறது. அதை தொடர்ந்து
எவ்விதமான சமூக பொறுப்புத் திட்டங்களையும் இத்தோட்ட நிர்வாகம் இதுவரை முன்னெடுக்கவில்லை.
தோட்ட பகுதிக்குள் காணப்படும் பெரும்பாலான பாதைகள் மண் பாதைகளாக
காணப்பட்டாலும்>
அவை முறையான பராமரிப்பு இன்மையால் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம்
போன்ற கட்சிகளால் ஒருசில இடங்களில் கொங்கிறீட் வீதிகள் இடப்பட்டிருந்தாலும் அவை முழுமை
பெறவில்லை. இவ்வாறு பல அடிப்படைக் குறைபாடுகளுடனே தோட்ட மக்கள் வாழவேண்டிய அவலமான சூழ்நிலை காணப்படுகிறது. தேர்தல் காலங்களுக்கு
மாத்திரம் வாக்குகளுக்காக வரும் அரசியல் தலைவர்கள் இவ்விடயங்களையும் கொஞ்சம் கவனத்தில்
கொள்வது நல்லது.
க.பிரசன்னா
04/01/2015



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக